சனி, 16 ஜூலை, 2016

புது ‘வெள்ளி’ மழை... இங்கு பொழிகின்றது!

காதலுக்கு அப்படி ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. சங்க இலக்கியங்களில் வருகிற தலைவன், தலைவி காதல், திருக்குறளில் காதலியின் extraordinary கவலை எல்லாம் கடந்தவாரம் படித்ததும் நிறைய நண்பர்களுக்கு மெய்சிலிர்த்திருக்கிறது. ரொம்பப் பிரபலமான இந்தக் குறளை பார்க்காது போனால், தெய்வப்புலவரின் சாபத்துக்கு ஆளாக நேரிடலாம்.
‘‘யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்’’ 
- இந்தக் குறளை, காட்சி பிம்பமாக லட்சம் சினிமாக்களிலாவது பார்த்திருப்பீர்கள். ஏன், சொந்த வாழ்க்கையிலேயே அனுபவம் வாய்த்திருக்கப் பெற்றிருக்கலாம். ‘‘நான் பார்க்கிற போது, நிலத்தைப் பார்க்கிறாள். நான் வேறு பக்கம் பார்க்கிற போது, மின்னல் போல ஒரு சிங்கிள் செகண்ட் என்னைப் பார்த்து, தனக்குள் மெல்லச் சிரித்து மகிழ்கிறாள்...’’
திருக்குறள் பற்றி எழுத இன்னும் லட்சம் பக்கத்துக்கு மேட்டர் இருக்கிறது. ஆனால், ஊரில் இருக்கிற வருத்தப்படாத வாலிபர் சங்கங்களை எல்லாம் கலைத்து விட்டு, வள்ளுவப் பேராசான் சங்கம் ஆரம்பித்து நம்மவர்கள் டார்ச்சர் படுத்தி விடுவார்கள் என்பதால்... போதும்!


யாருமற்ற தனிமை...

நீர்நிலைகளையும், அதனுடன் தொடர்புடைய விஷயங்களையும் நம்மாட்கள் 47 பெரும் பிரிவுகளாக பிரித்து வைத்திருப்பதையும், அதில் 27 வகைகளையும் ஏற்கனவே பார்த்தாச்சு. இந்த வாரம், இன்னும் ஒரு பத்து.


28) சிறை (Reservoir): கம்பி எண்ணுகிற இடமல்ல. பாய்ந்தோடுகிற நீர்த்தடத்தை மறித்து தேக்கப்படுகிற பெரிய நீர்நிலை.


29) சுனை (Mountain Pool): மலையில் டிரெக்கிங் போயிருக்கிறீர்களா? யாருமற்ற தனிமையான வனாந்தரத்தில், சலனமற்று தண்ணீர் தேங்கிக் கிடக்குமே... அது!


30) சேங்கை (Tank with Duck Weed): பெரும்பாலும் செயற்கையாக அமைக்கப்பட்ட நீர்நிலை. குளம் மாதிரி!


31) தடம் (Beautifully Constructed Bathing Tank): நான்குபுறமும் அழகாக திட்டமிட்டு கட்டுமானம் செய்யப்பட்ட குளம். பெரும்பாலும் ஊரில் குளிக்கப் பயன்படுத்துவார்கள்.


32) தளிக்குளம் (Tank Surrounding a Temple): கோயிலைச் சுற்றி அகழி போல அமைக்கப்பட்டிருக்கிற நீர்நிலை. எல்லாம் ஒரு பாதுகாப்புத்தான்!


33) தாங்கல் (Irrigation tank): விவசாயப் பாசனப்பணிகளுக்காக தண்ணீர் தேக்கி வைக்கிற நீர்நிலை. ஏரி மாதிரி.


34) திருக்குளம் (Temple tank): பெயரிலேயே இருக்கிறது அர்த்தம். கோயில் அருகே பக்தர்கள் புனித நீராடுவார்களே... அந்த குளம்.


35) தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall): தெப்பம் சுற்றி வருகிற அமைப்புடன் இருக்கிற கோயில் குளம்.


36) தொடு கிணறு (Dig well): ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டத்தின் உட்கிடை கிராமங்களில் பார்த்திருக்கலாம். ஆற்றில் மணலைத் தோண்டி ஊற்று ஏற்படுத்தி தண்ணீர் எடுப்பார்கள்... அது.


