ஞாயிறு, 11 ஜனவரி, 2015

வால்பாறையும்... சில யானைகளும் - 2

ட்டி, கொடைக்கானல், ஏற்காடு... இன்னபிற மலைப்பிரதேசங்கள் அளவுக்கு தமிழகத்தில் வால்பாறை இன்னும் பிரபலம் அல்ல. என்ன காரணம்? இந்த ‘ஏழாவது சொர்க்கம்’ பற்றி நாம் கேள்விப்படுகிறதெல்லாமே எதிர்மறை விஷயங்கள்தாம். ‘குழந்தையை சிறுத்தை கவ்வி விட்டது.  தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை யானை மிதித்து விட்டது. வீடுகளை துவம்சம் செய்து விட்டது...’ - இப்படி வனவிலங்குகள் மீது  தினமும் குற்றச்சாட்டுகள். அவை வந்து தன்னிலை விளக்கம் கொடுக்கப் போவதில்லை என்ற தைரியத்தில் குற்றச்சாட்டுகளை அடுக்குகிறோம்.  உண்மையில் நடப்பது என்ன?

ழியாறு தேநீர் விடுதியில் இருந்து பேருந்து கிளம்பிய அந்தத் தருணம் மகா ஆனந்தமானது. பொள்ளாச்சியில் பஸ் பிடிப்பதற்காக வெயிலில்  (மதுரை அளவுக்கு இல்லை என்றாலும் கூட... வெயில், வெயில்தானே!) அலைந்தது லேசான தலைவலியைக் கொடுத்தது. ஆழியாறில் இருந்து  மலைச்சாலையில் பேருந்து நுழைந்த சில நிமிடங்களில் பாய்ந்து வந்து தழுவிய மென்  ஜில் காற்று, தைலம் எதுவும் தடவாமலேயே தலைவலியை  ‘போயே போச்சு... இட்ஸ் கான்’ ஆக்கியது.


வால்பாறை செல்கிறவர்கள், இந்த ஜிலுஜிலு காற்றில் சொக்கிப் போய் குறட்டை விட்டு விடாமல், ஆழியாறு அணையின் முழுமையான, பிரமாண்ட அழகை ரசிக்கவேண்டியது மிக முக்கியம். தமிழகத்தின் மிக நீளமான (2 கிலோ மீட்டர் என்கிறார்கள்!) அணை இதுவாம். 120 அடி கொள்ளளவு கொண்டது. வால்பாறையில் கொட்டுகிற மழைத் தண்ணீரில் பெரும்பங்கு இங்கு வந்து சேர்கிறது. 1962ம் ஆண்டு கட்டப்பட்டது.  பூங்கா, வண்ண மீன் அக்வேரியம், தீம் பார்க் என்று ரசிக்க நிறைய இருக்கிறது. ரசிக்க வருபவர்களை ரசிப்பதும் கூடுதல் ஆனந்தம். இதன்  அருகே குரங்கு அருவி (மங்கி ஃபால்ஸ்) இருக்கிறது. இதை சின்ன குற்றாலம் என்கிறார்கள் (குற்றாலத்தை யாரும் பெரிய குரங்கு அருவி என்று  அழைப்பதில்லை!).

சமீபத்தில் பெய்திருந்த மழை காரணமாக, குரங்கு அருவியில் தண்ணீர் செம ஜோர். மலைப்பாதையில் ஆங்காங்கே குட்டி குட்டி அருவிகள்,  தேர்தல் கால திடீர் கட்சிகள் போல வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருந்தன. மலைச்சாலையில 40 கொண்டை ஊசி வளைவுகள் கடந்தால் வால்பாறை எல்லையை அடைய முடியும். பாதியிலேயே வந்து விடுகிறது அட்டக்கட்டி. இங்கிருந்து முற்றான மலை, வனப்பிரதேசங்கள் துவங் குகிறது.

