திங்கள், 3 ஏப்ரல், 2017

கடலோரக் கவித... கவித...!

தோளில் வலையும், இன்னபிற கடலோடி உபகரணங்களுமாக கையசைத்து, கடலுக்குள் பிரிந்து போகிற கணவனுக்காக கரையில் காத்திருக்கிற நெய்தல் பெண்ணின் சோகங்களால் மட்டுமே ஆனதல்ல கடல்புறம். காத்திருக்கிற பெண்ணின் இரங்கல் உணர்வுகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிற இலக்கியங்கள் வாயிலாக, தமிழுக்கு நெய்தல் மண் நிறையவே பங்களித்திருக்கிறது. அதைக் கடந்து, மனித நாகரிக வளர்ச்சியின் அடுத்தகட்டம் இந்த மண்ணில் இருந்ததை உலக இலக்கியங்கள் பதிவு செய்கின்றன. காடு, மலை, வயல் வெளிகளில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை, அந்தந்த நிலப்பரப்புக்குள் முடங்கிக் கிடந்தது. கடல்புறம் அப்படி அல்ல. மரக்கலங்கள் துணையுடன் அவர்கள் பூமிக்கீற்றின் சகல திசைகளுக்கும் சென்று வந்தார்கள். பல திசை நாகரிகங்கள், கலாச்சாரங்கள், இலக்கியங்களின் பரிவர்த்தனை பிரதேசமாக நெய்தல் மண் திகழ்ந்தது.


புயலா... மழையா?

பிற திணைகளுடன் ஒப்பிடும் போது, கடல்புறம் வித்தியாசமானது. அபாயமானதும் கூட. கடலுக்குச் சென்றவன் திரும்பி வந்து, கரையில் கால் வைத்தால் தான் நிச்சயம். புயலோ, மழையோ வந்து விட்டால்... கரையோரக் குடிசையில் கணவனுக்காக காத்திருக்கிற பெண்ணின் மன உணர்வுகளை வார்த்தைகளுக்குள் கொண்டு வருவது சிரமம்.
‘‘தரை மேல் பிறக்க வைத்தான்...
எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்;
கரை மேல் இருக்க வைத்தான்...
பெண்களை கண்ணீரில் துடிக்க வைத்தான்...’’
- என்கிற வாலியின் வரிகளுக்குள் சத்தியம் நிரம்பியிருக்கிறது. ஆனால், இயற்கை அவர்களை ஒருபோதும் கைவிட்டதில்லை. தாயின் மடியில் கிடக்கிற பிள்ளை போல,கடலின் அலைகளுக்குள் அவர்கள் மிக பாதுகாப்பாகவே இருக்கிறார்கள். இயற்கைக்கு இது இந்தியாவென்றும், இலங்கை என்றும் பேதம் பிரித்துப் பார்க்கத் தெரியாது!

உப்புக் கருவாடு!

ராமேஸ்வரம் பக்கம் சாலை மார்க்கமாக போகிற போது கவனித்திருக்கலாம். பாம்பன் பாலம் இறங்கியதும் இரண்டு பக்கமும் மீன்களை பரப்பி, காய வைத்திருப்பார்கள். எதற்காக? அதிகம் விலை போகாத ஒரு சில ரகங்களை உப்புக் கருவாடு ஆக்குவதும், வேறு சில பயன்பாடுகளுக்கு தயார்படுத்துவதற்காகவுமே இந்த காய வைத்தல். சங்க இலக்கிய நெய்தல் குறிப்புகளைப் படிக்கிற போது, ‘மீன் உணக்கல்’ என்கிற ஒரு தகவல் அறியமுடிகிறது. அதாவது, மீன் பிடித்துத் திரும்புகிற பரதவப் பெருமக்கள், கடற்வெளி மணற்பரப்பில் பிடித்து வந்த மீன்களை பரப்பிக் காய வைக்கிறார்களாம்.

‘‘உரவுக் கடல்உழந்த பெருவலைப் பரதவர்
மிகுமீன் உணக்கிய புதுமணல் ஆங்கண்...’’
- என்கிறது நற்றிணை (63). உணக்கல் என்றால், உணர்த்துதல். வெயிலில் காய வைத்தல். எதற்காக காயவைக்கிறார்கள்? இந்தக் காலம் போல Cold storage வசதிகள் அப்போது கிடையாதில்லையா? கரை திரும்பியதும், விற்றுத் தீர்ந்தது போக மிச்சம் இருப்பதை இப்படி உணக்கி வைத்துக் கொள்வதுதான் ஒரே வழி. சாப்பிடும் போது ‘கடித்துக் கொள்ளவும்’ ஆச்சு; நாலு நாள் கழித்து டிமாண்ட் வரும் போது மாற்றி விடவும் பயன்படும். அந்தக் காலத்தில் பண்டமாற்று முறைதான். ‘இந்த கருவாட்டுப் பையை எடுத்துகிட்டு, கொஞ்சம் அரிசி, பருப்பு கொடு மக்கா...’ என்று பிழைப்பு நடத்தியிருக்கிறார்கள்.

