ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

Thank You... கலாம் சார்!

லகின் பல திசைகளிலும் நிறைந்திருக்கிற பல கோடி இளைஞர்களின் ஒற்றை உச்சரிப்பு - Thank You... கலாம் சார்! கண்களில் வடிகிற கண்ணீர் துடைத்தபடி - Thank You... கலாம் சார்!அவர் இல்லை. ஆனால், வகுத்துத் தந்த வாழ்க்கை நெறிமுறைகள், வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. அவை அழிவதில்லை. சாகாவரம் கொண்டவை. ஒரு நல்ல ஆசிரியராக, வழிகாட்டியாக, நண்பராக, நிர்வாகியாக, உதாரண மனிதராக அவர் குழந்தைகளின், மாணவர்களின் கரம் பிடித்து வழிகாட்டியிருக்கிறார். தனது வாழ்க்கையை பாடமாக கொடுத்திருக்கிறார். பிரகாச எதிர்காலம் தேடுகிற இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய வேண்டிய வழிமுறைகளை வரையறுத்து கொடுத்திருப்பதால் ராமேஸ்வரம் தீவில், அவர் ஓய்வெடுக்கிற இடம் பார்த்து அவர்கள் சொல்கிறார்கள் - Thank You... கலாம் சார்!

விடைகொடு கடலே...!


தேசத்தின் முதல் குடிமகன் பொறுப்பில் இருந்து விடைபெற்று வெளியே வந்தப் பிறகும், முதல்தர குடிமகனாக வாழ்ந்து மறைந்திருக்கிறார் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம். அவர் நேசித்த ராமேஸ்வரம் தீவு நோக்கி, அவரது பிரியத்துக்கும், பாசத்துக்கும் உரிய பாம்பன் பாலம் வழியாக... (கடைசி முறையாக) அவர் வருகிறார். விடைகொடு காற்றே... விடைகொடு கடலே...!

நெருப்பு போல நிஜம் சுடுகையில்...


குழந்தைகள் நெஞ்சில் எத்தனை ஆழமாக அவர் பதிந்திருந்தார்; அவர்களும் எத்தனை அன்புடன் இவரை நேசித்தார்கள் - இந்த ஒற்றைப் படம் ஒரு உதாரணம். இனி யாருக்கு இது சாத்தியப்படும்? உலகெங்கிலும் உள்ள குழந்தைகளின் நிரந்தர லட்சிய பிம்பமாக அவர் வாழ்கிறார். கனவு காணுங்கள் என்று இளைஞர்களை ஊக்கப்படுத்தியவர்... இந்தச் நிகழ்வும் கூட கனவாகவே இருந்து விடக்கூடாதா என்று கோடிக்கணக்கான இதயங்களை துடிக்க வைத்திருக்கிறார். மெழுகுவர்த்தியில் இருக்கிற நெருப்பு போல நிஜம் சுடுகையில், இதயம் உடைந்து கண்ணீர் பெருகுகிறது.

கல்வி என்பதன் நிஜ அர்த்தம்...


ந்தப் பெரிய பின்புலமும் இல்லை. கடற்கரை தீவின் பின்னணியில், ஏழ்மை அலையடிக்கும் குடும்பத்தில் இருந்து கிளம்பிச் சென்று எட்ட முடியாத சிகரங்களை கடந்து, சரித்திரம் படைக்க அவரால் முடிந்தது என்றால், அதற்குக் காரணம்... கல்வி. ஓட்டமும், நடையுமாக ஒவ்வொரு அதிகாலையிலும் வீடுகளுக்கு தினசரி பேப்பர் போட்ட சிறுவன், தேசத்தின் முதல் குடிமகன் ஆக முடிந்தது என்றால், விளிம்பு நிலை வீதியொன்றில் இருந்து கிளம்பிச் சென்று, உலகின் திசைகளைக் கவர முடிந்தது என்றால்... கல்வி மட்டுமே அந்த மனிதரை உயர்த்தியது. என்பதால், கல்வியின் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு, மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு வலியுறுத்த வாழ்நாளின் சகல விநாடிகளிலும் அவர் தவறியதே இல்லை. கல்வி என்பதன் நிஜ அர்த்தம்... படிப்பது அல்ல; வாழ்வது - அவர் போல!

இளமையில் வறுமை!


