அன்னம் - கிண்ணம்!
தவறு செய்கிறவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. ஃபுட்செல் காரர்கள் துருவித் துருவி சோதனை போட்டாலும் பால் - தண்ணீர் பிரச்னை தீர்ந்ததாக இல்லை. அன்னப்பறவை மட்டும் இப்போது இருந்தால்... இந்தப் பிரச்னையே இல்லை. சரிதானே? பாலில் தண்ணீரை (கார்ப்பரேஷன் தண்ணீராக இருந்தாலும்!) கலந்து ஒரு கிண்ணத்தில் வைத்தால், பாலை மட்டும் தனியாக பிரித்து குடித்து விட்டு ஏப்பம் விடுமாம் அன்னம். இது கதையா; கப்சாவா என்று தெரியாது. ஆனால், காலம் காலமாக பாலில் இருந்து தண்ணீரை பிரித்தெடுக்கும் டெக்னாலஜி வாய்க்கப்பெற்ற பறவை என்கிற அளவில் அன்னம் (SWAN) அறியப்பட்டிருக்கிறது.
ஃபாரீன் அண்ணாச்சி!
இப்போது இந்தப் பறவை (எனக்குத் தெரிந்து) இல்லை. இதன் வாரிசாக நாம் இப்போது வாத்தை கொள்ளலாம். வீட்டில் வளரும் வாத்துக் குஞ்சுகளை சாக்கடையில் பிடித்து விட்டு இரை தேட அனுப்பி விடுவதால், பாவம்... அவை பாலின் ருசியையோ அல்லது பிரித்தெடுத்துக் குடிக்கிற ஆற்றலையோ கற்றுக் கொள்கிற பாக்கியம் பெறுவதில்லை. சரி விடுங்கள். அன்னத்துக்கு வரலாம். அசைந்து, அசைந்து இது நடப்பதை பார்க்க அவ்ளோ அழகாக இருக்குமாம். சங்க பொலவர்ஸ் பாடி வெச்சிருக்காங்க. இன்றைக்கும், அழகாக நடக்கிற பெண்கள் வந்தால், ‘அன்னநடை நடக்குது பாருப்பா...’ என்று கமெண்ட் அடிக்கிறோமில்லையா?
....இந்த வார மேட்டருக்கு இன்னுமா வரலை என்று யாராவது குரல் உயர்த்துவதற்கு முன்பாக....
நமது இலக்கியங்களில் சிறகடித்துப் பறக்கிற அன்னப்பறவைக்கு தமிழில் என்னென்ன பெயர் இருக்கிறதாம்? வக்கிராங்கம், ஓதிமம், எகினம், மராளம், விகங்கம் - இதெல்லாம் அன்னத்தின் பெயர்கள். எகின் என்றால் யாரோ ஃபாரீன் அண்ணாச்சி பெயர் என்று நினைத்து விடவேண்டாம். நம்ம அன்னத்துக்கான அக்மார்க் தமிழ் பெயர். இந்த இடத்தில் இன்னும் ஒரே ஒரு விஷயம் மட்டும் க்ளியர் பண்ணி விடலாம். அன்னம் என்றால் உணவு என்கிற ஒரு அர்த்தமும் தமிழில் இருக்கிறது. மூன்று சுழி ‘ண்’ போட்டு அண்ணம் என்று எழுதப்படாது. எழுதினால், அது அசைந்து நடக்கிற பறவை அல்ல. அண்ணம் என்றால், நமது மேல்வாய் பகுதி. கேட்ச் பண்ணீட்டிங்களா?
திணை வேறெங்கும் உண்டா?
