திங்கள், 23 அக்டோபர், 2017

மெர்சல் விஜய்யும், கபாலி ரஞ்சித்தும்!

மெர்சல் சினிமா குறித்தான இந்த கட்டுரையில் கீழ்காணும் சங்கதிகளை தேடாதீர்கள்; கண்டடைய மாட்டீர்கள். - Disclaimer.
* இளைய தளபதியாக இருந்தவர், பதவி உயர்வு பெற்று, தளபதியாக பொறுப்பேற்றிருப்பதை வாழ்த்தி, வரவேற்றுக் கொண்டாடுவது.
* பாகுபலி போல கயிற்றைக் கட்டி, ரங்க ராட்டினத்தை அவர் இழுத்துச் சரிக்கிற வீரதீரம்.
* அனகோண்டா அளவுக்கு நீளமான மெகா அரிவாளை பல்லில் கவ்விக் கொண்டு நடக்கிற பராக்கிரமம்.
* டெங்கு தவிர்த்து இன்னபிற நோய்கள் அத்தனைக்கும் ஐந்தே ரூபாய் கட்டணம் பெற்றுக் கொண்டு குணமாக்கும் மருத்துவ வல்லமை.
* மதுரை, சென்னை தமிழ் உச்சரிப்புகளை... மதுரை, சென்னைக் காரர்களை விடவும் சிறப்பாக பேசி அசத்துகிற அந்த ‘நா - நயம்!’
* பறந்தும், குதித்தும் செய்கிற சண்டைகள். அதே லாவகத்துடன் பறந்தும், குதித்தும் போடுகிற நடனங்கள்.
* ஹீரோயின்களிடம் ‘ரோஸ்மில்க் க்கா... ஐஸ்ஸ்ஸூ...’ என்று அவர் உருகி, உருகிப் பேசுகிற அழகு...

- இதெல்லாம் இங்கே தேடினாலும் கிடைக்காது (எதிர்பார்த்து வந்த தளபதி மென்விசிறிகள், இந்த இடத்திலேயே SKIP  ஆகிக் கொள்வது நலம்).
சரி. பின்ன எதுக்காம் இந்தக் கட்டுரை?

மிரட்டல், மயக்குதல், ஆச்சர்யம் என அர்த்தப்படுகிற தமிழ் சொற்களின், சிங்காரச் சென்னை தமிழ் வெர்ஷனான ‘மெர்சல்’ என்கிற பதத்தை தலைப்பாகக் கொண்டு வெளியாகியிருக்கிற சினிமா தான் இப்போதைக்கு ஆல் இண்டியா டிரெண்ட்.  சென்னை வெள்ளத்துக்குக் கூட கொடுக்காத முக்கியத்துவத்தை, வட இந்திய மீடியாக்கள் மெர்சலுக்குக் கொடுத்திருப்பதில் இருந்தே, மேட்டரின் மெகா சீரியஸ்னஸை நாம் புரிந்து கொள்ளமுடியும். ராகுல்காந்தி கூட, ‘மிஸ்டர் மோடி, தமிழ் சகோதரர்களை நிம்மதியா மெர்சல் பார்க்க விடுங்க...’ என்று ட்விட்டுகிறார். வட இந்திய தலைவர்கள் நிறையப் பேர் மத்தியில் மெர்சல் இப்போது பேசுபொருளாகியிருக்கிறது. அப்படி என்ன இருக்கிறது மெர்சல் எனப்படுகிற மிரட்டலில்?

ஆளப்போறான் தமிழன்...!

‘‘நான் பேசுற பாஷையும், போட்டிருக்கிற டிரெஸ்சும் தான் உங்களுக்கு பிராப்ளம்னா... மாற வேண்டியது நான் இல்லை. நீங்கதான்...’’ - என்று வேட்டி கட்டிய படி, தமிழ் பேசிய படி அறிமுகமாகிற மருத்துவர் மாறனின் முதல் டயலாக், கீழடி குழிகளை மூடிப் புதைத்தவர்களுக்கு கோபத்தைக் கிளறச் செய்வது நியாயம்தானே? உலகின் ஆதிமொழி, உலக மொழிகளின் தாய்மொழி என்று காட்சிக்கு காட்சி டயலாக் வைத்தால்... அடிஷனலாக, ‘ஆளப்போறான் தமிழன்...’ என்று பாட்டும் போட்டால், அவர்கள் மெர்சலாகத்தானே செய்வார்கள்?