கொடிது கொடிது வறுமை கொடிது; அதனினும் கொடிது இளமையில் வறுமை. அவர் அசைவம் துறந்து, சைவ உணவுக்கு மாறிய கதை தெரியுமா? சென்னை எம்.ஐ.டி.யில் ஏரோ நாடிக்கல் படிக்கிற காலம். வளாகத்தில் இருந்த அசைவ மெஸ்சில் அடிக்கடி வாங்கிச் சாப்பிடுகிற அளவுக்கு வசதி இல்லை. பணம் இல்லை. அசைவத்துக்கு செலவிடுகிற பணத்தை சேர்த்து வைத்தால், அடுத்த செமஸ்டருக்கு ஓரிரு புத்தகமாவது வாங்கி விடமுடியும். என்பதால், அசைவம் விலகி, சைவம் புகுந்தார். அதன்பிறகு, வாழ்க்கையில் உயர்ந்து, ஏழ்மை துறந்தப் பிறகும்... கற்ற காலத்தில் கடந்து வந்த கரடான பாதையை, வலிகளை, மறந்து ஒதுக்கத் தயாரில்லை. கடினமான காலங்களில் கரம் கோர்த்த சைவ உணவு, கடைசி வரை ஒட்டிக் கொண்டது... அவருடன் ஆத்மார்த்தமாக!

எப்படி வந்தது இந்தக் குணம்? 


வாழ்நாளி்ல் ஒருபோதும், யாரிடமிருந்தும் பரிசுப் பொருட்கள், அன்பளிப்புகள் வாங்காதவர் கலாம். ஜனாதிபதி மாளிகையில் இருந்து அவர் கிளம்பிய தருணத்தில், ஆடைகள் அடங்கிய இரு சூட்கேஸ் தவிர வேறெதுவும் கைகளில் இல்லை.  ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவருக்கு வந்து குவிந்த பரிசுகளையும், அன்பளிப்புகளையும் கூட, அரசிடம் ஒப்படைத்தாரே தவிர, அள்ளி எடுத்துச் சென்றாரில்லை. எப்படி வந்தது இந்தக் குணம்? ஜனாதிபதி மாளிகையில் இருந்து கிளம்பிய நாளில், அவரது நேசத்துக்குரியவர்கள் கைகளில் பரிசுப்பொருட்களுடன் சூழ்ந்து நின்றபோது அவர் சொன்னார்... ‘‘என் தந்தை ஜெய்னுல்லாபுதீன் எனக்குக் கொடுத்த அறிவுரை, ஒருபோதும் பரிசுப் பொருள் வாங்காதே. அவர் வழியில் செல்பவன் நான். தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்...’’ - அறியாத வயதில், ஒருவரிடம் இருந்து அன்பளிப்பு பெற்ற போது, அவர் தந்தை கூறியிருக்கிறார், ‘‘வெகுமதிகள், பிரதிபலன் எதிர்பார்த்து நமக்குக் கொடுக்கப்படுகின்றன. பரிசுப் பொருள்களைத் தருபவர்கள் ஒரு ஆதாய நோக்கத்தோடு செயல்படுகிறவர்கள். நம்மைப் போன்றவர்கள் இப்படிப்பட்ட நோக்கங்களுக்கு அடிமையாகிவிடக் கூடாது. உள்நோக்கத்துடன் பரிசுகளைப் பெறுவது நாம் செய்யக்கூடிய மிகப் பெரிய தவறு. இதுவே நீ வாங்கும் கடைசிப் பரிசுப் பொருளாக இருக்கட்டும்!’'

இனி வேறு யாரால் உயர முடியும்?




காஷ்மீரின் கடைக்கோடி கிராமம் தொட்டு, கடல் மணலுடன் தேசத்தின் விளிம்பு முனையில் இருக்கிற கன்னியாகுமரி வரைக்கும் மொழி, இனம், மதம் என சகல பிரிவினைக்கோடுகளையும் அறுத்தெறிந்து, அனைவரது மனதிலும் வாழ்கிறவர் கலாம். அவர் மரணித்ததாக தகவல் வந்த தினத்தில், உங்கள் ஊரில், உங்கள் தெருவில் எத்தனை பேர் அவர் உருவப்படம் வைத்து தீபாஞ்சலி செலுத்தியிருந்தார்கள்? தேர்தலில் நின்றாரில்லை; கவர்ச்சி அரசியல் செய்தவரும் இல்லை. ஆனாலும், இத்தனை கோடி மக்கள் மனதில் எப்படி இடம் பிடித்தார். கடைக்கோடி கிராம மக்களும் அவருக்காக மொட்டை அடித்து அஞ்சலி செலுத்துகிற அளவுக்கு, அவர்களின் நேசத்துக்குரிய மனிதராக அவர் மாறியது எப்படி? உலகம் நேசித்த அந்த மனிதரின் உயரத்துக்கு இனி வேறு யாரால் உயர முடியும்?

