ஒரு வினாடி திடுக்கிட்டு, தடுமாறி... மூடப் போன வேகத்தில் மீண்டும் கதவைத் திறந்து உள்ளே வர.... மேஜை இப்போது காலியாக இருந்தது. நான் பார்த்தது உண்மையா... இல்லை, காலையில் இருந்து அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பதால்... மூளை குழப்பமடைந்து பொய் தோற்றங்களை காட்டுகிறதா? நாற்காலியில் குழப்பமாய் அமர்ந்தவன், அடுத்த வினாடியே புதிய முடிவுடன் எழுந்தேன். வாட்ச் பார்த்தேன். மணி 5.30. இது மலைப்பகுதி. அதிகப்பட்சம் அரை மணிநேரத்திற்குள் இருட்டி விடலாம். ஆனாலும் பரவாயில்லை. ரிஸ்க் எடுக்க முடிவு செய்தேன். ஸ்டேஷனில் இரவுப்பணி காவலர்கள் தவிர யாரும் இல்லை. அதனால் என்ன? எனக்கு பேய், பிசாசுகளில் நம்பிக்கை இல்லை. அந்த பங்களாவுக்கு தனியாகவே சென்று சோதனை செய்வது என்று முடிவு செய்தேன்.
![]() |
| Q சிறுகதையின் முதல் பாகம் Q - 1 |
அங்கிருந்தும் நடக்கிற தூரம்தான் பங்களா. இத்தனை வருட போலீஸ் அனுபவத்தில் என்னால் சில விஷயங்களை கணிக்க முடிந்தது. பங்களாவுக்கு செல்வது என்பது நானாக எடுத்த முடிவில்லை. அந்த முடிவை நான் எடுக்க வைக்கப்பட்டிருக்கிறேன். கண்ணுக்குத் தெரியாத ஒரு தூண்டில் பங்களா நோக்கி என்னை இழுத்துச் செல்கிறது. ஆனால், எனக்கு பயமில்லை. இதை விடவும் படு பயங்கர கேஸ்களை எல்லாம் சர்வீஸில் கடந்திருக்கிறேன். பேண்ட் பாக்கெட்டை தொட்டுப் பார்த்துக் கொண்டேன். முழுவதும் லோட் செய்யப்பட்ட பிஸ்டல் எந்த சவாலையும் சந்திக்க ஆயத்தமாக இருந்தது. விறுவிறுவென நடந்தேன். ஐந்து நிமிட நடையில் பங்களா வந்தடைந்தேன். நான் எதிர்பார்த்தது போலவே பங்களாவின் நுழைவாயில் கதவு எனக்காக திறந்தே இருந்தது.
வரவேற்பறையைக் கடந்து முதல் பெட்ரூமிற்குள் நுழைந்தேன். கண்களால் அறையைச் சுற்றினேன். அங்கு எந்த மாற்றமும் இல்லை. வெளியே வந்து, நான் எதிர்பார்த்து வந்திருந்த இரண்டாவது பெட்ரூமிற்குள் நுழைந்தேன். உள்ளே நுழைந்ததும் எனது பார்வை தன்னிச்சையாக சுவர் ஓரம் இருந்த கணப்பு அடுப்பு பக்கம் சென்றது. நான் என்ன எதிர்பார்த்து வந்திருந்தேனோ... அது அங்கே இருந்தது.
மேகமலை 8வது ஹேர்பின் பெண்டில் காவலர்களும், வன ஊழியர்களும் இணைந்து தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருந்த அந்த மெகா ரூம் ஹீட்டர், எந்தச் சலனமும் இல்லாமல் கணப்பு அடுப்பு அருகே அமைதியாக எனக்காக காத்திருந்தது. சட்டை பாக்கெட்டில் மொபைல் அடித்தது. எடுத்துப் பார்த்தேன். ஹைதராபாத் நேஷனல் போலீஸ் அகடமி ரிசர்ச் லேபில் இருந்து ராஜன் அழைக்கிறான். ‘‘சொல்லு ராஜன்...’’ என்றேன்.
