ஞாயிறு, 30 நவம்பர், 2014

கிரிக்கெட்டை தாக்கும் புதிய பவுன்சர்கள்!



ட்டமிழக்காமல் 63 - ஆடுகளத்தில், பிலிப் ஹியூஸ் கடைசியாக எடுத்த ரன்கள். அந்தப் போட்டியில் அவர் ஆட்டமிழக்கவில்லை. நமக்குத் தெரியும். ஆனால், 63வது ரன்னுக்குப் பிறகு, ஆட்டமிழக்காமலேயே களத்தில் இருந்து வெளியேறுகிறோம் என்று பிலிப் ஹியூஸ் உணர்ந்திருக்க மாட்டார். அடுத்து ஒரு ரன் இனி சேர்க்கவே முடியாது என்றும் அவருக்குத் தெரிந்திருக்காது.
 கிரிக்கெட்டின் மிக அபாயமான ஒரு எகிறு பந்து (பவுன்சர்) அவரது வாழ்க்கையை முடித்து வைத்து விட்டது. சாதிப்பதற்கு இன்னும் நிறைய திறமை இருந்தது. ஆனால், 25 வயதிலேயே வாழ்க்கை முடிந்து விட்டது. பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு சில தினங்கள் பாக்கி இருக்கையில்!


கிரிக்கெட் என்பது பணம் கொட்டுகிற விளையாட்டு (இன்றைய தினத்தில், தொழில்!). வெயிலிலும், மழையிலும் சினிமாக்காரர்கள் ஆட்டமாடி சம்பாதிக்கிறதை விடவும் அதிகமாக, ஓரிரு ட்வென்டி - ட்வென்டி போட்டிகளில் சிக்ஸர் அடித்து சம்பாதித்து விடலாம். பணம் மட்டுமல்ல... புகழையும் சேர்த்து. ஆனாலும், உயிராபத்து மிகுந்த விளையாட்டுப் பட்டியலில் இதுவும் இருக்கிறது. விண்வெளிக்குப் போகிற வீரர் போல, தலைமுதல் கால் பாதம் வரைக்கும் சகல பாகங்களையும் பாதுகாக்கிற கவசங்கள் அணிந்தே, களத்தில் இறங்க முடியும். அப்போதுதான், எகிறு பந்துகள் சீறிப் பாய்ந்து வந்து தாக்கினாலும், தப்பிப் பிழைத்து வீடு திரும்ப முடியும்.

ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸ், தலை முதல் பாதம் வரைக்கும் பாதுகாப்புக் கவசங்கள் அணிந்துதான் அன்றைக்கு பேட்டிங் செய்து கொண்டிருந்தார். பந்து வீசியவர் ஷேன் அபாட். வேகப்பந்து வீச்சாளர். அதிரடியாக ஆடி ரன்களைக் குவிக்கிற பேட்ஸ்மேனை அச்சுறுத்திக் கட்டுப்படுத்தவேண்டும் என்பது தவிர்த்து வேறு எந்த விபரீத நோக்கமும் இல்லை. அதிவேகத்தில் ஒரு பவுன்ஸர் வீசினார். பொதுவாக, கிரிக்கெட்டில் பவுன்சர்கள் வரும் போது சாதூர்யமாக குனிந்தோ, விலகியோ தப்பித்துக் கொள்வது பேட்ஸ்மேன்களின் வழக்கம். தன்னம்பிக்கை மிகுந்த, அதிரடி பேட்ஸ்மேன்கள் மட்டும், துணிச்சலாக முகத்தை நோக்கி நூறு கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் சீறிப் பாய்ந்து வருகிற பந்தை, அதே வேகத்தில் விளாசி சிக்ஸருக்கு அனுப்புவதுண்டு.

