ஞாயிறு, 24 ஜனவரி, 2016

சிக்கன் பிடிக்குமா; மேடம் பிடிக்குமா?

‘‘கையைக் குடுங்க சார். இந்த விஷயம் இத்தன நாளா தெரியாமப் போயிடுச்சே. கணக்குல, பிதாகரஸூக்கே தாத்தா, நம்ம தமிழ் புலவர்னு தெரிஞ்சதும் மேலெல்லாம் சும்மா புல்லரிக்குது சார். போதையனார் அய்யா பேர்ல ஒரு நற்பணி மன்றம் ஆரம்பிக்கலாம்னு இருக்கோம். ஐடியா சரிதான?’’ - பிதாகரஸ் தேற்றம், போதையனார் கணித கட்டுமானங்கள் குறித்த கடந்தவாரக் கட்டுரையின் எதிர்வினை கடிதம் இது. தமிழோட பெருமை, இவ்ளோ நாள் தெரியலையே என சோழவந்தான் பக்கத்து வாலிபர்கள் சிலர் வருத்தப்பட்டு சங்கம் அமைக்க முடிவெடுத்திருக்கிறார்கள். மன்றம் அமைக்கும் பணிகளை ஒத்தி வைத்து விட்டு, இதுபோன்ற தகவல்களை துண்டுப் பிரசுரங்கள் வாயிலாகவோ, இலக்கியக் கூட்டங்கள் மூலமாகவே மக்களிடம் பரப்புகிற வேலையை முதலில் செய்யலாம் என்பது, வருத்தப்படும் வாலிபர்களுக்கு எனது ஆலோசனை. சரியா?


மறி - வெறி!

ருப்பது ஐந்தறிவுதான் என்றாலும், ஐந்தையும் முழுமையாகப் பயன்படுத்துகிற விலங்கு வகையறாக்களுக்கு, நமது தமிழில் எத்தனை, எத்தனை பெயர்கள் இருக்கின்றன என பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த வாரம் ஆடு. மட்டன் கடை போர்டுகளில் புன்னகை முகத்துடன் வரைந்து வைத்திருப்பார்களே... அந்த விலங்கு. துள்ளல், பள்ளை, வௌ்ளை, வருடை, புருவை, தகர், கடா, மை, மறி, வெறி, கொறி, சாகம், ஏழகம், துருவை, கொச்சை, உடு, உதள், அசம், மோத்தை, அருணம்... இதெல்லாம் நிறம், குணம், திடம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்டுக்கு தமிழ் சூட்டியிருக்கிற பெயர்கள். பட்டியல் முடிந்து விடவில்லை. மேடம்... மேடம்... என்று பொது இடங்களில் பெண்களை அன்போடு அழைக்கிறீர்களே... அந்த மேடம் என்ற சொல்லுக்கு, தூய தமிழில், ஆடு என்றுதான் அர்த்தம். தெரிஞ்சுக்கோங்க சகோஸ்.

செம்மறி ஆடுகளை மை, கொறி, துருவை என்றும், செம்மறி ஆட்டில் ஆண் சிங்கங்களை தகர், கடா, கம்பளம், ஏழகம், திண்ணகம் என்றும் கூப்பிடலாம். ஏப்ரல் மாதத்துக்கு அடுத்து என்ன என்று கேட்டால், ‘மே...’ என்று சரியாகச் சொல்லுமே, அந்த குட்டி ஆடுகளை மறி, பறழ், குட்டன், சோரன் என்று கூப்பிடலாம். திரும்பிப் பார்க்கும். செச்சை, மோத்தை, சாகம் ஆகியவை வெள்ளாடுகளில், ஆண் வம்சத்தை குறிக்கிற பெயர்கள்.

