செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

சப்தபேதி பாண்

 ட்பு... மனித உயிர்களுக்கு மட்டுமானதல்ல. உலகில் பிறந்த அத்தனை உயிர்களுக்குமான பொது அம்சம். சாலையில் குறும்பு பண்ணித் திரிகிற நாய்க்குட்டிகள், கரைந்து வருகிற காகங்கள், கோழிகள் என அனைத்து உயிர்களிடத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் நட்பை நீங்கள் பார்க்கலாம். பிற உயிர்களிடத்தில் பிரச்னை இருக்குமா, இல்லையா என்று தெரியவில்லை. மனித உயிர்களிடத்தில் நட்பு என்கிற வார்த்தை நாள்தோறும் களங்கப்படுத்தப் பட்டுக் கொண்டிருப்பதை காணமுடியும். ‘கழுத்தறுத்திட்டான், காலை வாரிட்டான், முதுகுல குத்திட்டான், கூடவே இருந்து குழி பறிச்சிட்டான்....’ - நட்பின் துரோக முடிவுகளை அடையாளம் காட்டுகிற வார்த்தைகள் இவை.

ப்படியானால், எது நட்பு? உண்மையான நட்புக்கு என்று இலக்கணம் ஏதாகிலும் இருக்கிறதா? இப்படித்தான் நட்பு கொள்ளவேண்டும் என யாராவது எழுதி வைத்திருக்கிறார்களா? இருக்கிறது. மிக அதிகமான உதாரணங்கள், முன்னுதாரணங்கள் நமது தமிழ் இலக்கியங்களில் கொட்டோ கொட்டென்று கொட்டி, கொட்டிக் கிடக்கிறது. தமிழ் இலக்கியங்களில் இருந்து நட்பை சேகரித்துச் செல்ல, பத்து கன்டெய்னர் லாரிகள் பத்தாது. சரி. இன்னொரு விதமான நட்பையும் பார்க்கலாம்.

இது என்ன நட்பூ?

ரு நல்ல நண்பர்கள். ஒன்றாகவே படித்து, ஒன்றாகவே வளர்ந்தவர்கள். இவன் என்றால், அவனுக்கு உயிர். அவன் என்றால், இவனுக்கு உயிர். இவனின்றி அவனில்லை. அவனின்றி இவனில்லை. கடைசியில் வருகிறது ஆன்ட்டி கிளைமாக்ஸ். குறுவாளால் அவனை இவன் குத்திக் கொல்ல... கொடுவாளால் இவனை அவன் வெட்டிச் சாய்க்கிறான். இந்த நட்பு எந்த வகையில் சேர்த்தி? குத்திக் கொண்டு செத்துச் சாய்ந்த இவர்கள் நல்ல நண்பர்கள்தானா? இது உயர்ந்த வகை நட்புதானா?

ட்புதான் என்கிறது ஒரு இலக்கியம். மிகத் தேர்ந்த, மிக உயர்ந்த நட்பு என்று உறுதி செய்கிறது அந்த இலக்கியம். வடமொழி இலக்கியம். ‘பிருத்விராஜ் ரஸோ (பிருத்விராஜனின் வீரம்)’ என்கிற இந்தி இலக்கியம். இந்தி மொழியின் முதல் காப்பியம் இது. 13ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்தி மொழியின் முதல் காப்பியம், 13ம் நூற்றாண்டில்தானா... என்று இங்கு உங்களுக்கு ஒரு சந்தேகம்  மைல்டாக வரலாம். நியாயம்தான். இந்தியாவில் இந்தி மொழி தோன்றியதே 10ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான்! அதுவும், பாமர மக்களின் மொழியாக பரவ ஆரம்பித்தது 16ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான். என்பதால், முதல் காப்பியம் ‘பிருத்விராஜ் ரஸோ’ தோன்றியது 13ம் நூற்றாண்டில். தமிழின் மாபெரும் தொன்மையை, மேன்மையை, - இன்று உயர்த்திப் பிடிக்கப்படுகிற - இந்தி மொழியுடன் இங்கே உரசிப் பார்த்து நாம் உறுதி செய்து கொள்ளமுடியும்.

விஷயத்துக்கு வரலாம். உயிர் கொடுப்பது நட்பு என்கிற பதத்தில் இருந்து, எடுப்பது நட்பு என்று எப்படி நிருபிக்கிறது பிருத்விராஜ் ரஸோ? அந்த காப்பியத்தில் இருந்து, உள்ளது... உள்ளபடி இங்கே:

சம்யுக்தா தெரியுமா?