‘‘நாராயணன். விஷயம் கொஞ்சம் முக்கியம். நீ அனுப்பின அந்த ஆப்ஜெக்ட் போட்டோஸை எங்க டீம் பார்த்தோம். சரியான கன்க்ளூஷன் வரமுடியலை. கலிபோர்னியால இருக்கிற SETI இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பியிருந்தோம். அங்க இருந்து இப்பத்தான் மெசேஜ் வந்திச்சு. அந்த ஆப்ஜெக்டை டைட்டா ஜூம் செஞ்சு பார்த்த போது, அதில இருக்கிற மெட்டல் எதுவும் பூமியில உள்ள மெட்டல் மாதிரியே இல்லையாம். எக்ஸ்ட்ராடெரஸ்ட்ரியல் ஆப்ஜக்ட்டா இருக்கலாம்னு சந்தேகப்படறாங்க. கொஞ்சம் சாம்பிள் வேணும்னு கேட்டிருக்காங்க...’’
![]() |
| (Q தினகரன் தீபாவளி மலர் - 2026ல் வெளியான சிறுகதை - Uncut Version) |
‘‘ராஜன், நான் கொஞ்ச நேரம் கழிச்சு பேசறேன்...’’ போனை கட் செய்து விட்டு, மெதுவாக அந்த ஹீட்டரின் அருகே சென்றேன். நிதானமாக அதைப் பார்த்தேன். அதைத் தொடுவதற்காக கைகளை கொண்டு சென்றபோது, ‘‘வெல்கம் மிஸ்டர் நாராயணன்...’’ எனக்கு பின்னால் இருந்து அந்தக் குரல் கேட்டது. திரும்பினேன். இரு தினங்களுக்கு முன் பங்களா கண்ணாடி ஜன்னலுக்குள் இருந்து என்னைப் பார்த்த அதே ஆங்கிலேயே மனிதர். வயது எப்படியும் 80 இருக்கும். மிக மெலிந்த உடம்பு. பழுப்பு நிற காட்டன் பேண்ட் அணிந்து, ஏறக்குறைய அதே நிறத்தில் ஒரு முழுக்கை சட்டையை இன் செய்திருந்தார்.
‘‘வெல்கம் மிஸ்டர் நாராயணன். நீங்க வருவீங்கன்னு எனக்குத் தெரியும். உங்களுக்காகத்தான் காத்திருக்கேன்...’’ - தெளிவான தமிழில் பேசினார்.
இந்த மாதிரியான தருணங்களில் முகத்தில் எந்தச் சலனமும் காட்டிக் கொள்ளக்கூடாது. மனதில் இருக்கும் குழப்ப உணர்வு முகத்தில் பிரதிபலித்து விடவே கூடாது. அது முக்கியம். ‘‘நீங்க யார்? எனக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன?’’
‘‘முதல்ல உட்காருங்க நாராயணன். நாம உட்கார்ந்து பேசலாம். நிறையவே பேசலாம்...’’
அங்கிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தேன். எனக்கெதிரே அவர் கால் மீது கால் போட்டு சாய்வாக அமர்ந்து கொண்டார்.
‘‘போலீஸ் கஸ்டடில இருந்த ஒரு பொருளை, அபகரிச்சது பெரிய தப்புனு உங்களுக்குத் தெரியுமா? இந்தியச் சட்டத்தின் படி இதுக்கு நீங்க கொடுக்கப் போற விலை அதிகம் மிஸ்டர்....’’
எனது பேச்சை துளியும் கண்டுகொள்ளாமல் அவர் சிரித்தார். ‘‘இந்தியச் சட்டம் என்ன... உலகச் சட்டம் கூட என்னை எதுவும் பண்ணாது நாராயணன். முதல்ல நான் யாருனு அறிமுகப்படுத்தணும். அப்போதான் உங்களுக்கும் ஒரு தெளிவு கிடைக்கும்...’’
‘‘அறிமுகமே வேண்டாம். என்னைப் பொறுத்த வரை நீங்க ஒரு குற்றவாளி...’’‘‘குற்றவாளி இல்லை நாராயணன். உளவாளி!’’
நான் அவரை நிமிர்ந்து பார்த்தேன்.
‘‘உண்மைதான். நீங்க முதல் நாள் பங்களாவில இருந்து ரூம் ஹீட்டரை எடுக்கும் போது ஒரு எலி உங்க மேல தாவிக் குதிச்சது ஞாபகம் இருக்கா?’’
‘‘அதுக்கு என்ன?’’
‘‘அந்த எலி நான் தான்!’’
