திங்கள், 20 மார்ச், 2017

ராஜா நோட்டீஸ்... (காப்பி)ரைட்டா?


ரவில் தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுகிறவர்களுக்கு அலோபதி, ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா, யுனானி... என கருத்துமுரணின்றி அத்தனை வித்தகர்களும் ஒரு மெடிஸின் சிபாரிசு செய்வார்களேயானால்... அது, ராஜா பாடல்கள். தொலைதூரப் பயணங்கள் செல்கிறவர்கள், வாகனங்களில் எரிபொருள் இருப்புக்கு அடுத்தபடியாக சரிபார்க்கிற விஷயம்... ராஜா பாடல்கள். காதலில் தோற்றவர்கள் தாடி வளர்த்தபடி ஆறுதல் பெறவும், வென்றவர்கள் கன்னம் மழித்து விட்டு கொண்டாடவும் பக்கபலமாக இருப்பது... ராஜா பாடல்கள். இந்தப்பட்டியல் இன்னும் மிக நீ.....ளமானது. பல கோடி மக்கள், தங்கள் நெருக்கடிகள் மிகுந்த தினப்பொழுதுகளை ராஜா பாடல்களுடன் இணைந்தே நகர்த்தி வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது சாமி சத்தியமான உண்மை. ரைட்டு. ராஜா பற்றி ஏதோ இப்போது பரபரப்பாக ஒரு சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறதாமே... அது என்னா?


மிழகத்து முகபுக் எழுத்தாளர்களின் எழுத்தாற்றலை நிரூபிக்க தினமும் ஒரு சமாச்சாரம் நடந்து கொண்டே இருக்கிறது. ஜெயலலிதா, சசிகலா, தினகரன், ஓபிஎஸ், தீபா, எடப்பாடி... என்று தீப்பிடிக்கிற அரசியல் போய்க் கொண்டிருந்த நேரம் சுசித்ரா கிளம்பி வந்து சினிமா பக்கம் லகானைத் திருப்பினார். எடப்பாடியை டீலில் விட்டு விட்டு, எல்லாரும் அவர் பக்கம் போனார்கள். இப்போது ‘பாடும் நிலா’ பாலு வந்திருக்கிறார். ஃபேஸ்நூல் எழுத்தாளர்கள் ஆபீசுக்கு ‘ஸஃபரிங் ஃப்ரம் ஃபீவர்’ லீவு லெட்டர் அனுப்பவேண்டிய அளவுக்கு படு உருக்கமான ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்கிறார். ‘இனி ராஜா பாடலை பாடமாட்டேன்’ என்று சபதமடித்திருக்கிறார். நடந்தது என்ன? பின்னணி என்ன?

மெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இருந்தபடி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மார்ச் 19ம் தேதி போஸ்ட் செய்த (இத்தனை சர்ச்சைகளுக்கும் துவக்கப்புள்ளியான) அந்தக் கடிதத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்றால்....

‘‘கடந்த வார இறுதியில் சியாட்டிலிலும், லாஸ் ஏஞ்சலஸிலும் நடந்த இசைக்கச்சேரிகளுக்கு வந்தவர்களுக்கும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும் நன்றி. இரண்டு நாட்களுக்கு முன் இளையராஜா சார்பில் அவரது வழக்கறிஞர், எனக்கும், என்னுடைய மகன் சரண், பாடகி சித்ரா மற்றும் இசைக் கச்சேரி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இளையராஜா இசையமைத்த பாடல்களை அவருடைய அனுமதி இல்லாமல் இனி பாடக் கூடாது. மீறி பாடினால் அபராதத்தொகையை சட்டப்படி கொடுக்க வேண்டியிருக்கும் என்று அதில் குறிப்பிட்டிருந்தது. எனக்கு இந்த சட்டத் திட்டங்கள் மீது சரியான புரிதல் இல்லை.


