புதன், 22 அக்டோபர், 2025

டா ர் க் - one

 ‘‘இ
ந்த பூமி உருண்டையில், சாத்தியப்படுத்தவே முடியாது என வரையறுக்கப்பட்ட செயல்களையும் சாத்தியமாக்கும் வல்லமை, வருங்காலத்திற்கு உண்டு...’’ - டாக்டர் வெஸ்லி ஆர்தரின் எழுதப்படாத டைரியின் முதல் பக்கத்தில் இருந்து!




டா  ர்  க் 
- தினகரன் தீபாவளி மலர் 2025-ல் வெளியான சிறுகதை


நீ
ங்கள் அடிக்கடி அழகான வாகமன் சென்று சொக்கிப் போய் திரும்புகிறவராக இருந்தால்... நான் இப்போது நடந்து சென்று கொண்டிருக்கிற ஏலப்பாறை தேயிலைத் தோட்டச் சாலையை அறிந்திருக்கலாம். வாகமன் ஈர்க்கக்கூடிய அழகுதான். உண்மையில், இடுக்கி மாவட்டத்தில் - அதுவும் இந்த பீர்மேடு, உடும்பஞ்சோலை தாலுகாக்களின் எந்த ஒரு இடத்திலும் புதிதாக ஒரு வாகமனை உடனடியாக உருவாக்கி விடலாம். மலையும், சரிவுகளும், அதன் கத்திமுனை விளிம்புகளும், பசுமையும், புல்வெளிகளும், நீர்த்தேக்கங்களும், அருவிகளும், ஆளை மூடும் மஞ்சுக் கூட்டமும்... என எங்கு வேண்டுமானாலும் ஒரு புதிய சுற்றுலா ஸ்பாட்டை ஏற்படுத்தி விடமுடியும்.


ந்த மலையும், குளிரும், பசுமையும் எனக்கும் பிடிக்கத்தான் செய்தது. எட்டு மாதங்களுக்கு முன் எனது கலிபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர்  வில்மர்ட் அறிவுறுத்தலின் பேரில் இங்கு வந்த போது இந்தப் பிரதேசம் என்னை பிரமிக்கச் செய்தது நிஜமாகவே உண்மை. ஒரு குளிர்காலத்தின் அதிகாலையில் குமுளியில் இருந்து கேஎஸ்ஆர்டிசி பஸ் பிடித்து குட்டிக்கானம் ஜங்ஷன் வந்திறங்கினேன். அங்கிருந்து ஏலப்பாறை செல்லும் ஜீப்பில் தொற்றிக் கொண்டு இரண்டரைக் கிலோ மீட்டரில் தூறலும், சாரலுமாக இருக்கும் மலைக்கிராமமான பள்ளிக்குந்நு வந்தடைந்தேன். அங்கே ஆட்டோ ஏறி, செயின்ட் ஜார்ஜ் சிஎஸ்ஐ சர்ச் கடந்து, அதன் பின்புறமிருந்த மலைச்சரிவுகளில் கீ.....ழே இறங்கி, அந்த தனித்த வீட்டின் கதவைத் தட்டியபோது, ‘‘வெல்கம் மிஸ்டர் சத்யன்’’ என்று புன்னகை முகத்துடன் வரவேற்றார் டாக்டர் வெஸ்லி ஆர்தர்.



கா
லை உணவுக்குப் பிறகு, ‘‘சத்யன், வா... இந்த இடத்தைப் பார்க்கலாம்...’’ என்னை அழைத்துக் கொண்டு செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்திற்கு வந்தார் வெஸ்லி ஆர்தர். 70 வயதிற்கு கொஞ்சம் அதிகம் இருக்கும். வயதுக்கு சம்பந்தம் இல்லாத சுறுசுறுப்பு. இங்கிலாந்து தேசத்தில் இருந்து வந்து இங்கு தனியாக வீடு வாங்கி தங்கி இருக்கிறார். ‘‘இது ரொம்ப பழைய தேவாலயமாக்கும். ஜான் டேனியல் மன்றோ தெரியும்தானே? இந்த ஹைரேஞ்ச்ல இருக்கிற டீ பிளாண்டேஷன் எல்லாம் உருவாக்குனது அவர்தான். அவரோட சமாதி மட்டுமில்லை... அவரோட வெள்ளைக் குதிரை டானியோட சமாதியும் இந்த தேவாலய வளாகத்துக்குள்ள இருக்கு. சாயங்கால நேரம் இங்கு வந்திட்டா... மிஸ்ட் மூடி இந்த இடம் பார்க்க ரொம்ப அழகா இருக்கும்...’’

