திங்கள், 2 மே, 2016

சபாஷ் நாயுடு; தமாஷ் ஹாசன்!

‘‘தலைவர் கமலஹாசன், வெறும் நடிகர் மட்டுமே அல்ல. அவர், ஆறு கோடி தமிழர்களோட பெருமை. தமிழனோட மானத்தை, அகில உலகத்திலயும் உயர்த்தி பிடிக்கிற எங்க தலைவனை, உலக நாயகனைப் பத்தி எழுதறதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கு? நீ அப்படி என்னத்த பெரிசா சாதிச்சுக் கிழிச்சிட்ட. அவரைப் பத்தி எழுதறத இத்தோட நிறுத்திக்கலை... மவனே....’’

- எப்படியும், படித்து முடித்ததும் நமது சகோதரர்கள், மேற்படியாக நாகரீகமாகவும், பிரசுரிக்க முடியாதபடிக்கு அ + நாகரீகமாகவும் எழுதித் தள்ளத்தான் போகிறார்கள். எழுதக் காத்திருப்பவர்களுக்கு ஸ்டார்ட்டிங் டிரபுள் வந்து விடக்கூடாது என்பதற்காக, முதல் கண்டன கடிதத்தை நானே எழுதி விட்டு... இனி ஆரம்பிக்கிறேன் கட்டுரையை!


‘இது அறிவியல் உச்சத்தின் காலம். இப்பல்லாம் எங்க இருக்கு சாதி?’ என்று வாட்ஸ்அப்பில் எழுதிய படியே, எதிரே டிவியில் நீங்கள் பார்க்கிறீர்களே சினிமா... அங்கே இருக்கிறது சாதி. இன்றைக்கு வெளியாகிற சினிமாக்களில் சாதிப் பெருமை பேசாத சினிமாக்களை விரல் வி்ட்டு எண்ணி விடலாம். உண்மையில், முன்னெப்போதையும் விட, சுய சாதி மோகமும், வெறியும் இப்போதுதான் நமது இளைஞர்களை மிக அதிகமாக ஆக்கிரமித்திருக்கிறது.
சாதிகளின் பெயரால் அடித்துக் கொண்டும், வெட்டிக் கொண்டு சாகிற தமிழக இளைஞர்களின் உளவியலை கூர்ந்து ஆய்வு செய்ததில், அரிவாள் தூக்குகிற அவர்களது மனோபாவத்துக்கும், தமிழ் சினிமாக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது அறிவியல்பூர்வமாகவே உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதுவும், சினிமாவில் சாதி புகுந்தப் பிறகு. அது சரி. சினிமாவில் எப்போது சாதி புகுந்தது?

ரியாகச் சொல்வதானால், 1992ம் ஆண்டு. கமல்ஹாசனின் தேவர் மகன் சினிமா வெளியான ஆண்டு இது. அதற்கும் முன்பாகவே தமிழ் சினிமாவில் சாதியம் புகுந்திருக்கலாம். ஆனால், வெறும் குறியீடாக மட்டுமே சாதி இழையோடியிருக்கும். ஒரு பெரிய நடிகரது சினிமாவில், வெறும் குறியீடாக அல்லாமல் நேரடியாகவே சாதி இடம் பிடித்தது, அந்த 1992ம் ஆண்டில்தான். சொல்லப்போனால், சாதியின் பின்புலத்தில் கதையைக் கட்டமைக்க, இன்றைய இயக்குனர்களுக்கு தைரியம் தந்தது தேவர் மகன் படம் தந்த மெகா வெற்றியே.

ந்த ஒரு படம் மட்டுமல்ல. கமல் ரசிகர்களுக்கோ, அவரது படங்களை தொடர்ந்து பார்க்கிறவர்களுக்கோ ஒரு விஷயம் சட்டென்று புரியும். தனது சினிமாவில் இடம் பெறும் பாத்திரங்களின் பெயர்களுக்கு பின்னால் கட்டாயம் சாதி இருக்குமாறு பார்த்துக் கொள்வார் உலக நாயகன். கொத்தாளத் தேவன், நல்லம்ம நாயக்கர் (விருமாண்டி), முதலியார் (அவ்வை சண்முகி), மார்த்தாண்டம் பிள்ளை (உன்னால் முடியும் தம்பி), வேலு நாயக்கர் (நாயகன்) - இப்படி இன்னும் நிறையப் படங்களைப் பட்டியலிட முடியும். தசாவதாரம் படத்தில் முதலியார், நாயுடு, அய்யங்கார் என்று சாதிகளை வரிசை கட்டி வலம் வர வைத்திருப்பார். அந்தப் படத்தில் எல்லா சாதி பாத்திரங்களும், தங்கள் அடையாளங்களை உயர்த்திப் பிடித்த படி வலம் வர, ஒரே ஒரு பாத்திரம், தன்னை நேரடியாக அடையாளமிட்டு காட்டிக் கொள்ள முடியாத படிக்கு தலித் குறியீடாக காட்சிப்படுத்தப் பட்டிருக்கும்.