எனது மகன் சரண், சர்வதேச அளவில் ஒரு கச்சேரியை ஏற்பாடு செய்து, அதற்கு எஸ்பிபி 50 என்று பெயர் வைத்து டொரண்டோவில் தொடங்கினோம். தொடர்ந்து ரஷ்யா, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், துபாய் உள்பட பல நாடுகளில் இசைக் கச்சேரியை நாங்கள் நடத்தி வருகிறோம். அப்போதெல்லாம் வராத நோட்டீஸ், இப்போது வந்துள்ளது என்பது தான் எனக்கு புரியவில்லை.
இது தான் சட்டம் என்றால் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன் . இனிமேல் நானும், எங்கள் குழுவினரும் இளையராஜாவின் பாடல்களை இசைக்கச்சேரியில் பாட மாட்டோம். கடவுளின் அருளால் இளையராஜா தவிர, மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பல பாடல்களை நான் பாடியுள்ளேன். அந்த பாடல்களை இனிவரும் இசைக்கச்சேரிகளில் நான் பாடுவேன்.

உங்கள் அனைவரிடமும் என்னுடைய ஒரே கோரிக்கை என்னவென்றால் இதுகுறித்து எந்த விவாதமோ, கருத்தோ கூறவேண்டாம். கடவுளின் எண்ணம் எதுவோ அதுவே நடக்கட்டும்...’’

- இது ‘பாடும் நிலா’வின் விளக்கக்கடிதம்.


ஏன்..., ராஜா பாடலை பாடி கச்சேரி நடத்தினால் என்ன தப்பு?

ந்தக் கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்வதற்கு முன்பாக, இந்திய காப்புரிமைச் சட்டம் (Copyright law of India) பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அது பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லாததால்தான், நிறையப் பேர் இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் ராஜா மீது பாய்ந்து குதறுகிறார்கள்.

பிறர் இசையமைத்து உருவாக்கிய, ஒரு குறிப்பிட்ட பாடலை நீங்கள் பொதுவெளியில் கச்சேரி நடத்தி பாடவேண்டுமானால், அந்தப் பாடலுக்கான உரிமை வைத்திருக்கிறவரிடம் முறைப்படி உரிமை வாங்கவேண்டும். இது கட்டாயம். அமெரிக்க உள்ளிட்ட பிற வெளிநாடுகளில் எல்லாம் இந்த காப்புரிமைச் சட்டம் படு கெடுபிடியாக நடைமுறையில் இருக்கிறது. ஜான் லெனன், பால் மெக்கார்ட்னி பாடல்களை எல்லாம் அனுமதியின்றி கச்சேரி போட்டு பாடிக் கொண்டிருந்தால்... கழுத்தில் துண்டை போட்டு தரதரவென கோர்ட்டுக்கு இழுத்து வந்து விடுவார்களாக்கும். அதுவும் அமெரிக்காவில் கேள்வியே கேட்கமாட்டார்கள். ‘தூக்கி உள்ள தள்ரா...’ என்று ஆங்கிலத்தில் உத்தரவு பிறப்பித்து விடுவார்கள்!

வ்வளவு ஏன்? நம்மூரில் எம்எஸ் சுப்புலட்சுமி பாடலை யாராவது கச்சேரி போட்டு பாடி விடமுடியுமா? காப்பிரைட்ஸ் சட்டம் கழுத்தை நெரித்து விடும். ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் எல்லாமே அவரது சொந்த வர்த்தக வளையத்துக்குள் இருக்கிறது. நடிகர் ரஜினியின் பெயரை அவரது குடும்ப உறுப்பினர்கள் அனுமதியின்றி யாராவது படத்தில் பயன்படுத்தினால், வழக்கு பாய்ந்து விடும். சமீபத்திய உதாரணம் பார்க்கலாம். ‘ஏ டண்ட ணக்கா... ணக்கா...ணக்கா’ என்று தனது பாட்டை பயன்படுத்தியதற்காக டி.ராஜேந்தர் கோர்ட்டில் வழக்குப் போட்டு, இசையமைப்பாளர் இமான், நடிகர் ஜீவா எல்லாரும் மன்னிப்பு கேட்டு ‘காம்ப்ரமைஸ்’ பண்ணிய கதை தெரியும்தானே? இளையராஜா பாடல்களை மட்டும்தான் யார் வேண்டுமானாலும் பாடி சம்பாதித்துக் கொள்ளமுடியும் என்கிற நிலைமை.


சரி. ஒரு பாடல், இசையமைப்பாளருக்கு மட்டுமா சொந்தம்? உயிரைக் கொடுத்து பாடிய பாடகருக்கும் உரிமை இருக்கிறதில்லையா?


