வியாழன், 24 மார்ச், 2016

எருமைக்கு... எத்தனை வயசு?

நாம எல்லாமே டார்வின் பரிணாம வளர்ச்சி தியரி  (Theory of Evolution)  படித்திருப்போம். குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் என்று கற்று வைத்திருக்கிறோம். ஒரு நிலையில்லாமல், கொள்கை, கோட்பாடுகள் இல்லாமல் தாவிக் கொண்டே....யிருப்பதைப் பார்க்கும் போது அது உண்மைதானோ என்று நம்பித் தொலைக்க வேண்டியிருக்கிறது; இல்லையா? அறிவியல் பூர்வமாக அந்தத் தியரியி்ல் இன்றைக்கு வரைக்கும் சில சர்ச்சைகள் தீர்ந்தபாடில்லை. என்றாலும். மேற்படி தியரியின் படி, நமது மூதாதையர்கள் என அறியப்படுகிற குரங்கார் பற்றி தமிழ் என்ன சொல்கிறது என்று இதுவரை பார்க்காமல் இருப்பது, மெய்யாகவே மன வருத்தம் தருகிறது. என்பதால், இந்தவாரம்... மங்க்கி வாரம்!


வாம்மா... கோகிலம்!

மிழ் இலக்கியங்களில் பார்த்தால், குரங்குகள் பற்றி நிறைய குறிப்பு இருக்கிறது. குரங்குகளுக்கு அவற்றின் வகைகளுக்கு ஏற்ப நிறைய பெயர்களை சூடி ‘அழகு பார்க்கிறது’ தமிழ். கவி, கோகிலம், நாகம், பிலவங்கம், யூகம், கோடாரம், அரி, மந்தி, வலிமுகம், கடுவன், வானரம் - இதெல்லாம், அழகர்மலை பக்கம் செல்லும் போது, வழிமறித்து நம்மை டார்ச்சர் பண்ணக்கூடிய மங்க்கீஸ்களின் தமிழ் பெயர்கள். அடுத்த முறை அவற்றைச் சந்திக்கிற சமயம்... இந்தப் பெயர்களை சொல்லிக் கூப்பிட்டுப் பாருங்கள். கண்களைச் சுருக்கி, தலையைச் சாய்த்து... லேசாக  அவை ஒரு பிளாஷ்பேக் போனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

குல்லா போட்ட மங்க்கி!


துவரைக்கும் பார்த்தது, வாழைப்பழத்துக்காகவும், இதர ஸ்நாக்ஸ் தேடியும் நம்மை அண்டும் லோக்கல் குரங்குகள். கரு மந்தி, கருங்குரங்கு என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதையும் தமிழ் விட்டு வைக்கவில்லை. காருகம், யூகம் - இது இரண்டும் கரு மந்திக்கான தமிழ் பெயர்கள். நீலகிரி, வால்பாறை வனப்பகுதிகளுக்குச் சென்றால், அங்கு ஒரு புது வித குரங்குகளை நாம் சந்திக்க முடியும். நிஜமாகவே மங்க்கி குல்லா போட்டது போல, முகமெல்லாம் பளபளவென இருக்க, தலைக்கு மேல் குபுகுபுவென முடி முளைத்திருக்கும். லங்கூர் குரங்குகள் என்று இதை கூப்பிடுகிறார்கள்.


இந்த லங்கூர்ஸ்களுக்கும் தமிழில் பெயர் இருக்கிறது, தெரிந்து கொள்ளுங்கள். அனுமன் குரங்குகள் என்று பேச்சுவழக்கில் அழைக்கப்படுகிற இந்த லங்கூர் குரங்குகளுக்கு கலை, மைம்முகன், கோலாங்கூலம், கள்வன், முசு, ஒரி என்று தமிழில் பெயர் இருக்கிறதாக்கும்.

மழையே... மழையே!

டுத்து சயின்ஸ். மழை எப்படி பெய்கிறது? சின்ன வயதில் (கட் அடிக்காமல் வகுப்புக்குப் போயிருந்தால்...) படித்திருப்போம். கடல் நீர் ஆவியாக மாறி மேகமாக மாறுகிறது. பின்னர், மேகம் சூடாகி, மழையாகப் பெய்கிறது. படித்தது இப்போ ஞாபகம் வருகிறதா? இது லேட்டஸ்ட் விஞ்ஞானம். ஆனால், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, அதாவது பரிபாடலில் இதுபற்றி பக்காவாக பாடி வைத்திருக்கிறார்கள் பாருங்கள்.