‘நிலவியல் கூறுகளின் அடிப்படையில நாம வசிக்கிற பகுதியை ஐம்பெரும் திணைகளா நம்ம முன்னோர் பிரித்து வெச்சிருக்காங்களே... அதுபத்தி ஏன் எழுதலை சார்’ என்று ராஜபாளையத்தில் இருந்து வாசகி கோபப்பட்டார். அவரது கோபம் நியாயம்தான். பூமிப்பரப்பின் எந்தத் திசைக்குப் போனாலும், தமிழர்கள் செய்திருக்கிற இந்தப் பகுத்தாய்வுக்கு இணையான இன்னொன்றை இன்றைய தேதி வரைக்கும் நீங்கள் பார்க்க முடியாது. ஐம்பெரும் திணைகள் பார்ப்பதற்கு முன்பாக, நீர்நிலைகளை நமது முன்னோர் எத்தனை பிரிவுகளாக பகுத்து வைத்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
தண்ணீர் தேங்கியிருந்தால், அந்த நீர்நிலையை நாம் என்ன பெயர் சொல்லி அழைக்கிறோம்? யோசித்துப் பாருங்கள். அலையடித்தால் கடல். மற்றது குளம், குட்டை, ஏரி. அவ்வளவுதானே? ஆனால், நீர்நிலைகளை அவற்றின் பண்புக்கும், பயனுக்கும் ஏற்ப 47 வகைகளால் நம்மவர்கள் பிரித்து வைத்திருக்கிறார்கள். ஆச்சர்யமாக இருக்கிறதுதானே? அந்த 47ல் இருந்து இந்தவாரம் கொஞ்சம்...
1) அகழி (Moat): எதிரிநாட்டுக் காரர்கள் எல்லை மீறி உள்ளே வந்து விட்டாலும் கூட, கடைசிக்கட்டமாக அரண்மனைக்குள் என்ட்டர் ஆகி விடாதபடிக்கு, கோட்டையைச் சுற்றிலும் தோண்டி, முதலையை மிதக்க விட்டிருப்பார்களே... அது.
2) ஊருணி (Drinking water tank): பேசும் போது நம்மாட்கள் ஊரணி என்பார்கள். ஆனால், ஊரணி அல்ல; ஊருணி. ஊர் + உண் + இ = ஊரார் அனைவரும் உண்ணப் பயன்படுத்துகிற நீர்நிலை. மக்கள் குடிக்க பயன்படுவதால், இதில் ‘வேறு வேலைகள்’ செய்து விடக்கூடாது.
3) உறை கிணறு (Ring Well): மணற்பாங்கான இடங்களில் தாகம் தீர்ப்பதற்காக கிணறு தோண்டி, அதை மண் விழுந்து மூடி விடாமல் இருப்பதற்காக, அடியாழம் வரைக்கும் சிமென்ட் வளையங்கள் வைத்து கவர் பண்ணியிருப்பார்களே... அது.
4) ஓடை (Brook, Stream): ஆறு என்றோ, நதியென்றோ சொல்ல முடியாது. இது, அதற்கும் கீழே! சும்மா வாய்க்கால் போல தண்ணீர் சலசலத்து ஓடிக் கொண்டிருந்தால், அது... இது!
5) ஏரி (Irrigation Tank): சகல பக்கமும் நிலத்தால் சூழ்ந்த, குட்டிக் கடல் போன்ற பெரு நீர்த்தேக்கம் ஏரி எனப்படுகிறது. இயற்கையாக அமைந்த ஏரிகளும் இருக்கின்றன. குடிநீர், விவசாயத் தேவைகளுக்காக அந்தக்கால மன்னர்கள் வெட்டிய ஏரிகளும் (உதாரணம்: செம்பரம்பாக்கம் ஏரி) இருக்கின்றன.
6) ஊற்று (Spring): பெயரைக் கேட்டாலே அர்த்தம் புரியுமே. பூமிக்குள் இருந்து ச்ச்சும்மா பிச்சுகிட்டு கிளம்பி வந்தால், அது ஊற்று.
7) ஆழிக்கிணறு (Well in Sea-shore): கடலுக்கு ரொம்பப் பக்கத்தில் (தாகம் தீர்ப்பதற்காக) தோண்டி அமைக்கப்பட்ட கிணறு (திருச்செந்தூர் போனவர்களுக்கு தெரிஞ்சிருக்கும்).
- இன்னும் 40 இருக்கு. அது, அடுத்தடுத்த வாரம். ஓகே?
- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -
ஒவ்வொரு விளக்கமும் அருமை
பதிலளிநீக்கு