திங்கள், 3 ஆகஸ்ட், 2015

தமிழ்... படிக்கலாம்; தடைகள் உடைக்கலாம்!

லகின் மிக மூத்த மொழியாம் தமிழை இன்றைக்கும் உயிர்ப்போடு, துடிப்போடு இயங்கச் செய்து கொண்டிருப்பது, பூமிக் கிரகமெங்கும் பரவிக் கிடக்கும் கோடிக்கணக்கான அதன் இளம் புதல்வர்கள் என்பதில் மாற்றுக்கருத்திருக்காது. உயிரோடு இருத்தல் மட்டுமே பெருமை அல்ல. இயக்கம்! உலகின் தொல் மொழியாக இருந்தும், இன்றைக்கும் இளமைத்துடிப்புடன் கணினி யுகத்திலும் கச்சிதமாக, பெரு ஆற்றலுடன் இயங்கிக் கொண்டிருப்பதே பெருமை. அர்ப்பணிப்புடன் கூடிய தங்களது மாபெரும் உழைப்பால், சேவையால், தமிழ் மொழிக்கு ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் காலத்தால் அழியாத பெருமையும் தேடித் தந்திருக்கும் / தந்து கொண்டிருக்கும் உன்னதப் புதல்வர்கள் அனேகரை நம்மொழி கொண்டிருக்கிறது. அத்தகைய உன்னதப் புதல்வர்களில் முக்கியமானவர்... மறைந்த, மக்கள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்கள். அவரது மறைவு தமிழுக்கும், தமிழர்களுக்கும் ஈடு செய்ய இயலாத இழப்பு. இந்த வார ‘நம்மொழி செம்மொழி’ தொடர், அவருக்கு சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது.


ல்விசாலைகள் எல்லாம் ஆங்கில வண்ணம் பூசிக் கொள்கிற நாட்கள் இவை. ‘ஆண்டவன்’ மொழியில் கற்றால் மட்டுமே எதிர்காலம் என்கிற எண்ணம் விதைபட... கிராமத்து வீதிகளில் உள்ள அரசு பள்ளிகள் கூட, தமிழை உதறி விட்டு, ஆங்கிலத்துக்கு கதவு திறக்கிறது. தாய்மொழியில் கற்றால், அறிவு விருத்தி பெறாது என்கிற அவல சித்தாந்தம் ஆழ விதைக்கப்பட்டு, ஆலவிருட்சமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த மாய / இழி சிந்தாந்தத்தை உடைத்த மாபெரும் ஆற்றல், கலாம்.

குறள்... அவர் குரலில்!
வர் சொல்கிறார்... ‘‘நான் ஆரம்பக்கல்வியை தமிழ் வழியிலேயே கற்றேன். பிற்காலத்தில் அறிவியல் துறையில் சாதித்திட, எனக்கு இது மிகவும் ஊக்கமாக இருந்தது. மொழி என்பது இனத்தின் அடையாளம் மட்டுமல்ல, அது ஒரு சேமிப்புக்கிடங்கு, தகவல் சுரங்கம். ஆரம்ப காலத்தில் அறிவியல் பாடத்தை தமிழில் பயின்றது எனது உயர்வுக்கு முக்கிய காரணம். காலம், தலைமுறையைக் கடந்தும் நிற்பது தாய்மொழி. உறக்கத்தில் வருவதல்ல கனவு, உறங்க விடாமல் செய்வதே கனவு. இந்த மாநாட்டில், தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும், தமிழின் சிறப்பை நிலை நிறுத்தவும், பல்வேறு பரிமாணங்களுக்கு கொண்டு செல்லவும், முக்கிய முடிவுகள் எடுக்கப்படவேண்டும்....’’ - கோவை அருகே பேரூரில் நடந்த தமிழ் பயிற்றுமொழி மாநாட்டில் கலாம் உரையின் பகுதி இது.