பிலிப் ஹியூஸ் அன்றைக்கு அப்படித்தான் ஒரு முயற்சி எடுத்தார். வினாடிகள் பிசகி விட்டது. பேட்டில் படாமல், பந்து நேராக அவரது இடது தலையின் கீழ்பகுதியில் அசுரவேகத்தில் மோதியது. அனேகமாக, அது அவருடைய கடைசி வினாடியாக இருந்திருக்கும். மரணத்தை நெருங்குகிற நிமிடங்கள், நமது வாழ்வின் கடைசி வினாடிகள், புரிதலுக்கு அப்பாற்பட்டவை. என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளமுடியாது. நாம் யார் என்பதும் நினைவில் இராது. கண்களுக்கு வெளியே மங்கலான, வெளிறிய நிறத்தில் வெளிச்சம் தெரியும். ஆனால், அதை இன்னது என அறிந்து கொள்ளும் திறனை மூளை அப்போது இழந்திருக்கும்.

அந்தத் தருணத்தில்தான் பிலிப் ஹியூஸ் இருந்தார். அதிகப்பட்சம், ஓரிரு வினாடிகள். அப்புறம், அப்படியே சரிந்து அவர் அதுவரை ஆடிய ஆடுகளத்திலேயே நிலைகுலைந்து விழுந்தார். தலையில் பந்து பட்ட வினாடிக்குப் பிறகு அவர் எதையும் உணர்ந்திருக்க முடியாது என்பது நிச்சயம். மருத்துவக் குழுவினரும் உறுதி செய்திருக்கிறார்கள். அதற்கப்புறம் உலகின் ஆகச் சிறந்த சிகிச்சை அவருக்கு வழங்கப்பட்டது. பலன்... பூஜ்யம். கிரிக்கெட் விளையாட்டு, விபரீதமான ஒரு விக்கெட்டை இம்முறை வீழ்த்தியிருக்கிறது.

விழுந்திருக்கிற விக்கெட், கிரிக்கெட்டை நோக்கி சில கேள்விகளை எழுப்பி விட்டுப் போயிருக்கிறது. ஐபிஎல் என்கிற தரகு வேலை நுழைகிற வரைக்கும் கிரிக்கெட் என்பது விளையாட்டாக இருந்தது. அப்புறம், அது விளையாட்டாக இல்லை. ஆடு, மாடு, கோழிகள் விற்கிற சந்தையில் பேரம் பேசி விலங்குகளை விலைக்கு வாங்குவார்களே! அதற்கு சற்றும் சளைக்காததொரு ஏலம் இங்கும் நடக்கும். பத்து கோடி, இருபது கோடி என்று கூவிக் கூவி வீரர்களை கூடையில் அள்ளிப் போட்டுக் கொள்வார்கள் பண முதலைகள். ஆயிரக்கணக்கான கோடிகளை எந்தக் கணக்கும் காட்டமுடியாத படிக்கு பதுக்கி வைத்துக் கொண்டிருந்த முதலைகளுக்கு ஐபிஎல் போட்டிகள் ஆகச் சிறந்த வடிகால்.

ஏதாவது ஒரு நடிகர், நடிகையை அல்லது தொழில் நிறுவனத்தை பினாமியாக களத்தில் இறக்கி, பின்னணியில் இவர்கள் இருந்து கொண்டு பணத்தை இறைப்பார்கள் / இயக்குவார்கள். நாகரீக அடிமைகளாக கிரிக்கெட் வீரர்கள் அணிவகுத்து வருவார்கள். தங்களது அடிமைகள், மாற்று முகாம் அடிமைகளைக் காட்டிலும் தேர்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்பதற்காக, பின்னணியில் இருந்து இயக்குகிற முதலைகள் சகலமும் தருவார்கள். களத்தில் ஆடி முடித்ததும், ஆட்டம்.. பாட்டம்... இன்ன பிற சகல காரியங்களும் உண்டு. கிரிக்கெட் என்பது காபரே நடனத்துக்கு ஒப்பான காரியமாகி விட்டது. பார்க்கிறவனுக்கு மகிழ்ச்சி, மகிழ்ச்சி... மேலும் மகிழ்ச்சி மட்டுமே தரவேண்டும். துளியும் போரடித்து விடக் கூடாது.

