வெள்ளி, 2 டிசம்பர், 2016

இரும்பிலே... ஒரு இதயம்!

செல்போன் இல்லாத வாழ்க்கையை ஒரு நிமிடமாகிலும் இன்றைக்கு யோசித்துப் பார்க்க முடிகிறதா? அதுவன்றி எதுவும் இயங்காது என்கிற நிலைக்கு ஏறக்குறைய வந்து விட்டோம். பத்து நிமிடம் நெட்வொர்க் இல்லையென்றாலும், மூச்சுத்திணறல் வந்து விடுகிறது. யாரையும் குற்றம் சொல்லிப் பயனில்லை. தகவல்தொழில்நுட்ப பெரு உலகம் இயந்திரத்தையும், மனிதனையும் இருவேறு கூறுகளாக பிரித்துப் பார்க்க விரும்புவதில்லை. திட்டமிட்ட செயல்கள் யாவும், திட்டமிட்ட படிக்கு நடந்து முடியவேண்டும் என்பதால், மனிதனும் இயந்திரமாகவே மாறியாக வேண்டிய கட்டாயம். கண்ணுக்கு முன் கழுத்தறுத்தால் கூட, சலனமற்றுப் பார்த்து விட்டு பஸ் ஏறுகிற இயந்திர இதயமே, பரிணாம வளர்ச்சியில் மனிதன் கண்ட உச்சக்கட்டம். கான் வாழ்க்கை அப்படியானது அல்ல. அது, உணர்வுப்பூர்வமானது.


பருவம் என்ன?


சூரிய ஒளி புகாத அடர் வனத்துக்குள், யாருமற்ற தனிமையில், சலசலத்து ஓடுகிற நதி. அதில் மூழ்கிக் குளித்து விட்டு, மூங்கிலரிசி, மலைநெல், தினை சமைத்து உண்பது. வேட்டையில் கிடைத்த காட்டுப்பன்றியை இரவு விருந்துக்காக பக்குவப்படுத்திக் கொள்வது. பகல் பொழுதுகளில் நிலம் கொத்தி விவசாயம், வேட்டை, தேன் எடுத்தல் என்று இயற்கை சார்ந்து வாழ்கிற அந்த வன வாழ்க்கை குறிஞ்சி கொடுத்த கொடை. வனத்தையும் வர்த்தக மையமாக மனிதன் பார்க்கத் துவங்கிய நாளில் துவங்கியது அழிவு. காடழிந்தது. மலையழிந்தது. மழை வளம் அழிந்தது. இயற்கை சமநிலை அழிந்தது. மிகக் கடைசியாக மனிதமும் அழிந்தது.

ந்திணை மக்களின் வாழ்க்கையை முழுமையாக தெரிந்து கொள்வதற்கு முன்பாக, தொல்காப்பியம் பொழுதை எப்படி வகை பிரித்து வைத்திருக்கிறது என்று தெரிந்து கொள்வது அவசியம். காலத்தை பெரும்பொழுது, சிறுபொழுது என இரு பிரிவுகளாக பிரித்திருக்கிறார் தொல்காப்பியர் சார். இந்த இரு பிரிவுகளும் வானவியல் நகர்வுகளை மையமாகக் கொண்டு பிரிக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால்... ‘அட’ என்று ஆச்சர்யப்படுவீர்கள். சூரியனை ‘நம்ம’ பூமி சுற்றுவதை மையமாகக் கொண்டு பெரும்பொழுதும், பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்வதை அடிப்படையாகக் கொண்டு சிறுபொழுதும் தலா ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பொழுது என்பது பருவம் (Season). சிறுபொழுது என்பது நேரம் (Time).

பேய் திரியும் நேரம் எது?


