ஞாயிறு, 28 அக்டோபர், 2018

மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன்! - 1

கால இயந்திரம் என்று சொல்வார்களே... டைம் மெஷின்; அதெல்லாம் உண்மையாக இருக்கும் என நான் கற்பனையில் கூட நினைத்ததில்லை - கடந்த வினாடி வரை! ஓரிரண்டு ஆங்கில சினிமாக்களில் பார்த்து ரசித்ததுடன் சரி. ஆனால் கால இயந்திரம் என்பதும் நிஜமே என உணர்ந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என்றால் நம்புவீர்களா...?


(இரு வாரத் தொடராக ‘குங்குமம்’ வார இதழில் வெளியான கதை - மை நேம் இஸ் மாறவர்மபாண்டியன். 6-10-2017 இதழில் வெளியான முதல் பாகம் இது.)


 மதுரை அருகே திருமங்கலத்தில் எனது பக்கத்து வீட்டுக்காரர் டாக்டர் சாமியப்பன். டாக்டர் என்றால்... மருந்து மாத்திரை கொடுத்து ஊசி போடுபவர் அல்ல. ஊசிக்கும், இவருக்கும் ஊசிமுனையளவு கூட சம்பந்தமில்லை. இவர் விஞ்ஞான விஷயங்களில் எக்கச்சக்கமாய் ஆராய்ச்சி செய்து, தலையெல்லாம் வெளுத்து, டாக்டர் பட்டம் வாங்கிய டாக்டர். மும்பை பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து, வாலன்டரி ரிடையர்மென்ட வாங்கிக் கொண்டு இங்கு ஆராய்ச்சி செய்ய வந்து விட்டார்.

 டிகிரி முடித்து விட்டு சும்மா இருக்கும் என்னை அவருக்கு ரொம்பப் பிடிக்கும். ‘‘தம்பி டைகர்... (அதுதான் எனது பெயர். எதற்காக இப்படி பெயர் வைத்தோம் என எனது பெற்றோரே மறந்து விட்டார்கள்), வாப்பா உனக்கு பவுதீகம் சொல்லித் தர்றேன்,’’ என்று ஆசையோடு கூப்பிடுவார். விஞ்ஞான ஞானத்தைப் பொறுத்த வரை நான் அவருக்கு நேர் எதிர். ‘‘நியூட்டன்’ஸ் தேர்ட் லா சொல்லு பார்ப்போம்!’’ என்று ஒரு நாள் அவர் கேட்டு வைக்க, ‘‘தெரிஞ்ச லாயரிடம் கேட்டுச் சொல்றேன் புரபஸர்,’’ என்று பதில் சொல்லி அவரை தற்கொலையின் விளிம்புக்குத் தள்ளியிருக்கிறேன்.

னாலும் அவர் சோர்ந்து விடவில்லை. சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் எனக்கு விஞ்‘ஞானம்’ ஊட்ட முயற்சித்துக் கொண்டே.....தான் இருந்தார். ஒரு திங்கள்கிழமை (என்றுதான் நினைக்கிறேன்) அதிகாலையில், வீட்டுக்கு வெளியே பல் தேய்த்தபடி நின்று கொண்டிருந்த என்னை கைதட்டி அழைத்தார் டாக்டர் சாமியப்பன். வாய் கூட கொப்புளிக்காமல், ‘‘என்ன புரபஸர்?’’ என்று அவர் வீட்டுக்கு அப்படியே ஓடினேன்.

 ‘‘டைகர்... இப்படி சும்மா பொழுதை போக்குறியே? வாழ்க்கையில சாதிக்கணும்னு லட்சியம் உம் மனசில இல்லையா?’’

 பரிட்சை ஹாலில் யோசிப்பது போல, மிக நீண்ட நேரம் அவரது கேள்விக்கு பதில் யோசித்து விட்டு, ‘‘சாதிக்கணும் புரபஸர். உங்களை மாதிரி பெரிய அறிஞராகணும்னு ஆசையாத்தான் இருக்கு. ஆனா, அதுக்கு என்ன பண்ணனும்னு தெரியலை,’’ என்றேன்.


