சனி, 20 ஜூன், 2015

டோனி, கோலியை பிரிக்காதீங்க!

‘‘கமா, புல் ஸ்டாப் போடறதுல, இவ்வளவு விஷயம் இருக்கா? உயிரை பறிச்சிடுது; குடும்பம் கொலாப்ஸ் ஆகிடுதுனா... ரியலி ஷாக்கிங். இதுக்கு எதாவது விதிமுறை இருந்தா சொல்லுங்க சார்...’’ - இப்படி நிறைய கடிதங்கள், அழைப்புகள். ஒரு கமா இடம் மாறியதால் என்னென்ன பிரச்னை வருகிறது என விளக்கிய கடந்தவார கட்டுரைக்கான எதிர்வினைகள் இவை என புரிந்து கொள்ளமுடிந்தது. நிறுத்தக்குறிகளை எங்கு பயன்படுத்தவேண்டும், எப்படிப் பயன்படுத்தவேண்டும்  / எங்கு பயன்படுத்தக்கூடாது, எப்படி பயன்படுத்தக்கூடாது என்று தமிழறிஞர்கள் நெறிமுறைகள் வகுத்துத் தந்திருக்கிறார்கள். விதிமுறைகளையும், இன்னும் பார்க்கவேண்டிய விஷயங்களையும் விறுவிறுவென அடுத்து வருகிற வாரங்களில் பார்த்து முடிக்கலாம். உங்களது மேலான சந்தேகங்களையும் தெரியப்படுத்தினால்... தெளிவுபெறலாம். சரியா?


அதென்ன அடுக்கு அடுக்கு?

மா (,) போடும் போது கவனிக்க வேண்டிய விஷயங்களை முதலில் பார்க்கலாம். சொற்களை தனித்தனியாகவோ, அடுக்கு அடுக்காகவோ பிரிக்கும் போது மட்டுமே கமா எனப்படுகிற காற்புள்ளியை இடவேண்டும். அதென்ன தனித்தனி, அடுக்கு அடுக்கு?
* ‘அஜித், விஜய், விக்ரம், தனுஷ் நடிச்ச படங்கள்னா எனக்கு உசுரு சார்...’ ‘அழகான, குணமான, பண்பான பொண்ணு இருந்தா நம்ம பையனுக்கு சொல்லுங்க சார்?’ - பாருங்கள், இந்த இரு வாக்கியங்களிலும் பெயர்கள் / சொற்கள் தனித்தனியாக (அஜித், விஜய், / அழகான, குணமான,) பிரிக்கப்பட்டிருக்கின்றன. என்பதால் சொல் அல்லது பெயருக்குப் பின்னால் கமா என்கிற காற்புள்ளி இடப்பட்டிருக்கிறது. ரைட்டா?

* ‘ஓபனிங் விளையாடறதுல சச்சினும் கங்குலியும், ஹெய்டனும் லாங்கரும், அன்வரும் மாலிக்கும் பெஸ்ட் பிளேயர்ஸ் சார்...’ என்கிறார் உங்கள் கிரிக்கெட் நண்பர். இங்கே அடுக்கு அடுக்காக (அதாவது சச்சினும் கங்குலியும் - இது ஒரு அடுக்கு. ஹெய்டனும் லாங்கரும் - இது ஒரு அடுக்கு) பிரிக்கப்பட்டிருக்கிறது. என்பதால் ஒரு அடுக்கிற்குப் பிறகே காற்புள்ளி இடப்பட்டிருக்கிறது. சொல் அல்லது பெயருக்கு பின்னால் அல்ல.

ந்த இடத்தில், இன்னும் சில விஷயங்கள் புரிந்து கொள்வது முக்கியம். தாய்தந்தையர், காய்கறிகள், நடிக நடிகையர் என்கிற சொற்களுக்கு நடுவே கமா தேவையில்லை. ஏன்? வார்த்தை பன்மையில் முடிவதால் கமா தேவைப்படாது. காய், கறிகள் என்று எழுதினால் தப்பு. இப்படி எழுதினால் காய் ஒருமை வார்த்தையாகவும் (Singular) கறிகள் மற்றொரு பன்மை (Plural) வார்த்தையாகவும் பிரித்து விடும். நாம் செய்கிற இன்னொரு பெரிய தப்பையும் கையோடு பார்த்து விடலாம்.