மிழ்நாட்டின் மாநில விலங்கு எது என்று யாராவது கேட்டால், ‘வரையாடு (Nilgiri tahr)’ என்று சொல்லி மார்க் வாங்குவீர்களே... அந்த வரையாட்டுக்கும் சரபம், வருடை போன்ற பெயர்கள் தமிழில் இருக்கின்றன. வரையாடுகள் பற்றி சீவக சிந்தாமணி (ஓங்குமால் வரையாடு வரையாடுழக் கவினுடைந்துகு பெருந்தேன்..), நற்றிணை, பட்டினப்பாலை, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல் உள்ளிட்ட நமது பல இலக்கியங்களில் விவரிப்புகள் இருக்கின்றன. போதும். ஆட்டுக்கு ‘பை’ சொல்லி விட்டு அடுத்த மேட்டருக்குத் ‘தாவலாம்’.

தேர்வுக்கு தயாரா?

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிற மாணவரா நீங்க? ‘‘இந்திய மொழிகளில் முதன் முதலில் அச்சுப் புத்தகம் எந்த மொழியில் வெளியானது?’’ - இப்படி கேள்வி வந்தால், என்ன பதில் எழுதுவீங்க? அதிகம் யோசிக்கவேண்டாம் ஜென்டில்மேன்... நீங்கள் பேசிக் கொண்டிருக்கிற நம்மொழிதான், இந்திய மொழிகளில் முதல் அச்சுப் புத்தகம் கண்ட மொழி என்ற பெருமை கொண்டது. எப்படி?

மிழுக்காக சேவையாற்றிய வெள்ளக்காரத் துரைகள் பற்றி தொடர்ந்து படிக்கிறோம் இல்லையா? இந்த வாரம் ஹென்ரிக் ஹென்ரிக்ஸ் (1520  – 1600). சார் போர்ச்சுக்கல் நாட்டு மத போதகர். சமயப்பணிகளுக்காக நம்மூருக்கு வந்தார். தமிழின் ஆளுமையில் சிக்கிக் கொண்ட இவரும் நிறைய தமிழ்ப்பணி ஆற்றியிருக்கிறார். முக்கியமானது ‘தம்பிரான் வணக்கம்’. இந்திய மொழிகளில் வெளியான முதல் அச்சுப்புத்தகம் என்ற பெருமை இதற்கு உண்டு. செயின்ட் சேவியர் என்கிற பாதிரியார் போர்த்துக்கீசிய மொழியில் எழுதிய நூலை, ‘தம்பிரான் வணக்கம்’ என்கிற பெயரில் ஃபாதர் ஹென்ரிக்ஸ் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.

தமிழ் வணக்கம்

பெயர்த்ததோடு நிறுத்திக் கொள்ளவில்லை. தமிழில் நூல்கள் அச்சிடுவதற்காக ஒரு அச்சுக்கூடத்தையும் உருவாக்கினார். அந்த அச்சுக்கூடம் மூலம் ‘தம்பிரான் வணக்கம்’ நூலை வெளியிட்டு தமிழுக்கு பெருமை சேர்த்தார். ‘‘India's First Printed book called Thambiran vanakkam, book was printed in pure tamil script at kerala kollam october 20 - 1578. Fr.Henrique set up the first indian press and printed books in Tamil script. That book contains the methods of prayers at CHRISTIANITY...’’ என்று இன்றைக்கும் சரித்திரம் சொல்கிறது.

ம்பிரான் வணக்கம் தவிர, கிரி சித்தியாணி வணக்கம் உள்ளிட்ட தமிழ் நூல்கள் வெளியிட்டிருக்கிறார். தூத்துக்குடி அருகே புன்னைக்காயலில் 1578ல் ஒரு பள்ளிக்கூடம் துவக்கி, அந்தக் காலத்திலேயே, (நன்றாகக் கவனிக்க... அந்தக் காலத்திலேயே) பெண் கல்விக்கான விதையை விதைத்திருக்கிறார். பாதிரியார் ஹென்ரிக்ஸ் பணிகளைப் போற்றி, அவருக்கு ஒரு தமிழ் வணக்கம் சொல்லலாமா?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...