வெள்ளி, 23 ஜூன், 2017

மினி கோப்பையும், மெகா நம்பிக்கையும்!

சாம்பியன்ஸ் டிராபி எனப்படுகிற சின்ன உலகக்கோப்பை தொடரின் பரபரபரபரபரப்பான பைனலில் இந்தியா தோற்றதற்கு என்ன காரணம்? டாஸ் ஜெயித்தும் பீல்டிங் எடுத்த கேப்டனின் முடிவா, படு மோசமான பந்து வீச்சா, அட... பந்து வீச்சே பரவாயில்லைங்க என வெறுக்கடிக்க வைத்த பேட்டிங் திறனா... நிறையக் கேள்விகள் விவாதிக்கப்படுகின்றன. ஒரு குழுவின் தோல்வியாகக் கருதி இந்தப் போட்டியின் முடிவை ஆராய்வதைக் காட்டிலும், மற்றொரு குழுவின் வெற்றியாக இந்த முடிவை உள்வாங்கிக் கொள்ளும்போது, புரிந்து கொள்ள கூடுதலாக சில விஷயங்கள் கிடைக்கக்கூடும்!


னித உழைப்பையும், நேரத்தையும், ஆற்றலையும் அநியாயத்துக்கு வீணடிக்கிற கிரிக்கெட்டை ஊக்குவித்தோ, ஆதரித்தோ எழுதுவதில்லை என்று பூனைக்குட்டி சத்தியமடித்து சபதம் பூண்டிருக்கிறது. என்பதால், ‘பிட்ச் சுழலுக்கு உதவியதா, டாஸ் என்ன பங்கு வகித்தது?’ என்பது போன்ற ‘வளவள’ வழக்கமான கிரிக்கெட் விமர்சனக் கட்டுரை அல்ல இது. 

ர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) தரவரிசைப் பட்டியலில் முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மட்டும் கலந்து கொள்கிற போட்டி சாம்பியன்ஸ் டிராபி. மினி உலகக்கோப்பை என்று எளிதாக மொழிபெயர்ப்பது மீடியா வழக்கம். இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது. இந்த ஆண்டு இங்கிலாந்தில் போட்டி துவங்கிய போது, தரவரிசை அடிப்படையில் எட்டாவது அணியாக, கட்டக்கடைசி இடத்தில் உள்ளே என்ட்ரி கொடுத்தது பாகிஸ்தான். குட்டி பங்களாதேஷ் கூட, தரவரிசையில் பாகிஸ்தானுக்கு மேலே இருந்தது. உள்ளபடியே நிலைமை இருந்தால், 2019ல் இங்கிலாந்தில் நடக்கப் போகிற (பெரிய) உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெறமுடியாத சோக நிலைமை.

கிரிக்கெட் களங்களை ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்திய நிபுணர்களைக் கொண்ட அணி பாகிஸ்தான். இம்ரான் கான், மியான்தத், சையித் அன்வர், அப்துல் காதிர், வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸ், சோயிப் அக்தர்... என்று பட்டியல் நீளமானது. இன்றைக்கு நிலைமை அப்படியாக இல்லை. அந்த அணி வீரர்கள் பெயரை மனப்பாடமாக சொல்லச் சொல்லி ஒரு போட்டித் தேர்வு நடத்தினால், பாகிஸ்தான் மக்களே பாஸ் ஆக திணறுவார்கள். எதனால் / எப்போதிருந்து இந்த மாற்றம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மறக்க விரும்புகிற ஆண்டு - 2009. இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் சென்ற நேரம் அது. லாகூர் டெஸ்ட் விளையாடுவதற்காக கடாபி மைதானத்துக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்த போது திடீரென தீவிரவாதிகள் குறுக்கே புகுந்து விட்டார்கள். துப்பாக்கி, வெடிகுண்டு தாக்குதலில் கேப்டன் மகிளா ஜெயவர்த்தனே உள்பட 7 இலங்கை வீரர்களுக்கு காயம். காப்பாற்றச் சென்ற ராணுவம், பாகிஸ்தான் ரசிகர்கள் என ஆறு பேர் பலி. விசாரித்ததில், லஷ்கர் இ ஜாங்வி (Lashkar-e-Jhangvi) என்ற தீவிரவாத அமைப்பின் கைவரிசை என்று தெரியவந்தது. தாலிபான், ஹர்கத் உல் முஜாகிதீன், ஜெய்ஷ் இ முகம்மத், அல் கய்தா, இஸ்லாமிக் மூவ்மென்ட் ஆப் உஸ்பெகிஸ்தான் போன்ற பல இயக்கங்களுடன் தொடர்புடைய, வளர்ந்து வருகிற தீவிரவாத அமைப்பாம் இது. இவர்கள் அபாயகரமானவர்கள் என பாகிஸ்தான் உளவு அமைப்பே எச்சரித்து, அச்சம் தெரிவிக்கிற அளவுக்கு நிலைமை சீரியஸ். கிரிக்கெட் விளையாட பாகிஸ்தான் உகந்த இடமல்ல என சர்வதேச நாடுகள் கூடி அப்போது முடிவெடுத்தன.

