ஞாயிறு, 20 நவம்பர், 2016

ரம்பம்பம்... ஆரம்பம்!

யாமம், நாழிகை... இந்த வார்த்தைகளெல்லாம் கேள்விப் பட்டதுண்டா? சாண்டில்யன் கதை படித்தவர்கள் ‘ஓ... யெஸ்’ என்று கை உயர்த்துவார்கள். ‘புரவியில் புயலெனச் சீறிப் பறந்த மந்திரிகுமாரி, இரு நாழிகைப் பொழுதில் அரச விதானத்தையடைந்தாள்...’ - என்றெல்லாம் வரிகளைப் போட்டு எழுதினால் தான், சரித்திரக் கதைக்கு, சரித்திர எஃபெக்ட் கிடைக்கும். இல்லையா? இந்த யாமம், நாழிகை என்பவை வெற்று அலங்கார வார்த்தைகளல்ல. அதற்குப் பின்புலத்தில் இருக்கிறது நேர அறிவியல்.


பிளாட் போடுற மேட்டரா?

‘இது குறிஞ்சி... இது முல்லை... இது மருதம்...’ என்று ரியல் எஸ்டேட்டுக்கு பிளாட் பிரித்தது போல நம்மவர்கள் நிலத்தை சும்மாகாச்சுக்கும் பாகம் பிரித்து வைக்க வில்லை. நிலவியல் அமைப்புகளின் அடிப்படையில் ஐந்து வகைகளாக பிரித்தவர்கள், ஒவ்வொரு நிலத்துக்கும், அந்த நிலத்தில் வசிக்கும் மக்களுக்குமான இயல்புகளை, கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற மூன்று பிரிவுகளாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். இயற்கைக்கும், அதைச் சார்ந்து வாழ்கிற உயிர்களுக்குமான உறவு, ஆதார பிணைப்பை இந்த மூன்று விஷயங்களும் தெளிவுபடுத்துகின்றன.

முதல் பொருள் என்பது நிலம், பொழுது (Space & Time).
‘‘முதலெனப்படுவது நிலமும் பொழுதிரண்டின்
இயல்பென மொழிப இயல்புணர்ந்தோரே...’’ என்கிறது தொல்காப்பியம் (அகம் 4). நிலமும், பொழுதும் இன்றி எதுவும் இயங்காது. என்பதால், இவ்விரண்டையே, முதல்பொருளாக நம்மவர்கள் பகுத்து வைத்திருக்கிறார்கள்.

உணவு, தொழில்!


ரண்டாவது கருப்பொருள். அப்டினா என்ன?
‘‘தெய்வம் உணாவே மாமரம் புள்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப...’’ என்கிறது தொல்காப்பியம் (அகம் 18). Space & Time மேட்டருக்கு அடுத்த படியாக வருகிற விஷயம் கருப்பொருள். ஒரு நிலத்துக்கான மக்கள் வணங்குகிற தெய்வம், உணவு, அந்த நிலத்துக்கான மரங்கள், பறவைகள், விலங்குகள், பயிரினங்கள் என்று லிஸ்ட் போட்டு தருகிறது தொல்காப்பியம். இவை மட்டுமல்ல பிரதர்ஸ்... அந்த ஏரியா மக்கள் பார்க்கிற தொழில், வேலை முடிந்து ஓய்வாக இருக்கும் போது அவர்கள் எந்தெந்த இசைக்கருவிகளை எடுத்துக் கொண்டு, ‘ரம்பம்பம்... ஆரம்பம்...’ என்று கொண்டாட்டம் போடுவார்கள் என்றும் கருப்பொருள் பிரிவில் இருக்கிறது. ‘‘The beings and things peculiar to different regions (‘karu’) are said to be God, food, animal, tree, bird, drum, profession and lute and such others...’’ என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, வெளிநாட்டுக் காரர்கள் வியக்கிறார்கள்.