கி.பி.1100ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் டில்லியை ஆட்சி செய்த ராஜபுதன மாவீரன் பிருத்விராஜ் சௌகான். கன்னோசி தேசத்தை ஆண்ட ஜெயச்சந்திரனின் மகள் சம்யுக்தாவை குதிரையில் தூக்கி வந்து மணமுடித்த கதை நமக்கு ரொம்ப ரொம்பத் தெரியும் என்பதால், அதை இந்தப் போர்ஷனில் இருந்து எடுத்து விடலாம். பிருத்விராஜனின் நண்பன் சந்த பர்தாயி. படைத்தளபதியும் கூட. மிகச் சிறந்த போர் வீரன். மட்டுமல்ல, கவிஞரும் கூட. இந்த பிருத்விராஜ் ரஸோவை எழுதியவரும் இவர்தான். சம்யுக்தாவுடன் காதல், சந்த பர்தாயியுடன் நட்பு என்று தாள லயம் தப்பாமல் போய்க் கொண்டிருந்த பிருத்விக்கு ஆப்கனில் இருந்து வந்தது வினை.

து, 1191ம் ஆண்டு. டில்லி அரியணையை கைப்பற்றுவதற்காக ஆப்கானிஸ்தானில் இருந்து படையெடுத்து வந்தான் முகமது கோரி. டில்லியை தக்க வைக்கவேண்டுமானால், கூட்டணி முக்கியம் என்று உணர்ந்த பிருத்வி, அக்கம்பக்கம் இருந்த ராஜாக்களை எல்லாம் கூட்டுச் சேர்த்துக் கொண்டு எதிர்த்தான். தனியாக வந்த கோரிக்கு டெபாசிட் காலி. தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்கிற லெவலில், ஆப்கனுக்கு ஓட்டமெடுத்த கோரி ஆள், அம்பு, படை பலத்தை பல மடங்கு பெருக்கினான். மறு ஆண்டு, அதாவது 1192ல் மீண்டும் டெல்லி சலோ...!

வாழ்வே மாயம்...!

ம்முறை பிருத்விக்கு கூட்டணி செட்டாக வில்லை. மகளை பறிகொடுத்த கன்னோசி மன்னன் ஜெயச்சந்திரன் ஆணவக் கொலை செய்ய நாள் பார்த்துக் கொண்டிருந்தான். கரெக்ட்டாக அந்த நேரத்தில் கோரி வர... கூட்டணியில் திடீர் திருப்பம். விளைவு? பிருத்வி தலைமையிலான ராஜபுத்ர படைகளை சப்ஜாடாக பிரித்து மேய்ந்து விட்டான் கோரி. பிருத்வியை சிறை பிடித்தான். விட்டால் டேஞ்சர் என்று நினைத்தானோ என்னவோ, இரு கண்களையும் குத்தி தோண்டி பார்வையை பறித்து விட்டான். அத்தோடு விட்டானில்லை. தனிமைச் சிறையில் அடைத்து... ‘என்ன தேவசேனா... சித்ரவதைகளில் ஒன்றும் குறைபாடில்லையே...’ என்று பாகுபலி படத்தில் நாசர் சிரித்துக் கொண்டே அனுஷ்காவிடம் கேட்பது போல, தினந்தோறும் டார்ச்சர்.

ன்னனின் நிலை எண்ணி மனம் கொதித்தது நண்பன் சந்த பர்தாயிக்கு. சட்டையை மாட்டிக் கொண்டு நேராக கோரியின் அரண்மனைக்குச் சென்றான். கோரியும், நம்மைப் போல, இலக்கியத்துக்கு மரியாதை கொடுக்கிற ஆள். என்பதால், ஒரு கவிஞராக தன்னைத் தேடி வந்த சந்த பர்தாயியை மரியாதை செய்து வரவேற்றான். கோரியின் அனுமதி பெற்று, பாதாளச் சிறையில் ‘வாழ்வே மாயம்... உலகே மாயம்’ நிலையில் இருந்த பிருத்வியை சந்தித்துப் பேசினான். இரவு முழுக்க பேசினான். மறுநாள் காலையில் அரண்மனை தர்பாரில் கோரியை சந்திக்கிறான் சந்த பர்தாயி.