மெர்சல் படத்தில் இருக்கிற குறிப்பிட்ட சில வசனங்களை நீக்கியே தீரவேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக தலைவர் தமிழிசை... அப்புறம் ‘சொல்லின் செல்வர்’ எச்.ராஜா போன்றவர்கள், படம் ரிலீசான முதல் காட்சியில் இருந்தே இறங்கி நின்று சிலம்பு சுற்றுகிறார்கள். அவர்களை எரிச்சல் படுத்துகிற அளவுக்கு சில காட்சிகளும், வசனங்களும் படத்தில் இருப்பது உண்மையே.

எல்லாமே... டிஜிட்டலு!

வெளிநாட்டு ஹோட்டலில் சாப்பிட உட்கார்ந்திருக்கிற வடிவேலுவை கொள்ளையர்கள் சூழ்ந்து விடுகிறார்கள். துப்பாக்கி முனையில் அவரது பர்ஸை பிடுங்கிப் பார்த்தால்... உள்ளே பத்து பைசா இல்லை. ‘‘நான் மட்டும் இல்லப்பு. எங்க ஊர்ல எல்லாருமே இப்படித்தான். பணமே இல்லை. எல்லாமே டிஜிட்டலுதான். ஒரே கியூ தான்...’’ என்று கையை நாக்கால் நக்குவது போல பாவனை செய்தபடி பரிதாபமாக பேசுகிறார். பண மதிப்பிழப்பு முறை பல இடங்களில் விமர்சிக்கப்படுகிறது. நன்கொடை உண்டியலில் ஐநூறு ரூபாய் கட்டுகளை ஒருவர் போட, ‘‘அட! ஐநூறு ரூபாயையும் செல்லாதுனு அறிவிச்சிட்டாங்களா...’’ என்று நக்கல் வசனம் வருகிறது.

தெல்லாம் கூட ஜாலி, கேலி என்று விட்டு விடலாம். ‘‘7 சதவீதம் ஜிஎஸ்டி வரி வாங்குற சிங்கப்பூர்ல மருத்துவத்தை இலவசமா தர்றப்போ, 28 சதவீதம் ஜிஎஸ்டி வாங்குற நம்ம அரசாங்கம் ஏன் மருத்துவத்தை இலவசமா தரமுடியலை? அத்தியாவசிய மருந்து, மாத்திரைக்கு 12 பர்சன்ட் வரி. தாய்மாருங்க தாலிய அறுக்கிற மதுவுக்கு ஜிஎஸ்டி கிடையாது...’’ என்று நேரடியாகவே சமகாலத்து அரசியல் பேசுகிற வசனங்கள் தியேட்டரில் கரகோஷங்களைப் பெறுகின்றன - பாதிக்கப்பட்டவர்களின் மன வெளிப்பாடு அது.

ஆக்சிஜன் எங்கே?

ந்தியாவில் இருக்கிற அரசு மருத்துவமனைகள் பற்றி, துளி பாசாங்கின்றி விமர்சனங்கள் துணிச்சலாகவே முன்வைக்கப்படுகின்றன. ‘‘ஜனங்க நோயைப் பார்த்து பயப்படுறதை விடவும், கவர்மென்ட் ஹாஸ்பிடலைப் பார்த்து பயப்படுறதுதான் அதிகம். அந்த பயம்தான்... பிரைவேட் ஹாஸ்பிடல்ஸோட இன்வெஸ்ட்மென்ட்...’’ என்கிறார் ஐந்து ரூபாய் டாக்டரான மாறன். ஏன்?


த்தரப்பிரதேச, கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் 70க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் இறந்த சம்பவம் நேரடியாகவே விமர்சிக்கப்படுகிறது. அந்த சம்பவம் குறித்த மேல்விசாரணையில், அரசாங்கம் பணம் கொடுக்காததால், ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிற கொடூர வேதனையும் குத்திக் காட்டப்படுகிறது. ‘‘டிவி, கிரைண்டர், மிக்ஸி எல்லாம் இலவசமா கொடுக்குற ஊர் இது. மருத்துவ வசதிகளை இலவசமா கொடுக்க முடியாதா?’’ என்று கேள்வி எழுப்புகிறார் மருத்துவர் மாறன். வசனங்களை எழுதிய இயங்குனர் அட்லி, ரமணகிரி வாசன் இருவருமே பாராட்டுக்குரியவர்கள்.


ருத்துவத்துறையில் கார்ப்பரேட்டுகள் நுழைந்து அடிக்கிற மனிதநேயமற்ற கொள்ளை, நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் உயிர் குடித்த பண மதிப்பிழப்பு பேரவலம் (Demonitisation), தேசத்தின் வர்த்தகத்தை முடக்கிப் போட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு சோகம் என சமகாலத்து அரசியல் அதிர்வுகளை, ஒரு மசாலா படத்தின் ஓட்டம் எந்த வகையிலும் பாதிக்காத அளவுக்கு பக்குவமாக வைத்து பேக்கிங் செய்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் அட்லி.

