பொழுது போக்கிடமற்ற மதுரைவாசிகளுக்கு இன்றளவும் துணை நிற்பவை தியேட்டர்களே. கவலைகள் தொலைக்கிற மந்திரம் தெரிந்த இக்கனவு அரங்கத்தை தமிழகத்தில் அதிகம் கொண்ட நகரெனும் பெருமை மதுரைக்கு உண்டு. நகரின் ஒவ்வொரு தியேட்டருக்குள்ளும் ஒரு வரலாறு வாழ்கிறது. அந்த வரலாற்றின் திசையில் ஒரு பயணம்...
இம்பீரியல்:
மதுரைக்கு மின்சாரம் அறிமுகமாகும் முன்பே, ஜெனரேட்டர் மூலம் சோத்துக்கடை தெருவில் இருந்த இம்பீரியல் தியேட்டரில் மவுனப்படங்கள் ஓடின. எழுபதுகளிலும் இத்தியேட்டர் இயங்கியது. இதே இடத்தில் சொக்கலிங்கம்பிள்ளை அன்ட் சன்ஸ் கட்டிட மாடியில் திரை ஒன்று அமைத்து அங்கு ஊமைப்படம் திரையிடப்பட்டது. 80களில் இம்பீரியல் தியேட்டர் இடிக்கப்பட்டு, வணிகக் கட்டடம் கட்டப்பட்டுவிட்டது.
சி(ட்)டி சினிமா:
மதுரை தெற்குமாசிவீதியில் 1921ல் கல் கட்டிடமாக திறக்கப்பட்டது. அதற்கும் முன்பு இங்கு 'மவுனப் படங்கள்' ஓடின. 770 நாட்களுக்கும் மேல் ஓடி கிட்டத்தட்ட 3 தீபாவளிகளைக் கடந்த தியாகராஜ பாகவதர் நடித்த 'ஹரிதாஸ்' படம் இங்குதான் திரையிடப்பட்டது. அமெரிக்காவின் ஆர்சி புரஜக்டர், ஜெர்மன் நாட்டு பவர் புரஜ க்டர் சினிமா கருவிகள் இங்கிருந்தன. சிதைந்த கட்டிடமாக சிடி சினிமா நிற்கிறது. மதுரை கீழவெளிவீதியில் குடோனாக இன்று மாறி நிற்கும் 1936ல் கட்டிய 'சிந்தாமணி' தியேட்டரை, இந்த சிடி சினிமா தியேட்டரில் திரையிட்ட 'சிந்தாமணி' திரைப்பட வசூலை வைத்தே கட்டினர் என்பது வரலாறு.
சந்திரா டாக்கீஸ்:
மதுரை மேலமாசி - வடக்குமாசி சந்திப்பில் 80களிலும் செயல்பட்ட 'சாந்தி' திரையரங்கின் பூர்விகப் பெயர் ‘சந்திரா டாக்கீஸ்'. மாதக்கணக்கில் இங்கு கம்பெனிகள் நாடகங்கள் நடத்தின. மதுரை எழுத்தாளர் மன்ற ஆண்டு விழாக்கள், அண்ணா, நெடுஞ்செழியன், கண்ணதாசன் உள்ளிட்ட தலைவர்கள் கூட்டங்களும் நடந்தன. இன்று சந்திரா டாக்கீஸ் கார்கள் நிறுத்துமிடமாகி விட்டது.
தினமணி:
மதுரை கீழவாசலில் இருந்து தெப்பக்குளம் செல்லும் பாதையில் மணல்மேடு என்ற தியேட்டர் தோன்றியது. அந்த தியேட்டர்தான் பிற்காலத்தில் தினமணி பெயர் மாற்றம் பெற்று அண்மையில் இடிக்கப்பட்டு குடியிருப்பு கட்டுமானத்திற்கென காலியிடமாக இருக்கிறது.
