வெள்ளி, 11 டிசம்பர், 2015

ஊரழித்த மழைவெறியும் சீரழிக்கும் மதவெறியும்!

சென்னையை புரட்டிப் போட்ட பெருமழையும், அதன் பிறகான கொடுவெள்ளமும், ஆர்எஸ்எஸ் போன்ற சில இந்து மத அடிப்படைவாத அமைப்புகளின் நிஜ முகத்தை உலகின் வெளிச்சத்துக்குக் காட்டிச் சென்றிருக்கின்றன. (வார்த்தை ஜாடனைகள், வர்ணனைகள் இல்லாமல், சுருக்க்க்கமாக கட்டுரையை முடிக்க வேண்டியிருப்பதால், முதல் வரியிலேயே மேட்டருக்கு வந்தாச்சு!).


ந்த ஒரு அழிவும், சோகங்கள் நிரம்பக் கொண்டவை என்றாலும், அழிவில் இருந்தே ஆக்கப்பூர்வ நிலைப்பாடுகள் உருவாகின்றன என்கிற கருத்தாக்கத்தைப் புறந்தள்ளி விடமுடியாது. பல லட்சம் உயிர் குடித்த உலகப் போர்களுக்குப் பிறகுதானே, அமைதிக்கான ஒரு அமைப்பு துவங்கவேண்டிய கட்டாயத்தை உலகம் உணர்ந்தது? சுனாமி போன்ற கோரச் சீற்றங்களுக்குப் பிறகுதானே பேரிடர் மீட்பு எனப்படுகிற Disaster Management பற்றி மேலதிகம் அறிந்து கொள்ள முடிந்தது.

ந்த வகையில், சென்னை மழையும், வெள்ளமும் மனிதம் மறந்து வருகிற ஒரு ஒற்றை உண்மையை வெளியே இழுத்துப் போட்டுச் சென்றிருக்கிறது. ரத்தமும், சதையுமாக பழகி வந்த மக்களை மதத்தின் பெயரால் கூறுபோடுபவர்களின் புரட்டுக்களை இந்த மாமழை அம்பலப்படுத்தியிருக்கிறது. எதிரே வருகிறவனை மனிதன் என்கிற பொதுப் பார்வையில் இருந்து விலக்கி, இந்து என்றும், இஸ்லாமியன் என்றும், கிறித்தவன் என்றும் பேதம் பிரித்துப் பார்க்க கற்றுத் தந்த அடிப்படைவாத அபத்தங்களை மழை வௌ்ளம் அடித்துச் சென்றிருக்கிறது.

தவிகளில் மிக மதிப்பேறப் பெற்றது... நேரத்தில் செய்யப்படுவது. இந்த மழை வெள்ளத்தின் போது அரசாங்கத்தை விடவும் முதலில் களத்தில் இறங்கி மனிதனை மத பேதங்களுக்குள் முடக்கிப் பிரித்து விடாமல், உதவியை அனைவருக்கும் பொதுவில் வைத்தவர்கள் தவ்ஹீத் ஜமாத் போன்ற சில இஸ்லாமிய அமைப்புகளே என்பதை ஊடகங்கள் அனைத்தும் உறுதி செய்கின்றன. தண்ணீரில் இருந்தும், கண்ணீரில் இருந்தும் மீண்டெழுந்த சென்னை மக்களின் குரலும் அதுவே. மூலக்கூறுகளில் எவ்வித மாறுபாடுகளுமற்ற மனிதனை மதத்தைக் கொண்டு நூறு கூறு போட்டுக் கொல்கிற செயல்கள், எல்லைகள் கடந்து உலகம் முழுவதுமே இன்றைக்கு வேர்பிடித்து வளர்ந்து நிற்கிறது.

நாங்கள் மனிதர்கள். மனிதம் மட்டுமே எங்களுக்குத் தெரிந்த மொழி என இஸ்லாமிய அமைப்புகள் இந்த பேரிடர் காலத்தில் அழுத்தம் திருத்தமாக நிரூபித்து விட்டன. குண்டு வைக்கிற ஒரு சில கூட்டத்தின் பெயரால் ஒட்டுமொத்த சமூகத்தையுமே தீவிரவாதப் பார்வை பார்த்தவர்கள், இனியாகிலும் நிஜம் புரிந்து, மனம் மாறிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை நிஜமாகவே துளிர்க்கிறது.

