வெள்ளி, 12 ஜூன், 2015

யோகா... நல்லது?


பாரதிய ஜனதா பார்ட்டி காரர்களுக்கு ஆதரவாக ‘பூனைக்குட்டி’யில் ஒரு கட்டுரை எழுதவேண்டியிருக்கும் என எதிர்பார்க்கவே இல்லை - அதுவும், இவ்வளவு சீக்கிரம். நல்லவேளை, அவர்களது கொள்கை, கோட்பாட்டுச் சித்தாந்தங்களுக்கு அன்னப்போஸ்டாக இங்கு ஆதரவு தெரிவித்து நான் எழுதப்போவதில்லை.
இது, ஆஹா மேட்டர். அதாவது யோகா மேட்டர்!


ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கிறது. இந்த யோகா தினத்தைக் கொண்டாட, மேற்படி தினத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவியருக்கு யோகா, சூரிய நமஸ்கார சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 35 நிமிடம், நாடு முழுக்க ஒரே நேரத்தில் நடத்தி, கின்னஸ் சாதனை படைக்கவும் திட்டம். பள்ளி மாணவ, மாணவியரை கட்டாயப்படுத்தி சூரிய நமஸ்காரம் மற்றும் யோகாசனம் செய்ய வலியுறுத்தும் பா.ஜ. அரசின் உத்தரவு பெரும் சர்ச்சைகளை விதைத்திருக்கிறது.

ன்ன காரணம்? ஆகச் சிறந்த மூச்சுப் பயிற்சியாக மனம், உடல் இரண்டுக்கும் புத்துணர்ச்சி, ஆரோக்கியம் தருகிற கலையாக இருக்கிற யோகா, சமீபகாலமாக மதப்பெருமை பரப்பும் ஆயுதமாக மாற்றப்படுவது முக்கியக் காரணம். யோகா கலையை உயர்த்திப் பிடிப்பதன் மூலம், இங்கு இந்து மதத்தின் தொன்மை, பாரம்பரியம் மற்றும் அறிவியல் (!?!?) உள்ளடக்கங்கள் வெளிப்படையாக விளம்பரப்படுத்தப்படுகின்றன. மூச்சை இழுத்து உள் கொண்டு செல்வதும், உள்ளே சிறிதுநேரம் தேக்கி வைத்திருந்து, பிறகு சீரான வேகத்தில் வெளியே விடுவதுமான (ப்ரீத் இன் - ப்ரீத் அவுட்) கலையை, பல இடங்களில் இப்போது ஓ..ம், ஓ...ம், ஓ....ம் என்று பக்திப் பெயிண்ட் அடித்து விநியோகம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தம் சார்ந்த நம்பிக்கைகளைக் கடந்து, உண்மையாகவே யோகா நல்லது என மதங்களைக் கடந்த அறிஞர்கள், அறிவியல் நிபுணர்கள், மருத்துவத்துறை வல்லுனர்கள் நிரூபிக்கிறார்கள். ‘என் மதத்தின் பெருமையைப் பார்த்தியா...’ என்று ஒரு தரப்பினர் விளம்பரப்படுத்துகிற போது, யோகா கலை, அதன் பெருமையில் கரைபடுகிறது. உண்மையில், யோகா இந்து மதத்துக்கு மட்டுமே சொந்தமானதா?

ப்படி ஒன்றும் அறுதியிட்டு சொல்லி விடமுடியாது. பவுத்த, சமண மதங்களிலும் யோகாவுக்கு முக்கிய இடம் உண்டு. யோக நிலையில் அமர்ந்திருக்கும் புத்தர் சிலைகளையும், பல்வேறு ஆசன நிலைகளில் அமர்ந்து காட்சி தருகிற சமண துறவிகளின் சிற்பங்களையும் இன்றும் பல்வேறு இடங்களில் நாம் பார்க்க முடியும். காலத்தால் மிகவும் பழமையான பவுத்த, சமண நூல்களில், இலக்கியங்களில் யோகா பற்றிய விவரிப்புகள் மிக அதிகமாகவே இருக்கின்றன. (ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பூஜ்ய பாதா, இஷ்டோபதேஷ், 8ம் நூற்றாண்டின் ஆச்சார்ய ஹரிபத்ரசூரி, யோகபிந்து, யோகசடகா, யோகசாரா போன்ற சமண நூல்கள் யோகா கலை பற்றி தத்துவார்த்த ரீதியில் விளக்குகின்றன). ஆக, இந்து மத பிராண்ட் பூசி யோகாவை விளம்பரப்படுத்துவது தார்மீக ரீதியில் தப்பு.

