ஞாயிறு, 1 ஜனவரி, 2017

நாய் வாலை நிமிர்த்த முடியாது; நம்மாள்களை திருத்தமுடியாது


‘‘அடப்பாவிகளா... கொஞ்சமா கண்ணசந்த நேரமா பார்த்து, கோவணக் கொடி கட்டின மாதிரி, உங்கக் கட்சிக் கொடியக் கொண்டு வந்து கட்டிட்டீங்களேடா...? இன்னும் கொஞ்சம் அசந்திருந்தா... முதுகுல பெயிண்ட் அடிச்சி, உங்க சின்னத்தையும் வரைஞ்சு விட்டுட்டுப் போயிருப்பீங்களேடா! ஊர், உலகத்துல எத்தனையோ இடம் இருக்க... போயும், போயும் இங்க வந்து பிறந்தேன் பாருங்க... எல்லாம் என் தலையெழுத்துடா...’’ - ‘நாய்ப் பொழப்பு பொழைக்க வேண்டியிருக்கிறதே...’ என எண்ணி நடுரோட்டில் நின்றபடி Feel பண்ணுகிறது இந்த தென் தமிழக நகரத்து நாய் (ஊர் வேணாம் சார்... வம்பு!).

பக்கம், பக்கமாக எழுதித் தள்ளியும் கொண்ட வர முடியாத feelingஐ, செல்போன் கேமராவில் எடுத்த ஒரு சிங்கிள் போட்டோ கூட்டிக் கொண்டு வந்து விடுகிறதில்லையா? போட்டோவுக்கு இருக்கிற மகத்துவம் அது. ‘பூனைக்குட்டி’யின் இந்த ‘பேசும்படம்’ முழுக்க, முழுக்க அனிமல் ஸ்பெஷல்!


நல்லி எலும்பக் குடுங்கடான்னா...


காய்கறி வாங்கணும். ரேஷன் கடைக்குப் போகணும் - ஆள் இல்லாமல் அவஸ்தையோ, அவஸ்தையா? இனி, நோ பிராப்ளம். ‘டைகர்... கால் கிலோ உருளைக் கிழங்குடா...’ என்று கூடையைக் கொடுத்து அனுப்பினால், (கமிஷன் எதிர்பார்க்காது) கச்சிதமாக கவ்விக் கொண்டு வந்து சேர்த்து விடும். சேஃப்டிக்கு சேஃப்டியும் ஆச்சு; உருளைக்கிழங்குக்கு உருளைக்கிழங்கும் ஆச்சு! மிருகவதை என்று நீலச்சிலுவைக்காரர்கள் கண்ணீர் வடித்த படி வந்து பிராது தாக்கல் செய்வார்கள். டைகர் பல்டியடித்து, நமக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்து விடக்கூடாது. அவ்ளோதான்! ‘டைகருக்கு டார்ச்சர்’ க்ளிக் பதிவான இடம்: ஏலகிரி மலையில் நடந்த கோடைவிழா.


மந்தையைப் பிரிந்த யானைக்குட்டி!


சிக்னலில் சிகப்பா, பச்சையா என்று யாருமற்ற தருணங்களில் நாம் விதியை தூர வீசி விட்டு பறக்கிறோமில்லையா? இந்த சிக்னல் சமாச்சாரமெல்லாம் மெய்யாகவே தெரியாத படியால், ராஜநடை போட்டு சாலையை கடக்கிறது இந்த யானைக்குட்டி. அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, அண்ணன், தம்பி... என்று பாசக்கார குடும்பத்தை பிரிந்து, வழிதவறி... டிராபிக்கை ஜாம் செய்த படியே சாலையை கிராஸ் பண்ணுகிறது. உண்மையில், இது யானைப்பாதையாக (Elephant corridor) இருந்தது. அது ஒரு காலம். இப்போது வனத்தை அழித்து, மரங்களை வெட்டி, பாறைகளை உடைத்து, புல்டோசர் வைத்து, அதன் ஏரியாவுக்குள் தங்க நாற்கரச் சாலைகள் போட்டு விட்டோம். ஐகோர்ட்டுக்கு வந்து அது என்ன ரிட் பெட்டிஷனா போடமுடியும்? ரயிலிலும், லாரியிலும் அடிபட்டு சிவலோக / வைகுண்டப் பிராப்தியடைகிறது! இடம்: கவுஹாத்தி, அசாம் மாநிலம்.