இளைஞர்களின் அஞ்சலி
டிப்படைக் கல்வி மட்டுமல்ல... மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்விகளும் கூட தமிழில் வேண்டுமென்கிறார் அவர்.
‘‘முதலில் தமிழ் மொழியில் உயர் கல்வியை கற்பிக்கச் செய்து, அதன்பிறகு, ஆராய்ச்சியையும் நமது மொழியிலேயே மேற்கொள்ள வேண்டும். தமிழ் மொழியின் வாயிலாக செய்யப்பட்ட ஆராய்ச்சிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து உலக அளவில் அவற்றை கொண்டு செல்ல வேண்டும். அதை புத்தகங்களாகவும், ஆராய்ச்சி நூல்களாகவும் வெளியிடுவது அவசியம். மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் சூழல் ஏற்படுவதுடன், தாய்மொழியிலேயே படிப்பதால் தமிழும் வளரும். ஆட்சி அதிகாரத்திலும், சட்டம், நீதியிலும் தமிழ் மொழியையே முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அதேசமயம், தொடர்பு மொழியாக ஆங்கிலத்தை கற்றுக் கொண்டு அதை, துணை ஆட்சி மொழியாக பயன்படுத்த வேண்டும். தமிழ், ஆங்கிலம் மட்டுமல்லாது, மற்ற இந்திய மொழிகளையும் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு, வசதிகளை ஏற்படுத்த வேண்டும்...’’ - இருதயத்தின் ஆழத்தில் இருந்து பேசியிருக்கிறார் பாருங்கள்!

மிழ் மொழியை, அதன் பெருமையை உலகின் பல திசைகளுக்கும் கொண்டு சென்று சேர்த்த வெளிநாட்டு அறிஞர்களை இந்தத் தொடரின் ஒவ்வொரு வாரமும் பார்த்து வருகிறோம். தமிழின் பெருமையை, வாய்ப்பு கிடைக்கிற ஒவ்வொரு வினாடியிலும் உலகின் திசைகளில் பதிவு செய்து பத்திரப் படுத்தியவர் கலாம். உலகின் எந்த மேடையில் அவர் ஏறினாலும், திருக்குறளை உச்சரிக்காமல், உபதேசிக்காமல் இறங்கியதில்லை. ஐரோப்பிய கூட்டமைப்பு (European Union) உருவான ஐம்பவதாவது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியின் போது, குழுமியிருந்த சர்வதேசத் தலைவர்களுக்கு மத்தியில் அவரது பேச்சு... இன்றளவுக்கும் உலகின் தலைசிறந்த உரைகளுள் ஒன்றாக மதிக்கப்படுகிறது. உலகம் வியந்து கொண்டாடிய அந்த ஒப்பற்ற உரையிலும் கூட, மதிப்பிற்குரிய கலாம், நமது தமிழ் மொழியின் அறிவுசார் பெருமையை பதிவு செய்ய மறக்கவில்லை.

ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில் அவரது உரை
‘‘உலகம் முழுவதும் உள்ள அனைவரும் எனது சொந்தங்கள் என்று உங்கள் முன்னால் பேசும் போது மகிழ்ச்சி அடைகிறீர்கள். தமிழில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எங்களது தமிழ் கவிஞன் கணியன் பூங்குன்றன் என்பவன் யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று, அதாவது உலகில் உள்ள அனைவரும் எங்கள் சொந்த பந்தம் என்று சொல்லி சென்றுள்ளான். அத்தனை பெருமை மிக்க தேசத்தில் இருந்து வருகிறேன்...’’ - 2007, ஏப்ரல் 25ம் தேதி, பிரான்ஸ் நாட்டின் ஸட்ராஸ்பர்க் நகரின் மாபெரும் அரங்கில் ஒலித்த அவரது இந்தப் பேச்சு உலகத் தலைவர்களை பிரமிக்க வைக்கிறது. கைதட்டல் ஒலிகளால் எழுந்த ஆரவாரம் அடங்க மிக நீண்டநேரம் ஆகிறது. ‘இப்படி ஒரு பண்பட்ட பேச்சை நாங்கள் கேட்டதே இல்லை’ என மெய்சிலிர்க்கிறார் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பின் தலைவர் ஹன்ஸ்ஜெர் பாட்டரிங் (Hans-Gert Pottering). கலாமை கட்டியணைத்து பாராட்டுகிறார் (வீடியோ உரை இணைக்கப்பட்டுள்ளது).