 ‘‘கவலைப்படாத டைகர். நான் ஆக்கறேன் உன்னை சாதனையாளனா.’’

 ‘‘எப்படி புரபஸர்? கணக்கெழுதற வேலை கூட எந்தக் கம்பெனிக் காரனும் எனக்கு தர மாட்டேங்கிறான். எப்படி நான் சாதனையாளன் ஆகமுடியும்?’’

 ‘‘ஆகமுடியும் டைகர். உலகமே உன் பின்னால ஓடி வர்ற மாதிரி ஒரு சாதனையாளனா உன்னை நான் மாத்தட்டுமா?’’

 அவர் கேலி செய்கிறாரா; நிஜமாகவே பேசுகிறாரா என்று புரிந்து கொள்ளமுடியவில்லை.

 ‘‘எதிர்த்த வீட்டு நாய்க்குட்டி கூட என் பின்னால வராது. உலகம் எப்படி புரபஸர் என் பின்னால ஓடி வரும்?’’


ந்தக் கேள்விக்கு அவர் உடனடியாக பதில் சொல்லவில்லை. எழுந்து உள்ளே சென்று காஸ் அடுப்பைத் திருகி காபி வைத்தார். இரு கோப்பைகளில் எடுத்துக் கொண்டு வந்து, என்னிடம் ஒன்று கொடுத்தார். ‘‘ஒரு நிமிஷம் புரபஸர்,’’ என்று அவரிடம் அனுமதி பெற்று எழுந்து, உள்ளே போய் முகம் கழுவி, வாய் கொப்பளித்து வந்து, காபி கோப்பையைக் கையில் எடுத்தேன்.

 இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடியே காபி கோப்பைகளை காலி செய்தோம். முடித்து விட்டு, வாயை புறங்கையால் துடைத்த போது, ‘‘டைம் மெஷின் தெரியுமா டைகர்?’’ என்றார் சாமியப்பன்.


 ‘‘டைம் மெஷின்...? ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் எடுத்த பேக் டு தி ஃபியூச்சர் சினிமால வருமே...? கடந்த காலங்களுக்கு டிராவல் பண்றது. அதுதான புரபஸர்?’’

 ‘‘அதேதான்,’’ என்றார் வெள்ளை மண்டையை சொறிந்தபடியே.

 ‘‘ஆமா தெரியும். அதுக்கென்ன இப்போ?’’

 ‘‘அதுல டிராவல் பண்ண ஆசையிருக்கா உனக்கு?’’

 - இப்படி யாராவது உங்களைப் பார்த்து கேள்வி கேட்டால் எப்படி இருக்கும்? எனக்கும் அப்படியேதான் இருந்தது. ‘‘என்ன கேலி பண்றிங்களா புரபஸர்?’’ என்று கோபம் காட்டினேன்.
 ‘‘நோ.. நோ... டைகர். நான் பேசறது நிஜம். ஒரு வருஷம், ரெண்டு வருஷம் இல்லை; முழுசா முப்பது வருஷம் ஆராய்ச்சி பண்ணி கண்டுபுடிச்சிருக்கேன். ராத்திரி, பகல் தூக்கம் கிடையாது. இதோ பார், என்னோட கண்ணுக்குக் கீழே எப்படி கருவளையம் கட்டியிருக்குனு? தலைமுடியெல்லாம் எப்படி வெள்ளை ஆகிடுச்சி பாருப்பா. ஆனா, என்னோட உழைப்பு வீணாப் போகலை. என்னோட ஆராய்ச்சி சக்ஸஸ். எல்லாம் ஓ.கே. டைம் மெஷினை நான் கண்டுபுடிச்சிட்டேன்...’’ எனக்கெதிரே படு உற்சாகமாக அவர் பேசினார். எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது; நம்பமுடியாமலும் இருந்தது.