‘‘டாக்டர், என்னோட ஸ்டான்போர்ட் புரபஸர் வில்மர்ட், உங்களைப் பத்தி நிறையச் சொல்லி இருக்கார். உங்க வேலைக்கு சப்போர்ட்டா இருக்கச் சொல்லி அனுப்பி இருக்கார்...’’ சொன்னதும், சிரித்தார் வெஸ்லி.


‘‘வந்த உடனே வேலையை ஆரம்பிக்கணுமா? ரெண்டு நாள் போகட்டும். அப்புறம் பேசலாம்னு பார்த்தேன். ரைட். நீ ஆர்வமா இருக்க. இப்டி உட்காரு...’’ தேவாலய பூச்செடிகளுக்கு பக்கத்தில் இருந்த சிமென்ட் நாற்காலிகளில் அமர்ந்தோம்.

ஃபிளாஸ்க் திறந்து இரு கோப்பைகளில் தேநீர் நிரப்பி, ஒன்றை என்னிடம் கொடுத்து விட்டு, ‘‘என்னோட நியூரோஜெனிசிஸ் ரிசர்ச், அதோட பின்னணி எல்லாம் வில்மர்ட் உனக்கு விரிவா சொல்லி இருப்பார்...’’

‘‘சொல்லி இருக்கார் சார். வெஸ்லி சாருக்கு முழு நம்பிக்கையா நடந்துக்கணும்னு சொல்லி அனுப்பி இருக்கார்...’’


‘‘வெரிகுட். ரிசர்ச் முக்கால் கிணறு தாண்டியிருச்சு. இப்போதைக்கு எனக்கு லின்ஸி சப்போர்ட்டா இருக்கா. அவளுக்கு ஆயுர்வேதம் தெரியும். அவளோட அப்பா, இந்த ஏரியாவில பெரிய வைத்தியர். இப்போ அவர் இல்லை. லின்ஸி, குட்டிக்கானத்தில ப்ராக்டிஸ் பண்ணுறா. வெளி உலகத்துக்கு அவ ஒரு டாக்டர். 2 மணிக்கு வந்திடுவா. இந்த நியூரோ சயின்ஸ் ரிசர்ச்ல எனக்கு சப்போர்ட்டா இருக்க, ரொம்ப நம்பிக்கையான, பாதுகாப்பான இன்னும் ஒரு ஆள் இருந்தா நல்லா இருக்கும்னு நெனைச்சேன். அப்போத்தான் வில்மர்ட் உன்னை சிபாரிசு  பண்ணினார். பார்த்தா, நல்லவனாத்தான் இருக்க...’’

னி கலந்த குளிர்காற்றுக்கு, அவர் கொடுத்த எலுமிச்சை தேநீர் இதமாக இருந்தது.

‘‘முதல்ல, இந்த ஆராய்ச்சி பத்தி உனக்கு விளக்கமா சொல்லிடறேன். இது அல்ட்ரா மாடர்ன் ஏஜ். மனிதனையும், அவனோட வாழ்வியலையும் அடுத்தகட்டத்துக்குக் கொண்டு போகிற ஆராய்ச்சிகள் உலகம் முழுக்க நிறைய நடந்துகிட்டு இருக்கு. பல ஆராய்ச்சிகள் வெளிப்படையா நடக்கும். சில ஆராய்ச்சிகள் ரகசியமா!’’

தேநீர் கோப்பையை கீழே வைத்து விட்டு அவர் தொடர்ந்தார்.


