தனிமையான தருணங்களில், அந்தந்த சீசனில் ஹிட்டடிக்கிற சினிமாப் பாடல்கள், நம்மையும் அறியாமல் மனதுக்குள் ஹம்மிங்காக வந்து போகும். உங்களையும் அறியாமல் இப்போது நீங்கள் முணுமுணுக்கிற பாடல் எது..? ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே...’, ‘அம்மா... எங்கள் அம்மா... இதயதெய்வம் அம்மா...’ - இதுமாதிரிப் பாடல்கள்தானே? விடிந்ததில் இருந்து, அடைகிற வரை அதைத்தானே கேட்டுக் கொண்டிருக்கிறோம்? இது தேர்தல் சீசன்!
நாம் இப்போது பேசப் போவது பிரசாரப் பாடல்கள் பற்றி அல்ல. என்பதால், முதல் பாராவுக்குப் பிறகு அந்த சப்ஜெக்ட் இல்லை. இப்போதெல்லாம், வாட்ஸ்அப், முகநூல்களில் எலெக்ஷன் அட்வைஸ் எக்கச்சக்கமாக வந்து விழும். நோட்டா (None of the Above - NOTA) பற்றியும் நிறையத் தகவல்கள் வந்திருக்கும்; படித்திருப்பீர்கள். இணையதள புரட்சியாளர்கள் சிலர், ஊழல் அரசியலை ஒழித்துக் கட்டியே தீருவது என்கிற உறுதியான வைராக்கியத்துடன் ‘நோட்டாவுக்கு வாக்களிப்போம்’ என்று தீவிர பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது வாட்ஸ்அப், முகநூல் பிரசாரம் உள்ளது உள்ளபடி இங்கே...
தெரியுமா...? இப்போ இருக்கிற எந்த கட்சிக்கும் ஓட்டு போட விருப்பம் இல்லையா? கவலையே படாதீங்க. உங்களுக்காக தான் இருக்கவே இருக்கு நோட்டா (49ஓ).
நீங்க நோட்டாவுல ஓட்டுப் போடுங்க... நோட்டா என்ன பெரிய இதுனு நினைக்கிறிங்களா.... சொல்றேன் கேளுங்க....
இப்போ சட்டமன்ற தேர்தல்ல 35% க்கும் மேல் நோட்டால ஓட்டு பதிவாகி இருந்தால் போதுங்க. நீங்க நினைக்கிறது நடக்கும். அதாங்க அரசியல் சுத்தமாகும்னு சொல்றேன்.
நோட்டா 35% க்கும் மேல் பதிவாகி இருந்தால் இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றிருந்தாலும் அது செல்லாது... மேலும் தற்போது தேர்தலில் போட்டியிட்ட எந்த அரசியல் கட்சியும் மீண்டும் அரசியலில் ஈடுபட முடியாது.
அதுமட்டுமின்றி அவர்களின் வாரிசுகளும் அரசியலில் ஈடுபாடு கொள்ள முடியாது. அதன் பின்னர் ஆறு மாத காலம் குடியரசு தலைவர் ஆட்சி அமல் படுத்தப்படும். அதன் பின்பு மீண்டும் தேர்தல் நடைபெறும் அதில் புதிய அரசியல்வாதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பின் நல்லாட்சி நடைபெறும்.
இந்த அரசியல் சட்டம் தெரியாமல் நாம் இருக்கிறோம். உங்களுக்குத் தான் நான் சொல்லிட்டேன்ல... மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க.
இப்படிக்கு,
உங்களில் ஒருவன்
‘‘99 சதவீதம் நோட்டாவில் பதிவானாலும் எஞ்சியிருக்கிற ஒரு சதவீதம் ஓட்டு வாங்கும் வேட்பாளர் தான் வெற்றி பெறுவார்...’’ என்பதே இந்திய அரசியல் சட்டம். ரைட்டா? ஒருவேளை.... மற்றெந்த வேட்பாளர்களையும் விட நோட்டாவுக்கு கூடுதல் வாக்கு கிடைத்து விட்டால் என்ன செய்வது? இந்தக் கேள்விக்கு இதுவரை யாரிடமும் பதில் இல்லை. இப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் என்ன செய்வது என்று தேர்தல் கமிஷனிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். அப்படியானால்... நோட்டாவில் விழுகிற ஓட்டு என்னவாகும்? கொஞ்சம் புரிகிற மாதிரி, ‘நம்ம பாஷையில்’ பேசலாமா?