தங்கம் தியேட்டர்:
ஆசியாவின் மிகப்பெரிய ’தங்கம் திரையரங்கம்’ இடிக்கப்பட்டு விட்டது. 53 ஆயிரத்து 850 சதுர அடி பரப்புடையது. 1952ல் சிவாஜியின் முதல்படம் ’பராசக்தி’ முதலில் திரையிடப்பட்டது. அப்போது தியேட்டர் முழுமையாகக் கட்டி முடிக்கப்படவில்லை. அரைகுறை கட்டிட மண்தரையில் அமர்ந்து, சுற்றிலும் திரை மூடியே அக். 17ல் தீபாவளி தினத்தில் பராசக்தி பார்த்தனர். மொத்தம் 112 நாட்கள் ’பராசக்தி’ ஹவுஸ்புல்லாக ஓடியது. அரங்கின் 2 ஆயிரத்த 875 இருக்கைகளில் எங்கிருந்தும் மறைக்காமல் திரையில் படம் பார்க்கலாம். இத்தியேட்டரின் 25ம் ஆண்டில் ஜெய்சங்கரின் ’துணிவே துணை’ படம் திரையிட்டபோது ஒரே டிக்கெட்டில் மேலும் இரு படங்கள் காண்பிக்கப்பட்டன. ஆங்கிலத்தில் ஜாஸ், ஓமன், எக்சார்சிஸ்ட், இந்தியில் யாதோன் கி பாராத் இங்கு ரிலீசானது. புருஸ்லீயின் ’ரிட்டன் ஆப் த டிராகன்’ ஒரு நாளைக்கு 7 காட்சி திரையிடப்பட்டது. தியேட்டர் பெயர் ’தங்கம்’ என்பதைக் காட்ட கூடுதல் விலை டிக்கெட்டை ’கோல்டன் பாயில்’ பேப்பரில் வழங்கினர். கடைசியாக தங்கம் கண்ட நூறு நாள் படம் ’தூறல் நின்னு போச்சு’. 1995ல் நாகார்ஜுனா நடித்த ’ஈஸ்வர்’ டப்பிங் படத்துடன் தன் சினிமா வாழ்க்கையை இத்தியேட்டர் முடித்துக் கொண்டது.
தேவி:
மதுரை ஆறு முச்சந்திப் பகுதியில் கீரைத்தோட்டங்களுக்கு இடையே 1944ல் தேவி தியேட்டர் கட்டப்பட்டது. பல புராண படங்கள் ஒடின. இளையராஜாவின் ’அன்ன க்கிளி’ படத்திற்காக ஒரு மாதம் இத்தியேட்டரின் கீழ்பகுதி இருக்கைகள் ’பெண்களுக்கு மட்டும்’ என ஒதுக்கி வைக்கப்பட்டன. தியேட்டர் கட்டியபோது மேற்கூரை தகரத்தில் பொருத்தும் ’வாஷர்’ கிடைக்காமல், அன்று புழக்கத்தில் இருந்த ’ஓட்டை காலணா’ காசுகளை வாஷர்களாக பயன்படுத்தினர். ஆங்கிலேய அதிகாரி தியேட்டருக்கு அபராதம் விதித்து, ’காலணாக்களை’ பறிமுதல் செய்தார். நடிகர் பார்த்திபனின் ’ஹவுஸ்புல்’ படத்தில் ’பாரத் தியேட்டர்’ பெயரில் இந்த தேவி தியேட்டர் படம் முழுக்க நடித்தது. ‘ஹவுஸ்புல்’ படமும் இங்கு ரிலீசானது. 2002 வரை தேவி தியேட்டரில் படங்கள் ஓடின. ரஜினி நடித்த ’பாட்ஷா’ படம்தான் கடைசி. 50 சென்ட் இடப் பரப்புள்ள இத்தியேட்டர் இடிக்கப்பட்டு 19 குடியிருப்புகளாகி விட்டன.
தீபா, ரூபா:
தேவி நாடகசபா அமைந்த இடம் பிறகு ஜெயராஜ் மோட்டார் நிறுவனமாக மாறி, பிறகு தீபா, ரூபா தியேட்டர் உருவானது. இது குடோனாகி விட்டது. மதுரை தைக்கால் தெருவில் நவாப் ராஜமாணிக்கம் நாடகக் கம்பெனி நடத்திய இடத்தில் அமைந்ததே ஜோதி சினிமா தியேட்டர். மதுரையில் ரீகல் டாக்கீஸ், பரமேஸ்வரி தியேட்டர் என்ற இரு அரங்குகளில் ஆங்கிலப் படங்கள் திரையிடப்பட்டன. இத்தியேட்டர்களில் அப்போது ஆங்கிலப் படம் 90 நிமிடங்கள்தான் திரையிடப்படும். எனவே லாரல் ஹார்டி, சார்லி சாப்ளின் போன்றோர் நடித்த காமெடி படங்களும், கார்ட்டூன் படங்களும் சேர்த்துத் திரையிடப்பட்டன. ரீகல் டாக்கீஸ் தங்கரீகலாக மாறி தமிழ் புதிய படங்களும் வெளியாகிறது. பரமேஸ்வரி சமீபத்தில் இடிக்கப்பட்டு விட்டது.