‘‘நிறைகடல் முகந்துராய் நிறைந்து நீர்தளும்பும் தன்
பொறை தவிர்பு அசைவிட...’’ (பரி. 6:1 - 2)

‘மேகங் கருக்குது... மழை வரப் பாக்குது...’ என்று ராஜா பாட்டு கேட்டு ரசித்திருப்பீர்கள். மேகம் எப்படி கருக்குது என்று இந்த பரிபாடல் விளக்குகிறது, அதாவது, கடலில் இருக்கிற தண்ணீரை மேகங்கள், வாரி எடுத்துச் சென்று மழையாக பெய்விக்கின்றன என்கிற மேட்டரை இலக்கிய வர்ணனைகள் பூசிச் சொல்கிறது இந்தப்பாடல். எழுதிய கவிஞருக்கு, மழை விஞ்ஞானம் தெரிந்திருக்கும் பட்சத்தில் மட்டுமே, மேற்படி வர்ணனை சாத்தியம். ஆக, அந்தக் காலத்து தமிழ் சமூகம், அறிவியலில் கொஞ்சம் எக்ஸ்பர்ட்டாக இருந்திருக்கிறது என்பதை இந்த சங்க இலக்கியப் பாடல் சான்றுடன் நிருபிக்கிறது(தானே?!).

வெட்னரி சயின்ஸ்?

ணக்கதிகாரம் பார்த்து ரொம்ப நாளாச்சில்லை? விலங்குகளுக்கு தமிழ் பெயர்களை பார்த்து வருகிறோம். அந்த விலங்குகள் ஒவ்வொன்றுக்குமான வயதை (ஆயுளை) கணக்கதிகாரம் கண்டுபிடித்துச் சொல்கிறது. இந்தப் பாடலைப் படித்துப் பாருங்கள். ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள். சங்க காலத்தில் சாதாரண சயின்ஸ் மட்டுமல்ல... வெட்னரி சயின்ஸூம் இருந்திருப்பதைக் கண்டு வியந்து போவீர்கள்.

‘‘ஆனைமனு நூறா வெருதுகடா மாமைநாய்
ஏனையொட்ட கத்துக்காண் டெண்ணிடிலே - மானனையாய்
நாலஞ்சும் ஆறஞ்சும் நாலெட்டும் நான்மூன்றும்
மூவஞ் செழுபதே மூன்று...’’

பாடல் சொல்ல வருவதென்ன? ‘‘மான் போன்ற கண்களை உடையவளே... (புலவர், தனது லவ்ஸிடம் சொல்கிறாராம்!)
* ஆனைக்கும், மனிதருக்கும் அகவை நூறு
* பசுவுக்கும், எருதுவுக்கும் அகவை இருபது
* எருமைக்கடாவுக்கு அகவை முப்பது
* குதிரைக்கு அகவை முப்பத்திரண்டு
* ஆட்டுக்கு அகவை பன்னிரண்டு
* நாய்க்கு அகவை பதினைந்து
* ஒட்டகத்துக்கு அகவை எழுபத்து மூன்று.

- அகவை என்றால், வயது என்பது தெரியும்தானே? ஆடு, மாடு துவங்கி ஒட்டகம் வரைக்கும் அத்தனைக்கும் ஆயுள் கணித்திருக்கிறார் புலவர். நம்ப முடியாதவர்கள், நல்ல வெட்னரி டாக்டரிடம் இந்தப் பக்கத்தைக் காட்டி தெளிவு பெறலாம்.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

2 கருத்துகள்:

  1. தமிழ் இலக்கணம் கடந்து, இலக்கியங்களிலும் புகுந்து விளையாடுது "நம் மொழி செம்மொழி" தொடர். வாழ்த்துக்கள் :-)

    பதிலளிநீக்கு
  2. தமிழ் இலக்கணம் கடந்து இலக்கியங்களிலும் புகுந்து விளையாடுகிறது "நம் மொழி செம்மொழி" தொடர். வாழ்த்துக்கள் :-)

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...