உங்க தொகுதியில் மொத்தம் மூன்று கேண்டிடேட்ஸ் (விஜய், அஜித், தனுஷ் - சும்மாச்சுக்கும்!) களத்தில் இருக்கிறார்கள் என்று வெச்சுக்கோங்க. மொத்தம் 100 ஓட்டு பதிவாகுது. விஜய் 10 ஓட்டு வாங்குகிறார். அஜித்துக்கு 15 ஓட்டு. தனுஷ் பாவம்... 5 ஓட்டுத்தான் அவருக்கு கிடைக்கிறது. பாக்கி 70 ஓட்டும் ‘சூப்பர் ஸ்டார்’ நோட்டாவுக்கு போகிறது. இப்ப என்ன நடக்கும்?
இன்றைய தேர்தல் நடைமுறை, விதிமுறைகளின் படி, 15 ஓட்டு வாங்கிய அஜித்துக்கே வெற்றி. அவர்தான் அடுத்த முதல்வர். ரைட்டா? அதாவது, நோட்டாவுக்கு விழுந்த வாக்குகளை கழித்து விட்டு, பாக்கியுள்ள 30 ஓட்டுக்களே மொத்த வாக்குகளாக (100 சதவீத பதிவாக) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். கடந்த 2014 பாராளுமன்றத் தேர்தலில், நோட்டாவுக்கு குத்தப்பட்ட சுமார் ஆறு லட்சம் வாக்குகள், யார் கணக்கிலும் சேராமல், வீணாகப் போன கதை தெரிந்திருக்கும்தானே?
நோட்டாவில் குத்தினால் மறுதேர்தல் நடக்கும், அங்கு போட்டியிட்ட கட்சி மறுபடியும் போட்டியிட முடியாது... ஊழலை ஒழிக்கலாம், புதிய யுகம் படைக்கலாம்... என்பதெல்லாம் கப்சா, சரடு அன்றி வேறில்லை. ஊழலை ஒழிக்க, புது யுகம் படைக்க வாட்ஸ்அப்பை மூடி வைத்து விட்டு வேறு நல்லதாய் யோசிக்க வேண்டும். சரியா?
கட்டக்கடைசியாக.... ஒரு தகவல் சொல்லி கட்டுரையை முடிக்கலாம்...
காலையில் எழுந்து, குளித்து, சாப்பிட்டு, அன்றைக்கு இருக்கிற அத்தனை வேலையையும் ஒதுக்கி வைத்து, வெளுத்து வாங்குகிற அக்கினி வெயிலில் கிளம்பிப் போய், கால் கடுக்க வரிசையில் காத்திருந்து, கை விரலில் கருப்பு மை பூசிக் கொண்டு, Electronic Voting Machine இருக்கும் அந்த தடுப்பறைக்கு சென்று சேர்வது.... யாருக்கும் ஓட்டுப் போட எனக்கு விருப்பமில்லை என்று சொல்வதற்குத்தானா...? இதற்காகவா இத்தனை டென்ஷன்?
அதற்கு பேசாமல், வீட்டில் ஹாயாக அமர்ந்து, டிவியில் ‘இந்தப் பாட்டை யாருக்கு டெடிகேட் பண்ணப் போறீங்க...’ என்று கேட்கிற பெண்ணையாவது பார்த்துக் கொண்டிருக்கலாமே!
- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -
ஒரு காலத்தில் பாராளுமன்றம் பன்றித்தொழுவம் என்று கூப்பாடு போட்டவர்கள் பின்பு தேர்தல் ஜனநாயகத்தில் பங்கேற்று பாராளுமன்ற உறுப்பினர்களானதே தமிழக வரலாறு. ஆனால், சிலரோ யார் வந்து என்ன ஆகப்போகுது என்ற கேள்விகளின் பின்னே நோட்டாவை பிடித்து தொங்குகிறார்கள். 60 ஆண்டு கால தமிழக அரசியலில் பெண்களுக்கு சொத்துரிமை உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் எல்லாம் சட்டமன்றத்தில் வெற்றி பெற்ற கட்சிகளால் நிறைவேற்றப்பட்டவை தான். ஒரு வேளை உணவுக்காக மதிய உணவு திட்டத்தை காமராஜர் கொண்டு வந்த பின்பே பலர் பள்ளிகள் பக்கம் தலைவைக்க தலைப்பட்டார்கள். இதை தேர்தல் அரசியலில் பங்கேற்காமல் செய்ய முடியாது. நோட்டாவை பிடிப்பவர்களை பிடி பிடியென்று உலுக்கியிருக்கும் இக்கட்டுரை பலரை பூத் வாசலுக்கு கொண்டு சேர்க்கும். கட்டாயம் ஒரு வேட்பாளருக்கு முத்திரையிட வைக்கும். - ப.கவிதா குமார், மதுரை
பதிலளிநீக்கு