தையும் வணிகமாக்குகிற வர்த்தக உலகம் இது. யோகாவை விட்டு விடுவார்களா என்ன? நிறைய, நிறைய கார்ப்பரேட் சாமியார்கள் அவதரித்தார்கள். யோகாவை ஸ்டைலாக, டிரெண்டியாக, வியர்க்காமல் (!!) செய்கிற அளவுக்கு பிஸினஸ் படுத்தினார்கள்.
* யோகா செய்தேன். புற்றுநோய் குணமாகி விட்டது.
*  யோகா செய்தேன். சர்க்கரை (கிச்சனில் அல்ல) கட்டுக்குள் வந்து விட்டது.
 யோகா செய்தேன். ஆஸ்துமா நாலுகால் பாய்ச்சலில் ஓட்டம் பிடித்தது.
*  யோகா செய்தேன். தூக்கம் சும்மா பிச்சிகிட்டு வருகிறது.
- இப்படி நிறைய, நிறைய பேர் கட்டை விரலுயர்த்திக் காட்டி நம்மையும் யோகா செய்ய சிபாரிசு செய்கிறார்கள். இதில் உண்மை இருக்கிறதா?


ருக்கத்தான் செய்கிறது. யோகா மூலம் உடல், மனரீதியாக நிறைய ஆரோக்கிய மாற்றங்கள் சாத்தியமே. அறிவியல், மருத்துவம் இரண்டும் இணைந்து ஏற்றுக் கொள்கிற சில விஷயங்களில் இதுவும் ஒன்று. இன்றைக்கும், மத வேறுபாடின்றி பல பெரியவர்கள், அவ்வளவு ஏன்... இறை மறுப்பாளர்கள் கூட யோகா செய்கிற தகவல்களை நாம் கேள்விப்படுகிறோம். அப்புறம் எதனால் பிரச்னை?

யோகாவை இந்து மதத்தின் செட் பிராப்பர்ட்டியாக மாற்றும் முயற்சி மட்டுமே இங்கு சர்ச்சைக்குள்ளாகிறது. நேற்றுவரை இதை செய்து வந்த கிறிஸ்துவ, முஸ்லீம் நண்பர்கள், இன்றைக்குப் பயப்படுவதற்குக் காரணமும் அதுதான். ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ அதாவது ‘வணங்குவதற்குரியவன் இறைவன் ஒருவனே’ - இது இஸ்லாமியர்கள் கடைபிடிக்கிற அடிப்படை ஆதாரமான நம்பிக்கை. எனும்போது, நீங்கள் ஓ...ம், ஓ....ம், ஓ.....ம் என்று ரீங்காரமிடச் சொன்னால், சகோதரர்கள் சங்கடப்பட மாட்டார்களா? என்னுடன் யோகா வகுப்புக்கு வந்த ஒரு இஸ்லாமிய சகோதரர் பட்ட பாட்டை நான் நேரடிச் சாட்சியாகவே பார்த்திருக்கிறேன். இருகரம் குவித்து கும்பிடச் செய்வது, ஓ...ம் சக்தி, மகா... சக்தி என்று கோஷமிட வைப்பது, விபூதி அள்ளித் தெளிப்பது என.... மதமாற்றச் சடங்கில் கிட்டத்தட்ட 70 சதவீதம் முடித்து விட்டார் யோகா மாஸ்டர். ரொம்பக் கடைசி தருணத்தில் தப்பி வெளியேறினார் நண்பர்.