ஜாலி டிரிப் ரெடியா?

டுத்து உரிப்பொருள். மேற்படி ஐந்து வகை நிலங்களில் வசிக்கிற மக்களின் மன உணர்வுகளைப் பற்றி பேசுகிற ஒரு மனோதத்துவ சப்ஜெக்ட் தான் உரிப்பொருள். கூர்ந்து பார்த்தால், ஹியூமன் சைக்காலஜி இதில் இருக்கிறது.
‘‘புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங் காலை திணைக்குஉரிப் பொருளே...’’ என்கிறது தொல்காப்பியம் (அகம் 16). ஐந்து திணைகளைச் சேர்ந்த மக்களின் இன்ப, துன்ப விவகாரங்களை அலசுகிற பகுதி இது.

முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்கிற இந்த விஷயங்கள் இன்னதென்று தெரிந்து கொண்டப் பிறகே, திணை வகைகளை அணுகுவது எளிமையாக இருக்கும். இந்தப் புரிதல்களுடன் குறிஞ்சி, முல்லை, மருதல், நெய்தல், பாலை நிலப்பரப்புகளுக்குள் (அடுத்த வாரத்தில் இருந்து) ஒரு ஜாலி ரவுண்டடித்துத் திரும்பலாமா? யாமம், நாழிகை பற்றி அப்போது விரிவாகவே பார்க்கலாம். ரைட்டா?


எழு, ஏழா பிரிச்சிக்கோ!


‘‘பூவை, பூ என்றும் சொல்லலாம். புய்பம் என்றும் சொல்லலாம்... என்பது சினிமா டயலாக். உருவம் + பருவம் ஆகியவற்றின் அடிப்படையில் பூவை நமது தமிழ் எத்தனை வகையாக பிரித்து வகைப்படுத்தி வைத்திருக்கிறது என்று சொன்னால், ‘ஓ... மை காட்!’ என்று ஐரோப்பியர்களே ஆச்சர்யப்பட்டுப் போவார்கள் என்று 98வது வாரத்தில் வைத்த கேள்விக்கு இன்னும் பதில் வரலையே,’’ என்று நிறைய நண்பர்கள் நினைவூட்டல் கடுதாசி போட்டிருந்தார்கள்.

பாலன் (1 முதல் ஏழு வயது), மீளி (8 - 10) மறவோன் (11 - 14), திறவோன் (15), விடலை (16), காளை (17 - 30), முதுமகன் (30 +) என்று வயதின் அடிப்படையில் ஆண்களை ஏழு வகைகளாக தமிழ் பிரித்து வைத்திருக்கிறது. பேதை (5 முதல் 8 வயது வரை), பெதும்பை (9 - 10), மங்கை (11 - 14), மடந்தை (15 - 18), அரிவை (19 - 24), தெரிவை (25 - 29), பேரிளம் பெண் (30 +) என்று பெண்களையும் ஏழு வகைகளாக பிரித்து வைத்திருப்பதை தமிழ் சினிமாக்களின் வாயிலாக அறிந்திருப்போம்.

ந்த வரிசையில், பூவை அதன் பருவங்களுக்கு ஏற்ப 7 வகைகளாக பிரித்திருப்பதைப் பாருங்களேன். அரும்பு (துவக்க நிலை), மொட்டு (வாங்கி ஈரத்துணியில் கட்டி வைத்தால், காலையில் ஓகே), முகை (மலர்ந்து மணம் வீசுவதற்கு சில நிமிடங்கள் முன்பு), மலர் (பேரம் பேசி வாங்கி அப்டியே தலையில் வைத்துக் கொள்ளலாம்), அலர் (அடடா... ரொம்பவும் மலர்ந்திடுச்சே!), வீ (வாடிப் போச்சு), செம்மல் (ஒன்ஸ் அப்பான் ஏ டைம்... இது பூ!).


😸 திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார்  😻

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...