ந்த இடத்தில், ஆர்எஸ்எஸ், சேவா பாரதி அமைப்புகள் செய்த / செய்கிற நிவாரணப்பணிகளையும் ஒதுக்கித் தள்ளி விடவில்லை. மதம் பிரித்துப் பார்க்காமல் மனிதம் மட்டுமே பார்த்து நிவாரணம் செய்பவர்கள் - அவர்கள் யாராக இருப்பினும் - மகத்தானவர்களே. ஆனால், ஊரே மயானமாக மாறிக் கிடந்த  / முதியவர்களும், குழந்தைகளும் ஊறிக் கிடந்த... அந்த மகா சோகத்திலும், மதத் துவேஷம் மண்டையில் ஏறி, சமூகப் பொதுவெளியில் விஷக் கருத்து விதைத்தவர்களை எந்தப் பட்டியலில் சேர்ப்பது?

சென்னை முழுமையாக மழை வெள்ளத்தில் மூழ்கிக் கிடந்த நாட்கள் அவை. இஸ்லாமிய அமைப்புகளும், அதன் துடிப்பான உறுப்பினர்களும் வெள்ளத்தில் இறங்கி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இஸ்லாமிய அமைப்புகளின் சேவையில் பெரும்பங்கு பயனடைந்தவர்கள், உண்மையில் இந்துக்களே. மழை வெள்ளம், மத பிணக்குகளை அடித்துச் சென்று அப்புறப்படுத்தி விடுமோ என்று ஒரு தரப்பினரின் மனம் கொதித்தது. இணையத்தைப் திறந்து விஷம் கக்கத் துவங்கியது.

ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துமத அடிப்படைவாத அமைப்புகளால், இஸ்லாமிய இளைஞர்களின் அர்ப்பணிப்புடன் கூடியை சேவையை சகித்துக் கொள்ள முடியவில்லை. ‘டிஜிட்டல் இந்தியா’ என்று அவர்களது டில்லி தலைமை அறிமுகப்படுத்தியதாலோ என்னவோ, முகநூலைப் பிரித்து அவதூறுகளை அள்ளிக் கொட்டினர். (சென்னை வெள்ளத்தைப் பார்வையிட்ட படத்தையே போட்டோஷாப் வேலை செய்து பிரஸ் இன்ஃபர்மேஷன் பீரோ - PIB - மூலம் ஊடகங்களுக்கு அனுப்பியவர்களுக்கு இதெல்லாம் ஜூஜுபி!!).
தவ்ஹீத் ஜமாத் இளைஞர்களின் நிவாரணப் பணிகளைக் கண்டு அடிவயிறு பற்றிக் கொண்ட ஆத்திரத்தில் தமிழக பாரதிய ஜனதாவிலும், ஆர்எஸ்எஸ் அமைப்பிலும் முக்கியப் புள்ளியாக இருக்கிற கல்யாண் ராமன், தனது முகநூலில் எழுதுகிறார்.... ‘‘தமிழ்நாடு தருதலை ஜமாத் மூஞ்சிகளை இன்னைக்குத்தான் பார்த்தேன். எல்லாம் ஹவாலா, தங்கம், காட்டமைன் கடத்தல், திருட்டு விசிடி முகங்களா இருக்கு. ஒண்ணு கூட படித்த, பண்புள்ள முகங்களாகவோ, நியாயமான தொழில் - வேலை செய்து சம்பாதிக்கும் முகங்களாகவோ தெரியலை...’’ அவரது விஷம் கக்கும் வார்த்தைகள் இன்னும் நீள்கிறது.

நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே... கல்யாண் ராமன் கும்பலின் பார்வையில், தவ்ஹீத் ஜமாத் இளைஞர்கள் செய்த ஒரே குற்றம், தங்களது இந்து சகோதரர்களுக்கு மனமாச்சர்யங்களின்றி உதவி செய்தது மட்டும்தான். பெரிய தப்புத்தானே? எவ்வளவு பண்பாக எழுதுகிறார் பாருங்கள் கல்யாண் ராமன். இவரிடம் பாடம் படித்து வருகிற தொண்டர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் என புரிந்து கொள்ள முடிகிறதுதானே?

