சனி, 17 ஜனவரி, 2015

வால்பாறையும்... சில யானைகளும் - 3

யானைக்கும், சிறுத்தைக்கும் மனிதன் மீது என்ன பகை? யோசித்துப் பாருங்கள். அவை ஏன் தாக்குகின்றன? ‘ஏழாவது சொர்க்கம்’ என போற்றப்படுகிறது வால்பாறை மலைப்பிரதேசம். இங்கு வசிக்கிற மக்கள், இந்த காட்டுயிர்களின் ‘அத்துமீறல்’களை அன்றாட நரகமாக இல்லையா நினைக்கிறார்கள். ‘அரசாங்கம் எங்கள கண்டுக்கலை சாமி. யானையும், சிறுத்தையும் அன்றாடம் மெரட்டுது. இந்தத் தொந்தரவுக்கு முற்றுப்புள்ளி எப்ப வெப்பாங்க? எங்க புள்ளகளை வெளிய அனுப்ப பயமா இருக்குதல்ல...’ - நான் சந்தித்த எஸ்டேட் மனிதர்களின் முகங்களில் அச்சம் இருந்தது நிஜம். உண்மையில் அத்துமீறுவது யார்? யானைகளும், சிறுத்தைகளும் ‘எல்லை’ தாண்டுகின்றனவா? எஸ்டேட் மலைச்சரிவில் யானை பார்த்து விட்டு திரும்பிக் கொண்டிருந்த, வால்பாறை பயணத்தின் இரண்டாவது நாள் மாலைப்பொழுதில், எனக்கு சில புரிதல்கள் கிடைத்தன!

வால்பாறையில் சவரங்காடு எஸ்டேட் சரிவுகளில் யானைகள் முகாமிட்டிருந்ததாக தகவல் வந்தது. இன்னும் சிலருடன் அங்கு சென்று பார்த்த போது, ஒரு குட்டியும், அதன் அப்பா, அம்மா யானைகளும் காதுகளையும், வாலையும் சுழற்றிச் சுழற்றி ஆட்டிக் கொண்டே மரங்களை முறித்து ‘லஞ்ச்’ ஆக்கிக் கொண்டிருந்தன. நிறைய நேரம் வேடிக்கை பார்த்தோம். எட்ட இருக்கிற வரையில் வேடிக்கை. கிட்ட வந்தால்தான் ஆபத்து. ‘‘யானை மட்டுமல்லை. சிறுத்தையும் நிறைய கிடக்குது. ராத்திரியானா, வெளிய மக்க நடமாட்டம் இருக்காது. கவனிச்சிருக்கிங்களா? எல்லாம் சிறுத்தை பயம்தான்!’ என்றார் எனக்கு அருகே இருந்து யானை பார்த்துக் கொண்டிருந்தவர். உண்மைதான். இரவுகளில் இங்கு சீக்கிரம் ஊர் அடங்கி விடுகிறது.

அழகான ஒரு பிரதேசம், இப்படி ஆட்கொல்லி பிரதேசமாக மாறியது ஏன்? காட்டுயிர்களின் சூழலியல் பின்னணி கொஞ்சம் தெரிந்தால், இதற்கான விடையை, காரணத்தைப் புரிந்து கொள்ளமுடியும். கருங்குரங்கு, காட்டு மந்தி, கரடி, காட்டெருமை... இவையெல்லாம் வால்பாறை மக்களைப் பொறுத்தளவில் ‘அப்பிராணி’கள். யானை + சிறுத்தை கூட்டணிதான் அவர்களுக்கு டேஞ்சர். காரணம் இல்லாமல் இல்லை. கோவை மாவட்டத்தில் ஒரு ஆண்டில் யானை மிதித்து இறந்தவர்கள் எண்ணிக்கை 20. யானைகள் மிதித்தும், சிறுத்தைகள் கடித்தும் உயிரை விட்ட தோட்டத் தொழிலாளர்கள், அவர்களது குழந்தைகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் வால்பாறையில் அதிகம். வால்பாறை மக்கள், தங்கள் தரப்பு நியாயங்களை, சோகங்களை எடுத்துச் சொல்கிறார்கள். சரி. யானைகளும், சிறுத்தைகளும் தங்கள் நியாயங்களை யாரிடம் சொல்லும்?