‘‘நம்பமுடியலையே புரபஸர்!’’ என்றேன் நம்பமுடியாத முகத்துடன்.

 ‘‘அதனால என்ன? யாருக்குமே காட்டினதில்லை. இப்பவே வா. உனக்குக் காட்டறேன் நான் கண்டுபுடிச்ச கால இயந்திரத்தை,’’ அவர் எழுந்து நின்று என்னை கூப்பிட்டார்.


 கால இயந்திரம்... டைம் மெஷின் - எப்படி இருக்கும் அது? ஒரு நடை அவரது ஆய்வுக்கூடத்துக்குள் போய் பார்த்தால்தான் என்ன? ஆர்வம் உந்தித் தள்ள, எழுந்து அவர் பின்னால் நடந்தேன்.


 சின்னச் சின்னதாய் நிறைய கதவுகளைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார். அவரைப் பின்தொடர்ந்தேன். கடைசியாய் ஒரு அறைக் கதவு இருந்தது. அதன் முகப்பில் இருந்த சிறிய தகடில் வலது கை பெருவிரலை அழுத்திப் பதித்தார். சிறிதுநேரத்தில் அந்தக் கதவு விலகித் திறந்தது. நாங்கள் உள்ளே சென்றதும் கதவு தானாகவே மூடிக் கொண்டது.

 ஏதோ ஊட்டி, மூணாறு வந்தது போல உள்ளே ஜிலுஜிலு க்ளைமேட். சுற்றிலும் நான்கைந்து கம்ப்யூட்டர்கள் இயக்கத்தில் இருந்தன. சின்னச் சின்னதாய் ஹெட்போன்களும் இருந்தன. அப்புறம், இன்னதென விளங்கிக் கொள்ளமுடியாத இயந்திர வஸ்துகள் ஏராளம் இடத்தை அடைத்திருந்தன. அங்கிருந்த ஒரு குஷன் நாற்காலியைக் காட்டி, ‘‘உட்காரு டைகர்,’’ என்றார் புரபஸர். எனக்கெதிரே இருந்ததில் அவர் அமர்ந்து கொண்டார்.


 வசதியாய் சாய்ந்து உட்கார்ந்தபடியே அந்த அறையை சுற்றிலும் ஒரு ரவுண்டு பார்த்தேன். பிறகு, ‘‘என்ன புரபஸர் இங்க கூட்டி வந்து உட்கார வெச்சிட்டிங்க. டைம் மெஷின் எங்க இருக்குது? அதை பார்த்திடுவோமே முதல்ல!’’ என்றேன்.

 இப்படி கேட்டு முடித்ததுதான் தாமதம். புதிதாய் வயதுக்கு வந்த சேவல் கொக்கரிப்பது போல, அடித்தொண்டையில் இருந்து கமறல் சத்தம் எழுப்பியவாறே நீண்டநேரம் சிரித்தார் சாமியப்பன். ‘‘டைம் மெஷினை போய் பார்க்கணுமா...? நல்லா கேட்ட போ. இப்ப நீ உட்கார்ந்திருக்கியே... இதுதானப்பா டைம் மெஷின்!’’

 சிரித்த படியே அவர் சொல்லி முடிக்க, எனக்குள் திக்கென்று நெஞ்சை அடைத்தது. ஏதோ நம்மூர் டவுன் பஸ் போல டைம் மெஷின் புகை கக்கிக் கொண்டு நிற்கும் என்று நான் எனக்குள் ஏதேதோ கற்பனை செய்த படி வந்தால்... இது ஏதோ ஏ.ஸி. சலூன் நாற்காலி போல வேறு லெவலில் இருக்கிறதே?


 உடனே அங்கிருந்து எஸ்கேப் ஆகி விடவேண்டும் போல தோன்றியது. குறும்புக்கார புரபஸர் இவர். ‘வாயேன் ஒரு ரவுண்டு அடித்து வரலாம்...’ என்று சொல்லி முகலாயர்கள் காலத்தில் கொண்டு போய் இறக்கி விட்டு வந்து விட்டாரானால் என்ன செய்யமுடியும்? பக்கத்துத் தெரு பெண் வேறு இப்போதுதான் என்னைப் பார்த்து லேசாய் சிரிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த நேரத்தில் ஏதாவது ஏடாகூடமாகி விடக்கூடாதில்லையா?