‘‘என்ன கவிஞரே... உமது நண்பன், அதான், அந்த மாவீரன் நலம்தானே?’’ - கோரியின் கேள்வியில் நக்கல் எக்கோ அடிக்கிறது.
‘‘நலம்தான் மன்னா. ஆனால், ஒரு மன்னனை, பேராற்றல் கொண்ட அந்த ராஜபுதன மாவீரனை இப்படி சித்ரவதை செய்து சிறையில் அடைத்திருப்பது, உங்கள் மாண்புக்கு அழகல்ல...’’ என்கிறான் சந்த பர்தாயி.
‘‘அட! பேராற்றல் கொண்ட மாவீரனா? அப்படி என்ன பேராற்றல் இருக்கிறதாம் அவனிடம்?’’ - விடவில்லை கோரி.

‘‘நிச்சயமாக, அவன் பேராற்றல் கொண்டவன்தான் மன்னா. உங்களுக்கு சப்தபேதி பாண் கலை பற்றி தெரிந்திருக்கும்தானே? வில்லாளிகளின் உச்சக்கட்ட கலை. பார்வையை மறைத்துக் கொண்டு, ஒலி வரும் திசையில் சரியாக அம்பு எய்து, இலக்கை வீழ்த்துகிற கலை. அதில், பிருத்வி மாவீரன்...’’.

(சப்த பேதி பாண்:  சப்த - சத்தம், அதாவது ஒலி. பேதி - தாக்குதல். பாண் - அம்பு. ஒலி வருகிற திசையை அம்பால் தாக்கி அழிக்கிற வித்தை).

கப்சா கவிஞரா...?

ந்த பர்தாயி கூறியதை கோரி ஏற்றுக் கொள்வதாய் இல்லை. ‘‘சப்தபேதி பாண் கலை இப்போது இல்லை. நீ கப்சா விடுகிறாய் கவிஞனே...’’
‘‘இல்லை பேரரசே. பிருத்விக்கு ஒரு வாய்ப்பு, ஒரே ஒரு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள். சப்தபேதிபாண் கலையை அவன் நிரூபித்துக் காட்டினால்... என்ன தருவீர்கள்?’’ - லாவகமாக கொக்கி போடுகிறான் சந்த பர்தாயி.
சிறிதுநேர அமைதிக்குப் பிறகு, கோரி தீர்மானமாக பேசுகிறான். ‘‘ஒரு கவிஞனாக கேட்கிறாய். என்னால் மறுக்க முடியாது. உனது நண்பனுக்கு வாய்ப்பு தருகிறேன். ஒருவேளை, அவன் திறமையை நிரூபித்து விட்டால், அதன் பிறகு, சிறைச்சாலையில் ஒரு மன்னனுக்கு உரிய மரியாதையுடன் அவனை நடத்துகிறேன் என்று உறுதியளிக்கிறேன். ஒருவேளை, அவன் தோற்று விட்டால்... அதன் பிறகு, கவிஞனென்றும் பார்க்க மாட்டேன். உன்னையும் சேர்த்து சிறையில் தள்ளுவேன். சரியா?’’
கோரியின் சவாலை புன்முறுவலுடன் ஏற்றுக் கொள்கிறான் சந்த பர்தாயி.


ப்புறம் என்ன? அந்த நாளும் வந்தது. இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் நடக்கிற இடம் போல, அந்த மைதானம் பரபரத்துக் கிடந்தது. சுற்றிலும் எக்கச்சக்க ஜனங்கள். மேலே, ஸ்பெஷல் கேலரியில் கோரி, தனது அமைச்சரவை பரிவாரங்களுடன். கை, கால்களில் இரும்புச் சங்கிலியுடன் பார்வையிழந்த மன்னன் பிருத்விராஜ் உள்ளே அழைத்து வரப்படுகிறான். எதிரணி பேட்ஸ்மேன் வந்தால், எப்படி இருக்குமோ... அப்படி கப்சிப் என்று இருந்தது களம். அரங்கின் ஒரு ஓரத்தில், மிக உயரத்தில், செம்பால் ஆன பெரிய, வட்ட வடிவத் தகடு பொருத்தப்பட்டிருந்தது. அதன் நடுவே ஒரு சிறு புள்ளி.