வால்பாறை என்பது, ஆதியில் மிக அடர்ந்த வனமாக, சோலைக்காடாக மட்டுமே இருந்தது. ஆதியில் என்றதும், ‘தேவன் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தார்...’ என்கிற அளவுக்கு பின்னால் போய் விடவேண்டாம். ஒரு நூறு ஆண்டுகள் பின்னதாக. கடந்த அத்தியாயத்தில் பார்த்தோமே... ‘கைகாட்டி சிலை’ கார்வர் மார்ஷ். அவர் தலைமையிலான ஆங்கிலேயர்கள் இந்தப் பகுதியை முதன்முதலில் நோட்டமிட்டார்கள். தேயிலை பயிரிடுவதற்கு சூப்பரான சூழலும், உயரமும் பொருந்தி வருவது கண்டு, சோலைகளை வெட்டி அழிக்கும் பணிக்கு கோடாரி சுழி போட்டனர். ‘பச்சைப் பாலைவனம்’ என சூழலியல் ஆர்வலர்கள் வர்ணிக்கிற தேயிலைத் தோட்டங்கள் அதன் பிறகு வால்பாறை மலையின் பெரும்பகுதியை ஆக்கிரமித்தன. தேயிலை செடிக்கு ‘லாயக்கில்லாத’ சூழல் உள்ள பகுதிகள் மட்டும் தப்பித்தன.


இப்படி தப்பிப் பிழைத்த சோலைக்காடுகள் வால்பாறை மலைப்பகுதியில் அங்கொன்றும், இங்கொன்றுமாக சிதறிக் கிடக்கின்றன. ஆலைமலை புலிகள் காப்பகம் எனப்படுகிற இந்திராகாந்தி தேசிய பூங்கா, பரம்பிகுளம் புலிகள் காப்பகம் ஆகியவை வால்பாறை மலைப்பிரதேசத்தில் இருக்கின்றன. தேவன் பூமியைப் படைத்த காலம் தொட்டே இங்கு யானை, புலி, சிறுத்தை, கருமந்திகள், இன்னபிற விலங்குகள் கூட்டம், கூட்டமாக வசிக்கின்றன. உண்மையில், வால்பாறை அவற்றின் பூமி. அவை வசிப்பதற்காகவே இயற்கை உருவாக்கித் தந்த வீடு. நூறு ஆண்டுகளுக்கு முன் மனிதன் காலடி வைத்தப் பிறகு, அவற்றின் பிழைப்பில் மண் விழுந்தது. கொஞ்ச நஞ்சமல்ல... பல லோடு மண்.

விலங்குகள் மட்டுமே வசித்த இடத்தில், இப்போது சுமாராக ஒரு லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். யானைகளின் எண்ணிக்கை 80 முதல் 100 வரை இருக்கலாம். யானைகள், நம்மைப் போல அல்ல. ஈஸி சேரை இழுத்துப் போட்டு அக்கடாவென அமர்ந்து பொழுது போக்கும் குணம் அவற்றுக்கு கிடையாது. ஒரு நாளில் சராசரியாக பல கிலோ மீட்டர் தொலைவுக்கு உணவு, குடிநீர் தேடி அலைந்து திரிகின்றன. தினசரி சென்று வருவதற்கென்று அவை ஒரு பாதையை வகுத்து வைத்திருக்கின்றன. யானை வழித்தடங்கள் (elephant corridors) என அழைக்கப்படுகிற இந்தப் பாதையில் மட்டுமே அவை செல்கின்றன. மீண்டும் திரும்ப வருகின்றன. நம்மைப் போல குறுக்குவழி குணமோ, புதிது புதிதாக பொழுதுக்கு ஒரு பாதை கண்டுபிடிக்கிற ஆற்றலோ.. பாவம் அதனிடம் இல்லை.