கேள்வி ரொம்ப நியாயம் போலவே இருந்தாலும் கூட... துளி நியாயம் இல்லை. சினிமாவைப் பொறுத்தமட்டில், இசையமைப்பாளர் பணி என்பது மிக, மிக முக்கியமானது. இயக்குனருக்கு இணையான கிரியேட்டர் (Creater) வேலை அது. ஒரு ராகத்தை படைப்பது சாதாரண காரியமல்ல. மெட்டு போடுகிற இசையமைப்பாளரே, அந்தப் பாடலுக்கான கேப்டன்.

னது மெட்டுக்கும், சினிமாவில் அந்தப் பாடல் இடம் பெறுகிற காட்சிக்கும் பொருந்தி வருகிற மாதிரியான குரல்வளம் கொண்ட பாடகரை தீர்மானிப்பவர் இசையமைப்பாளர். தனது மெட்டு சந்தத்துக்கு பொருத்தமாக எழுதுகிற கவிஞரை தேர்வு செய்து எழுத அழைப்பவரும் இசையமைப்பாளரே. யாரை பாட அழைப்பது, யாரை எழுத அழைப்பது என்பது இசையமைப்பாளர் என்கிற கிரியேட்டரின் தனிப்பட்ட உரிமை. எஸ்பிபியை அழைக்கலாம். யேசுதாஸை அழைக்கலாம். உன்னிமேனனை அழைக்கலாம். ஏன்.... தானே பாடவும் செய்யலாம். தனது மூளையில் உதித்த ராகத்தை / பாடலை எப்படி மெருகேற்றவேண்டும் என்பதை அந்த இசையமைப்பாளரே முடிவு செய்வார்.

திரைக்காட்சியின் சூழலுக்கு ஏற்ப கவிஞரிடம் பாடல் வரிகளை வாங்கிக் கொள்கிறார். வரிகளை மாற்றி எழுதச் சொல்கிற உரிமை இசையமைப்பாளருக்கு உண்டு. பிறகு, சம்பந்தப்பட்ட பாடகரை அழைத்து, மேற்படி பாடலை ராக பாவனையுடன் பாடிக் காட்டுகிறார். உணர்வுப்பூர்வமாக இசையமைப்பாளர் பாடிக் காட்டுவதை உள்வாங்கிக் கொள்ளும் பாடகர், அதை அப்படியே தனது குரல்வளம் மூலம் மெருகேற்றி பாடுகிறார். இப்படித்தான் உருவாகிறது நாம் கேட்டு ரசிக்கிற செம ஹிட் பாடல். மொத்தத்தில், ஒரு பாடலின் தாய், தந்தை, நண்பன் எல்லாமே... இசையமைப்பாளர் மட்டுமே. இதனால் தான், காப்புரிமைச் சட்டம், ஒரு பாடலின் உரிமையை அதை உருவாக்கிய இசையமைப்பாளருக்குக் கொடுத்து பெருமைப்படுத்துகிறது. ரைட்டா?

ற்றபடி,. உசுரைக் கொடுத்து வேலை பார்த்தேன் என்று கூறி, நீங்கள் வேலை பார்க்கிற நிறுவனத்தில் கூடுதல் உரிமை எடுத்துக் கொண்டீர்கள் என்றால்... என்ன நடக்கும் தெரியும்தானே? ‘நீ உசுரக் கொடுத்து வேலை பாத்தது எல்லாம் சரிதான். அதுக்குத்தான் சம்பளம் கொடுத்தோம்ல’ என்று ‘அன்பான’ ரிப்ளை வருமா; இல்லையா?

சரி சார். கச்சேரியில ஒரு பாடகர் அந்தப் பாடலை பாடுறதால என்ன கொறஞ்சிடப் போகுது?


