சனி, 27 டிசம்பர், 2014

‘இச்.. இச்...’ எந்தெந்த இடத்தில் சரி?

மொழி என்பது, உணர்வுகளை வெளிப்படுத்துகிற கருவி. சொல்ல வருகிற பொருளை / விஷயத்தை வெளிப்படுத்துவதற்கு உறுதுணையாக நிற்பது சொல். எழுத்துக்களின் திரட்சியே சொல். ஒரு எழுத்து தனித்து நின்றோ அல்லது பல எழுத்துக்கள் ஒன்றாகச் சேர்ந்தோ பொருள் தருமானால், அது சொல். தனி ஒரு எழுத்தே கூட தமிழில் சொல்லாக மாறி பொருள் தருவதும் உண்டு.

‘சிங்கிள் எழுத்து ஒன்று சிங்கம் போல தனித்து நின்று சொல்லாகி, பிரத்யேக அர்த்தம் கொடுத்தால் அது ஓரெழுத்து ஒரு மொழி’ என்று கடந்த வாரம் படித்தோம். வா, போ, தீ ஆகிய உதாரணங்களையும் பார்த்தோம். இந்த வாரமும் சில உதாரணங்கள்.
நீ - முன்னால் இருப்பவர், நோ - வலி (நோவு), கா - பாதுகாப்பு, கோ - அரசன், வீ - மலர், யா - கட்டுதல், து - உணவு, நை - இகழ்ச்சி (நையாண்டி என்கிற வார்த்தை இதில் இருந்து பிறந்தது).

‘ங’ ரொம்ப பாவம்!

சரி. ஒரு வாக்கியத்தின் முதல் எழுத்தாக எந்த எழுத்து வரும், எந்த எழுத்து வராது? மொழியை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு அது தெரிய வேண்டுமில்லையா? சொல்லுக்கு முதலில் வரும் சொற்கள் (Initial Letters): தமிழில் 12 உயிரெழுத்துக்களும் சொல்லின் முதலில் வரும். இதுதவிர க, ச, ஞ, ட, த, ந, ப, ம, ய, ர, ல, வ ஆகிய எழுத்துக்களும் சொல்லின் முதல் எழுத்தாக வரும். ங, ண, ழ, ள, ற, ன ஆகிய எழுத்துக்கள் சொல்லுக்கு முதலில் வருவதில்லை. இந்தப் பட்டியலில் ‘ங’ ரொம்பப் பாவம். ஒரு காலத்தில் சொல்லுக்கு முதலில் வரும் எழுத்தாக பந்தாவாக வலம் வந்தது. காலப்போக்கில் யாரும் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதால், இப்போது இரண்டாவது பட்டியலுக்கு இறங்கி விட்டது... பரிதாபம்.

‘ர’ போட்டா ‘ராங்கா’ போகாது!

சொல்லுக்கு முதலில் வரும் பட்டியலில் ‘ட’ இருக்கிறது பாருங்கள். தமிழில் இது முதல் எழுத்தாக வருவது அரிது. அதேசமயம், தமிழில் புழங்குகிற பிறமொழி சொற்களில் இது மொழி முதல் எழுத்தாக வரும் (டக்ளஸ், டில்லி - தில்லி என்று எழுதுவார்கள் சில தமிழ் உணர்வாளர்கள் - டிம்பிள், டென்மார்க்). ‘ட’ போலவே ‘ர’வும் பிறமொழி சொற்களில் முதல் எழுத்தாக வருகிறது. இராமாயணம், இராமன், அரங்கநாதன் என்று எழுதுகிறோம். ராமன், ராமாயணம், ரங்கநாதன் என்று ‘ர’ போட்டு எழுத்தினாலும் ராங்கா போவதில்லை. ரப்பர் என்கிற சொல்லை இரப்பர் என்று எழுதினால் கொஞ்சம் ஓவராக இருக்கும்தானே? அடுத்து ‘ல’. இதுவும் முதல் எழுத்தாக வரலாம். லட்டு என்பதை இலட்டு என்று எழுதினால், இனிக்காது. பிறமொழி சொற்களில் ‘ல’ முதல் எழுத்தாக வருவது தப்பில்லை. லங்கா (இலங்கா), லூக்கா (இலூக்கா) என்று எழுதினால்தான் நன்றாக இருக்கும். தைரியமாக ‘லவ்’ என்றே சொல்லலாம். தமிழ் உணர்வை காட்டுவதற்காக ‘இலவ்’ என்று சொல்லி இழவெடுத்து விடாதீர்கள்!