ஒரே பாதையில் போய், திரும்புகிற யானைகள், திடீரென தங்கள் பாதை ஆக்கிரமிக்கப்படுவது கண்டு குழப்பமடைகின்றன. தங்கள் வழித்தடம் காணாமல் குழம்பிப் போகிற யானைகள்... ஊருக்குள் நுழைந்து விடுகின்றன. யானை வழித்தடம் என்பது ஒரு யானையின் மூளையில் அழியாது பதிந்திருக்கிற பாஸ்வேர்ட் மாதிரி. எந்தக் காலத்திலும் மறக்காது. புதிதாகப் பிறக்கிற குட்டிக்குக் கூட அதன் மூளையில், தனது குடும்பத்துக்கான யானை வழித்தடம் பதிந்திருக்கும் என வனத்துறை நண்பர்கள் கூறக் கேட்கும் போது ஆச்சர்யமாக இருக்கும். ஒரு யானைக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 200 கிலோ அளவுக்கு உணவும், 200 லிட்டர் குடிநீரும் அவசியம். தங்கள் வழித்தடத்தை இழக்கிற யானைகள், இந்த உணவுக்கும், குடிநீருக்கும் எங்கே போகும்? வால்பாறை நகரில் உள்ள சத்துணவுக் கூடங்கள், வீடுகளைத்தான் தேடிப் போகும்!

யானைகள் பெரும்பாலும் தேயிலைத் தோட்டங்களையோ, மனித நடமாட்டம் உள்ள பகுதிகளையோ விரும்புவதில்லை. இன்னமும் மிஞ்சிக் கிடக்கிற சிறு சிறு சோலைக்காடுகள், ஆற்றோர வனங்களையே அவை அதிகம் விரும்புகின்றன. உணவு, குடிநீர் தேடி அவை கிளம்பிச் செல்கையில் தேயிலைத் தோட்டங்கள், மக்களின் வசிப்பிடங்களை குறுக்கிட நேரிடுகிறது. அந்த நேரத்தில் பட்டாசு, வாண வேடிக்கை, மேள தாளம், தாரை தப்பட்டை என யானையை விரட்டுகிறேன் பேர்வழி என்று மக்கள் அடிக்கிற கூத்துக்களால் நிஜத்தில் அவை பெரு மிரட்சியடைகின்றன. மின்னலென சீறிப் பாய்கிற வாண வேடிக்கை, பெரும் சத்தம் எழுப்பும் பட்டாசுகள், கவனத்தை சீர்குலைக்கிற வாத்திய இசையால் அவை மிகவும் அச்சமடைகின்றன. அந்த இடத்தை விட்டு அகன்றால் போதும் என ஓட்டம் பிடிக்கிற அல்லது எதிர்வினை காட்டுகிற போதுதான் சேதங்கள், உயிரிழப்புகள் பதிவாகின்றன.

அதிர்வேட்டுக்கள் யானைகளை மிகவும் அச்சுறுத்தக்கூடிய ஆற்றல் கொண்டவை. ‘அதிர்வேட்டுப் பிரியனே... சரணம் ஐயப்பா...’ என்று கோஷமெழுப்பிக் கொண்டு செல்கிற பக்தர்கள், உண்மையில் யானைகளை விரட்டவன்றி வேறெதற்காகவும் அணுகுண்டுகள் வெடிப்பதில்லை. தன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்து விட்டு, ஐயப்பனுக்கு அதிர்வேட்டுப் பிரியன் என்று ஒரு பட்டம் கொடுத்து தப்பித்துக் கொண்டார்கள். வால்பாறை மட்டுமல்ல... கோவை மாவட்டத்தின் வனப்பகுதிகள் பெரும்பாலும் ஆக்கிரமிப்பில் சிக்கித் தவிக்கின்றன. குறிப்பாக, கோவை நகரில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் ஆக்கிரமிப்போ ஆக்கிரமிப்பு.