 ‘‘சரி புரபஸர்... வீட்ல தேடுவாங்க. போய் தோசை சாப்பிட்டுட்டு அப்புறம் வர்றனே...’’ என்று நான் லேசாக எழுந்திரிக்க... ‘‘அட... சும்மா உட்காருப்பா. எதுக்கு பயப்படற?’’ என்றார் என் மனதைப் படித்தது போல.


 ‘‘புரபஸர்... டைம் மெஷின்ல டிராவல் பண்ண ஆசையா இருந்தாலும் கூட, எனக்கு பாக்டீரியா, வைரஸ் அளவுக்குக் கூட சயின்ஸ் பத்தித் தெரியாதே,’’ என்றேன் சாமர்த்தியமாக.

 ‘‘அதுதான் எனக்கு வேணும் டைகர். சயின்ஸ் நல்லா தெரிஞ்ச ஆளா இருந்தா, எல்லாம் தெரிஞ்ச மாதிரி ஏதாவது செஞ்சு, காரியத்தைக் கெடுத்திடுவான். உன்னை மாதிரி ஒண்ணும் தெரியாத ஆளுதான், சொல்ற விஷயத்தை கரெக்டா புரிஞ்சிகிட்டு, கச்சிதமாக வேலையை முடிப்பான்.’’

 ‘‘சரி புரபஸர். நான் எதுக்கும் யோசிச்சுச் சொல்றனே...’’ என்றேன் எப்படியாவது தப்பித்து விடும் எண்ணத்தில்.


 ‘‘அட... என்னப்பா நீ, எல்.கே.ஜி. பையன் மாதிரி இப்படி கால் நடுங்குது? நான் இருக்கேன்ல? சும்மா ஒரு அரைமணிநேரம் எனக்காக ஒதுக்கினா போதும். நான் ஏற்கனவே ரெண்டு தடவை டிரெயல் பாத்துட்டேன். பிரமாதமா வொர்க் பண்ணுது. அந்த ஹேங்கர்ல தொங்குது பாரு ஓவர்கோட். அதை எடுத்து மாட்டிக்கோ. ஜஸ்ட் அரைமணிநேரத்தில போயிட்டு வந்திடலாம்,’’
 வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு ஒரு ரவுண்டு அடித்துத் திரும்புவது போல படு சாதாரணமாக அவர் பேச, எனது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் உதறலெடுத்து ஆடியது. ஆனாலும் புரபஸரின் குணம் எனக்கு நன்றாகத் தெரியும். அவரிடம் இருந்து இனி தப்பிக்க முடியும் என்று தோன்றவில்லை.

 ‘‘எங்க போகணும்? என்ன செய்யணும் புரபஸர்?’’ என்றேன். எனது குரல் எனக்கே சரியாய் கேட்கவில்லை. ஆனாலும், எனக்கெதிரே அவருக்குத் தெளிவாகக் கேட்டிருக்கிறது.


 ‘‘ஜஸ்ட் அரைமணிநேரத் தூரம் டைகர். கி.பி 201க்கு போகணும்!’’

 எனக்கு மாஸிவ் ஹார்ட் அட்டாக் வருவதற்கான அறிகுறிகள் போல முகம் வியர்த்து, தோள்பட்டைகளில் வலி பரவியது.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

(கதையின் விறுவிறுப்பான அடுத்தபாகம்... அடுத்தவாரம்!)

7 கருத்துகள்:

  1. அருமை சார்.. எதிர்பார்ப்புடன் அடுத்தவாரத்திற்காக...

    பதிலளிநீக்கு
  2. டைம் மிஷினில் அடுத்த வாரத்திற்கு உடனே செல்ல முடியாதா? காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...