‘‘சாதிப் பெருமை பேசும் படங்களை நான் எடுக்கமாட்டேன்...’’ - இப்படி சொன்னவர், வேறு யாருமல்ல... மேற்படி சமூகநீதி படங்களை உருவாக்கித் தந்த தமாஷ் நாயகன்தான். இப்போது புதிய படத்துக்கு பூஜை போட்டிருக்கிறார். படத்தின் பெயர்... ‘சபாஷ் நாயுடு’. சரிதான். அவர், அவராகத்தான் இருக்கிறார்!

ந்தப்படத்தின் துவக்க விழாவில் ‘நாயுடு’ பெயர் குறித்த கேள்விகள் எழுந்திருக்கின்றன. ‘‘என்ன கமல் சார்? நீங்களே சாதிப் பெயர் வைத்து படம் எடுக்கலாமா?’’
- கேள்வி வரும் என்பது தெரிந்ததுதானே? தயாராக யோசித்து வந்திருப்பாரோ என்னவோ... கேள்வி முடிவதற்குள் பதில் வந்தது. ‘‘தெருவின் பெயரிலிருந்தும், உங்களின் பெயரிலிருந்தும் ஜாதிப்பெயரை எடுக்க முடியுமா? அப்படிச் செய்தப் பிறகு படத்தில் இருந்து எடுக்கலாம்...’’ - கமல் எந்தக் காலத்தில் வாழ்கிறார் என்று தெரியவில்லை. இப்போதெல்லாம் எந்தத் தெருவின் பெயரில் சாதி இருக்கிறது? எத்தனை பேர் தங்களது பெயர்களுக்குப் பின்னால் சாதியை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். சமூக மாற்றங்கள் காரணமாக, தெருக்களில் இருந்தும், தனி மனிதப் பெயர்களில் இருந்தும் 80 சதவீதம் அளவுக்கு சாதி விடைபெற்று வெளியேறி விட்டது. இன்னமும் 20 சதவீதம் பேர் விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தெருவில் இருந்தும், பெயரில் இருந்தும் விலகி வெளியேறி விட்ட சாதி, இப்போது நேராக நெஞ்சுக்குள் புகுந்து ஆணியடித்து அமர்ந்து விட்டது. அதுவும் குறிப்பாக, இளைஞர்கள் மனதில். மக்கள் மனதில் இருந்து ஒரு விஷயத்தை விரட்ட வேண்டுமானால்... புறச்சூழலை மாற்றுவது அவசியம். புறச்சூழலில் சாதி புழங்குகிற ஒரு சமூகத்தின் மனதில் இருந்து அதை அகற்றி அப்புறப்படுத்துவது ஆகக் கடினமான விஷயம்.

சாதியின் கோரப் பிடியில் இருந்து தமிழகத்தையும், தமிழகத்து இளைஞர்களையும் மீட்டுக் கரையேற்ற வேண்டிய மாபெரும் பொறுப்பு பெருவாரியான இளைஞர் படையை அணி சேர்த்து வைத்திருக்கிற தலைவர்களுக்கு, கலைஞர்களுக்கு இருக்கிறது. தன்னை ஒரு ரோல் மாடல் கலைஞனாக அறிவித்துக் கொள்வதில் கமலுக்கு எப்போதுமே அலாதிப் பிரியம் உண்டு. ‘வருமான வரி செலுத்துகிறேன். ஓட்டுப் போடுகிறேன். குழந்தைகளுக்கான கல்விச் சான்றிதழில் சாதி, மதம் குறிப்பிடவில்லை...’ என்றெல்லாம் பரபரப்பாக அறிவித்துக் கொள்கிறவர் அவர். ஸ்வச் பாரத் (swachh bharat) எனப்படுகிற தூய்மை இந்தியா திட்டம் வந்ததும் குப்பைத் தொட்டியும், விளக்குமாறும் எடுத்துக் கொண்டு வீதிக்குச் சென்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தவர் அவர்.