 திரும்புகிற திசையெல்லாம் அடர்ந்த சோலைகள், அவற்றை அழித்து விட்டு, பயிரிடப்பட்டிருக்கிற தேயிலைத் தோட்டங்கள். சாலையில்  இடையிடையே குறுக்கிடுகிற காட்டுப்பன்றி, காட்டெருமைகள், சிங்கவால் குரங்குகள் (நீங்கள் நல்ல ராசிக்காரராக இருந்தால், பெரிய பெரிய கொம்பு வைத்த புள்ளி மான், மிளா மான்களையும்) ரசிக்க முடியும். வால்பாறையை நெருங்குகிற நேரத்தில் கவர்க்கல் என்ற பகுதி வருகிறது. இது அருமையான இடம். மிக அதிக உயரத்தில் இருப்பதால், நாளின்  பெரும்பங்கு நேரம் இங்கு பனி மூடியே இருக்கிறது. இந்த ஏரியாவை ‘பனி படரும் பகுதி (MIST  SPREADING AREA)’ என்று எழுதி  வைத்திருக்கிறார்கள்.

 பஸ்சில் வால்பாறை பயணிக்கையில், பனி படரும் பகுதியான கவர்க்கல் சாலையோரம், வலதுபக்கம் ஒரு வித்தியாசமான  சிலை நிச்சயமாக உங்கள் கவனம் கவரும். குளிருக்கு இதமாய் கோட், சூட், தொப்பி போட்டுக் கொண்டு... ‘இந்தா... இந்தப் பக்கம்தான்...’ என்று  யாருக்கோ வழி சொல்கிறது போல வலது கையை நீட்டி காட்டிய படியே இருக்கிறது ஒரு ஆங்கிலேய முகஜாடை கொண்ட சிலை.

அவர் ஆங்கிலேயரேதானாம். பெயர் ஜி.ஏ.கார்வர் மார்ஷ். வால்பாறை பகுதியில் குடியிருப்புகள், தேயிலைத் தோட்டங்களை உருவாக்கிய பிதாமகன் இவர்தானாம். இந்த உச்சிப்பகுதியில் நின்று கொண்டு அவர் கைகாட்டுகிற திசையில் வில்லோணி என்கிற எஸ்டேட் இருக்கிறது. 1897ம்  ஆண்டுகளில் இந்தப்பக்கமாக வந்து, ‘அந்த ஏரியாவில குடியிருப்பு அமைத்தால் நன்றாக இருக்குமே...’ என்று ஐடியா கொடுத்து வால்பாறையை  உருவாக்கியவர் இந்த கார்வர் மார்ஷ்.

பிற்பகலில் பொள்ளாச்சியில் கிளம்பிய பஸ், அந்திமாலையில் வால்பாறை வந்து சேர்ந்த கதையை கடந்த அத்தியாயத்தின் கடைசிப் பாராவில்  படித்தோம் இல்லையா? போர்வை போட்டு மூடியது போல ஒட்டுமொத்த வால்பாறை மலைப்பிரதேசத்தையும் அடர்பனி மூடியிருக்க... அதில்  இருந்து தப்பிக்க கம்பளி, உல்லன் ஆடைகளை உடலில் அப்பிக் கொண்டு மக்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். ஏசியை என்னதான் அளவு  குறைத்து வைத்து, அந்த குளிரில் உறங்குகிற ஆனந்தத்தை விடவும், இந்த இயற்கையின் ஜிலுஜிலுப்பில், கம்பளி போர்த்தி கதகதப்பாய் தூங்குகிற  சுகம்... பேரானந்தம்!

மறுநாள் (அதாவது, டிசம்பர் 29) விடிந்ததுமே தகவல் வந்தது. ‘பஸ்செல்லாம் ஓடலயாமல்ல... புள்ள குட்டியோட வந்திருக்கீங்க... நல்லா விசாரி ச்சுப் போங்க சாமீ...’. விசாரித்தேன். ‘பஸ்செல்லாம் ஓடலயாமல்ல...’ என்று வந்த தகவல் உண்மைதான். உறுதி செய்யப்பட்டதுதான். கல்லை வீசி கண்ணாடியை நொறுக்கி விட்டார்களாம். வால்பாறை வருகிற சுற்றுலாப்பயணிகள், பொதுமக்களுக்கு இங்குள்ள யானை, சிறுத்தை போன்ற வன விலங்குகள் இடையூறு தருவதாக ஒரு குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. நிஜத்தில், பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து, பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகளுக்கு இடையூறு தருகிற அடாத செயலை எந்த ஒரு வன விலங்கும் செய்திருக்காது என்பது என் திடமான நம்பி க்கை.