ரு நாளை 24 மணிநேரம் என்று இப்போது நாம் கணக்குப் பிரித்து வைத்திருக்கிறோம். 60 நிமிடம் * 24 மணிநேரம் = ஆயிரத்து 440 நிமிடங்கள். இதெல்லாம் ஜூஜூபி. 3 ஆயிரம், 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே பூமியின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு நம்மாட்கள் நேரத்தை பிரித்து வைத்திருக்கிறார்கள். கணக்கெடுத்துப் பார்த்தால் அச்சு அசலாக ஒரு நாள் என்பது ஆயிரத்து 440 நிமிடங்களாக இருக்கிறது. ‘இன்னும் ஒன் அவர்ல டிரெய்ன் கிளம்பிடும். 15 நிமிஷத்துல தியேட்டர் போகணும். ஜஸ்ட் டூ செகண்ட்ல ஃபர்ஸ்ட் ப்ளேஸ் மிஸ்சாகிடுச்சி...’ என்றெல்லாம் தொல்காப்பிய காலத்து தாத்தாஸ் அண்ட் பாட்டீஸ் நேரம் பார்த்ததில்லை. அவர்கள் நேரத்தை நாழிகைகளாகப் பிரித்திருந்தார்கள். 60 நாழிகைகள் கொண்டது ஒரு நாள். ஒரு நாழிகை என்பது இப்போதைய நம்ம கணக்குப் படி 24 நிமிடம். கூட்டிக் கழிச்சுப் பாருங்க... ஆயிரத்து 440 நிமிடம் சரியாக டேலி ஆகும்.

ந்த 60 நாழிகைகளை (24 மணிநேரத்தை) வைகறை (கோலம் போடுகிற நேரம்), காலை (இட்லியா, தோசையா... என்ன டிஃபன் என்று கேட்கிற நேரம்), நண்பகல் (வெயில் மண்டையப் பிளக்குதுடா சாமீய்...), எற்பாடு (பொழுது சாய்ஞ்சிடுச்சி), மாலை (ஃபர்ஸ்ட் ஷோ படத்துக்கு போலாமா?) யாமம் (பேய் திரிகிற நேரம்) என்று பிரித்திருக்கிறார்கள். இன்னும் புரிகிற மாதிரி சொல்லவேண்டுமானால்... வைகறை அதிகாலை 2 முதல் காலை 6 மணி வரை, காலை 5 - 10, நண்பகல் 10 - 2, எற்பாடு 2 - 6, மாலை 6 - 10, யாமம் 10 முதல் நள்ளிரவு 2 வரை. ரைட்டா?

அறிவியல் தந்த பரிசு!

டுத்து பெரும்பொழுது. சூரியனை பூமி சுற்றுவதன் அடிப்படையில் இளவேனில் ( தை - மாசி), முதுவேனில் (பங்குனி – சித்திரை), கார் (வைகாசி – ஆனி), கூதிர் (ஆடி – ஆவணி), முன்பனி (புரட்டாசி – ஐப்பசி) பின்பனி (கார்த்திகை – மார்கழி) என ஆறு பருவங்களாக (Season) பிரித்திருக்கிறார்கள்.

காரும் மாலையும் முல்லை; குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்.
பனிஎதிர் பருவமும் மொழிப.
வைகறை விடியல் மருதம்; ஏற்பாடு
நெய்தலாதல் மெய்பெறத் தோன்றும்
நடுவு நிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே
பின்பனி தானும் உரித்தென மொழிப...

என தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் (6 - 10) நேரம், பொழுதை (Time & Season) திணைகளின் வகைகளுக்கு ஏற்ப பிரித்துத் தருகிறது.

தி மனிதன் இயற்கையுடன் வாழ்ந்தான்; இயற்கையாக வாழ்ந்தான். உணவு, தங்குமிடம், வாழிடம் என்கிற வகைகளில் அவனுக்கு சில நெருக்கடிகள் இருந்தன. ஆனால், நவீன அறிவியல் நமக்கு அளித்துள்ள அன்புப் பரிசான Stress... அது நிச்சயம் அவனுக்கு இருந்ததே இல்லை. வனங்களில் புகுந்து மரங்களை, மலைகளை அழித்து கதவுகளாக, சமையலறை மேஜைகளாக மாற்றினோம். இயற்கை சமநிலையைச் சீர்குலைத்தோம். நாம் அழித்தது மலையையும், மரத்தையும், இயற்கைச் சூழலையும் மட்டுமே அல்ல என்கிற சுடும் உண்மையை... கவலையற்றுத் தூங்கிய காலங்கள் கனவாகவே போய் விட்ட இன்றைய நவீன காலம் முகத்திலறைந்து உணர்த்துகிறதில்லையா?!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...