எங்க சார் இருந்தீங்க?

மேற்படி காட்சிகள், வசனங்களால், பாரதிய ஜனதா தலைவர்கள் அறச்சீற்றம் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மேற்படி குற்றச்சாட்டுகள் அத்தனையும் உண்மை என்று ஒட்டுமொத்த தேசமும் ஒருசேர குற்றம் சாட்டுகிறதே... அதை அறியாதவர்களா அவர்கள்? தேசமும், அதன் மக்களும் சாட்டுகிற குற்றங்களை கூட ஒதுக்கி ஒருபக்கமாக வைத்து விடலாம். அவர்கள் கட்சியைச் சேர்ந்த மிக மூத்த தலைவர், வாஜ்பாய் அமைச்சரவையில் நிதி அமைச்சராகவே இருந்தவர்... யஷ்வந்த் சின்ஹா... ‘‘பண மதிப்பிழப்பு நடவடிக்கையும். அதன் தொடர்ச்சியான ஜிஎஸ்டி வரிவிதிப்பும் இந்திய பொருளாதாரத்தை மிகப்பெரிய வீழ்ச்சிக்குள்ளாக்கி விட்டன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் மிகப்பெரிய தோல்வி...’’ என்று வெடித்திருக்கிறாரே, அதை இவர்கள் மறுக்க முடியுமா? ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்ட அந்தக் கட்சியின் ஐடியாலஜிஸ்ட்டுகள் கூட பண மதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சனம் செய்திருக்கிறார்களே... அப்போது மதிப்பிற்குரிய பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, எச்.ராஜா போன்றவர்கள் எங்கே இருந்தார்கள்?
ரி. அரசியலில் இது சகஜம்தான். ஒருவர் குற்றம் சாட்டுகிற போது, அது உண்மையாகவே இருந்தாலும், அதை சம்பந்தப்பட்டவர் மறுப்பது அரசியலில் இயல்பே என்று இந்தக் கட்டுரையை, இந்த இடத்தில் முற்றுப்புள்ளி வைத்து முடித்து விடலாம். ஆனால், பொய்களையும், மதவெறி கொள்கைகளையும் மட்டுமே மூலதனமாகக் கொட்டி பதவிக்கு வந்த / அடுத்தடுத்து இலக்குகள் நிர்ணயித்து இயங்கிக் கொண்டிருக்கிற பாரதிய ஜனதா கட்சி, சாதாரண ஒரு சினிமா விஷயத்தில் கூட, மதவெறி நஞ்சை மக்கள் மனங்களில் எத்தனை லாவகமாக விதைக்கிறது என்று நினைக்கும் போது, கட்டுரையை இன்னும் நான்கைந்து பாராக்கள் தொடரலாம் என்று தோன்றுகிறது.

கோயில், சர்ச், மசூதி?

தம், சாதி போன்ற பிற்போக்கு கீழமைத்தனங்களில் இருந்து மக்களை விடுவித்து, அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு அவர்களை ஆயத்தப்படுத்துவது ஒரு நல்ல அரசாங்கத்தின், அரசாங்கப் பிரதிநிதிகளின் பணியாக இருக்கவேண்டும். ஆனால், இப்போது இயங்கிக் கொண்டிருக்கிற அரசு, சாப்பிடுகிற உணவு துவங்கி, உடுத்துகிற உடை வரைக்கும் சகலத்திலும் சாதியையும், மதத்தையும் தேடுகிறது; அடையாளப்படுத்துகிறது. மெர்சல் படம் குறித்து எச்.ராஜா பேசும்போது, படத்தின் ஹீரோ விஜய்யின் பெயரை ஒவ்வொரு முறை குறிப்பிடும் போதும், ‘ஜோசப் விஜய்... ஜோசப் விஜய்...’ என்று திட்டமிட்டு சுட்டிக் காட்டுகிறார். அதாவது, நடிகரின் மதத்தை தோண்டி எடுத்து பொதுவெளியில் அடையாளப்படுத்துவதன் மூலம், தனது சுயகட்சிப் பிரச்னையை இந்து - கிறித்துவ மோதலாக மடைமாற்றப் பார்க்கிறார். ‘‘கோயிலுக்கு பதில் ஆஸ்பத்திரி கட்டும் காட்சி படத்தில் இருக்கிறது. அந்த காட்சியில் கோயிலுக்குப் பதில் சர்ச், மசூதியை காட்டலாமே,’’ என்று குதர்க்கமாக கேள்வி எழுப்புகிறார்.