37) நடை கேணி (Large well with steps on one side): படிக்கட்டுகளுடன் கூடிய மெகா கிணறு.

ஜாலி கழுகு!


முகத்தை எப்போதும் படு சீரியஸாக வைத்திருக்கும் பறவைகள் கழுகும், பருந்தும். நல்லதாய் ஒரு முகம் வைத்து இவற்றை நாம் பார்த்திருக்க முடியாது. செம ஜாலி மூடில் கூட இவற்றின் முகம் இப்படித்தான். சரி. இந்த பருந்து, கழுகுக்கு தமிழில் என்னென்ன பெயர் இருக்கிறதாம்?

கங்கம், பாறு, சேனம், பாரசிகை - இதெல்லாம் பருந்தின் பெயர்கள். எருவை, பவணை, சகுந்தம், உவணம், கங்கம் - இது மிஸ்டர் கழுகின் பெயர்கள்.

குழப்புதா சங்கம்?

யின்ஸ் மேட்டரை காணோமே என்று யாரும் கடுதாசி அனுப்பும் முன்பாக அதுவும் பார்த்து விடலாம். நமது சங்கப்பாடல்களில் சூரியன், விண்மீன்கள், கோள்கள் பற்றி போகிறபோக்கில் நிறையச் சொல்லியிருக்கிறார்கள் என்று இந்தத் தொடரில் தொடர்ந்து படிக்கிறோம் இல்லையா? ‘‘சங்க இலக்கியத்தில் இருக்கிற வானவியல் மேட்டர்கள் குழப்புதே சார். சுத்தி, வளைச்சி... கண்ணக் கட்ட வைக்குதே!’’ - சில நண்பர்கள் கடிதம் போட்டிருந்தார்கள்.

டிதம் போட்ட பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் ஒரு விஷயம் நினைவில் கொள்ளவேண்டும். சங்க இலக்கியங்கள் ஏதோ இரண்டு வருடங்கள் முன்பு எழுதப்பட்டவை அல்ல. 2 ஆயிரம் வருடங்களுக்கும் முன்பாக, இயேசு கிறிஸ்து அவதரித்ததற்கும் பல ஆயிரம் ஆண்டுகள் முன்பாக எழுதப்பட்டவை. என்பதால், இப்போது இருக்கிற கோனார் நோட்ஸ் போல அட்சரச் சுத்தமாக அதில் இருக்காதுதான். நாம்தான் புரிந்து கொள்ளவேண்டும். ரைட்டா?

வெள்ளி எங்க போகுது?


டிவியில் இன்றைக்கு ரமணன் சார் முகம் வந்து விட்டாலே குட்டீஸ் ஜாலி ஆகி விடுகிறார்கள். இப்போது சரி. மழை எப்போ வரும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எப்படி தெரிந்து கொண்டார்கள். சிம்பிள். நமது முன்னோர்ஸ் ஒவ்வொருவருமே ஒரு ரமணன் சாராகத்தான் இருந்திருக்கிறார்கள். விதைப்பு, அறுப்பு, நல்லது, கெட்டது என்று சகல விஷயங்களையும் வானம் பார்த்து, மழை வருமா, வெயிலடிக்குமா என்று தெரிந்து கொண்டுதான் செய்திருக்கிறார்கள்.

* இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும் ( புறம் 35:7)
* தென்றிசை மருங்கின் வெள்ளி ஓடினும் ( புறம் 117:2)

- அதாகப்பட்டது, வானத்தில் வெள்ளிக்கோள் இருக்கிறதில்லையா? சூரியக்குடும்பத்தில், சூரியனில் இருந்து இரண்டாவதாக இருக்கிற வெள்ளி (Venus) கோளின் நகர்விற்கும், மழைக்கும் தொடர்பு உண்டு என்று இந்த புறநானூற்றுப் பாடல்கள் சொல்கின்றன. வெள்ளி வடக்குப் பக்கமாக டிராவல் செய்தால் ரெய்ன் கோட் மறக்கப்படாது. தெக்கால போனால், தண்ணீர் லாரிக்காக தவம் கிடக்கணும்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...