ப்படியானால், யோகாவை இந்து மதத்துடன் தொடர்பு படுத்துவது ஏன்? இந்தக் கலையை காஸ்ட்லியாக கற்றுத் தருகிற ஈஷா மையத்தின் சத்குரு ஜக்கி வாசுதேவிடம் கேட்டபோது...
‘‘யோகா என்பது ஒரு தொழில்நுட்பம். நீங்கள் எதை நம்புகிறீர்கள், எதை நம்பவில்லை என்றெல்லாம் தொழில்நுட்பம் பிரித்துப் பார்க்கிறதா என்ன? நம்பிக்கை வெறும் மனம் சார்ந்த விஷயம், தொழில்நுட்பம் சார்ந்ததல்ல. புவியீர்ப்பு விசையை நீங்கள் கிறிஸ்துவ மதத்தை சார்ந்ததென்று சொல்வதைப் போன்றதுதான் யோகா இந்து மதத்தினுடையது என்று நினைப்பதும்! நியூட்டன் புவியீர்ப்பு விதியை கண்டுபிடித்ததால் மட்டுமே புவியீர்ப்பு விசை கிறிஸ்துவ மதத்தினுடையதாக ஆகிவிடுமா? யார் அதை பயன்படுத்த தயாராக இருந்தாலும், அதை பயன்படுத்தலாம். யோகாவிற்கு மதச்சாயம் பூச யோசிப்பதுகூட வேடிக்கையாக உள்ளது. ஆன்மீக செயல்முறை மற்றும் யோக தொழில்நுட்பம் அனைத்து மதங்களின் அம்சமாகவும் இருக்கிறது...’’ என்கிறார். ராம்தேவ் பாபா ஏற்றுக் கொள்வாரா என்று தெரியவில்லை.

தேசமயம், ‘‘யோக அறிவியலுக்கு இந்து முத்திரை குத்தப்பட்டதற்கு காரணம், யோக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இந்தக் கலாச்சாரத்தில் வளர்ந்ததால்தான். இது அடிப்படையில் இந்து வழி வாழ்க்கை முறையாகும். “சிந்து” எனும் ஒரு நதியின் பெயரில் இருந்து வந்ததுதான் “இந்து” என்ற வார்த்தை. சிந்து நதிக்கரையில் வளர்ந்த காரணத்தினால், இந்தக் கலாச்சாரத்திற்கு “இந்து” என்ற பெயர் வந்தது. சிந்து நிலத்தில் பிறந்த எவருமே இந்து தான். இந்த புவியியல் அடையாளம் மெதுவாக ஒரு கலாச்சார அடையாளமாக உருவானது...’’ என்று ஜக்கி சார் சொல்கிறார். நல்லாத்தான போய்கிட்டு இருந்திச்சு?

சிந்து நிலத்தில் பிறந்தவர்கள் எல்லாருமே இந்துதான் என்பதெல்லாம் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிற வேலை. முஸ்லிம் என்கிற அரபிச் சொல்லுக்கு இறைவனுக்கு அடிபணிந்தவன் என்று அர்த்தம். ஈஷா சத்குரு சாமியாரும் நிச்சயமாக இறைவனுக்கு அடிபணிந்தவர்தான். அமாவாசை, பவுர்ணமி இரவுகளில் அதை நிரூபிக்கிறார். என்பதால், அவரை முஸ்லிம் என்று நான் சொன்னால், அக மகிழ்ச்சியோடு அவர் ஏற்றுக் கொள்வாரா?

ள்ளிகளில் யோகா வகுப்பு நடந்த எழுந்த சர்ச்சையைக் கண்டதும் பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் கொதித்துப் போனார்கள். ‘‘முஸ்லீம்களின் தொழுகையும் கூட ஒருவகையான யோகாசனமே,’’ என்று டென்ஷன் ஆனார்கள். சரி. அப்படியானால், பள்ளிகளில் யோகாசன வகுப்புடன், சிறப்புத் தொழுகை வகுப்பையும் சேர்த்து நடத்த ஏற்பாடு செய்யத் தயாராக இருக்கிறார்களா? நியூட்ராலிட்டியை நிரூபிக்க அவர்களுக்கு இப்படியும் ஒரு வாய்ப்பு இருக்கிறது.