பாகிஸ்தான் கிரிக்கெட் மைதானங்களுக்கு அதற்குப் பிறகு மவுசு போச்சு. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கேலண்டர் படி, பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து விளையாட வேண்டிய நாடுகள், நேராக விமானம் பிடித்து துபாயில் இறங்கிக் கொள்வார்கள். பாகிஸ்தான் அணியும் துபாய் போகும். அங்கு போட்டி நடக்கும். சொந்த நாட்டில் ஒரு போட்டி விளையாட அந்த அணிக்கு எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக வாய்ப்பில்லை. உள்ளூரில் தங்கள் வீரர்களின் ஆட்டத்திறனை ரசிக்க, பாகிஸ்தான் ரசிகர்களுக்கு எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொடுப்பினை இல்லை. இத்தனைக்கும், இந்தியாவைப் போலவே அந்த நாட்டிலும் கிரிக்கெட்டுக்காக டிவியை உடைக்கிற, வீட்டைக் கொளுத்துகிற ரசிகர்கள் எக்கச்சக்கம் பேர் இருக்கிறார்கள்.

ட்டு ஆண்டுகளாக உள்ளூரில் சர்வதேச வீரர்களை எதிர்த்து விளையாட முடியாததன் விளைவு... தரவரிசையில் எதிரொலித்தது. சர்வதேசத் தரத்துக்கு ஏற்ற வீரர்களை அந்த அணியால் கடந்த எட்டு ஆண்டுகளில் உருவாக்க முடியவில்லை. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் காரணமாக, இங்கு நடக்கிற ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடிப் பழக முடியவில்லை. சர்வதேச அளவில் ஜொலிக்கிற முன்னணி பேட்ஸ்மென், பவுலர்களை எதிர்த்து விளையாடி அனுபவம் வளர்க்கிற / கற்றுக் கொள்கிற அரிய வாய்ப்பு, அந்த அணியின் இளம் வீரர்களுக்கு கிடைக்காமலே போய் விட்டது. விளைவாக, சர்வதேச கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் பிடி தளர்ந்தது.

ன்பதால், இம்முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியை யாரும் பெரிதாக எதிர்பார்க்க வில்லை. தென் ஆப்ரிக்கா ஜெயிக்கும், ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு, இந்தியா சாதிக்கும் என்று ஸ்போர்ட்ஸ் காலம் வந்ததே தவிர... பாகிஸ்தான் பற்றி யாரும் பேசவில்லை. ஏன், அந்த நாட்டு ரசிகர்களே அப்படி ஒன்றும் நம்பிக்கை கொண்டதாகத் தெரியவில்லை. ‘‘இந்தத் தொடரை நாங்கள் எந்த எதிர்பார்ப்புகளுமின்றி அணுகினோம். இழப்பதற்கு எதுவுமில்லை என்கிற அளவில்தான் சாம்பியன்ஸ் டிராபி விளையாட இங்கிலாந்து வந்தோம்...’’ என்கிறார் பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமத்.

ணியிலும் அப்படி ஒன்றும் சர்வதேச நுணுக்கங்கள் அறிந்த அனுபவ வீரர்கள் யாருமில்லை. சர்வதேச சூழலுக்கு பெரிதும் புதிய வீரர்களுடன் இங்கிலாந்து வந்த பாகிஸ்தான் அணிக்கு முதல் போட்டியே மிகப்பெரிய இடி. இந்தியா, புரட்டி எடுத்து விட்டது. சர்வதேச ஊடகங்கள் மட்டுமல்ல... பாகிஸ்தான் மீடியாக்களும் காய்ச்சி எடுக்கின்றன. அணியின் டிரெஸ்சிங் அறையில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது. இன்னமும் இப்படியே தொடர்ந்தால்... கிரிக்கெட் என்கிற விளையாட்டே பாகிஸ்தானில் இருந்து முற்றாக விடைபெறும் அபாயத்தை அந்த இளம் வீரர்கள் உணர்கிறார்கள்.