‘‘இதுவும் ஒரு ரகசிய ஆராய்ச்சி தான். ஸ்டான்போர்ட் புரபஸர் டாக்டர் வில்மர்ட்டும், நானும் சேர்ந்து டீ ஏஜிங் பத்தின ரிசர்ச் பேப்பர் ரெடி பண்ண ஆரம்பிச்சோம். புரியும்னு நெனைக்கிறேன். அதாவது வயதைக் குறைக்கிற ஆராய்ச்சி. எளிமையா சொல்லணும்னா, ஒரு 80 வயது மனிதனை, 30 வயசு ஆளா மாத்துறது. உடல், மூளை, மனசு, செயல் எல்லாமே...’’

‘‘சார், இதுனால....’’

‘‘உலகத்துக்கு என்ன நன்மைனு கேட்கப் போற... ரைட்?’’

லையசைத்தேன்.

‘‘அது நமக்கு தேவையில்லை. வில்மர்ட் சொல்லித்தான அனுப்பி இருக்கார்? இன்னைக்கு உலகம் முழுக்க நிறைய டார்க் நெட் ரிசர்ச் நடந்துகிட்டு இருக்கு. இதெல்லாம் சட்டப்பூர்வமான ஆராய்ச்சிகள் இல்லை. பெரிய, பெரிய மல்டிநேஷனல் கம்பெனிகளோட கோடீஸ்வர அதிபர்கள், பார்மா கம்பெனிகள் ஸ்பான்ஸர் பண்ணுவாங்க. சில சமயம், சில நாடுகளே கூட வெளியில தெரியாம ரகசியமா இதுமாதிரியான டார்க் ரிசர்ச் பண்ணுவாங்க. இன்னிக்கு லெவல்ல நிறைய டார்க் ரிசர்ச் உலகம் முழுக்க படு ரகசியமா நடந்துகிட்டு இருக்கு. தெரியும் தான?’’

‘‘கொஞ்சம் தெரியும் டாக்டர்’’

‘‘குட். இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் சமூகத்துக்காகவோ, இங்க இருக்கிற மக்களுக்காகவோ இல்லை. இந்த உலகத்தை மறைமுகமா தங்களோட கைபிடியில வெச்சு இயக்கிகிட்டு இருக்கிற பெரிய, பெரிய பில்லியனர்ஸ், வல்லரசு நாடுகள், அதோட பாதுகாப்பான சுப்ரீம் லீடர்ஸ், இவங்களோட நலனுக்காக நடக்கிற ஆராய்ச்சிகள் இது. இவங்களுக்காக, இவங்க பாதுகாப்புக்காக புதிய கண்டுபிடிப்புகள் செஞ்சு கொடுக்கிறதுக்காகவே பெரிய சயின்டிஸ்ட் டீம் ரகசியமா உலகம் முழுக்க இயங்கிகிட்டு இருக்கு. சுருக்கமா சொன்னா... இந்த உலகத்தில ரெண்டு விதமான கண்டுபிடிப்புகள் நடக்குது. ஒண்ணு, மனிதர்களுக்காக. ரெண்டு, அந்த மனிதர்களை இயக்குற உலகக் கோடீஸ்வரர்களுக்காக...’’

நான் அவரை முழுமையாக கவனித்துக் கொண்டிருந்தேன்.