சினிமா பாடல்களுக்கு பின்னணியில் இருக்கிற வர்த்தக / லாப மேட்டர்கள் தெரியாததால் வருகிற கேள்வி இது. ஃபேஸ்புக் விளக்கக் கடிதத்தில் எஸ்பிபி கூறியிருப்பது போல, அவரது மகன் எஸ்பிபி சரண் உலகம் முழுவதும் அப்பாவை வைத்து இசைக்கச்சேரிகள் நடத்திக் கொண்டிருக்கிறார். இசைக்கச்சேரி என்றால்... நம்மூர் திருவிழாவில் நடப்பது போல கற்பனை செய்து விடக்கூடாது. வெளிநாடுகளில் கச்சேரிகள் நடத்திக் கொடுப்பதற்கென்று நிறைய ஈவன்ட் மேனேஜ்மென்ட் அமைப்புகள் ஃபீல்டில் இருக்கின்றன. சினிமா கலைவிழாக்களை டிவிகளில் பார்த்திருக்கிறீர்கள்தானே? ஸ்டேஜ் துவங்கி, ஒலி - ஒளி வசதி, உள் அலங்காரங்கள் என... அதற்கே பல லட்சங்கள்... சமயங்களில் கோடி ரூபாய் வரை செலவு பிடிக்கும்.

‘அடப்பாவமே... இவ்வளவு ரூபாய செலவு பண்ணியா கச்சேரி நடத்துறாங்க.. ரொம்பப் பாவம்’ என்று அவசரப்பட்டு யாரும் கண்ணீர் வடித்து விடக்கூடாது. செலவு செய்தது போல குறைந்தது பத்து மடங்கு லாபம் கிடைக்குமாம். நல்ல மீடியா ஸ்பான்ஸர் அமைந்து விட்டால்... லாபம் இன்னும் பத்து மடங்கு கன்ஃபார்ம். வெளிநாட்டில் ஒரு கச்சேரி முடித்து விட்டு ஊர்  திரும்புவது... இங்கு பத்து படத்தில் பாடி சம்பாதிப்பதற்கு சமானம். பத்து வெளிநாட்டுக் கச்சேரி கிடைத்து விட்டால்... ஐம்பது படத்தில் பாடி தேடுகிற வருமானத்தை பார்த்து விடலாம்.

வெளிநாடுகளில் போய் கலைச்சேவையாக கச்சேரி நடத்தினாலோ... அல்லது கச்சேரி நடத்தி கிடைக்கிற காசை, தான தர்மங்கள் வழியில் செலவு செய்தாலோ... பிரச்னை இல்லை. முழுக்க, முழுக்க வர்த்தக நோக்கத்தில், லாப எண்ணத்தில் ஒரு கச்சேரி நடத்தும் போது, அடிப்படையில் சில கேள்விகள் எழுவது இயல்பு. அடுத்தவர் கற்பனையை வைத்து லாபம் சம்பாதிக்கும் போது, அந்த கிரியேட்டருக்கும் உரிய லாபம் போய்ச் சேரவேண்டும் என்பதுதானே நியாயம்? முழுவதையும் தனது பாக்கெட்டிலேயே அழுத்தி அமுக்கி வைத்துக் கொள்வது எந்த ஊர் நீதி?

நீங்களே ஒரு கதையோ, கவிதையோ எழுதியிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். யாரோ ஒருவர், உங்களிடம் அனுமதி பெறாமல் ஊர், ஊராக கச்சேரிகளில் அதை வாசித்துக் காட்டி கல்லா நிரப்பிக் கொண்டிருக்கிறார். நீங்கள் என்ன செய்வீர்கள். போனை போட்டு, ஊரில் இருக்கிற கெட்ட வார்த்தை எல்லாம் சொல்லி திட்டித் தீர்த்து விடமாட்டீர்கள்? ‘பணத்தை எண்ணி எடுத்து வைக்கலை... ஊருக்குள்ள காலை வெக்க முடியாது’ என்று கொலைமிரட்டலுக்கு இணையான மிரட்டல் விடுக்க மாட்டீர்கள்? படைத்தவனுக்குத்தான் சார் தெரியும் படைப்பின் அருமை. குழந்தை மீது இருக்கிற தாயின் அக்கறைக்கு நிகரானது அது.


எல்லாஞ்சரிதான். இருந்தாலும், கோர்ட்டு கேசுன்னு போயிருக்க வேண்டாமில்ல...?