பிரிக்காதீங்க!

‘டோனியும், கோலியும் சிறந்த வீரர்கள்’ என்று எழுதினால், மகா தப்பு. எப்படி? தமிழ் இலக்கணத்தில் உம்மையின் வேலை சொற்களை இணைப்பது. ‘டோனியும் கோலியும் என (டோனி + உம் கோலி + உம்) உம் போட்டு எழுதுகிறீர்கள் இல்லையா, இது எண்ணும்மை. இரு சொற்களை, பெயர்களை இணைக்க எண்ணும்மை பயன்படுத்துகிறோம். ஆங்கில முறைப்படி கமா போடுவதன் நோக்கம் சொற்களை பிரிப்பது. தமிழ் இலக்கணப்படி உம்மையின் வேலை சொற்களை இணைப்பது. கமா எனப்படுகிற காற்புள்ளி பிரிக்கிற வேலையை செய்கிறது. என்பதால், ‘டோனியும் கோலியும் சிறந்த வீரர்கள்’ என்று எழுதினாலே போதும். டோனிக்கும் கோலிக்கும் நடுவே கமா போட்டு அவர்களைப் பிரித்து விடவேண்டாம். டோனியும் கோலியும் என தமிழ் முறைப்படி இணைத்து விட்டு, நடுவில் ஒரு கமா போடுவதன் மூலம் ஆங்கில முறைப்படி பிரிப்பது சரிதானா?

பவுலர்களா காரணம்?

* அதனால், இதனால், ஆதலால், ஆகையால், ஆகவே, எனவே, ஆயினும், எனினும் என்கிற பதங்களுக்குப் பின்னால் காற்புள்ளி கட்டாயம்.
விளிகளுக்குப் பின்னால் கமா வேண்டும் சார். ‘மதிப்பிற்குரியவர்களே, எனது அழைப்பை ஏற்று வந்ததற்கு நன்றி. சார், கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க...’
முகவரியில் குறிக்கும் பெயர், வீட்டு எண், தெரு மற்றும் பெயருக்குப் பின்னால் வருகிற (படிச்சோ, படிக்காமலோ வாங்கிய) பட்டம் இவற்றுக்குப் பின்னால் கமா முக்கியம்.
* ஆங்கில முறையில் தேதி குறிப்பிடும் போதும் கமா முக்கியம். தமிழ் முறைப்படி 2015ம் ஆண்டு, பிப்ரவரி 15ம் நாள் என்று எழுதுவோம். ஆங்கில முறையில் பிப்ரவரி, 15, 2015.
* மேற்கோள் குறியை (‘‘.....’’) துவக்குவதற்கு முன்பாக உள்ள வார்த்தைக்குப் பிறகு கமா போடவேண்டும். போட்டி முடிந்ததும் டோனி அளித்த பேட்டியில், ‘‘இந்திய அணியின் வெற்றிக்கு பவுலர்களே காரணம்,’’ என்றார்.
* பொருள் மயக்கம் ஏற்படுகிற மாதிரியான இடத்தில் கமா போடவேண்டும். ‘மாணவர்கள் அளித்த பரிசுகளை பெற்றனர்’ - இந்த வாக்கியத்தில் சற்று குழப்பம் இருக்கிறதுதானே? மாணவர்கள் பரிசு கொடுத்தார்களா, பெற்றார்களா? ‘மாணவர்கள், அளித்த பரிசுகளை பெற்றனர்’ என்றால் குழப்பம் நீங்கி விடுகிறதுதானே?
நிறுத்தக்குறிகள் பற்றி பேசுவதற்கு இன்னும் நிறையவே இருக்கிறது. அப்புறம், வாக்கிய அமைப்புகள் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். கமா வந்ததில் அது மறந்து விட்டது. வாக்கிய அமைப்பு முறைகளையும், நிறுத்தக்குறிகளில் மிச்சங்களையும் அடுத்தவாரம் இன்னும் விரிவாக... சரியா?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...