நான் அவரைக் கூர்மையாகப் பார்த்தேன்.
‘‘அந்த எலி நான் தான். உங்க முன்னாடி உட்கார்ந்திருக்கிற இந்த மனித உருவமும் நான் தான். ஆனால், நிஜத்தில் இது ரெண்டுமே நான் இல்லை. ரொம்பக் குழப்பமா இருக்கில்லை...?’’ சிரித்த படியே சட்டென நாற்காலியில் இருந்து எழுந்து கொண்டார்.
‘‘நாராயணன் சார், அந்த ஹீட்டரை நீங்க எடுத்திருக்கக்கூடாது. அதுதான் எங்க உயிர். அது இல்லைனா நாங்க இல்லை...’’‘‘அந்த ஹீட்டர் தான் உங்களை மாட்டி விட்ட பொறி. அது வழியாகத்தான் உங்களை இப்ப நான் கண்டுபிடிச்சிருக்கேன். சரி. சொல்லுங்க... யார் நீங்க?
‘‘என்னைய நீங்க கண்டுபிடிச்சிருக்கலாம். ஆனா, எதுவும் பண்ணமுடியாது. மனிதச் சட்டங்கள் எங்களுக்கு பொருந்தாது. காரணம், வீ ஆர் ஃப்ரம் ப்ளானெட் க்யூ...’’
‘‘நான் சந்தேகப்பட்டேன். அதென்ன ப்ளானெட் க்யூ?’’
‘‘உங்க சூரியக் குடும்பம் இல்லை... இது மில்க்கி வே-யில் உள்ள ப்ளானெட். அங்க இருந்து நாங்க ஒரு டீம் பூமிக்கு வந்திருக்கோம். ஒரு உயிரினத்தோட டிஎன்ஏவை புடிச்சிட்டம்னா போதும்... அந்த உயிரினத்தோட வடிவத்தை, உருவத்தை எங்களால எடுக்க முடியும். அப்படித்தான் மேகமலையில் இந்த பங்களாவுக்கு வந்தோம். யாரும் அதிகம் கவனிக்காத இடம் இது. இங்க இருந்த பிரிட்டீஷ் குடும்பத்தோட டிஎன்ஏ மூலமாக அவங்க உருவத்துக்கு மாறினோம். ஆறு மனித உருவம். ஆடு, மாடு, நாய், எலி உருவம். இங்க இருந்து ஒரு மாதமாக ஆராய்ச்சி பண்ணுனோம். எங்க வேலை முடிஞ்சது. நாங்க ப்ளானெட் க்யூ-வுக்கு திரும்புற டைம் ஆச்சு. ப்ளானெட் க்யூ-வுக்கும், எங்களுக்குமான கம்யூனிகேஷன் தொடர்புகள் முழுக்க நீங்க எடுத்த அந்த ஹீட்டர் மூலமாகத்தான் நடந்துச்சு. உண்மையில் அது ஹீட்டர் இல்லை. அது கம்யூனிகேஷன் நேவிகேட்டர் மெஷின். அது மூலமாகத்தான் எங்க ப்ளானெட் கூட நாங்க தொடர்பு கொள்ளமுடியும். அது இல்லைனா, எங்க தொடர்பு அறுந்து, நாங்க இந்த பூமியிலயே கெடந்து சாக வேண்டியதுதான். இப்பச் சொல்லுங்க.... அந்த மெஷினை நான் திரும்ப எடுத்தது தப்பா? இந்த பூமிக்கு நாங்க சாகவா வந்தோம்?’’முகத்தில் புன்னகை மாறாமல் அவர் அல்லது அது எனக்கெதிரே பேசியது. ‘‘எங்க பூமியில உங்களுக்கு என்ன வேலை? எதுக்காக நீங்க இங்க வரணும்?’’ மார்புக்குக் குறுக்காக கைகளை இறுக்கக் கட்டிக் கொண்டு கேட்டேன்.