மறுநாள் மதுரையில், எனது அலுவலகத்தில் நிறைய முக்கியமான வேலைகள் தயார்நிலையில் இருந்தன. ஆனாலும், என்ன செய்யமுடியும்?  செல்போனில் ஒரு கூடுதல் விடுப்பு தெரிவித்தேன். எனது வழக்கமான பொய்யென்று அதையும் நினைத்திருப்பார்கள். சரி. லீவ் போட்டாச்சு.  மதிய உணவுக்குப் பிறகான நேரத்தை என்ன செய்வதாம்? யோசித்துக் கொண்டிருக்கையில் அந்தத் தகவல் வந்தது... ‘மலைச்சரிவில யானைக்  கூட்டம் வந்திருக்குதாமுங்க...!’. அப்புறமென்ன? கையில் கேமராவுடன் யானைகளை நேருக்கு நேர் சந்திக்கிற எனது பயணம் துவங்கியது. ஒரு குட்டியும், அதன் பெற்றோருமாக, மூன்று யானைகள். காதுகளை ஆட்டிக் கொண்டே லஞ்ச் பண்ணிக் கொண்டிருந்தன. காட் டுயானைகளை அத்தனை அருகாமையில் பார்ப்பது புதிய அனுபவம். அருகாமை என்றால், எனக்கும் அதற்குமான நேரடி தூரம் குறைவாக இரு க்கலாம். ஆனால், என்னிடம் அதுவோ அல்லது அதனிடம் நானோ செல்லவேண்டுமென்றால், இந்த மலைச்சரிவில் இருந்து கீ.....ழே இறங்கி, அ ந்த மலைச்சரிவுக்கு மே....லே ஏறவேண்டும். என்பதால், அதால் எனக்கும், என்னால் அதற்கும் எந்த இடையூறும் ஏற்பட வாய்ப்பில்லை.

யானை பார்த்த சம்பவத்தை விடவும், யானை பார்க்கப் போகிற வழியில், வால்பாறை என்கிற அழகிய மலைப்பகுதி சந்திக்கிற மற்றொரு சோகத்தையும் நேருக்கு நேராகப் பார்த்தேன். அந்த மலையில் ஓங்கி உயர வளர்ந்திருந்த பல நூறுடி உயர மரங்களை வெட்டிச் சாய்த்து விட்டு, அதாவது சோலைகளை அழித்து விட்டு, புதிது புதிதாக தேயிலைக்கன்றுகளை நட்டு வைத்திருந்தார்கள். தேயிலைத் தோட்டங்கள் பச்சைக் கம்பளம்  விரித்தது போல பார்க்க அழகுதான். ஆனால், இயற்கையை அழிக்கிற பேராபத்து என்கிற விஷயம் எத்தனை பேருக்குத் தெரியும்?

யானை பார்த்து விட்டு திரும்பிக் கொண்டிருந்த போது, என்னுடன் வந்தவர்கள் சொன்னார்கள். ‘‘வால்பாறையில முன்னெல்லாம் மழை கொட்டித் தீக்கும். இப்போ... எங்க பெய்யிது?’’ வால்பாறை மட்டுமல்ல... மூணாறு, கொடைக்கானல், ஊட்டி என நாம் பார்க்கிற அத்தனை  மலைப்பகுதி மக்களும் சொல்கிற வார்த்தை... ‘மழை எங்க பெய்யிது? முன்ன மாதிரி இல்லையே...’ என்பதுதான். எப்படிப் பெய்யும்? இருக்கிற  மரங்களையெல்லாம் வெட்டி அழித்து, அங்கெல்லாம் தேயிலையை பயிரிட்டு விட்டு, மழை பெய்யலை... மழை பெய்யலை என்று புலம்பினால்,  இயற்கை வஞ்சித்து விட்டது என்று அதன் மேல் பழி போட்டால் எப்படி?