ரு கதாசிரியர் என்ன எழுதவேண்டும் என்பதை எச்.ராஜாவோ அல்லது வேறெவருமோ தீர்மானிக்க உரிமை இல்லை. சமூகத்தை பாதிக்காத எதையும் எழுதும் உரிமை எழுத்தாளனுக்கு இருக்கிறது, தவிர, இந்தப்படத்தில் எச்.ராஜா கிளப்புவது போன்ற மத குறியீடுகள் நிச்சயமாக இல்லை. சொல்லப் போனால்... வெற்றிமாறனாக நடிக்கிற விஜய் கதாபாத்திரம் படம் முழுக்க நெற்றியில் சென்டிமீட்டர் இடம் பாக்கி வைக்காமல் விபூதி, குங்குமம் அப்பிக் கொண்டு வருகிறது. அந்த நல்ல பாத்திரத்தை நயவஞ்சகமாக ஏமாற்றுகிற வில்லன் பாத்திரத்துக்குத் தான் டேனியல் என்று சிறுபான்மை நாமகரணம் சூட்டப்பட்டிருக்கிறது. ராஜா சொல்வது போல, இந்து மதத்தை இழிவுபடுத்தும் காட்சிகள் படத்தில் எந்த இடத்திலும் இல்லை. சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர் என்ற ஒற்றைக் காரணத்துக்காக, விஜய் குறிவைத்து தாக்கப்படுகிறார்.

ஜோசப் - கபாலி!


ங்கேதான்... அடிப்படைவாத அமைப்புகள் காலா காலமாக கையாள்கிற பிரித்தாளும் சித்தாந்தத்தைப் புரிந்து கொள்ளவேண்டும்.

மெர்சல் படத்தின் வசனங்களை எழுதியவர்கள் அட்லி - ரமணகிரிவாசன். ஆனால், எச்.ராஜாவும், அவரது சகாக்களும் பாய்ந்து குதறுவது இவர்கள் மீதல்ல. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த விஜய் மீது. ஹரிஹரசர்மா ராஜாவின் பாஷையில் சொல்வதென்றால்... ஜோசப் விஜய் மீது!

கொஞ்ச காலம் முன்பு, கபாலி என்றொரு திரைப்படம் வந்தது, நினைவிருக்கும். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை கதை நாயகனாக வைத்த காரணத்தால், அந்த படம் வந்த சமயத்தில் ஆளாளுக்கு அதன் இயக்குனர் ரஞ்சித்தை வறுத்தெடுத்தார்கள்.


மெர்சலுக்காக இன்றைக்கு விஜயை டார்கெட் செய்யும் அடிப்படைவாதிகள், கபாலிக்காக அன்றைக்கு ரஜினியை டார்கெட் செய்யாமல், ரஞ்சித்தை அட்டாக் செய்தது ஏன், யோசித்திருக்கிறோமா? பெரும்பான்மை சமூகத்தை, சிறுபான்மைக்கு எதிராக கொம்புசீவி, கூர்மைப்படுத்துகிற அந்த செயலை ஒரு ‘தர்மமாகவே’ நீண்ட, நெடுங்காலமாகவே சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். மெர்சலுக்காக விஜய்யும், கபாலிக்காக ரஞ்சித்தும் குறிவைக்கப்பட்டதன் பின்னணியில் உள்ள ‘தர்மம்’ இதுவே. அந்த ‘தர்மம்’ சில ஆயிரம் ஆண்டுகள் பழுத்தது என்பதால்... அதன் வேர்கள் இன்றைக்கும் அகற்றக் கடினமானதாகவே இருக்கிறது; அல்லது... அகற்றக் கடினமானதாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

5 கருத்துகள்:

  1. சிவ.கார்த்திகைநாதன்23 அக்டோபர், 2017 அன்று PM 5:05

    மெர்சலுக்காக இன்றைக்கு விஜயை டார்கெட் செய்யும் அடிப்படைவாதிகள், கபாலிக்காக அன்றைக்கு ரஜினியை டார்கெட் செய்யாமல், ரஞ்சித்தை அட்டாக் செய்தது ஏன், யோசித்திருக்கிறோமா?


    நியாயமான கேள்வி.

    பதிலளிநீக்கு
  2. இதை நான் எதிர்பார்க்கவில்லை சூப்பர் சார் உங்கள் விளக்கம். வாழ்த்துக்கள்.
    அகிலன்.

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...