‘‘கேள்வியே தப்பு நாராயணன். இது உங்க பூமி இல்லை. எங்க பூமி. கடவுள் எங்களுக்கு உருவாக்கித் தந்த நிலம். பல கோடி வருஷம் முன்னாடி விண்கல் மோதி இந்த பூமி பயங்கர டேமேஜ் ஆகிடுச்சி. இங்க உள்ள டைனோசர் இனம் அப்போதுதான் அழிஞ்சது. அதுக்கு அப்புறம் உயிர் வாழ தகுதி இல்லாத இடமா மாறினதால பூமிய விட்டு கிளம்ப எங்க முன்னோர் முடிவு செஞ்சாங்க. இந்த சூரியக்குடும்பத்தை விட்டே கிளம்பிச் செல்ல முடிவு செஞ்சாங்க. அப்போ அவங்க கண்டுபிடிச்ச ப்ளானெட் தான் க்யூ. இத்தனை வருஷம் அங்க வாழ்ந்தாச்சு. எங்க முன்னோர்கள் வாழ்ந்த இடத்துக்கு மீண்டும் திரும்ப முடிவு செஞ்சோம். இங்க நிலைமையை கண்காணித்து, தகவல் சேகரிச்சிகிட்டு வர்றதுக்காக ஒரு உளவு டீம் என்னோட தலைமையில கிளம்பி வந்தோம். எல்லாமே ஓகே. நாங்க க்யூ கிரகத்துக்குப் போய் ரிப்போர்ட் பண்ணவேண்டியதுதான் பாக்கி. நேரடியா கௌம்பி பூமிக்கு வரலாமா... இல்லை, நெக்ரோ பான்ஸ்பெர்மியா (Necro-panspermia) மூலமா எங்க இனத்தை இங்க குடியேற்றலாமானு யோசிச்சுகிட்டு இருந்த நேரத்தில.... நீங்க வந்து குட்டையை கொழப்பீட்டிங்க. ஆக்சுவலி... ஒரு விஷயம் தெரியுமா? நாங்க பூமிக்கு கிளம்பி வர்றப்போ, இங்க இருக்கிற மனித இனத்துக்கு எந்த தொந்தரவும் கொடுக்காம, யாருக்கும் தெரியாம விஷயத்தை முடிச்சிட்டு வரச் சொல்லி எங்க தலைமை அனுப்புனாங்க. அதனால தான், நாங்க ரொம்ப பொறுமையா, யாரையும் தொந்தரவு பண்ணாம இங்க இருந்தோம்....’’
இப்போது நான் நாற்காலியில் இருந்து எழுந்து கொண்டேன். ‘‘ஸாரி ப்ரோ. எனக்கு இன்னும் நாலு நாள்ல ரிட்டையர்மென்ட். என்னோட குடும்பத்தை செட்டில் பண்ணிட்டேன். இனி நான் வாழ்ந்து சாதிக்கிறதுக்கு எதுவும் இல்லை. அதனால....’’
‘‘அதனால...?’’ முகத்தில் எச்சரிக்கை உணர்வுடன் எதிரே இருந்து கேள்வி வந்தது.
‘‘அதனால, எங்க பூமியைக் காப்பாத்துறதுனு முடிவு பண்ணிட்டேன். உன்னோட கம்யூனிகேஷன் நேவிகேட்டர் மெஷினை காலி பண்ணி, பூமியிலேயே உன் கூட்டத்தை ஆசை நிறைவேறாத ஆவியா சுத்த வைக்கப் போறேன்...’’ - நாற்காலியில் இருந்து எழுந்து முழு வேகத்தில் ஹீட்டர் நோக்கிப் பாய்ந்தேன்.
என்னை விட அதிவேகத்தில் அது என் மீது பாய்ந்தது. அதை நான் எதிர்பார்த்திருந்தேன். என்னை நோக்கி வந்த கடைசி வினாடியில் சற்று விலகிக் கொண்டு, பலம் முழுவதும் திரட்டி அதன் ஆங்கில முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டேன். ஒரு நிமிடம் நிலைகுலைந்து சுருண்டு விழுந்தது. விழுந்த வேகத்தில் சுதாரித்து எழுந்தது. இப்போது எனது கவனம் மெஷினை நோக்கி இருக்க... அந்த அரை வினாடியை பயன்படுத்திக் கொண்டு என் மீது பாய்ந்தது.