யோகா நல்லது - உடலுக்கும், மனதுக்கும். மதவாதிகள் உள்ளே புகுந்து உருட்டுவதால், இன்றைக்கு அது விவாதத்திற்கும், சர்ச்சைகளுக்குமான விஷயமாகியிருக்கிறது! புரிந்து கொள்ளத் தெரிந்தவர்கள், பாக்கியவான்கள்!!

பின்குறிப்பு: விலங்குகளுக்கு மதமில்லை. என்பதால், பேதமும் இல்லை. யோகா அனைவருக்குமானது; பொதுவானது என்பதை ‘மாறுபட்ட கோணத்தில்’ புரியவைக்கிற புது முயற்சியாக மட்டுமே அனிமல் யோகா படங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறதே தவிர, வேறு எந்தத் தீய நோக்கமும் பூனைக்கு இல்லை. சத்தியமாக இல்லை.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

5 கருத்துகள்:

 1. முஸ்லீம்களின் கட்டாய அன்றாட ஐந்து வேளை தொழுகையே இறை தியானத்துடன் கூடிய தலை சிறந்த யோகப்பியாசம்..

  அருட்கொடையாம் தொழுகை .

  ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி உடற்சுகாதாரம் எவ்வாறு பேணி கடைப் பிடிக்கப்படுகின்றது என்பதை சிந்தித்தீர்களா?

  ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.

  இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.

  ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?

  சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.

  ஐவேளை தொழுகையின் மூலம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாதய சூழ்நிலைகளிலேயே மூழ்கி கிடந்திடாமலும் இறைவனிடம் தொடர்பை சற்றும் தொய்வில்லாமல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்பதற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?

  உலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை. இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.

  உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா?

  தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன், நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய சஜ்தா செய்யும்பொழுது

  நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?

  உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.

  பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து

  "இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது 'என கூறுகிறார்.

  தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."

  தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முயற்ச்சி அல்ல இது.


  தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.

  தொழும்போது இறைவனிடம் பேசுகிறீர்கள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவன் உங்களிடம் பேசுகிறான்.

  நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே..

  எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிரயாணத்திலும்,

  சண்டையிலும், சமாதானத்திலும், சிறையிலும், சுகபோகத்திலும், நட்பிலும், பகையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல்.

  ஓ மானுடனே! சிந்திப்பாயா ?

  உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்பவை எல்லாம் நதியில் ஒரு துளிதான்.
  அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள்

  கீழே உள்ள சுட்டியை சொடுக்கி காணத்தவறாதீர்கள்.

  ******இங்கே***

  பதிலளிநீக்கு
 2. ‘‘முஸ்லீம்களின் தொழுகையும் கூட ஒருவகையான யோகாசனமே,’’ என்று டென்ஷன் ஆனார்கள். சரி. அப்படியானால், பள்ளிகளில் யோகாசன வகுப்புடன், சிறப்புத் தொழுகை வகுப்பையும் சேர்த்து நடத்த ஏற்பாடு செய்யத் தயாராக இருக்கிறார்களா? நியூட்ராலிட்டியை நிரூபிக்க அவர்களுக்கு இப்படியும் ஒரு வாய்ப்பு இருக்கிறது.

  super sir. Really great.good.

  பதிலளிநீக்கு
 3. நிறைய விசயங்களை புரியவைத்த பூனையாருக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. புவி ஈர்ப்பு விசையை கிருத்துவ மதத்திற்கானதாக சொல்ல முடியுமானு கேட்டீங்களே அது பாய்ண்ட்! :-)

  பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...