ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

தோழியை திட்டினால்... எந்த அணி?

‘‘கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைகள் வருகிறது. வீட்டுக்கு வர்ணம் அடிக்கவேண்டும்...’’ - இந்த வாக்கியம் சரியா? ஏதாவது தப்பு தட்டுப்படுகிறதா? தொடர்ச்சியாகச் செய்கையில், தவறான விஷயங்கள் கூட சரி போல ஆகிவிடும். இந்த வாக்கியத்தில் ‘வர்ணம்’ என்கிற பதம் படு அபத்தம். வர்ணம் என்கிற சொல், வடமொழி. அது, நிறத்தை மட்டுமல்ல வேறுபாடுகளையும் கூட (நான்கு வகை வர்ணம்) குறிக்கும் (வர்ணா). வண்ணம் என்பதே மிகச்சரி. வண்ணத்துப் பூச்சி, வண்ணக்கோலம் என்றுதானே சொல்கிறோம். வர்ணத்துப்பூச்சி, வர்ணக்கோலம் என்றில்லையே?

ம்மை தடுமாற வைப்பதற்காகவே இன்னும் நிறைய வார்த்தைகள் இருக்கின்றன. கட்டிடம், கட்டடம்... இரண்டில் எது சரி? ரொம்ப யோசிக்க வேண்டியதில்லை. வீடு, திரையரங்கம், ஆலை, அடுக்குமாடி குடியிருப்பு... இதெல்லாம் கட்டடம் (Building). அதாவது, கட்டி முடிக்கப்பட்ட கட்டமைப்பு, கட்டடம். சரியா? மேற்படி கட்டடங்களை கட்டுவதற்காக இடம் வாங்கி வைத்திருந்தால், அது கட்டிடம் (Plot, Site). அதாவது, கட்டிடம் இருந்தால், கட்டடம் கட்டலாம். புரியுதா? இப்படி இன்னும் பார்க்கலாம். இந்தப் புரிதல்களோடு அணி இலக்கணத்துக்கு பயணப்படலாமா?

டாக்டரிடம் எப்படி பேசுவீங்க?

டாக்டரிடமும், வக்கீலிடமும் உள்ளது உள்ளபடி சொல்லவேண்டும் என்பார்கள், கவனித்திருக்கிறீர்களா? அதாவது, இயல்பு நவிற்சி அணியில் பேசவேண்டும் என்கிறார்கள். இ.ந. அணி என்றால், எந்த மிகைப்படுத்தல், குறைப்படுத்தல்கள் இல்லாமல், நமது சரக்கை சேர்க்காமல், உள்ளது உள்ளபடி பேசுவது. அவ்வளவுதான். ‘ராத்திரி முழுக்க மழை பெய்ஞ்சுது, கிழக்கில் சூரியன் உதித்தது, அந்தப் பொண்ணு அழகு...’ இதெல்லாம் இயல்பு நவிற்சி அணி. ‘ராத்திரி முழுக்க மழை பின்னி பெடலெடுத்திடுச்சி, கிழக்கில் இருந்து சூரியன் தகதக பொன்னொளியுடன் கிளம்பியது, அந்தப் பொண்ணு ஜெகன்மோகினி மாதிரி படு அழகு...’ - இப்படியெல்லாம் எழுதினால், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை அணி. வகைகளை அடுத்தடுத்து பார்க்கலாம். உள்ளது உள்ளபடி எழுதக்கூடிய இயல்பு நவிற்சி அணியை தன்மை நவிற்சி அணி என்றும் கூட சொல்லுவார்கள்.