‘‘மனிதர்களை தொந்தரவு பண்ணக்கூடாதுன்னு சொல்லி அனுப்புன எங்க தலைமையோட உத்தரவையே மீற வெச்சிட்டீங்க. குட்-பை நாராயணன்....’’ சொல்லிய படியே, இயந்திரம் போல வலுவாக இருந்த கைகளால் எனது கழுத்தை இறுகப்பற்றியது. அந்த இரும்புப் பிடி அழுத்தத்தில் எனது உடல் உதறியது. அழுத்தம் தாங்காமல் என் தொண்டை வறண்டு, விழி பிதுங்கி தத்தளித்துக் கொண்டிருக்க... உயிர் போய்விடும் என நினைத்த அந்த கடைசி வினாடியில் ‘டொம்’ என்ற சத்தமும், அதைத் தொடர்ந்து எனது மேலே அமர்ந்திருந்த அந்த ஆங்கில உருவம் துள்ளி கீழே சாய்ந்து விழுவதையும் இருட்டிப் போன கண்களால் பார்த்தேன். அதற்குப் பின்னால்... கையில் இரும்பு ராடுடன் ஜீவ ஒளி நிற்பதையும் பார்த்தேன்.
‘அப்பாலே போ சாத்தானே...’ மற்றொரு கையில் பைபிளுடன், அந்த இரும்பு ராடால் மீண்டும் தலையில் ஓங்கி அடிக்க, அது நிலைதடுமாறி கீழே சாய்ந்தது, தலை உடைந்து பச்சை நிறத்தில் திரவம் வெளியே வர... ‘‘அய்யா எந்திரீங்க...’’ கைபிடித்து என்னை தூக்கிய ஜீவ ஒளி, ‘‘நீங்க தனியா போறதைப் பாத்தேன். இங்கதான் போவீங்கன்னு எனக்குத் தெரியும். இது துஷ்டசக்தி உலவுற இடம்யா. மனசு கேக்கலை. அதான், கர்த்தரை துணைக்கு அழைச்சிட்டு கௌம்பி வந்திட்டேன். பெட்ரோல் கொண்டு வந்திருக்கேன். இந்த துஷ்ட ஆவி மேல ஊத்தி எரிச்சிடலாம்...’’ பெட்ரோல் நிரப்பப்பட்ட மினரல் வாட்டர் பாட்டில் மூடியை ஜீவ ஒளி கழட்ட... பாய்ந்து அதை பிடுங்கினேன். ‘‘ஜீவ ஒளி பெட்ரோல் ஊத்தி எரிக்க வேண்டியது இதை இல்லை... இந்த மெஷினை...’’ பிடுங்கிய பாட்டிலில் இருந்த பெட்ரோலை அவசர, அவசரமாக அந்த ஹீட்டர் மீது ஊற்றினேன்.முகம் உடைந்து, பச்சை ரத்தம் வடிய, கண்கள் துருத்திக் கொண்டிருந்த நிலையிலும், நான் செய்யப்போவதைக் கவனித்த ‘அது’ பாய்ந்து எழுந்தது. இம்முறை அதற்கு நான் வாய்ப்பே கொடுக்கப் போவதில்லை. பாக்கெட்டில் இருந்து பிஸ்டல் எடுத்தேன். குறி பார்ப்பதற்கு எல்லாம் நேரமில்லை. குருட்டடியாக டிரிக்கரை அடுத்தடுத்து அழுத்த... குண்டுகள் சீறிப் பாய்ந்து ஹீட்டரில் மோதி... டொம் என்று மிக பலத்த சத்தத்துடன் வெடித்தது. ஆக்ரோஷத்துடன் பாய்ந்து வந்த அந்த வேற்றுக்கிரக மிருகத்தை காலால் ஓங்கி உதைத்தேன். எனக்குப் பின்னால் ஹீட்டர் மெஷின் , பச்சை நிறப் புகை கக்கியபடியே மளமளவென எரிந்தது.