மூதாய்!
ருத நிலத்து மக்களைப் போலவே, இவர்களும் இயற்கையோடு இயைந்து வாழ்ந்திருக்கிறார்கள். காற்று, மழை அறிந்து கடலுக்குள் இறங்கவேண்டும். இயற்கையை இவர்கள் தங்களுக்கு அப்பாற்ப்பட்ட ஒரு சக்தியாக அல்லாமல், தங்கள் குடும்ப உறவு போல கருதி வந்திருப்பதும் இலக்கியங்கள் நமக்குத் தருகிற ஆச்சர்ய சேதி. கடலை அவர்கள் வெறும் கடலாக மட்டும் பார்க்க வில்லை. தங்கள் சமூகத்தின் மூதாயாக, மூத்த தாயாக பார்த்தார்கள்; பார்க்கிறார்கள். கடலும் அவர்களை அப்படியே பார்க்கிறது. அவர்களது பார்வை மாறுகிற போது, கடலின் பார்வையும் மாறுகிறது.

டல் மட்டுமல்ல... கரையோரங்களில் இருக்கிற மரங்கள், செடிகள், பூக்கள்... இவையும் கூட சொந்த பந்தந்தேன். நற்றிணையில் (172: 4 - 7) ஆதாரம் இருக்கிறது.

டல்புறத்து குட்டீஸ்களுக்கு அங்கு கிடைக்கிற புன்னை மரத்துக் காய்களை சேகரித்து விளையாடுவது ஒரு பொழுதுபோக்கு. அப்படி, விளையாடி முடித்ததும், மிஞ்சி இருந்த புன்னைக்காயை, குடிசைக்குக் கொஞ்சம் தள்ளி இருக்கிற மணற்பரப்பில் விளையாட்டாக ஆழத் தோண்டி நடுகிறாள் ஒரு சிறுமி. சில நாளில், காய் முளைத்து இலை விடுவது கண்டதும் ஆச்சர்யம் தாங்கவில்லை. ‘இந்தப் புன்னை செடி., உனது தங்கச்சியாக்கும்...’ என்று அம்மா சொல்லுகிறாள். சிறுமியின் பிஞ்சு மனதில் அது அப்படியே பதிய, ‘புது தங்கச்சி’க்கு தினமும் நீரூற்றி படு பத்திரமாக பராமரித்து வளர்க்கிறாள்.

டீன் ஏஜ்... ஜிலுஜிலு!

விதை செடியாகி, செடி வளர்ந்து பெரு மரமாக... புன்னை மரமாக கிளை பரப்பி எழுகிறது. சிறுமியும் இப்போது வளர்ந்து, டீன் ஏஜ் வயதில் ஜிலுஜிலுவென கடலோரத்துக்கு புது கலர் கொடுக்கிறாள். காலங்கள் மாறுகிறது. இந்த ‘கடலோரக் கவித’க்கு ஒரு பாய் பிரண்ட் கிடைக்கிறான். இருவரும் ஒரு வெயில் நேரத்தில், இந்தப் புன்னை மரத்து நிழலுக்குக் கீழே அமர்கின்றனர். செல்ல விளையாட்டு விளையாட வருபவனைத் தட்டி விட்டு விட்டு சொல்கிறாள்...
‘‘நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்என்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே...’’
- ‘‘இந்தப் புன்னை மரம் என் தங்கச்சியாக்கும் (நுவ்வை). இங்க எப்படி உன்னோட நான் காதல் மொழி (நகை) பேசமுடியும்?’’  அடடா! நெய்தல் நிலத்தில் விளைந்த இலக்கியத்தில் இளமை எப்படி டாலடிக்கிறது பாருங்கள்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

  1. அந்தக் காலத்தில் இப்படித்தான் இலைமறை காய்மறையாக காதல் உணர்வுகளை வளர்த்துவந்தார்களோ? புன்னைச்செடி கவிதை எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. 'முளிதயிர் பிசைஇய காந்தள் மெல்விரல்..' போல இதுவும் புகழ்பெற்ற பாடல்.

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...