பாத்து தூக்குங்கப்பா...!


‘காலு மொத்தம் நாலு... பாசம் காட்ட வாலு’ - என்று கவித... கவித எழுத வைக்கிற நாய்ஸ் நமக்கு செய்கிற உதவிக்கு, அடுத்தபிறவியில் நாம் நாயாகவும், அது மனிதனாகவும் பிறந்தால் மட்டுமே நன்றிக்கடன் தீர்த்து டேலி செய்யமுடியும். குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் இடிபாடுகளுக்குள் யாரும் சிக்கித் தவிக்கிறார்களா என உள் நுழைந்து தேடிப் பிடித்து, பல உயிர்களைக் காப்பாற்றிய இந்த மோப்ப நாயை, மீண்டும் பத்திரமாக, பாதுகாப்பாக வெளியே தூக்குகிறார்கள் மீட்புப்படைக்காரர்கள். இடம்: பிவாண்டி, மும்பை.


கொஞ்சம் ‘ஆ...’ காட்றா செல்லம்!


ம்மூர் அரசு மருத்துவமனை பக்கம் போயிருந்தால் தெரியும். படுக்க இடமில்லாமல், பாத்ரூம் பக்கத்தில் கூட துண்டு விரித்துக் கிடப்பார்கள். வலியின் வீரியம் தாங்க இயலாத நிலையில், வாய் விட்டு அலறியும், ஆறுதலுக்கு யாரும் வந்து இன்முகம் காட்டாத அந்த நிலை... வாழ்வியல் அவலத்தின் உச்சம். வௌ்ளக்கார தேசங்களில் எல்லாம் நிலைமை அப்படி இல்லையாம். வசதியாக படுக்கப் போட்டு, தலை பிடித்து ‘இன்னும் கொஞ்சம் ஆ... காட்றா செல்லம்’ என்று ராசா... ராசா... காட்டுராசாவுக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கிறார்கள். இடம்: வைல்ட் லைஃப் ஹாஸ்பிடல், டெல் அவிவ், இஸ்ரேல்.


அலங்காநல்லூர் ‘ரிகர்சல்!?’


‘வாலை கடிப்பான்... திமிலைப் புடிப்பான்... பண்ணாத டார்ச்சர் பண்ணுவான். ஆனாலும், அதுல ஒரு கிக் இருக்கத்தான் செஞ்சது. நம்ம வீரம் என்னனு இந்த மனுஷப் பக்கிப் பயபுள்ளகளுக்கு காட்டுறதுக்கு அந்த ஒரு நாள், செம வாய்ப்பா இருந்துச்சு. குட்டைக்கால் டிரவுசர் போட்டு வார வெளிநாட்டுக்காரவுக முன்னால... கொம்பால குத்தித் தூக்கி வீசி எறிஞ்சுட்டு கம்பீரமா ஓட்டம் போட்ட அந்த நாளுக நெஞ்சுல நிழலாடுது. பேட்டாவா... பீட்டாவா... அவய்ங்களுக்கு எங்க தெரியப் போகுது, இது இந்த மண்ணோட வீர அடையாளம்னு? சரிச் சரி... சும்மா கிடந்தா கொம்பு மட்டுமில்ல... தெம்பும் மங்கிப் போகும். வா... மோதிப் பாக்கலாம்! இடம்: மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் அருகே - நடுரோடு.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

7 கருத்துகள்:

  1. விலங்குகள் எல்லாம் பழக்கினால் மனிதர்களை விடவும் உற்ற தோழனாக இருக்கும் போல

    பதிலளிநீக்கு
  2. அனைத்தும் அருமை...

    இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. அருமையான பட(த)ங்கள்.சிங்கத்தின் வாய்க்குள் கைவிடும் படம் பார்த்து மெர்சலாய்ட்டேன்!!! நாய் சுற்றிய கட்சிக்கொடிக்கு நீங்க கொடுத்த interpretation செம :D

    பதிலளிநீக்கு
  4. அருமையான படங்கள். அதற்கு நீங்கள் தந்திருக்கும் விளக்கமும் நன்று. பாராட்டுகள்....

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.....

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...