க, அவர் ஒரு self-styled ரோல் மாடல். அப்படிப்பட்ட ரோல் மாடல் கலைஞர், ‘‘தெருவின் பெயரிலிருந்தும், உங்களின் பெயரிலிருந்தும் ஜாதிப்பெயரை எடுக்க முடியுமா? அப்படிச் செய்தப் பிறகு படத்தில் இருந்து எடுக்கலாம்...’’ என்றெல்லாம் சொல்லக்கூடாது. ‘‘முதலில் நான் செய்கிறேன்... எனக்கப்புறமாக, நீங்கள் செய்யுங்கள்...’’ என்று கூறி, மற்றவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருந்திருக்க வேண்டும். ‘ஊரெல்லாம் செய்து முடித்தப் பிறகு, கடைசியாக நான் செய்கிறேன்...’ என்றால், ‘ரோல் மாடல்’ கமலுக்கும், லோக்கல் சாதி சங்க மெம்பருக்கு என்ன வித்தியாசம் பார்க்க முடியும்?

புரட்சி பேசுகிற, கமல்ஹாசனை ஒரு புரட்சியாளராக, விஷயம் தெரிந்த யாரும் என்றைக்கும் ஏற்றுக் கொண்டதில்லை. சொல்லுக்கும், செயலுக்கும் பெருந்தொலைவு வித்தியாசம் கொண்ட ‘மகா கலைஞன்’ அவர். மதங்களையும், கடவுள் நம்பிக்கையையும் அடிக்கடி கேள்விக்குள்ளாக்குவார். ‘கடவுள் இல்லைனு சொல்லலை... இருந்தா நல்லா இருக்கும்ல!’ என்று வசனம் வைப்பார். அவரது படங்களை கவனித்து பார்த்திருந்தால் இன்னொரு மேட்டர் தெரிந்திருக்கும். 1990க்கு முன்பு வரையிலும் கமலஹாசனாக (Kamalahasan) இருந்தவர், அதற்குப் பிறகு கமல்ஹாசனாக (KamalHasan) புதிய முகம் பெற்றார். இதற்கான பின்னணியில் நியூமராலஜி எதுவும் இருக்காது என்றே நம்பி வைப்போம்!

மிழ், தமிழ் என்று உருகுவார். தமிழில் கவிதைகள் எழுதுவார். இடிக்கிறது பெருமாள் கோயில் என்ற கதையாக, நடவடிக்கைகள் அத்தனையும் தமிழைப் பழிப்பதாகவே இருக்கும். தனது உதவியாளராக இருந்து இயக்குனராக (தூங்காவனம்) மாறிய ராஜேஷின் குழந்தைக்கு மிகச் சமீபத்தில் பெயர் சூட்டினார். நல்ல தமிழிலா சூட்டினார். ‘ஹோஷிகா ம்ருணாளினி’ என்று சம்ஸ்க்ருதப் பெயர் வைத்தார். ராஜேஷ் பரவாயில்லை. டான்ஸ் மாஸ்டர் ஷோபி - லலிதா தம்பதி தான் பாவம். இவர்களது குழந்தைக்கு ஸ்யமந்தகமனி அஷ்விகா (SYAMANTAKAMANI ASHVIKA) என்று பெயர் வைத்து கலங்கடித்திருக்கிறார் உலக நாயகன். பள்ளிக்கூடத்தில் எப்படிக் கூப்பிடப் போகிறார்களோ... பாவம்!

ப்போது ‘சபாஷ் நாயுடு’ என்று சாதிப் பெயர் வைத்து படம் எடுக்கிறார். கடந்த காலங்களில் அவரது சினிமா பெயர்கள் பல சர்ச்சைகளைக் கடந்து வந்திருக்கின்றன. என்பதால், இந்த முறை வெகு கவனமாக ஒரு தடுப்பணை கட்டி தயாராக வைத்திருக்கிறார். நீங்கள் பத்திரிகைகளில் படித்திருந்தால் தெரிந்திருக்கும். ‘‘புதிய படம் சம்பந்தமாக இசைஞானி இளையராஜாவிடம் கமல் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, புதிய படத்துக்கு இளையராஜா வைத்த பெயர்தான் இந்த சபாஷ் நாயுடு...’’ - நாளைக்கு படத்தலைப்பு தொடர்பாக ஏதாவது சர்ச்சை வெடித்தால், ரொம்ப வசதியாக இளையராஜா தலையில் பழியைப் போட்டு விட்டு ஒதுங்கிக் கொள்ளலாம் பாருங்கள்...!

