வியாழன், 5 நவம்பர், 2015

அடடா அல்வாத்துண்டு... எந்த ஏரியா?

‘ஒரே ஒரு எழுத்து மாறினா, அப்டி என்னா குத்தம் ஆகிடப்போகுதுனு இவ்வளவு நாள் நெனச்சிகிட்டு இருந்தோம். ‘தேசிய புளிகள் சரணாலயம்’ பத்தி படிச்சதும்தான் தெரிஞ்சது... எம்மாம் பெரிய தப்பு பண்றோம்னு...’ - கடந்தவார கட்டுரை படித்த ஒரு நண்பர் கடிதத்தில் கண்ணீர் வடித்திருந்தார். அறியாமல் செய்தால் தப்பில்லை. அதே தவறு இனி ரிப்பீட்  ஆகப்படாது. கேட்டீங்களா?  குழப்ப வார்த்தைகள் பட்டியலை (Words of Doubtful spelling) இவ்வளவு சீக்கிரம் முடிக்கணுமா என்றும் சில நண்பர்கள் வேதனைப்பட்டிருந்தனர். அளவுக்கு மீறினால், இலக்கணம் கசக்கும். தவிர, இன்னும் பார்த்து முடித்தாக வேண்டிய விஷயங்கள் நிறைய பாக்கியிருக்கிறது. மேட்டருக்குப் போலாம்!


பாடம் நடத்தும் பாம்பு
ந்த வாரம், தமிழில் புழங்குகிற சில காரணப் பெயர்களை (Casual Noun) பார்க்கப் போகிறோம். நிறைய வார்த்தைகள், பெயர்களை அதன் அர்த்தம் இன்னதென்று தெரியாமலேயே பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் (நான்கு கால்களை உடையதாகையால், நாற்காலி). அர்த்தம் தெரிந்து கொள்வதன் மூலம், தேவையான வார்த்தையை, பொருத்தமான இடத்தில் மட்டும் பயன்படுத்த முடியும்.  சரிதானே?
அமர்க்களம்: போர் நடக்கிற இடத்தில் டாம், டூம், டமால், டுமீல் சத்தம் காதைப் பிளக்கும் இல்லையா? அதை குறிக்கிற சொல் அமர்க்களம். இன்றைக்கு கூத்து, கும்மாளமடிக்கிற விஷயங்களுக்கு பயன்படுக்கிறது.
அரவணைத்தல்: அரவு + அணைத்தல் = அரவணைத்தல். புரிந்திருக்குமே? பாம்புகள் ஒன்றுடன் ஒன்று குலாவிக் கிடப்பதை குறிக்கிற வார்த்தை. அன்புடன் ஆரத் தழுவுதலுக்கு இப்போது பயன்படுகிறது.
அரை: மனித உடலில் இடுப்புப் பாகம் அரை எனப்படுகிறது. ஒரு மனிதனின் உயரத்தில் அரைப்பகுதியாக (Half) இருப்பதால், ‘அடடா அல்வாத்துண்டு...’ ஏரியாவுக்கு இப்படி ஒரு காரணப் பெயர்..
ஆறு: வழியை அறுத்துக் கொண்டு செல்வதால் அது, ஆறு.
ஊருணி: ஊர் மக்கள் குடிக்கப் பயன்படுத்துகிற நீர்நிலைக்கான பெயர். தகாத காரியங்களுக்கு இந்தத் தண்ணீரை பயன்படுத்தி விடக்கூடாது.
ஏரி: ஏர் பூட்டி உழுகிற விவசாயப்பணிகளுக்காக தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிற நீர்நிலை.
குளம்: மக்கள் குளிப்பதற்காக பயன்படுத்தப்படுகிற நீர்நிலை.
எண்ணெய்: எள்ளில் இருந்து எடுக்கப்படுகிற ஆயில்.
கடை: லாங் லாங் எகோ.... வணிகம் செய்ய ஊருக்கு வெளியே சாலைகள் வழியாகப் போகிறவர்கள் வசதிக்காக, புறநகர் பகுதியில், அதாவது நகரின் கடைக்கோடி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வணிக மையம். கடைக்கோடியில் அமைந்ததால், கடை என்று காரணப்பெயர். இன்றைக்கு தெருவுக்கு நான்கு இருக்கிறது.
கண்: சகல விஷயங்களையும் காணப் பயன்படுவது.
கோவில்: கோ + இல் = கோவில். கடவுள் அல்லது அரசன் குடியிருக்கிற இடம்.
சகோதரர்: சக + உதரர். உதரம் என்றால் வயிறு. ஒரு வயிற்றில் இருந்து பிறந்தவர் சகோதரர்.
தங்கை: தனக்குப் பின் பிறந்தவள்.
தந்தை: தன்னை தந்தவர்.

மன்மதன் கோபம்!
ரு பெயர் சொல்லுக்கான அர்த்தத்தையும் புரிந்து கொள்ளலாம். சுகுமாரன், பாலகுமாரன், திருமாறன், நன்மாறன் - இந்தப் பெயர்களை அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம். மாறன், மாரன். எது சரி? இரண்டுமே சரி. மாரன் வடமொழி. மன்மதனைக் குறிக்கிற சொல். மாறன் நம்மொழி. பாண்டியனை குறிக்கிற சொல். சுகுமாரன் என்றால், அழகிய மன்மதன் என்று அர்த்தம். சுகுமாறன் என்று எழுதினால்... மன்மதன் கோபப்படலாம். போலவே, நன்மாறன், நெடுமாறன், திருமாறன் என்பவை தூய தமிழ்ப் பெயர்கள். நன்மாரன் என்று எழுதினால், தமிழறிஞர்கள் உங்களை ஏற, இறங்கப் பார்த்து விடுவார்கள். இன்னும் நிறைய இருக்கிறது. அது, அடுத்தவாரம்.

ழுத்தாளராக விரும்புகிறவர்கள் நன்னூல் கட்டாயம் படிக்கவேண்டும் என்று சிலபஸ் கொடுத்திருந்தோம். இல்லையா? நன்னூலுடன் தொல்காப்பியமும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு நல்ல எழுத்தில் இருக்கவேண்டிய பத்து அம்சங்கள், தவிர்க்கவேண்டிய பத்து தவறுகள் பற்றி நன்னூல் கொடுத்த பிரமாத ஐடியாக்களை கடந்த வாரங்களில் பார்த்தோம். இன்றைக்கு ஃபேஸ்புக், ட்விட்டர் எழுதுகிறவர்களுக்குக் கூட அந்த ஐடியாக்கள் கைகொடுக்கிறது என்று சில பேர் புளகாங்கிதம் அடைந்திருந்தார்கள். எழுத்தின் போது கையாளவேண்டிய உத்திகள் குறித்து நன்னூல், தொல்காப்பியம் இரண்டுமே வரையறுத்து வைத்திருக்கின்றன. இரண்டையும் கலந்து பார்த்து விடலாம்.

டாலடிக்குமாம் ப்ரோ!
ன்னூலில் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என இரு பகுதிகள் இருக்கின்றன. தொல்காப்பியத்தில் இந்த இரண்டோடு, கூடுதலாக பொருளதிகாரம் என்கிற மூன்றாவது விஷயமும் இருக்கிறது. எழுத்து, சொல், பொருள் எல்லா அதிகாரங்களும் சொல்ல வருவது என்ன? இதை தெரிந்து கொள்வதன் மூலம், நமது எழுத்துக்களை டாலடிக்க வைக்க முடியுமா? நெக்ஸ்ட் வீக், ப்ரோஸ்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...