‘‘இப்ப நம்ம மேட்டருக்கு வர்றேன். நமக்கு ஒரு பெரிய இன்டர்நேஷனல் பார்மா கம்பெனி ஸ்பான்ஸர் பண்றாங்க. அவங்க யாருக்காக இந்த வேலை பார்க்கறாங்கன்னு நமக்குத் தெரியாது. அவங்களுக்கு நாம இந்த ப்ராஜக்ட் செஞ்சு கொடுக்கணும். அவ்வளவுதான். இதுனால மக்களுக்கு, உலகத்துக்கு என்ன லாபம்? அந்த யோசனையே நமக்கு வரக்கூடாது. இதுல நமக்கு என்ன லாபம்? என்ன நன்மை? அதை பத்தி மட்டும் தான் யோசிக்கணும். இனி வர்ற புதிய உலகத்துக்கான கண்டுபிடிப்பு இது. அந்த உலகத்தை இயக்குற பில்லியனர்ஸ்க்கு, அரசியல் தலைவர்களுக்கு இது தேவையா இருக்கலாம். அந்த மல்டிநேஷனல் கம்பெனி, எங்ககிட்ட இந்த ப்ராஜக்ட் முடிக்கச் சொல்லி கொடுத்திருக்காங்க. நானும், வில்மர்ட்டும் சேர்ந்து வேலையை ஆரம்பிச்சோம். எலிகளை வெச்சு முதல்ல ஆராய்ச்சி பண்ணினோம். அதில் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைச்சதை நீ நியூஸ் பேப்பர், சேனல்களில் பார்த்திருப்ப. அதுவரையிலான செய்திதான் உலகத்துக்கு தெரியும். அதுக்கு மேல இங்க நடந்துகிட்டிருக்கிற ஆராய்ச்சி உலகத்துல யார் கவனத்துக்கும் வராது. அதுனாலதான், வெளி உலகத்துக்கே தெரியாத இந்தக் குட்டியூண்டு மலைக்கிராமத்துக்கு வந்து, யாருக்கும் தெரியாம இங்க இருந்து ஆராய்ச்சியை தொடர்ந்துகிட்டு இருக்கேன்....’’

கையைத் திருப்பி வாட்ச் பார்த்தவர்... ‘‘வா கிளம்பலாம். லின்ஸி வர்ற நேரம் ஆச்சு. லேப்ல வேலையை ஆரம்பிக்கணும்...’’

***

யாருமற்ற தனிமையில் இருந்த அந்த தோட்டத்து வீடோ, டாக்டர் வெஸ்லி ஆர்தரின் நடவடிக்கைகளோ அந்த மலைக்கிராம மக்களுக்கு எந்தவித சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்க வில்லை என்பதை அவருடன் இருந்த அந்த எட்டு மாதங்களில் புரிந்து கொண்டேன். வெளிநாட்டு டாக்டர்... தனது ஓய்வு காலத்தை கழிக்க, யாருமற்ற இந்த வனாந்தரத்தில் வீடு வாங்கித் தங்கி இருக்கிறார். இது இந்த வெள்ளைக்காரர்களின் வழக்கம்தான்... என்பதாகவே அப்பகுதி மக்கள் தெரிந்து வைத்திருந்தனர். சர்ச்சில் இருந்து அபூர்வமாக யாராவது வந்து டாக்டரை பார்த்துச் செல்வார்கள். மற்றபடி... காலையில் ஒரு வாக்கிங். பகலில் சிறிதுநேரம் தேவாலயம் - இதுதான் அவரது தினசரி வாழ்க்கையாக இருந்தது. பரிசோதனைகள் முழுக்கவே மாலையில் துவங்கி, நள்ளிரவு வரை தொடர்ந்தது. குட்டிக்கானத்தில் இருந்து லின்ஸி வந்ததும், ஆய்வுகள் ஆரம்பித்து விடும். வீடியோ காலில் வில்மர்ட் பெரும்பாலும் தினமும் வந்து விடுவார். வீடியோ கால் உரையாடல் நேரத்தில் என்னையும், லின்ஸியையும் வெளியே அனுப்பி விடுவார். இரவு உணவுநேரத்தில் அன்றைய ஆய்வு குறித்து விவாதிப்போம். இது அன்றாட வழக்கம்.

‘‘நம்ம ஆராய்ச்சி ஒரு முக்கியக் கட்டத்துக்கு வந்திருச்சி தெரியுமா?’’ அன்றைய இரவு உணவு முடிந்தப் பிறகு, வசதியாக சாய்ந்து அமர்ந்த படி எங்களைப் பார்த்துக் கேட்டார் வெஸ்லி.