இது தவிர, மதுரையில் நடனா காம்ப்ளக்ஸ், கிருஷ்ணாபுரம் காலனி விஜயலட்சுமி, அரசரடி வெள்ளைக்கண்ணு, வில்லாபுரம் கதிர்வேல்... என பல தியேட்டர்கள் உடைக்கப்பட்டு விட்டன, சிம்மக்கல் சிவம் தியேட்டர் வங்கியாக, வில்லாபுரம் பத்மா தியேட்டர் விற்பனைக் கடையாக, ஆனையூர் வெங்கடாஜலபதி, மீனாட்சி கோயில் அருகாமை நியூசினிமா, சம்மட்டிபுரம் மிட்லேண்ட்,
சிலைமான் எஸ்எஸ் தியேட்டர்கள் பாழடைந்தும், சின்ன சொக்கிகுளம் ஜெயராஜ் நட்சத்திர விடுதியாக, மதுரை அனுப்பானடி இந்துமதி, காளவாசல் ராம் விக்டோரியா குடோனாக, விளாங்குடி பாண்டியன், செல்லூர் போத்திராஜா, டிஆர்ஓ காலனி லட்சுமி.. என மதுரையில் குடியிருப்புகளாக மாறிப்போன தியேட்டர்கள் பட்டியல் நீள்கிறது.
நாடகக் கொட்டகைகளாக பிறந்து, டூரிங்குகளாக வளர்ந்து, நவீன மால்களாக எஞ்சி நிற்கும் தியேட்டர்களுக்கு மத்தியில், கடந்த கால சினிமா ரசிகனை செதுக்கி வளர்த்த சினிமா தியேட்டர்கள் தங்கள் முகவரி தொலைத்து முடங்கிக் கிடக்கின்றன. ஆனாலும் கூட, மதுரை ரசிகர்களின் சினிமா மோகம் விரிந்தே கிடக்கிறது.
அன்றைய சினிமா!
அன்றைக்கு மதுரையில் திரும்பும் திசையெங்கும் தியேட்டர்களே தெரிந்தன. தினசரி 3, சனி ஞாயிறு 4, விழா மற்றும் பண்டிகை காலங்களில் 5 காட்சிகள் ஓடின. ஏகாதசி, எதிர்சேவை நேரங்களில் நடுநிசிக் காட்சிகளும், 1970களின் கடைசியில் 11 மணி காட்சியையும் அனுமதித்து ஆண்டு முழுக்க ஒரு திருவிழாக் குதூகலம் மதுரை வீதிகள் முழுக்க நிரம்பி வழிந்தன.
ஆன்மிகத் தலத்திற்கு புது மனைவியை அழைத்துச் செல்கிற மரியாதை, நல்ல தமிழ்படம் காட்ட சினிமா தியேட்டருக்கு கூட்டிச் செல்லும் கணவருக்குத் தரப்பட்டது. அன்றைக்கு சினிமாக்கள் அத்தனை புனிதம் பெற்றன. டிக்கெட் தீர்ந்ததால், அதே கவுண்டரில் காத்திருந்து அடுத்த காட்சிக்கு டிக்கெட் வாங்கிச் சென்று படம் பார்த்து மகிழ்ந்த மதுரை மனிதர்கள் அதிகமிருந்தனர். மதுரைவாசிகள் மட்டுமல்லாது, தென்மாவட்டமே சித்திரைத் திருவிழா கூட்டமாக அன்றாடம் பஸ்கள், ரயில்கள் ஏறி மதுரை தியேட்டர்களுக்கு வந்து திரும்புவது வாடிக்கையானது. தமிழ் கடந்து செம்மீன் உள்ளிட்ட மலையாளம், ஷோலே, ஏக் துஜே கேலியே உள்ளிட்ட ஹிந்தி மற்றும் ஆங்கிலப் படங்களுக்கும் மவுசு அதிகரித்து மதுரை தியேட்டர்கள் கூட்டத்தில் குலுங்கின.
ஆடம்பரமான சினிமா!
தொழில்நுட்பம், கவர்ச்சி அலங்காரங்களால் அடித்தட்டு மக்களான ’ரிப்பீட்டட் ஆடியன்’சை சினிமா இழந்து கொண்டிருக்கிறது. இந்த ’சி’ சென்டர்காரர்களை சினிமா தியேட்டருக்கு இழுத்து வர கட்டணம் குறைத்தால், பழைய வெள்ளி விழாக்களை இன்றும் பார்க்க முடியும்,” என்கிறார்கள்.
- செ. அபுதாகிர் -
I appreciate the author for furnishing the historical conditions of theaters in Madurai. It is highly revealing the changes that have taken in the minds of theater-goers. I guess that the ubiquitous presence of TV could have reduced the theater-goers. Reduction of theater-goers could led the theater owners to convert their theaters into commercial complexes or dwelling places or vacant lands or future use...
பதிலளிநீக்குinformation is very good.... picture also super
பதிலளிநீக்குமதுரையில் உள்ள திரையரங்குகள் குறித்த நல்லதொரு பதிவு.
பதிலளிநீக்குVery nice
பதிலளிநீக்குநல்ல நினைவூட்டல்...பாராட்டுக்கள்..
பதிலளிநீக்கு