ஞாயிறு, 28 ஜூன், 2015

கண்களை பார்க்காதீர்கள்; ஏனென்றால்...

வாக்கியத்தின் வகைகள் பற்றிய சப்ஜெக்ட் ஜோராகப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் ‘கமா, ஃபுல் ஸ்டாப்’ வந்து திசையை மாற்றி விட்டது. என்ன செய்ய..? பாதை மாறி பயணம் செய்வதும், அப்புறம் ரிவர்ஸ் கியரடித்து பழைய இடத்துக்கு வருவதும் இந்தத் தொடரைப் பொறுத்தவரை, ஏறக்குறைய பழகிப்போன விஷயமாகி விட்டதே? ஒரு வாக்கியத்தின் அமைப்பு முறைகளை கொண்டு, அதை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கமுடியும் என்றும், அதில் தனி வாக்கியம் (Simple sentence) பற்றியும் கடந்த வாரங்களில் பார்த்தோம். நமது அன்றாட எழுத்துக்கள் முழுமையாக தனி வாக்கியங்களையே சார்ந்திருக்கின்றன.


கமலஹாசன் நடிகர் மட்டுமல்ல!

ஞ்சிய மூன்று பிரிவுகள் தொடர் வாக்கியம் (Compound sentence), கலவை வாக்கியம் (Complex sentence), தொடர் கலவை வாக்கியம். ஒன்றுக்கு மேற்பட்ட வாக்கியங்களை அதனால், இதனால், ஆகையால், ஏனென்றால் போன்ற இணைப்புச் சொற்களையோ அல்லது அரைப் புள்ளியையோ (Semi colon) இட்டு எழுதுவது தொடர் வாக்கியம். இந்த இணைப்புச் சொற்களை எடுத்து விட்டால், ஒவ்வொன்றும் ஒரு தனி வாக்கியமாக இயங்கமுடியும். கமலஹாசன் நல்ல நடிகர் மட்டுமல்ல; அவர் சிறந்த எழுத்துத் திறனும் கொண்டவர். நடுவில் உள்ள அரைப்புள்ளியை எடுத்து விட்டு, இந்தத் தொடர் வாக்கியத்தை, இரு தனி வாக்கியங்களாக அமைத்து விடமுடியும்.

ல வாக்கியங்களைக் கலந்து ஒரு வாக்கியமாக எழுதினால் கலவை வாக்கியம். இதில் ஒன்று முதன்மை வாக்கியமாகவும், மற்றவை அதன் சார்பு வாக்கியங்களாகவும் இருக்கும். கலவை வாக்கிய அமைப்பை இப்போதெல்லாம் யாரும் அதிகம் பயன்படுத்துவதில்லை. தலைசுற்றி விடும். மீறி, பயன்படுத்தினால், ‘போதுமப்பா... செம்மொழி கட்டுரை...’ என்று பக்கத்தைப் புரட்டி விடுவார்கள். ‘இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் செம விறுவிறுப்பாக இருந்தது என்றும், அதை நான் பார்க்காமல் விட்டது பெரிய இழப்பு என்றும் நண்பன் கூறியதும், சரி இந்தியா, தென் ஆப்ரிக்கா போட்டியையாவது இன்று கட்டாயம் பார்த்து விடவேண்டும் என்று முடிவு செய்தேன்...’ - இது கவலை... ஸாரி... கலவை வாக்கியம். பிடிச்சிருக்கா?

லவை வாக்கியங்களில், தொடர் வாக்கியத்தின் அம்சங்களையும் கலந்து எழுதினால், அதற்குப் பெயர் தொடர் கலவை வாக்கியம். ‘என்னை அறிந்தால் படத்தில் த்ரிஷாவும் நடித்திருக்கிறார் என்றும், அந்தப் படத்தில் அவரது நடிப்பு பிரமாதம் என்று அறிந்ததும், நான் என் நண்பனிடம் சென்று படத்தின் டிவிடி இருக்கிறதா என்று கேட்டேன்; டிவிடியில் பார்ப்பது தப்பு என்று உணர்ந்ததும், தியேட்டருக்கே சென்று படத்தைப் பார்த்துத் திரும்பினேன்...’ இது தொ.க. வாக்கியம். கூடுமான வரைக்கும் சின்னச் சின்னதாய், அதிகப்பட்சம் நான்கு அல்லது ஐந்து சொற்களுக்கு மிகாமல் தனி வாக்கியங்கள் எழுதினால், படிக்கிறவர்களுக்கு நல்லது! இந்தளவில் வாக்கியங்கள் பற்றிய புரிதலை நிறுத்திக் கொண்டு நிறுத்தக்குறிகளுக்கு பயணப்படுவோம்.

கண்ணை பார்க்காதீங்க!

டந்தவாரம் ‘கமா’ பார்த்தோம். அதாவது காற்புள்ளி. இந்த வாரம் அரைப்புள்ளி. அதாவது செமிகோலன் (Semi colon).இருக்கிறதே என்று போட்டு தீட்டி விடக்கூடாது. அரைப்புள்ளி எனப்படுகிற செமிகோலன் எங்கு போடவேண்டும் என சில நெறிமுறைகளை வகுத்திருக்கிறார்கள்.

* வாக்கியத்தில் ஒரு எழுவாய், பல பயனிலைகள் கலந்து வருமானால், இடையிலுள்ள பயனிலைகளுக்கு அரைப்புள்ளி போடலாம். (டோனி கிரிக்கெட் விளையாடுவார்; கால்பந்தும் விளையாடுவார்).

*  ஏனென்றால், ஏனெனில் ஆகிய இணைப்புச் சொற்களுக்கு முன்னால் அரைப்புள்ளி அவசியம் (‘என் கண்ணைப் பார்க்காதீர்கள்; ஏனென்றால் எனக்கு மெட்ராஸ் ஐ).

*  ஒரு வாக்கியத்தில் பல சிறு வாக்கியங்கள் இருந்து முழுக் கருத்தையும் விளக்குமானால், ஒவ்வொரு வாக்கியத்துக்குப் பின்னாலும் அரைப்புள்ளி இடவேண்டும். (நான் எப்ப வருவேன், எப்டி வருவேன்னு தெரியாது; வரவேண்டிய நேரத்துக்கு சரியா வந்திடுவேன்).

*  ஒரே வாக்கியத்தில் ஒன்றுக்கொன்று முரணான கருத்தைக் கொண்ட சிறிய வாக்கியங்கள் இணைந்து வருமானால், சிறு வாக்கியத்தின் பின்னால் செமிகோலன் (நிறைகுடம் தளும்பாது; காலி குடம்தாண்டா கலகலக்கும்).

நிறுத்தக்குறியில் தெரிந்துகொள்ள நிறைய இருக்கிறது. அடுத்தவாரத்துக்கு மிச்சம் வைப்போம்.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...