கூடிப் பேசுகிறார்கள். அதன் பிறகான போட்டிகளில் அந்த அணி வீரர்களின் ஆட்டப்போக்கு மாறுகிறது. தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான அடுத்த லீக் போட்டியிலேயே அந்த வித்தியாசத்தை உணரமுடிகிறது. அந்த பாசிட்டிவ் ஆட்டம், பைனல் வரைக்கும் துளி குறைவின்றித் தொடரவும் செய்தது. இந்தத் தொடரை இந்தியாவுக்கு எதிராக துவக்கி, இந்தியாவுக்கு எதிராக முடித்தது பாகிஸ்தான் அணி. தொடரை கவனித்துப் பார்த்திருந்தால் அந்த வீரர்களது  transformationஐ நீங்கள் கண்கூடாக உணர்ந்திருக்க முடியும். முதல் போட்டியில் சாதாரணர்களாக விளையாடியவர்கள், கடைசிப் போட்டியை சாம்பியன்களாக விளையாடினார்கள். ‘‘உணர்வுப்பூர்வமாகவும், உத்வேகத்துடன் கூடிய வெறியுடனும் அவர்கள் விளையாடியதை நான் பார்த்தேன்...’’ - இறுதிப்போட்டியின் 180 ரன் வித்தியாச பரிதாபத் தோல்விக்குப் பிறகு இந்திய கேப்டன் விராத் கோலி இப்படிச் சொன்னார்.

ந்த எதிர்பார்ப்புகளுமற்ற அணியாக இங்கிலாந்துக்கு வந்தவர்கள், சாம்பியன்களாக ஊர் திரும்பியிருக்கிறார்கள். புறக்கணிப்பின் வலி, புதிய உத்வேகங்களைக் கொடுக்கும் என்பதே இயற்கை நியதி. ஒரு சர்வதேச புறக்கணிப்பு, அந்த அணியின் வீரர்களை சர்வதேச சாம்பியன்களாக உருமாற்றம் செய்து அனுப்பியிருக்கிறது.

வெற்றிக் கோப்பையை கையில் பிடித்த படி கேப்டன் சர்ப்ராஸ் இப்படிச் சொல்கிறார்... ‘‘மற்ற அணிகளைப் போல, சொந்த ஊரில் விளையாட எங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததில்லை. சொந்த மண்ணின் சாதகங்களுடன் விளையாடவேண்டும் என்கிற கனவு எங்களைத் துரத்துகிறது. இனிமேலாவது... மற்ற நாட்டு அணிகள் எங்கள் நாட்டுக்கு வரவேண்டும். கிரிக்கெட் விளையாட வேண்டும்....!’’.

பாகிஸ்தானுடன் அரசியல்ரீதியில் நமக்கு ஆயிரம் (அதற்கு மேலும் கூட) பிரச்னைகள் இருக்கலாம். ஆனால், எதிரியிடம் இருந்தும் கற்றுக் கொள்கிறவனே புத்திசாலி. முற்றாகப் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருக்கிற ஒரு குழுவோ, தனிநபரோ என்னவிதமான அணுகுமுறையை கையாளவேண்டும், கடைபிடிக்கவேண்டும் என்பதை சர்ப்ராஸ் தலைமையிலான அந்த அணி உலகிற்கு, உலகெங்கிலும் உள்ள புறக்கணிப்படுகிற குழுக்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது.


குறுக்கு வழிகளால் அல்ல... நேர்மறை அணுகுமுறைகளால் மட்டுமே, மக்களின் இதயத்தை வெல்லமுடியும் என்கிற மெகா நம்பிக்கையை மினி உலகக்கோப்பை போட்டி நடந்த அந்த இரவில், அந்த மைதானம் கற்றுக் கொடுத்திருக்கிறது. வெடிகுண்டுகள் மீதும், ஆயுதங்களின் மீதும் மற்றும் பிரிவினைவாதக் கருத்துகளின் மீதும் மட்டுமே நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் இங்கு பாடம் கற்கட்டும்!

 - திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

3 கருத்துகள்:

 1. தீவிரவாதத்தையும், மனக்கசப்புகளையும் விரட்டும் அருமருந்து என்றால் விளையாட்டு மட்டுமே. வீண் அரசியல் காரணங்களுக்காக விளையாட்டை தடை போடுவது, சமாதான முயற்சிகளுக்கு தடை போடுவது மாதரிி. கட்டுரையின் கடைசி வரி முகத்திலறைந்தது மாதிரி அதை புரிய வைக்கிறது. விளையாட்டுத்தனமில்லாத வியைாட்டு கட்டுரை. வாழ்த்துகள் தோழர்.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் நண்பரே
  உங்களுடைய பதிவு மிகவும் அருமை தொடரட்டும் உங்களுடைய இந்த பயணம்
  வாழ்த்துக்கள்
  discount coupons

  பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...