ஆங்கார சத்தத்துடன் மீண்டும் எழுந்த பச்சை ரத்த மிருகத்தை எனது பிஸ்டலில் குறிபார்த்தேன். ‘‘நீயும் என்னைய மாதிரி ஒரு உயிரினம் தான். இறப்பே இல்லாத சூப்பர் பவர் கிடையாது. ரெண்டு குண்டு போதும்... உன்னோட உயிரை எடுக்க. ஆனா, அதுல எனக்கு விருப்பம் இல்லை. எங்க பூமி சட்டத்தின் கீழ் உனக்கு தண்டனை கொடுக்க எனக்கு இஷ்டமில்லை. உனக்கான பெரிய தண்டனை, இதோ... - எரிந்து கொண்டிருந்த ஹீட்டரைக் காட்டிய படியே - இதுதான்! இனி காலம் முழுக்க நீ இங்கதான் சுத்திகிட்டு இருக்கணும். க்யூ கிரகத்துக்கும், உனக்கும் இனி எந்தத் தொடர்பும் இருக்கப் போறதில்லை. மேகமலை வார்டு துரை பங்களா நாளை முதல் பழைய படி மாறிடும். அதே ஆங்கிலக் குடும்பம், நாய், மாடுன்னு பழைய இயல்புக்கு திரும்பிடும். இந்த கேஸூம் ஓவர். இருக்கிற வாழ்நாளை இந்த பூமியில மனித உருவத்திலயே வாழ்ந்து முடிச்சிட்டுப் போயிடுங்க. க்யூ கிரகம் பூமிக்கு அனுப்பி வெச்ச பரிசோதனை எலிகள் நீங்க. பரிசோதனை தோல்வின்னு நெனைச்சி ப்ராஜெக்ட்டை உங்க தலைமை க்ளோஸ் பண்ணீடும். உயிர் பிச்சை போடுறேன் க்யூ கிரகவாசியே.... ஓடிப் போ!’’
நடப்பதை பிரமித்த படி, எதுவும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த ஜீவ ஒளியின் கையைப் பிடித்து அழைத்த படியே வார்டு துரை பங்களாவை விட்டு வேக, வேகமாக வெளியேற ஆரம்பித்தேன்.
Q சிறுகதையின் முதல் பாகம் Q - 1
- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -


.gif)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.gif)
.jpg)

.gif)
.jpg)
.gif)
.gif)
.gif)
.gif)
.jpg)
திருமங்கலம் எஸ். கிருஷ்ணகுமார் அவர்களின் Q சிறுகதை, வழக்கமான மர்மக் கதைகளிலிருந்து விலகி, அறிவியல் புனைகதைத் தளத்தில் புதிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறது.
பதிலளிநீக்குஒரு பழைய ரூம் ஹீட்டரைச் சுற்றி இத்தனை பெரிய கற்பனை உலகத்தை உருவாக்கியிருப்பது ஆசிரியரின் கதை சொல்லும் திறனுக்குச் சான்று.
குறிப்பாக, முதல் பகுதியில் வாசகரிடம் கேள்விகளை உருவாக்கி, இரண்டாம் பகுதியில் அவற்றுக்கான விடைகளைத் தர முயன்றிருக்கும் உத்தி பாராட்டுக்குரியது.
கதையின் கற்பனைக்கு இணையாக அதன் அறிவியல் தர்க்கமும் வளர்ந்திருந்தால், Q இன்னும் உயர்ந்த இலக்கியத் தளத்தை எட்டியிருக்கும்.
எனவே, இது குறைகளற்ற சிறுகதை அல்ல; ஆனால் வாசகரைத் தொடர்ந்து படிக்க வைக்கும் கற்பனை வளமும், மர்மத்தை உருவாக்கும் திறனும் கொண்ட குறிப்பிடத்தக்க முயற்சி.
இந்தக் கதையில் எனக்கு மிகவும் பிடித்தது வேற்றுக்கிரகவாசி என்ற கற்பனை அல்ல. ஒரு சாதாரண ரூம் ஹீட்டரை கதையின் மைய மர்மமாக மாற்றியிருக்கும் உத்திதான்.
ஒரு நல்ல துப்பறியும் எழுத்தாளருக்கு இருக்க வேண்டிய முக்கியமான திறமை, வாசகனின் கண்முன்னால் ஒரு பொருளைக் காட்டிவிட்டு, அதன் உண்மையான முக்கியத்துவத்தை மறைத்து வைப்பதுதான்.
அந்த உத்தியை ஆசிரியர் நன்றாகக் கையாண்டிருக்கிறார்.
இந்தக் கதையின் மிகப்பெரிய வெற்றி – வாசகனைத் தொடர்ந்து படிக்க வைத்திருப்பது. அதன் குறை – இறுதியில் உருவாக்கிய அறிவியல் உலகத்திற்கான தர்க்கத்தை முழுமையாக நிறுவாதது.