பிருத்வி கையில் வில்லும், அம்புகளும் கொடுக்கப்பட்டன. உற்சாகமூட்டியவாறு அருகில் நண்பன் சந்த பர்தாயி. வில்லில் அம்பு பொருத்தி, சாகசத்துக்கு தயாரானான் பிருத்வி. செம்பு தகடின் நடுவில் இருந்த சிறு புள்ளியில் ஒரு போர் வீரன் உலோக உருண்டை கொண்டெறிந்து ஓசை எழுப்பினான். அடுத்த வினாடி, பிருத்வி கையில் இருந்த வில்லில் இருந்து சீறிக் கிளம்பியது அம்பு. மிகச்சரியாக சிறு புள்ளி இலக்கில் குத்தி நிற்க... கூட்டம் வாய் பிளந்து, மெய் மறந்தது. மாவீரன் கோரியே ஒரு கணம் நிலை தடுமாறிப் போனான். மறு வினாடியே சுதாரித்துக் கொண்டவன், தன்னை மறந்து ‘சபாஷ்...’ என்று மெய் சிலிர்த்துக் கைதட்டினான். அதற்கடுத்த வினாடி... பிருத்வி கையில் இருந்த வில்லில் இருந்து மேலும் சில அம்புகள் பறந்தன. ‘சபாஷ்....’ என்று சொல்லத் திறந்த கோரியின் வாய் மூடுவதற்குள் சரசரவென அம்புகள் உள்புகுந்து, கபாலம் பிளந்து மறுபக்கம் பாய... செத்து விழுந்தான் முகமது கோரி.

ப்போதுதான், நீங்கள் எதிர்பார்க்காத அந்த ஆன்ட்டி கிளைமாக்ஸ் வருகிறது. கோரியின் போர் வீரர்கள் கொலை வெறியுடன் உள்ளே பாய்கிறார்கள். சிக்கினால், சில்லி பரோட்டா ஆக்கி விடுவார்கள். ஒரு கணமும் தாமதிக்காமல் ஒரு கொடுவாளை பிருத்வியிடம் வீசுகிறான் சந்த பர்தாயி. தன்னிடம் இருந்த குறுவாளை பிருத்வி நெஞ்சில் ஆழப் பாய்ச்சுகிறான். அடுத்த கணம், தன்னிடம் இருந்த கொடுவாளை, சந்த பர்தாயி நெஞ்சில் இறக்குகிறான் பிருத்வி. போர் வீரர்கள் நெருங்குவதற்குள், நண்பர்கள் இருவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்த படி, உயிர் பிரிந்து உடல் சாய்கிறார்கள்.

- இதுதான் ‘பிருத்விராஜ் ரஸோ’ காப்பியம் நல்ல நட்புக்கு அடையாளமாக காட்டுகிற கதை. ஆயிரத்து 68 அத்தியாயங்களைக் கொண்ட இந்தக் காப்பியத்தை முழுவதுமாக எழுதிய சந்த பர்தாயி, குத்திக் கொண்டு சாகிற அந்த கடைசி அத்தியாயத்தை மட்டும், தனது எட்டாவது மகன் ஜல்ஹனிடம் எழுதக் கொடுத்து விட்டு, கோரியிடம் கிளம்பிப் போனான் என்பதாகச் சொல்கிறார்கள்.


ட்பு குறித்து வடமொழி இலக்கியம் என்னதான் சொல்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக இந்த ‘பிருத்விராஜ் ரஸோ’ காப்பியத்தை இங்கே பதிவு செய்திருக்கிறேன். இன்னொரு முக்கிய விஷயம். முகமது கோரி மற்றும் பிருத்விராஜன் பற்றிய நிஜ வரலாற்றுக் குறிப்புகளில் இப்படியான எந்தத் தகவலும் இல்லை. என்பதால், வரலாற்றுடன் உரசிப் பார்த்து, உண்மை தேடாமல், நல்ல நட்பு இப்படித்தான் இருக்கவேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்துகிற ஒரு கற்பனைக் காப்பியம் என்றளவில் மட்டுமே இதை எடுத்துக் கொண்டால், அருமையான ஒரு வாசிப்பனுபவத்தை இந்தக் காப்பியம் தரும்.
நன்றி.

(திருமங்கலம் இலக்கியப் பேரவைக் கூட்டத்தில் நான் எழுதி வாசித்த கட்டுரையின் முழுமையான வடிவம்...)

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

2 கருத்துகள்:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...