கிரிக்கெட் என்பது கனவான்களில் ஆட்டம் என்ற கருத்தாக்கம் அத்தோடு முடித்துக் கொள்ளப்பட்டது. நின்று, நிதானமாக, நேர்த்தியாக ஆட்டமாடினால், அடுத்தமுறை ஏலத்தில் அதிக விலை கிடைக்காது என்ற கருத்து, ஒவ்வொரு வீரரின் மனதிலும் விதைக்கப்பட்டது. உரமிட்டு வளர்க்கப்பட்டது. ஆறு பந்து வந்தால், ஆறையும் சிக்சருக்கு விரட்டவேண்டும் என்கிற விஷயம் மட்டுமே இலக்காக நிலைகொண்டது. அதுவரை, ஆமை வேக ஆட்டமாடியவர்கள் கூட, அதற்குப் பிறகு அதிரடிக்கு கட்சி மாறினார்கள். இப்போது, இது வெறும் விளையாட்டில்லை. காசைக் கொட்டி பார்க்க வருகிறவனை மேலும், மேலும் குஷிப்படுத்தியாக வேண்டும்.

எல்லா வீரர்களும் அதிரடிக்கு மாறினார்கள். பந்து வீசுபவர்களுக்கு வேறு வழியில்லை. பேட்ஸ்மேனை மிரட்டவேண்டுமானாலும், போட்டுத் தாக்கு! சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூடி கலந்தது. ஓவருக்கு இரு பவுன்சர்கள் வீசிக் கொள்ளலாம், தப்பில்லை என்று பெரிய மனதுடன் சம்மதித்தது. டெஸ்ட் போட்டி என்றால் அந்தக் கணக்கும் இல்லை. விளையாட்டு தடம் மாறிப் போனதன் விளைவு... உயிர் பறிப்பில் வந்து நிற்கிறது. இனியும் தேவையா உயிர் பறிக்கும் பவுன்சர்கள்?

தவிர, இரு பேட்ஸ்மேன்கள் நிற்கிற விக்கெட்டுக்கு இடையிலான தூரத்தை (ஆடுகளத்தின் நீளத்தை) 198 சதுர அடியில் இருந்து 216 சதுர அடியாக... அதாவது, 22 யார்ட் தூரத்தை 24 யார்டுகளாக அதிகரிக்கவேண்டும் என்கிற குரல் நீண்டகாலமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கனவான்கள், இந்தத் தருணத்திலாவது இதை கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். ஐபிஎல் என்கிற தரகு முதலாளிகள் பிடியில் இருந்து கிரிக்கெட்டை உடனடியாக விடுவிக்கவேண்டும். அப்போதுதான் விளையாட்டை, வீரர்கள் விளையாட்டாக விளையாடுவார்கள். வெற்றியும், தோல்வியும் சரி சமவிகித பாதிப்பை ஏற்படுத்தும். மேட்ச் பிக்சிங் விவகாரங்களுக்கு கதவு திறந்து விடுகிற அபாயத்தை முன்னெப்போதையும் விட அதிகமாக ஐபிஎல் அதிகரித்திருப்பதை யாரும் மறுக்க முடியாது.

கிரிக்கெட்டின் உயர்ந்த இடத்தில் அமர்ந்து, நிர்வாக முடிவுகளை எடுக்கிற கனவான்கள், உடனே கூடிக் கலந்து பேசவேண்டும். ஆடு, மாடு சந்தை போல ஏலம் எடுக்கிற அநாகரிகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அது நடக்காத பட்சத்தில், தெருவோரங்களில் சிறுவர்களுக்கு இடையே நடக்கிற கில்லி விளையாட்டில் இருக்கிற குறைந்தபட்ச நேர்மையைக் கூட இனி இங்கு பார்ப்பது அரிதாகிப் போகும்.

- பூனைக்குட்டி -

3 கருத்துகள்:

  1. பூனையார் மெல்ல மெல்ல விளையாட துவங்கி அதிரடி ஆட்டத்தினை ஆரம்பித்து விட்டார். பூனையாருக்கு பூனைப்படை பாதுகாப்பு அவசியமென நினைக்கின்றேன்.

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...