சாகாவரம் பெற்ற பொன்மொழிகள்
பாருங்கள்... எத்தனை உயரத்துக்குச் சென்றாலும் தமிழை அவர் மறக்கவில்லை. ஆங்கிலத்தில் பேசுவதை கவுரவமாக கருதித் திரிகிற மக்கள் வாழுகிற காலத்தில், ஐரோப்பிய யூனியன் தலைவர்களுக்கு மத்தியில் தமிழ் சங்க இலக்கிய பாடலை குரலுயர்த்தி, கம்பீரமாக பதிவு செய்கிறார் என்றால், இந்த மொழியை அவர் எவ்வளவு உயிராக நேசித்திருக்கவேண்டும்? ஜனாதிபதியாக, குடியரசுத்தலைவர் மாளிகையில் அவர் வசித்த காலத்தில், திருக்குறள் ஒளிரும் மிகப்பெரிய டிஜிட்டல் போர்டை வரவேற்பறையில் மாட்டி வைத்திருந்தார். இதன்மூலம், பல்வேறு மாநிலங்கள், தேசங்களில் இருந்து வந்தவர்களுக்கு நமது குறளின் பெருமையை, மொழியின் தொன்மையைக் கடத்தினார்.

நன்றி: புதிய தலைமுறை
மிழை உயிராக நேசித்த கலாமை மிகச்சிறந்த முன்மாதிரியாக நாம் கொள்ளவேண்டாமா? ‘‘அழிந்து வரும் மொழிகளின் பட்டியலில் தமிழும் இருப்பது வேதனைக்குரியது. தமிழை மீட்டெடுத்து வளர்க்க நமது இளைஞர்கள், மாணவர்கள் முன்வர வேண்டும்...’’ - இது கலாமின் விருப்பம். அவரது விருப்பத்தை நிறைவேற்றுவதன் மூலம், தமிழின் புகழை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த அந்த அணையா தீபத்துக்கு நிஜ அஞ்சலி செலுத்தமுடியும். ராமேஸ்வரத்தில் அவர் இருக்கிற திசை நோக்கி, கரம் உயர்த்தி நாம் சபதமேற்போமா?


பின்குறிப்பு: 
தமிழை மிகவும் நேசித்தவர். உலக அரங்கிற்கு அதன் பெருமையைக் கொண்டு சென்றவர்... அப்துல் கலாம். ஒட்டுமொத்த இந்தியாவும்... ஏன், உலகமே அவர் மறைவுக்கு கண்ணீர் சிந்துகிறது. ஒரு தமிழனின் மறைவுக்காக இந்தியா இனியொரு முறை இப்படி இதயம் நொறுங்கி கண்ணீர் வடிப்பதற்கான சாத்தியங்கள் குறைவே. என்பதால், ‘நம்மொழி செம்மொழி’ தொடர், இந்த வாரத்தை அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அர்ப்பணிக்கிறது. ‘தினகரன்’ நாளிதழில் 56வது வாரம், கலாம் சிறப்பு பக்கமாக ஆகஸ்ட் 2ம் தேதி வெளியானது. அந்தக் கட்டுரை பூனைக்குட்டி வாசகர்களுக்காக...!
- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

2 கருத்துகள்:

  1. சார்லஸ் இருதயராஜ், திண்டுக்கல்4 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 9:30

    மிகச் சிறந்த மனிதருக்கு மிகச்சிறந்த புகழஞ்சலி கட்டுரை. தமிழ் வளர்க்க அவர் வழியில் பாடுபடுவோம்.

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...