ந்த ஊர்ல சார் இருக்கிங்க நீங்க? நம்ம ஊர்லயே இதுமாதிரி நிறைய முன்னுதாரணம் இருக்கு. செலக்டிவ் அம்னீஷியா மாதிரி அது சில பேருக்கு மறந்து போயிருக்கலாம். கொஞ்சம் ஞாபகப்படுத்துவோம். பாடகர் உன்னிமேனன் நினைவிருக்கிறதா? கேரளாவில் இருந்து வந்து ‘புது வெள்ளைமழை, கண்ணுக்கு மை அழகு...’ பாடல்கள் பாடியவர். சினிமாவில் சான்ஸ் கொஞ்சம் குறைந்ததும் கச்சேரி நடத்த ஆரம்பித்தார். கேரளாவில் இருந்து வந்த மற்றொரு பாடகர் மது பாலகிருஷ்ணன். அச்சு அசலாக இவரது குரல் அப்படியே யேசுதாஸ் மாதிரியே இருக்கும். ‘நான் கடவுள்’ படத்தில் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்... பாட்டை இவர் பாட... எல்லாரும் யேசுதாஸ்க்கு போன் போட்டு பாராட்டினார்கள். சினிமா சான்ஸ் குறைந்ததும் இவரும் கச்சேரி பக்கம் போனார்.

லையாளத்துப் பக்கம் கச்சேரி நடத்தினால், யேசுதாஸ் பாடல் பாடினால்தான் கைதட்டல் விழும்; கலெக்‌ஷன் அள்ளும். உன்னிகிருஷ்ணன், மது பாலகிருஷ்ணன் இருவரும் யேசுதாஸ் பாடலை பாடி பிசினஸ் செய்து கொண்டிருக்க, 2004ம் ஆண்டு யேசுதாஸின் மூத்த மகன் வினோத் யேசுதாஸ் போட்டார் ஒரு போடு. ‘‘எனது அப்பாவின் பாடலை இனி மேடையில், பொது நிகழ்ச்சிகளில், டிவி ஷோக்களில் பாடுவதாக இருந்தால் உரிய ராயல்டி எங்களுக்கு கொடுக்கவேண்டும். ராயல்டி கொடுக்காமல், இனி யேசுதாஸ் பாடல்களை பாடக்கூடாது...’’ வினோத் போட்ட கேஸால் உன்னிகிருஷ்ணனும், மது பாலகிருஷ்ணனும் ஆடிப் போனார்கள். படைத்தவருக்கு மரியாதை செலுத்துவதுதானே பண்பு? கேட்டும் மரியாதை கிடைக்காவிட்டால் கோர்ட், கேஸ் எல்லாம் தவிர்க்க முடியாததாகி விடுகிறதுதானே?

அப்ப, இந்தப் பிரச்னைக்கு பி்ன்னணியில என்னதான் சார் இருக்கு?

ம்ம சினிமா சோர்ஸ்களிடம் விசாரிச்ச வரைக்கும் கதை வேற மாதிரி போகுது. எல்லாம் ‘டப்பு’ மேட்டர்தான். எஸ்பி பாலசுப்ரமணியனை பாடவைத்து நாடு, நாடாக கச்சேரி நடத்திக் கொண்டிருக்கிறார் அவரது மகன் எஸ்பிபி சரண். கார்த்திக் ராஜா இதுபோல சில கச்சேரிகள் நடத்திய போது, அதில் ‘பாடும் நிலா’வை பாடவிடாமல் சரண் தடுத்ததாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. ‘இனி நம்ம கச்சேரி மட்டுமே போதும். வேற ஆளுங்க நடத்துற கச்சேரிகள் வேணாம்’ என்று தடுத்து விட்டாராம். இதனால், கார்த்திக் ராஜாவுக்கும், அவரது அப்பா இளையராஜாவுக்கும் மன வருத்தம். நீண்டகாலமாக வெளியில் தெரியாமல் புகைந்து கொண்டிருந்த விஷயம் இது. ஃபேஸ்புக்கில் போட்டு உடைத்து விட்டார் பாடும் நிலா.

ரைட்டு. அப்ப, திருவிழாவுல கச்சேரி நடத்தி இனி பொழப்பு நடத்துறவங்க கதி என்ன ஆவுறது?