‘‘வில்மர்ட் நேத்து பேசினார். எல்லாமே ஓகே. நேரடியாக டெஸ்ட் ஆரம்பிச்சிடலாம்னு சொல்லியிருக்கார். இந்த டீ ஏஜிங் பிராசஸ், ஓவர்நைட்ல நடந்து முடியிற விஷயம் இல்லை. நிறைய ஸ்டெப் இருக்கு. முதலில், நாம தயார் பண்ணியிருக்கிற மருந்து, யாரோட உடம்புல இன்ஜெக்ட் பண்ணப்படுதோ, அவரோட மூளையில புதிய நியூரான்களை உருவாக்கும். மனித உடலில் இளமையை நிர்ணயிக்கிற முக்கிய விஷயம், ஹார்மோன்ஸ். இந்த ஏஜ் ரிவர்சல் ப்ராசஸ் வெற்றியடையணும்னா, ஹார்மோன் பேலன்ஸ் பண்ணனும். அதுக்கான நேனோ ஹார்மோனல் கேப்ஸ்யூல்ஸ் தொடர்ந்து அஞ்சு நாள் எடுத்துக்கணும். அடுத்து, நாங்க கண்டுபிடிச்சிருக்கிற நியூரோஜெனடிக் ரீசெட் டபிள்யூ - சிக்ஸ் சீரம் இன்ஜெக்‌ஷன் தொடர்ந்து மூணு நாள் போடணும். அந்த இன்ஜெக்‌ஷன் ரொம்ப பவர்ஃபுல். இதுதவிர, கொஞ்சம் சப்ளிமென்ட்ஸ் எடுத்துக்கிடணும். 48 மணிநேரத்தில இந்த உலகம் ஒரு புதிய அற்புதத்தைப் பார்க்கும்!’’

தேவாலயத்தில் இருக்கும் இயேசு கிறிஸ்து சொரூபம் போல கைகளை விரித்த படி அவர் பேச... ‘‘டாக்டர், இதுல எந்த அளவுக்கு சக்ஸஸ் கிடைக்கும்? இதை யாருக்குக் கொடுத்து டெஸ்ட் பண்ணப் போறீங்க?’’

வர் என்னை கூர்ந்து பார்த்தார். ‘‘ஏன், உனக்கு மருந்து கொடுத்திருவேன்னு பயப்படுறியா?’’ மெல்லிய சிரிப்புடன் கேட்டார்.

‘‘நோ டாக்டர். எனக்கு பயமில்லை. உங்க மேல நம்பிக்கை இருக்கு. அதேசமயம், இது ஒரு புதிய முயற்சி. எலிகள்கிட்ட மட்டும் தான் இதை டெஸ்ட் பண்ணி பார்த்திருக்கோம். அது ஓகே தான். அதேசமயம்... மனித உடல்ல... இதை செக் பண்ணிப் பார்க்கறதுக்கு யாரை தேர்வு பண்ணி வெச்சிருக்கீங்க?’’

வர் சிரித்தார். முன்னால் மேஜையில் இருந்த ஜாம் தடவிய ரொட்டித் துண்டை எடுத்து கடித்து, கண்களை மூடிய படியே சிறிதுநேரம் அசை போட்டவர், மீண்டும் கண்களைத் திறந்து, ‘‘என் லேப்ல நான் யாரையும் பரிசோதனை எலியாக்க விரும்பலை. இந்த மெடிசினுக்கு நான் தான் பரிசோதனைக் கருவி. யெஸ். இந்த மருந்தை என்னோட உடம்புல செலுத்திக்க போறேன். இது நான் கண்டுபிடிச்ச மருந்து. இந்த மருந்துக்குள்ள என்னோட மூளை இருக்கு. என்னோட மூளை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு...’’

நாற்காலியில் இருந்து எழுந்து கொண்டார். ‘‘இன்னிக்கு திங்கள்.நேனோ ஹார்மோனல் கேப்ஸ்யூல் ஏற்கனவே எடுத்துக்க ஆரம்பிச்சிட்டேன். புதன்கிழமை டபிள்யூ - 6 சீரம் முதல் டோஸ் இன்ஜெக்ட் பண்ணிக்குவேன். வியாழன், வெள்ளி அடுத்தடுத்த டோஸ். அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஒரு புதிய உயிர்த்தெழுதல் நடக்கப் போகுது. யெஸ்.... அடுத்த சண்டே நம்ம வீட்டுல ஒரு ஈஸ்டர் பண்டிகை கொண்டாட ஏற்பாடு பண்ணீடு சத்யன்...’’