த்தோடு விட்டார்களா... என்றால், இல்லை! இஸ்லாமிய அன்பர்களின் சேவையால் காதில் புகை வழிய, புதிது புதிதாக முகநூல் பக்கங்களைத் துவக்கினார். மழை வெள்ளம் சூழ்ந்த ஒரே நாளில் மட்டும் இஸ்லாமிய பெண்கள், ஆண்களின் பெயரில் போலியாக ஏராளமான முகநூல் பக்கங்கள் இந்த மோசடிக் கும்பலால் துவக்கப்பட்டன. முகநூல் எத்தனை வருடம் / எத்தனை நாள் / எத்தனை மணிநேரத்துக்கு முன்பாகத் துவக்கப்பட்டது என்பதை யாரும் வெகு சுலபமாக அறிந்து கொள்ளமுடியும் என்கிற விஷயம் கூட அவர்களுக்குத் தெரியவில்லை, பாவம்!

‘‘ஆர்எஸ்எஸ் சேவகர்கள் எங்களை காப்பாற்றி கரை சேர்த்தார்கள். உணவு கொடுத்தார்கள். ஊட்டி விட்டார்கள். தாலாட்டுப் பாடி உறங்க வைத்தார்கள்...’’ என்கிற லெவலுக்கு தரைக்கு இறங்கி அடித்தார்கள். அதுமட்டுமல்ல. ‘‘தமுமுக, எஸ்டிபிஐ, டிஎன்டிஜே (தவ்ஹீத் ஜமாத்) போன்ற இஸ்லாமிய இயக்கத்தினரை வெள்ளம் பாதித்த பகுதிகளில் காணவே இல்லை...’’ என்று எல்ஐசி பில்டிங்கை சோற்றுக்குள் மறைக்கப் பார்த்தார்கள்.

மினா பீவி என ஒரு இஸ்லாமியப் பெண் பெயரில் போலியான Face book பக்கம் துவக்கிய இந்த மோசடிக் கும்பல் கையும், களவுமாக பிடிபட்டது. பீவி என்ற பெயரைக் கூட ஸ்பெல்லிங் சரியாக எழுதத் தெரியாமல் சிக்கிக் கொண்டது. அவசரத்தில் கையை விட்டால், அண்டாவிலும் கை நுழையாது என்கிற பழமொழி உண்மைதானோ?

தம் பெரிதா... மனிதம் பெரிதா?
- இவன் இந்து, இவன் இஸ்லாமியன் என்கிற பாகுபாடுகள் பார்க்காமல் அத்தனை பேரையும் அடித்துச் சிதைத்துச் சென்றிருக்கிறது இயற்கை. ஆர்எஸ்எஸ் (அன்பு) சகோதரர்கள், தங்களது மூளைக்குள் பலவந்தமாகவோ அல்லது ஏமாற்றியோ திணிக்கப்பட்ட / புகட்டப்பட்ட மதவெறி சித்தாந்தங்களை ஒரே ஒரு நிமிடம் ஒதுக்கி வைத்து விட்டு சிந்திப்பார்களா? நீங்கள் வணங்குகிற இறைவன், இந்த உலகிற்கு உங்களை வாழ்வதற்காகவே அனுப்பியிருக்கிறாரேயன்றி, அழிப்பதற்காக அல்ல. அன்பு சூழ் உலகு வெகு ஆனந்தமானது. எனும்போது, உலகின் திசைகளை ஏன் வெறுப்பால் நிரப்பவேண்டும்?மதத்தின் பெயரால் தீவிரவாதம் செய்பவர்கள் - யாராக இருந்தாலும் - அவர்களை மிகத் திடமாகவே எதிர்த்து நிற்போம். மற்றபடி, மதத்தின் அடையாளங்களைச் சுட்டிக் காட்டி அப்பாவிகளை / உயிருக்கு உயிராக பழகுபவர்களை கூறு போட்டுப் பிரிக்க இனியும் அனுமதிக்கமாட்டோம் என்று, இந்த மழை நீரில் கை நனைத்து உறுதியுடன் ஒரு சத்தியம் எடுப்போமா...?

- பூனைக்குட்டி -

1 கருத்து:

  1. கட்டுரை மிக அருமை.எல்லா மதங்களும் நல்ல விஷயங்களையே சொல்கின்றன. ஆனால் எந்த மதமும் புரோகிதம் ஒழிக்கவில்லை. புரோகிதம் இருக்கும் வரை மதப்பூசல் ஒழியாது. மதங்கள் அற்ற மனிதர்களின் சேவையே தமிழகம் முன்னேற வழிவகுக்கும். இக்கட்டுரை அதைநோக்கிய பயணத்தின் விதையாக அமையட்டும்

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...