ந்த பிரச்னையில் நாம் தெரிந்து / புரிந்து கொள்ள சில விஷயங்கள் இருக்கிறது. இளையராஜாவின் காப்புரிமை ஆலோசகர் பிரதீப் குமார் சில விஷயங்களை தெளிவுபடுத்தியிருக்கிறார். சாதாரண மேடைக்கச்சேரி நடத்துபவர்களையோ, டிவி ஷோக்களில் பாடல் பாடுபவர்களையோ ராயல்டி வேண்டும் என்று நாங்கள் கட்டாயப்படுத்த வில்லை. வணிக ரீதியில், லாப நோக்கத்தில் இளையராஜா பாடல்களை பாடுபவர்களை மட்டுமே நாங்கள் கேட்கிறோம்...’’.

ந்த விஷயத்தில் இளையராஜாவும் இதற்கு முன்பே தெளிவான விளக்கம் கொடுத்திருக்கிறார். ராயல்டி என்பது தனிப்பட்ட இசையமைப்பாளருக்கு மட்டுமல்ல. இதில் வருகிற லாபத்தை பாடல் பாடியவர், பாட்டு எழுதியவர், வாத்தியங்கள் வாசித்தவர் என அத்தனை பேருக்கும் பிரித்துக் கொடுக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார். அத்தனை பேருக்கும் போய்ச் சேரவேண்டிய பணம்... தனியொரு நபரின் பாக்கெட்டில் மட்டும் போய் விழுவது சரியா; தப்பா?

ர்த்தக நோக்கத்தில் பாடுபவர்களுக்குத்தான் சிக்கலே தவிர... பஸ்சில் பாட்டுப்பாடி பிழைப்பு நடத்துகிறவர்களுக்கு இதனால் யாதொரும் தொந்தரவும் இல்லை.

தப்புத்தான். ஆனா, உள்ளுக்குள்ள பேசி முடிச்சிருக்கிற விஷயத்தை ராஜா இப்படி பொதுவெளியில போட்டு உடைக்கலாமா?

சினிமா காரர்களே இந்த விஷயத்தில் பாடும் நிலா மீதுதான் பயங்கர அதிருப்தியில் இருக்காங்களாம். ‘‘காப்பிரைட் நோட்டீஸ் அனுப்புனா, ராஜாவை போனில் கூப்பிட்டு ஒரு வார்த்தை பேசியிருக்கலாம். இன்னிக்கு, நேத்திக்கு நட்பா அது? ஒரு வார்த்தை பேசியிருந்தா... மேட்டர் முடிஞ்சிருக்கும். அதை விட்டுட்டு, இப்படி பொசுக்குனு ஃபேஸ்புக்குல போட்டு விஷயத்தை பூதாகரமாக்கலாமா? இப்ப யாருக்கு அசிங்கம்? தப்பு செஞ்சது யாரு, காப்பிரைட்டுனா என்னனு இப்ப அத்தனை பேருக்கு தெரிஞ்சுக்க வாய்ப்பா அமைஞ்சிடுச்சி இல்ல...? ஆனா, ராஜா சார் பண்ணுதில ஒரு நல்லது இருக்கு. இனி வர்ற குட்டி இசையமைப்பாளர்கள் நாலு காசு சேர்க்கறதுக்கு, இந்த விஷயம் ஒரு டர்னிங் பாயிண்ட்டா இருக்கு...’’  என்கிறார்கள்.

உண்மைதானே?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

7 கருத்துகள்:

 1. காப்பிரைட் சட்டங்கள் பற்றி எதுவும் தெரியாதால் நானும் இளையராஜா செய்தைது தவறு என்றே நினைத்தேன். கட்டுரையை படித்ததும் கருத்தை மாற்றிக் கொண்டேன்.நான் தயாரித்த பொருளை இன்னொருவன் விற்று லாபம் சம்பாதிப்பதை நியாயமுள்ள யாரும் ஆதரிக்க மாட்டார்கள்.

  பதிலளிநீக்கு
 2. அருமை
  நல்ல தெளிவான தகவல்
  வித்தியாசமான பார்வை

  பதிலளிநீக்கு
 3. கட்டுரை சூப்பர் பிரோ.
  நான் கூட முதலில் ராஜாவை திட்டினேன்.
  உங்கள் கட்டுரை பார்த்தப் பிறகு இப்போது அவரை திட்டவும் இல்லை. சரி என்று சொல்லவும் இல்லை.

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...