நானும் எழுந்து கொண்டேன். ‘‘உங்களோட நம்பிக்கை ஜெயிக்கும் டாக்டர். அதேசமயம், வேற ஒரு ஹ்யூமன் பாடில இந்த மருந்தை டெஸ்ட் பண்ணி பார்த்திடறது சேப்டினு நெனைக்கிறேன். ஏதாவது சின்னச் சின்ன பிரச்னை இருந்தாலும் சரி பண்ணிடலாம்ல?’’

மெதுவாக என்னருகே வந்து, என் தோள்களை பிடித்து மென்மையாக அழுத்தி நாற்காலியில் அமர வைத்தார். பிறகு, அவரது நாற்காலியை இழுத்து அருகே போட்டு அமர்ந்து கொண்டார். ‘‘உன்னோட உண்மையான அக்கறைக்கு நன்றி மிஸ்டர் சத்யன். நான் ஏன் எனக்கு இந்த மருந்தை செலுத்த ஆசைப்படறேன்? வயசு 70 கடந்திருச்சு சத்யன். நான் 30 வயசுக்கு திரும்புனா, இன்னும் நிறைய கண்டுபிடிக்கலாம். சாதிக்கலாம். பயன்படுத்தப்படாத ஏகப்பட்ட ஐடியா இந்த மூளைக்குள்ள பத்திரமா இருக்கு...’’

லையைத் தொட்டுக் காட்டிய படியே, ‘‘இந்த ஆராய்ச்சியோட கிளைமாக்ஸ்ல வந்து சேர்ந்திருக்க நீ. உனக்கு நிறைய விஷயம் தெரியாது. ஒரு ஹ்யூமன் பாடில இந்த மருந்தை டெஸ்ட் பார்த்திடலாம்னு நீ எனக்கு அட்வைஸ் பண்ற இல்ல...? நான் ஏற்கனவே செஞ்சு பார்த்துட்டேன்...’’

நான் அவரை நிமிர்ந்து பார்த்தேன்.


‘‘நிஜம்தான் சத்யன்.’’ இடதுபக்கம் கைகளைக் காட்டிய படி, ‘‘இந்தா... இவ, லின்ஸி... இவளுக்கு வயசு என்ன இருக்கும்னு நெனைக்கிற?’’

வரது கேள்வி எனக்கு திகைப்பை ஏற்படுத்தியது. மிகுந்த தயக்கத்துடன் லின்ஸியை திரும்பிப் பார்த்தேன்.


‘‘ரு உண்மையைச் சொல்லட்டுமா? இவளுக்கு ஆக்சுவலா வயசு 80க்கு மேல. ஆனா, இப்ப இல்ல. ரெண்டு வருஷத்துக்கு முன்னால! இப்ப இவ வயசு 30. நம்புப்பா, 30. திருவாங்கூர் சமஸ்தானத்து அரண்மனை வைத்தியர் பரம்பரை இவ. குட்டிக்கானம் ஜங்ஷன்ல இருந்து நடக்கிற தூரம்... ஒரு ஒன்னரை கிலோ மீட்டர் தூரத்துல இருக்கு அம்மச்சி கொட்டாரம். திருவாங்கூர் மகாராஜாக்களோட கோடைகால அரண்மனை அது.

