(தமிழ் இலக்கணம், தொன்மையை இணைய தலைமுறை இளைஞர்களுக்கு, அவர்களது மொழிநடையில் கொண்டு சேர்க்கிற எளிய முயற்சி).
கடந்தவாரம் இரட்டைக் கிளவி பார்த்தோமில்லையா? கிளவியோடு தொடர்புடைய இன்னொரு இலக்கண விஷயம் இணைச்சொல் (echo words). உலகமொழிகளுக்கெல்லாம் பொதுவான விஷயம் இணைச்சொல். பல ஆயிரம் வருட பாரம்பரியம் கொண்ட தமிழ் மொழி, இணைச்சொல் இலக்கணத்தை இன்னும் கொஞ்சம் ஆழமான அனுபவமாக்கி இருக்கிறது. உரையாடல் என்பது வெறும் வார்த்தைகளின் தொகுப்பாக மட்டுமே அல்லாமல், அதற்கும் மேலே பேச்சுநடையில் கூடுதல் ஆனந்தத்தை, மகிழ்ச்சியை சேர்ப்பதற்கு இணைச்சொல் இலக்கணம் பயன்படுகிறது. புலி - கிலி, அறிவு - கிறிவு, காப்பி - கீப்பி, பணம் - கிணம், காசு - கீசு, அருவா - கிருவா, காதல் - கீதல்... இப்படி முதலெழுத்தை மட்டும் மாற்றி எக்கோ அடிக்கிற மாதிரி அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி பேசுகிறோம். இதுதான் ‘எக்கோ வேர்ட்’ எனப்படுகிற இணைச்சொல்.
தமிழைப் பொருத்தவரை, முதல் வார்த்தையின் முதல் எழுத்து, அதன் இரண்டாவது வார்த்தையில் பெரும்பாலும் ‘கி’ அல்லது ‘கீ’ என மாறி ஒலிக்கும். (விதி விலக்கும் உண்டு: கொஞ்ச - நஞ்சம், அக்குவேர் - ஆணிவேர், அக்கம் - பக்கம், அருமை - பெருமை. ஆனால், இந்தப் பிரயோகம் வெகு குறைவுதான்).
பஸ்சு, கிஸ்சு... கிடைக்குமா?
தமிழில் மட்டுமல்ல... உலக மொழிகளிலும் இந்த இணைச்சொல் இலக்கணம் இருக்கிறது. யூத மொழியில் இரண்டாவது வார்த்தையின் முதல் எழுத்து ‘shm’ என மாறும் (Party - Shmarty). ஆங்கிலத்தில் இப்படி சீரான மாற்றம் இராது (helter - skelter, ding - dong). இந்தியில் ‘வ’கரமாக மாறும். ஆம் (மாம்பழம்) - வாம், ஷாதி (திருமணம்) - வாதி, ஆத்மா (ஆன்மா) - வாத்மா, இங்கிலீஷ் - விங்கிலீஷ். தமிழ் போலவே மலையாளத்தில் கி அல்லது கீ-யாக மாறுகிறது. தெலுங்கு, கன்னடத்திலும் ஏறக்குறைய அப்படியே.
இணைச்சொல் தமிழ் மொழியில் பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல் என சகல வகைகளிலும் பொருந்தி இயல்பாக கலந்து வருவது சிறப்பு. இணைச்சொல்லை எவ்வளவு அதிகம் பயன்படுத்துகிறோமோ... அவ்வளவு அதிகம் பேச்சின் சுவை கூடும். அதே சமயம், பார்த்து, பதமாக பயன்படுத்துவது முக்கியம். பேருந்து நிறுத்தத்தில், ‘‘மதுரைக்கு போகணும். பஸ்சு, கிஸ்சு கிடைக்குமா...?’’ என்று இணைச்சொல் இழையோட கேட்பது தப்பில்லை. ஆனால், இளம்பெண்களிடம் இப்படி கேட்டால்... செமத்தியாக கிடைத்து விடும். ஆமாம்தானே?
மொக்கச்சாமி வந்திருக்க்க்கா....க!
சினிமா பிடிக்காதவர்கள் இருக்க முடியுமா? உணவையும், உணர்வையும் விட அதுதானே முக்கியம்? அதில் இருந்து கொஞ்சமே கொஞ்சம்.
‘இந்தப் பொண்ணுங்களே
இப்படித்தான் புரிஞ்ஞ்ஞ்சு போச்ச்ச்சுடா
அவங்க கண்ணு நம்ம
கல்லறைனு தெரிஞ்ஞ்ஞ்சு போச்ச்ச்சுடா’
‘சந்திரனை தொட்டது யார்
ஆம்ஸ்ட்ராங்ங்ங்ங்ங்கா...
அடி, ஆம்ஸ்ட்ராங்ங்ங்ங்கா’
‘வரும்ம்ம்ம்ம்.... ஆனா வரா....து’
‘மாயி அண்ணன் வந்திருக்க்க்க்கா.....க
மாப்பிள்ளை மொக்கச்சாமி வந்திருக்க்க்க்கா......க’
- எல்லாமே, சினிமாவில் பார்த்த, கேட்ட பாடல்கள், வசனங்கள். வெவ்வேறு படங்கள் என்றாலும் கூட, ஒன்றுக்கொன்று நெருக்க்க்க்க்கமான தொடர்பு இருக்கிறது. அது என்ன நெருக்க்க்க்கமான தொடர்பு? அடுத்த ஞாயிற்றுக்கிழமை!
- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -
தொடர்பை விரைவில் அறிய காத்திருக்கிறேன்...
பதிலளிநீக்குஒவ்வொரு தலைப்பும் அற்புதம்!!
பதிலளிநீக்குகதையை படிக்க தூண்டும் வகையில் உள்ளது!!
தொடர வாழ்த்துக்கள்!!!
ஒவ்வொரு தலைப்பும் அற்புதம்!!
பதிலளிநீக்குகதையை படிக்க தூண்டும் வகையில் உள்ளது!!
தொடர வாழ்த்துக்கள்!!!