ஆனந்த நடனமாடுகிறவர் முதல் பிஷாஷூகளை விரட்டி கண் தெரியாதவர்களை காண வைக்கிறவர் வரை... அத்தனை பேரும் யானை வழித்தடங்களை ஆக்கிரமித்து பிரார்த்தனைக் கூடங்கள், கல்லூரிகள் கட்டி வைத்திருக்கிறார்கள். கட்டிப் பிடி சாமியாரிணியும் கூட இங்கு கல்லூரி வைத்திருக்கிறார். பெரும் பண முதலைகள், அரசியல்வாதிகளும் வளைத்து வளைத்து இடத்தைப் பிடித்து பெரும் நிறுவனங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். வனம் சூழ்ந்த வால்பாறை நகரிலும் அப்படியே. தேயிலைக்காக அழித்த சோலைகள் தவிரவும், எஸ்டேட் பங்களாக்கள், ரிசார்ட்டுகள், தோட்டங்கள், பண்ணை வீடுகள் என காட்டுயிர் வாழிடங்கள் அழிக்கப்படுகின்றன.

வால்பாறை மட்டுமல்ல... மூணாறு, ஊட்டி என பெரு மலைப்பகுதிகளுக்கு அடுத்த முறை செல்கிற போது கவனித்துப் பாருங்கள். அடர் வனப்பகுதிகளை ஆக்கிரமித்து எத்தனை ரிசார்ட்டுகள் கட்டி வைத்திருக்கிறார்கள்? வன விலங்கு வாழிடங்களை அழிக்க எப்படி இவர்களால் முடிகிறது? யார் கொடுத்தது அந்த அனுமதி? அங்கு எதற்காக கட்டிடங்கள்? யானைகளும், சிறுத்தைகளுமா அங்கு ரூம் போட்டு தங்கப் போகின்றன? பேராசை மிகுதியிலோ அல்லது அறியாமையிலோ தங்கள் வசிப்பிடங்களை நசுக்கித் தள்ளுகிற மக்களை இந்த யானைகள் எப்படி எதிர்கொள்கின்றன? இந்த யானை பிரச்னைகளில் இருந்து தப்பி எப்படி தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளர்கள் நிம்மதியாக வேலை பார்ப்பது? அந்த விஷயத்தை அடுத்த வாரத்துக்கு மிச்சம் வைக்கலாமா?

(என்னதான் சொர்க்கம் என்றாலும், ஒரு கட்டத்தில் ஜிலுஜிலு வால்பாறையும் போராடிக்கத்தானே செய்யும்? அடுத்த வாரமோ... அதற்கடுத்த வாரமோ நிச்சயமாக கீழிறங்கி விடலாம். சரிதானே!)

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

* இந்தக் கட்டுரையின் முதல் பகுதியை படிப்பதற்கான இணைப்பு:

* இரண்டாம் பகுதியை படிப்பதற்கான இணைப்பு:

* குங்குமம் வார இதழில் வந்த வால்பாறை அவலங்கள் குறித்த கட்டுரையை படிப்பதற்கான இணைப்பு...

3 கருத்துகள்:

  1. அதிர்வேட்டுப் பிரியன் பட்டம் உண்மை தான்...

    பதிலளிநீக்கு
  2. யானைகளும், சிறுத்தைகளும் தங்கள் நியாயங்களை யாரிடம் சொல்லும்? அதற்கு தான் நம் பூனையார் உதித்துவிட்டாரே...

    பதிலளிநீக்கு
  3. விலங்கின் இருப்பிடத்தில் நாம், அவைகள் எங்கு போகும் என்பதை அழகாக விளக்கியுள்ளீர்

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...