ங்க வந்த புதுசுல, ஒரு நாள் அங்க போயிருந்தேன். அங்க வெச்சுத்தான் இவளைப் பார்த்தேன். இவ பேரு பத்மஜா. சொந்தம்னு யாருமில்லை. நடக்கமுடியாம ஒரு கட்டில்ல படுத்துக் கிடந்தா. நடக்கத்தான் முடியலையே தவிர, பரம்பரை, பரம்பரையா தலையில ஏறியிருந்த ஆயுர்வேத அறிவு அவகிட்ட நிறைய இருந்ததை பேசும் போது தெரிஞ்சுகிட்டேன். என்னோட ஆராய்ச்சிக்கு பயன்படுவான்னு தோணுச்சு. அவளோட சம்மதத்தோட யாருக்கும் தெரியாம ஒரு நாள் இங்க கூட்டிகிட்டு வந்திட்டேன். லின்ஸி-ன்னு புதுப் பெயர் சூட்டி, புது வாழ்க்கை கொடுக்க முடிவெடுத்தேன். எந்தத் தயக்கமும் இல்லாம டபிள்யூ - சிக்ஸ் சீரம் இன்ஜெக்‌ஷன் மூணு டோஸ் எடுத்துகிட்டா!’’

முகத்தில் வெற்றிப் பெருமிதம் பரவ, ‘‘இப்ப நீ பார்க்கிறயே... இந்த லின்ஸி. இவ வயசு எண்பதுனு இப்பச் சொன்னா நம்புவியா?’’

மெதுவாகத் திரும்பிப் பார்த்தேன். முகத்தில் சலனங்களின்றி அமர்ந்திருந்தாள் 30 வயது லின்ஸி.


‘‘ஆனாலும் ஒரு சின்ன தப்பு நடந்திருச்சு. ஈவன் தி மைட்டி ஸ்டம்பிள்...! டபிள்யூ - 6 சீரம் இவளோட உடல், மனசு, உள்ளுறுப்புகள், செயல்பாடுகளை 30 வயசுக்கு கொண்டு வந்திடுச்சு. ஆனா, தப்பு எங்க நடந்துச்சுன்னா... எமோஷனல் டிஸ்ஸசோஷியேசன். இவ மூளையில இருந்த நினைவுகள், உணர்வுகள், உறவுகள்... இதெல்லாம் அழிஞ்சுடுச்சு. மூளை சேமிச்சு வெச்சிருந்த அந்த மெமரி டேட்டாக்களை புதிய உடலுக்கு கடத்துற விஷயத்தில டபிள்யூ - 6 சீரம் சறுக்கீடுச்சு. எங்க ஆராய்ச்சி இன்னும்  முழுசா முடியலைன்னு புரிஞ்சுகிட்டோம். அதுக்கப்புறம் உருவானதுதான் மெமரி ரிடென்ஷன் சப்ளிமென்டரி இன்ஜெக்‌ஷன். இதுவும் பரிசோதனை செஞ்சு பார்த்தாச்சு. சக்ஸஸ். இந்த மருந்து, நம்ம மூளையோட உள் அடுக்குகளை ஃப்ரீஸ் ஆக்கீடும். டபிள்யூ - 6 சீரம், நம்ம உடலோட செல்களை மியூட்டேஷன் பண்ணிகிட்டு இருக்கும்போது, இந்த சப்ளிமென்டரி மருந்து, நம்ம நினைவுகள் அழிஞ்சிடாம பாதுகாத்து வெச்சிருக்கும்...’’

நான் பிரமித்துப் போய் அமர்ந்திருந்தேன்.


‘‘இந்த பூமி உருண்டையில், சாத்தியப்படுத்தவே முடியாது என வரையறுக்கப்பட்ட செயல்களையும் சாத்தியமாக்கும் வல்லமை, வருங்காலத்திற்கு உண்டு...’’ 

- டாக்டர் வெஸ்லி ஆர்தரின் எழுதப்படாத டைரியின் முதல் பக்கத்தில் இருந்து!


(திடுக்கிடும் கிளைமாக்ஸ்... டா  ர்  க் - two)

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

2 கருத்துகள்:

  1. மனமார வாழ்த்துக்கள்! மிக நேர்த்தியான Science Fiction,

    பதிலளிநீக்கு
  2. அபாரமான கற்பனை திறன் கொண்ட கதைக்களம். கதையைப் படிக்கும் பொழுது வாகமண், குட்டிக்கானத்தில் நம் கண் முன்னே வந்து செல்கிறது. இன்னும் ஒரு சில வருடங்களில் இந்த நிகழ்வுகள் உண்மையாகலாம்.

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...