ஹீரோக்களுக்கு பிடிக்காத அணி

ஆனால், இப்போதெல்லாம் இயல்பு நவிற்சி அணியைப் பயன்படுத்தி யார் பேசுகிறார்கள்? தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு பிடிக்காத அணி... இந்த இ.ந. அணி (ஓங்கி அடிச்சா... ஒண்ணரை டன் வெயிட்ரா!). நான் சொல்வது சரிதானே? உவமை அணிதான் அவர்களுக்கு அதிகம் கைகொடுக்கிறது. பிடிக்கிறது. அதென்ன உவமை அணி? ‘மயில் போல பொண்ணு, குயில் போல பேச்சு...’ என்று இளையராஜா பாடல் உதாரணத்துடன் கடந்தவாரம் பார்த்தோம். ‘‘எழுதுபவர் தனது எழுத்தில் மிகவும் சிறப்பித்துக் கூற விரும்புகிற ஒரு பொருளை, மக்களால் மிகவும் மதிக்கப்படுகிற மற்றொரு விஷயத்தோடு இணை வைத்து / ஒப்பிட்டுச் சொல்வது உவமை. சொல்லப்படுகிற பொருள், அதை உயர்த்திக் காட்டும் உவமை மற்றும் உவம உருபு ஆகியவை உவமை அணியில் இருக்கும். மயில் போல பொண்ணு - இந்த வரியில் மயில் என்பது உவமை. பொண்ணு என்பது பொருள். போல என்பது உவம உருபு (பொருளையும், உவமையையும் இணைக்க உதவுகிற சொல்)’’ இது கடந்தவாரம் படித்த விஷயம்.

தலைவன் படம் எப்பிடி?

இந்த உவமை அணியில் நிறைய கிளைகள் இருக்கின்றன.
‘ஊர்ல மழை, தண்ணி எப்படி?’
‘போப்பா நீ வேற... மகாவிஷ்ணுவைக் கூட பார்த்திடலாம்; மழையத்தான் பாக்க முடியல!’ - இல்லாத விஷயத்தை உதாரணமாகக் கூறி புரிய வைக்க முயற்சி செய்தால் அது இல்பொருள் உவமை அணி. ‘மகாவிஷ்ணுவைக் கூட பார்த்திடலாம், மழையைப் பார்க்க முடியல...’ என்று சொன்னால், கடவுள் மறுப்புக் கொள்கையுடைய நண்பர்கள், ‘இது இல்பொருள் உவமை அணி தோழர்’ என்று அணி பிரிப்பார்கள்.
ஆனால், நமக்கெல்லாம் ரொம்பவும் பிடித்தது உயர்வு நவிற்சி அணி (Hyperbole or Exaggeration). எக்கச்சக்கமாய் ‘பில்டப்’ கொடுத்து பேசுகிறவர்கள் எல்லாமே இந்த அணிக்காரர்கள். ஒரு விஷயத்தை நம்ப முடியாத அளவுக்கு மிகைப்படுத்தி சொன்னால், அது உ.ந. அணி. ‘எகிறிக் குதித்தேன்... வானம் இடித்தது...’ என்று பாய்ஸ் சினிமா பாடல் கேட்டிருப்பீர்கள். எகிறி குதித்தால் வானம் இடிக்குமா என்ன? என்பதால், இது உ.ந. அணி.

‘மாமு... தலைவன் படம் பார்த்தியே... எப்டி இருக்கு?’
‘கழுத்தில ரத்தம் வந்திருச்சி மச்சான்...!’ - இதுவும் உயர்வு நவிற்சி அணியே. ‘படம் நல்லா இல்லைப்பா’ என்று சொன்னால் போதாதா? கழுத்தில ரத்தம் வந்திருச்சி என்று இப்படியா கரி பூசுவது?
பெண்கள் பேசும் போது கவனித்திருக்கலாம். ‘போடி மூதேவி... சனியனே’ என்றெல்லாம் ஒரு சிலர் தோழிகளைத் திட்டுவார்கள். இப்படி எல்லாம் திட்டக்கூடாது. அது தப்பு. ஆனால், விஷயம் அதில்லை. ‘போடி மூ..., ச....!’ - இது என்ன அணி? இல்பொருளா; உயர்வு நவிற்சியா? யோசிங்க. அணிகள் அடுத்தவாரமும் அணிவகுத்து வரக் காத்திருக்கின்றன.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...