நம்மாழ்வார் சொன்னதை காதில் வாங்கியிருந்தால், அந்த அவலத்துக்கு அவசியம் இருந்திருக்காது. ‘‘தமிழ்நாட்டுக்கு இனி பருவமழை கிடையாது.  புயல் மழை மட்டும்தான். நாம் வனங்களையும், மரங்களையும் அழித்ததன் விளைவு. மரங்களை நடுங்கள். எதிர்காலத்தில் சீற்றப் புயலைத் தவிர் க்கவும், போலார் பனி உருகாதிருக்கவும், பருவமழை பெறவும்... மரங்களை நடுங்கள் மக்களே...’’ அவர் சொன்னதை எத்தனை பேர் கவனத்தில்  வாங்கினார்கள்?

முன்னூறு அடி உயரமுள்ள மரங்களை எல்லாம் வெட்டி எறிந்து விட்டு, அங்கு மூன்றடி உயரமுள்ள தேயிலைச்செடியை நட்டு வைத்தீர்கள்.  முன்னூறு அடி மரங்கள் மேகங்களை உராய்ந்து பருவமழையை தந்து கொண்டிருந்தன. மூன்றடி தேயிலை... தேநீர் தரும். மழை தருமா?  மரங்களையும், சோலைகளையும் அழிக்க.. அழிக்க... நீங்கள் இழப்பது இயற்கையை. பருவமழையை. உங்களை. உங்கள் சந்ததியை. மலை வளம்  அழித்து, மழை வளம் அழிக்கிற அந்தச் சம்பவம் எனது மனதில் எதிர்கால பயங்கரங்களை முன்னெச்சரித்தது. அடுத்த சில ஆண்டுகள் கழித்து  நீங்கள் வால்பாறை செல்கிற போது... ‘மழைய பாக்கவே முடியலை சாமி. இயற்கையும் கை விட்டுருச்சே...’ என்று யாராவது உங்களிடம்  புலம்பினால்... அவர்களுக்கு, அந்தத் தோட்டங்களில் விளைந்த தேயிலைச்செடி மூலம் தயாரான ஒரு சூடான தேநீர் வாங்கிக் கொடுத்து ஆறுதல்  படுத்துங்கள். அதைத் தவிரவும் செய்வதற்கொன்றுமில்லை!

பி.கு: வன விலங்குகள் பற்றிப் பேசப் போவதாக ஆரம்பித்து விட்டு, அதுபற்றி எதுவும் இல்லையே என்று டென்ஷனாக வேண்டாம். அடுத்த வாரம் எழுதுவதற்கு மேட்டர் வேண்டாமா? வால்பாறையும், வன விலங்குகள் அபாயமும் குறித்து அடுத்த வாரம் இன்னும் விரிவாக...

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

* இந்தக் கட்டுரையின் முதல் பகுதியை படிப்பதற்கான இணைப்பு:

* குங்குமம் வார இதழில் வந்த வால்பாறை அவலங்கள் குறித்த கட்டுரையை படிப்பதற்கான இணைப்பு:

4 கருத்துகள்:

  1. (குற்றாலத்தை யாரும் பெரிய குரங்கு அருவி என்று அழைப்பதில்லை!).
    கவலையை விடுங்க குமார் ஜி ,இனிமேல் நாம் அப்படி அழைக்கலாம் :)
    த ம 2

    பதிலளிநீக்கு
  2. இன்றைக்கு தேநீர்... வருங்காலத்தில் குடிப்பதற்கு மனிதர்கள் இருப்பார்களா...?

    பதிலளிநீக்கு
  3. பூனையார் பயணக்கட்டுரையிலே பல நல்ல விஷயங்களை கூறுகின்றார் எனில் விஷயங்கள் சொல்ல கட்டுரை வடித்தால் .....பயணக்கட்டுரை பலே பலே. பூனை வனவிலங்கு குறித்து சொல்வதினை கேட்க ஆவலுடன்

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா28 மே, 2023 அன்று 11:26 AM

    தேயிலை வளர்பபது பரவாயில்லை. தங்கும் விடுதிகள் வராமல் இருத்தல் நலம்

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...