‘‘இந்த பட்ஜெட்டிலாவது இரட்டை ரயில்பாதை திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு அறிவிப்பு வருமா?’’ என்று மக்கள் கேள்வி எழுப்பினார்கள். - இந்த இடத்தில் ‘?’ சரி. அதாவது, முற்றுப்புள்ளி, கேள்விக்குறி, ஆச்சர்யக்குறி இதெல்லாம், வாக்கியம் முடிகிற இடத்தில் மட்டும்தான் வரணும். சரியா?
பிக்பாக்கெட்... ஆச்சர்யமா?
தமிழில் எழுத்தாளர்கள் அதிகம் பயன்படுத்துவது ஆச்சர்யக்குறி (Interjection Mark). ஒவ்வொரு வரி எழுதி முடிந்ததும் ‘!’ இப்படி போட்டால்தான் நிறையப் பேருக்கு திருப்திப்படும் (ஓ மானே! ஓ குயிலே! ஓ குரங்கே!). இந்த சிங்கிள் கடப்பாரை குறியீட்டை நாம் ஆச்சர்யக்குறி / வியப்புக்குறி என்றுதானே சொல்கிறோம். அது ரொம்ப தப்பு சார். உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்துவதால், இதை உணர்ச்சிக்குறி என்றுதான் சொல்லவேண்டும்.
‘பிக்பாக்கெட் அடிச்சிட்டான் சார்!’ என்று (ஆச்சர்ய) குறி போட்டு எழுதுகிறோம். இங்கு ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது (தாடி போல மீசை வளர்த்திருக்கிற துரைசிங்கம் மாதிரி போலீசிடம் அடித்திருந்தால் வேண்டுமானால் ‘!’ போடலாம்). இருந்ததைப் பறிகொடுத்த இழப்புணர்ச்சிதானே இங்கு இருக்கிறது. ஆகவே, இதை உணர்ச்சிக்குறி என்று சொல்வதுதானே முறை? உணர்ச்சிக்குறி எங்கெங்கு போடவேண்டும்?
* வியப்பு - அந்தப் பொண்ணு என்னா அழகு!
* மகிழ்ச்சி - அந்தப் பொண்ணுதான் மிஸ் தமிழ்நாடு!
* அதிர்ச்சி - அழகிப் பட்டம் அந்தப் பெண்ணுக்கு ஜஸ்ட் மிஸ்!
* இரக்கம் - இந்த சோகத்தை பொண்ணு தாங்கிக்கணும்!
* பயம் - தோல்வியால் அவருடைய தன்னம்பிக்கை பாதிக்குமோ!
* வெறுப்பு - அழகிப்போட்டி எல்லாம் ஒரு கேடா!
எப்டிரா முடியுது?!
இதுதவிர,
* உணர்ச்சியைக் குறிக்கிற சொற்களின் பின்னால் (ஆகா! ஓகோ! ஆ! அட! சே! ஐயோ!) ‘!’ அவசியம்.
* விளிச்சொற்கள், விளித்தொடர்களுக்கு பின்னால் (நண்பர்களே! மச்சான்ஸ்! சகோதர, சகோதரிகளே! பக்கிகளே!)
* வாழ்த்து, திட்டு, வெறுப்பை தெரிவிக்கும் வினையை அடுத்து (ராசா... நல்லா இருப்படா நீ! தொலைஞ்சு போ! உயிரை வாங்காதடா!)
சில எழுத்தாளர்கள் கேள்விக்குறி, உணர்ச்சிக்குறி இரண்டையும் கலக்கியடிப்பார்கள். இது சரியா? சரியே! நம்பமுடியாத படிக்கு, வியப்போடு ஒன்றை விசாரிக்கிற போது இரண்டையும் கலந்து கட்டலாம். (‘எப்டிரா... உன்னால மட்டும் முடியுது?!)
உண்மையாகவே உணர்ச்சியைக் காட்டவேண்டிய / நம்ப முடியாத / இகழ்ச்சியான / ஆச்சர்யமான விஷயங்களுக்கு மட்டும் (அதுவும் தேவைப்பட்டால் மட்டுமே) இந்த உணர்ச்சிக்குறியை பயன்படுத்தவேண்டும். இஷ்டத்துக்கு போட்டு இம்சைப்படுத்தக் கூடாது. இப்போதெல்லாம் ஓவராக உணர்ச்சிவசப்படுகிற சில எழுத்தாளர்ஸ், சொற்களுக்குப் பின்னால் !!! என்று சரவெடி கணக்காக உணர்ச்சிக்குறிகளை அடுக்குகிறார்கள். ஓவராக உணர்ச்சிவசப்படுதல் உடம்புக்கு மட்டுமல்ல... தமிழுக்கும் ஆகாது!
- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -
உணர்ச்சிக்குறியை பயன்படுத்த வேண்டிய விதத்தை சொன்னவிதம் அருமை...
பதிலளிநீக்குநன்றி...