பாஷ் உத்தம வில்லன்!

- பூனைக்குட்டி -

7 கருத்துகள்:

  1. இவன் ஒரு குலத்துக்குப் பிறந்த கோடாரிக்காம்பு

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா2 மே, 2016 அன்று PM 11:23

    not worth to comment......better luck next time......

    பதிலளிநீக்கு
  3. நூற்றுக்கு நூறு சரி. தன் இமேஜ் கீழே விழுவது போல தோன்றும்போதெல்லாம் கமல் ஒரு ஜாதி, மதம் சார்ந்த சமூக ஒற்றுமையை சற்று பதம் பார்க்கும் முயற்சியில் இறங்கிவிடுவார். தேவர் மகன் படத்திற்குப் பிறகே சில மாவட்டங்களில் மீண்டும் ஜாதி வன்முறை பெரிய அளவில் உண்டானது என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. மிக அவதானிப்புடன் எழுதப்பட்ட கட்டுரை. தமிழக அரசியல் களத்தில் இருந்த சாதி ஆரம்ப பாடசாலைகளில் கைகளில் கயிறுகளுடன் திரியச்சொல்லி சிறுவர்கள் நெஞ்சிலும் சாதி என்ற விஷத்தை விதைத்துள்ளது. சினிமா பார்த்து தான் சமூகம் கெட்டுப் போகிறதா என்ற பொதுவான இந்த மாதிரி நேரங்களில் முன் வைக்கப்படுகிறது. இன்று தேர்தல் பிரசாரத்திற்கு கூட சினிமா கவர்ச்சி தேவைப்படுகிறது. கவுண்மணி இல்லாமல் செந்தில் காமெடியை ரசிக்க முடியாது. ஆனால், அவர் தனியாக வந்து பிரசாரம் செய்கிறார். யார் ரசிக்கிறார்கள்? ஆனால் சினிமா என்ற கவர்ச்சி மக்களிடம் எடுபடுமென நினைக்கும் குணாதிசயம் தான் கமல் படங்களில் கதைக்களங்களில், தலைப்புகளில் சாதி மணமாக கமழ்கிறது. பொதுவெளியில் நியாயவான் போல தெரிபவரின் படங்களில் மறைந்து கிடக்கும் சாதி உணர்வை மிகச்சரியாகவே அலசியுள்ளது கட்டுரை. வாழ்த்துக்கள் ஸார். ப.கவிதா குமார், மதுரை

    பதிலளிநீக்கு
  5. அருமையான அலசல். வாழைபழத்தில் ( விசத்தை ) ஊசி ஏற்றுவதுபோல் சினிமாவில் ஜாதிய வெறியை திணிப்பதில் மிக கெட்டிக்காரர். முஸ்லிம்களை தேசவிரோதிகளகவும் திவிரவாதிகளகவும் சினிமாவில் காட்டி மத மோதலுக்கு வழி வகுப்பவர் . தன்னை தானே அறிவுஜீவி என நினைக்கும் பார்பன வெறி கொண்டவர். தமிழ் சினிமாவின் சாபகேடு.

    M. செய்யது
    Dubai

    பதிலளிநீக்கு
  6. இதுதான் கமல் ஹசன்னு தோலுரித்து காட்டிடிங்க . இதை கமல் படித்தால் தூக்கு போட்டு தற்கொலை செய்துருப்பார் ..... மலேசியா

    பதிலளிநீக்கு
  7. இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் படங்களில் மிக மோசமான இடஒதுக்கீடு எதிர்ப்பு இருக்கும், ஆனால் கவனமாக அந்த எதிர்ப்பை பார்ப்பனர்கள் சொல்லாமல் முதலியார், பிள்ளை சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்துக்கு இட ஒதுக்கீடே காரணம் என்று சொல்வது போல் காட்சிகள் இருக்கும்.(வானமே எல்லை,உன்னால் முடியும் தம்பி). இப்போது அவரது திரைப்படங்களை மீள்பார்வை பார்த்தால் ஜாதி வர்க்க வேறுபாட்டை சாடுதல், பெண் முன்னேற்றம் எல்லாமே பார்ப்பன உயர்வுக்காக காட்டப்பட்டிருக்கிறது என்பது புரியும். சிகரம் எப்படியோ... மய்யமும் அப்படியே...

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...