போலியும் கூட ஒரிஜினலே!

சொற்களைப் பற்றி படிக்கிற போதே, போலி பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. மஞ்சள் கலரில் வட்டமாய், குட்டியாய்... இனிக்க, இனிக்க செய்து விற்பார்களே... அது அல்ல. அது, போளி. இது போலி (Interchange of letters). ஒரு சொல்லில், இயல்பாக இருக்கிற எழுத்துக்குப் பதிலாக வேறொரு எழுத்து வந்து, பொருள் மாறாது நின்றால் அது போலி (போல வருவது).

போலியில் மூன்று வகை உண்டு. முதற்போலி (Initial Interchange) -  சொல்லுக்கு முதலில் ‘ந’வுக்கு பதில் ‘ஞ’ போலியாக வரும் (நாயிற்றுக்கிழமை - ஞாயிற்றுக்கிழமை, நயம் - ஞயம்). ‘ஔ’க்கு பதில் ‘அவ்’ போலியாக வரும் (ஔவையார் - அவ்வையார்). ‘ஐ’க்கு பதில் ‘அய்’ போலியாக வரும் (ஐயப்பன் - அய்யப்பன்).
இடைப்போலி (Medial Interchange) என்பது நடுவில் உள்ள எழுத்து மாறுவது (அரயன் - அரையன்). சொற்களின் கடைசியில் வரும் எழுத்து மாறினால் கடைப்போலி (Final Interchange). ‘ம்’ என்ற எழுத்து ‘ன்’ என்று போலியாக வரும் (நலம் - நலன், அறம் - அறன்). ‘ல்’ என்னும் எழுத்து ‘ர்’ என்று போலியாகும் (சாம்பல் - சாம்பர்). ‘ல்’ என்கிற எழுத்து ‘ள்’ என்று மாறும் (மதில் - மதிள், செதில் - செதிள்).

போலியைப் பற்றி இங்கு பேசுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. தமிழில் சொற்களை போலியாகவோ, போலி இல்லாமல் (ஒரிஜினலாகவோ!)... எப்படி எழுதினாலும் அது தப்பில்லை. ஓ.கே?

சந்திக்கும் போதெல்லாம் ‘இச்’ சரிதானா?

சரி. இத்தனை நாள் பேசியதில், ரொம்ப, ரொம்பவும் முக்கியமான ஒரு விஷயம் இப்போது பேசப்போகிறோம். ‘இச்... இச்...’ எந்த இடத்தில் வைத்தால் சரி; எந்த இடத்தில் வைத்தால் தப்பு? ‘அடடா... இது தமிழ் இலக்கண தொடராச்சே. ஏன் திடீர்னு திசை மாறுது...?’ என்று திகைக்கவேண்டாம். இதுவும் இலக்கணமே. ‘சந்தி’க்கும் போதெல்லாம் ‘இச்’ தப்பு. இடம், பொருள் பார்த்து வைத்தால் தான் சரி. ஏழு நாள் சஸ்பென்ஸ் தாங்கமுடியாதவர்களுக்காக... தமிழில் அனைவரும் செய்கிற மிகப்பெரிய தவறான... சந்திப் பிழை. அதைக் குறித்து இனி விரிவா......க பார்க்கப் போகிறோம். தயாரா?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...