இழப்பின் வலி!


ந்த விதைக்கு உரம், இங்குதான் இடப்பட்டது. வீட்டுக்கு வெகு அருகே இருக்கிறது இந்த நடுநிலைப்பள்ளி. கல்வியால் உயர்ந்த அந்த மாமனிதனின் அஸ்திவாரம் இங்குதான் ஆரம்பம். என்கிற வகையில், உலகின் தலைசிறந்த கல்விக்கூடங்களைக் காட்டிலும் சிறந்தது இந்த பாடசாலை. ஒரு கலாமை உருவாக்கித் தந்து, கிரிடம் சூட்டிக் கொண்ட இந்த சின்னஞ்சிறு கட்டடம், இழப்பின் வலியில், மவுனித்து நிற்கிறது!

குருதி அணுக்களில் உறுதி வேணுமா?


வாழ்க்கையில் பிரச்னையா? தோல்விகள் மிரட்டுகிறதா? தடைகள் தொடர்கிறதா...? இனி இந்தத் திசை திரும்பிப் பாருங்கள். தீர்வு இங்கே இருக்கிறது. விடை இங்கே இருக்கிறது. குருதி அணுக்களில் உறுதி சேர்க்கிற உந்து சக்தி, உங்களுக்காக இங்கே நிலைகொண்டிருக்கிறது. இந்தக் காற்றை ஒருமுறை சுவாசித்தால், இந்த ஜென்மத்துக்கான பேராற்றல் பெறலாம். குழந்தைகளே, மாணவர்களே, இளைஞர்களே... தடைகளை உடைத்து நீங்களும் இனி சாதிக்கலாம்!

படங்களும்... விளக்கமும்:


1) கர்நாடகாவின், சிக்மகளூர் நகரில் நடந்த கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும், யாருமற்ற தனிமையில் ஒரு குழந்தை அவருக்கு தருகிறது அன்பு முத்தம்.
 2) வடகோடி முனையில் இருந்து தென்கோடிக்கு அவரது உடல் கொண்டு வரப்படுகிறது - அவர் பேரதிகம் நேசித்த பாம்பன் பாலம் வழியாக!
3) சென்னை பள்ளி ஒன்றில் நடந்த அஞ்சலிக் கூட்டத்தில்.


4) கர்நாடக மாநிலம் சிக்மகளூர் நகரப் பள்ளி ஒன்றில் அவருக்கு மலரஞ்சலி.

5)  திசைகளெங்கும் நிறைந்திருப்பவர் அவர். மேற்கு வங்கத்தின் சிலிகுரி நகர பள்ளி மாணவர்கள் அவர் உருவப்படம் உயர்த்திப் பிடித்து விடைதருகிறார்கள்.
6) மத்தியப் பிரதேசத்தின் போபால் நகரத்துக்கு குழந்தைகள் அன்புடன் அவருக்கு விடை தருகிறார்கள்.
7) தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பாலசமுத்திரம் கிராம மக்கள் மொட்டை போட்டு துக்கம் அனுசரிக்கின்றனர். இந்த அளவுக்கு நேசிக்க, இவர்களை அவர் எந்த விதத்தில்  பாதித்தார்?
8) சிறுவயதில் அவர் படித்த மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. ராமேஸ்வரத்தில் இருக்கிறது.
9) இனி, இது அவரது நிரந்தர முகவரி.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

2 கருத்துகள்:

  1. உட்சபட்ச பதவி
    சார்ந்த சமுகத்திற்கு
    வாழ்ந்த பகுதிக்கு
    ஏதுமில்லை
    மனிதமா?
    விஞ்ஞானமா?
    ஒருபக்கமே பேசி
    ஊதிபெருக்குதல் தான்
    ஊடகமோ?

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...