திங்கள், 27 ஏப்ரல், 2015

சிலையில்லா கருப்பனும்... 328 கிடாக்களும்!

மிழகம், திருவிழாக்களின் தேசம். வினோத, வித்தியாச திருவிழாக்களுக்கு பஞ்சமே இல்லை. சுவாமிக்கு குவார்ட்டர் பாட்டில்களை தட்சணை வைத்து (ஐஸ் வைத்து?!) அப்ளிக்கேஷன் போடுவது துவங்கி, கோயிலுக்குள் கார மிளகாயை அரைத்து அம்மனுக்குப் பூசுவது, காசை வெட்டிப் போடுவது... என நம்மூரில் நடக்கிற வித்தியாசத் திருவிழாக்கள், பி.எச்டி பண்ண மிகவும் தகுந்த சப்ஜெக்ட்.. ஒவ்வொரு திருவிழாவுக்குப் பின்னணியிலும் பலமான நம்பிக்கைகள் உண்டு. காசை வெட்டிப் போட்டால் போதும்... துரோகம் செய்தவரின் சீன் ஜிந்தாபாத் ஆகிவிடுமாம். அம்மனுக்கு மிளகாய் அரைத்துப் பூசினாலும் அதே எஃபக்ட்தான். ஒரு லட்சம் கொசுக்கள் ஒரே நேரத்தில் கடித்தது போல, தப்புத்தாண்டா பார்ட்டிகள் தலைகீழாகப் புரண்டு உருளவேண்டிய அளவுக்கு அம்மன் படுத்தி எடுத்து விடுமாம். இந்த வரிசையில்... கருப்பு நிற வெள்ளாடுகளின் ‘கதையை முடித்து’ விடிய, விடிய வெளுத்துக் கட்டுகிற வித்தியாசத் திருவிழா ஒன்று சிவகங்கைப் பக்கம் வருடம் தவறாமல் நடக்கிறது.

சிலை இல்லியாம்ல?
சிவகங்கைக்கு பக்கத்தில் இருக்கிற திருமலை கிராமத்தில் உள்ள மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் ரொம்ப விசேஷம். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தக் கோயிலுக்கு பக்கத்தில் இருக்கிறது மடை கருப்பசாமி கோயில். பல நூற்றாண்டு பாரம்பரியம் வாய்ந்த கோயில். இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா படு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
மடை கருப்பசாமி கோயில் கொஞ்சம் வித்தியாசமானது. கருப்பசாமிக்கு இங்கு சிலை கிடையாது. சாமியை நினைத்துக் கொண்டு அரிவாள், மணிகளை நேர்த்திக்கடனாக செலுத்தி பக்தர்கள் வேண்டுதல் செய்கிறார்கள். நீர்வளம், விவசாயம் செழிக்க இங்கு ஒரு வினோதத் திருவிழா நடக்கிறது. ஆண்கள் மட்டுமே பங்கேற்கிற விழா இது.

இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா ஏப்ரல் 17ம் தேதி துவங்கியது. ஊரில் இருக்கிற ஆண்கள், காப்புக் கட்டி விரதம் துவக்கினர். திருவிழாவின் எட்டாம் நாள்தான் ஹைலைட். அதாவது, ஏப்ரல் 24ம் தேதி பகல் 12 மணிக்கு திருமலையில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் ஊர்வலமாக மடை கருப்பசாமி கோயிலுக்கு புறப்பட்டனர். நேர்த்திக்கடன் செலுத்த அரிவாள், மணி, கருப்பு நிற வெள்ளாடுகளுடன்  கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.

வெள்ளாடு... விளையாடு!

கோயில் வாசலில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற ஆட்டுத் தலைகள்.

கோயில் வாசலில் அடுக்கி
வைக்கப்பட்டிருக்கிற ஆட்டுத் தலைகள்.
மாலை 4 மணிக்கு ஆரம்பித்தது ஆட்டம். கருப்பு நிற வெள்ளாடுகள் கட்டி இழுத்து வரப்பட்டதில்லை. ஒவ்வொன்றாக இழுத்து வந்து, கருப்பசாமிக்கு பலியிடப்பட்டன. முதலில் கிராமத்து ஆடு. அடுத்து பூசாரியின் ஆடு. அதற்கப்புறம் வரிசையாக பக்தர்களின் ஆடுகள். அன்றைய சில மணித்துளிகளில் கழுத்து கட்டான ஆடுகளின் மொத்த எண்ணிக்கை  328. வெட்டுப்பட்ட ஆடுகளின் இறைச்சி சேகரிக்கப்பட்டு ஒரு பக்கம் கமகமக்கிற சமையல் துவங்கியது. வெறும் மட்டன் மட்டுமே போதுமா?

பல்லி சத்தம் கேட்டுச்சா?

சினிமா ஷூட்டிங் நடக்கிற இடம் அல்ல
. அசைவ விருந்து நடக்கிற திடல் இது.
மற்றொரு பக்கம் பச்சரிசி சாதம், பொங்கல் சமைக்கப்பட்டது. ஆவி பறக்கிற பொங்கல், சமைத்த இறைச்சி, வெட்டப்பட்ட ஆடுகளின் தலைகளை சுவாமி முன் வைத்து சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் வழிபட்டனர். சாமியாடிய பூசாரியிடம் மழை வளம், செழிப்பான விவசாயம், நோய் தாக்குதல் குறித்து அருள்வாக்கு கேட்டனர். நள்ளிரவு 12 மணியளவில் பல்லியின் அசரிரீ ஒலி கேட்டதும், அங்கிருந்த பெரிய திடலில் விருந்து துவங்கியது. இதற்காக, அந்தத் திடல் பகுதி சினிமா காட்சிகள் போல ஸ்பெஷல் லைட்டிங் எபெக்ட்டுடன் கலக்கியது.

நல்லி எலும்ப  தனியா எடுத்துப் போடுப்பா...
ஆண் பக்தர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் அசைவ உணவு பரிமாறப்பட்டது. ‘போதும் சாமி ஆள விடுங்க....’ என்று கையெடுத்துக் கும்பிடுகிற அளவுக்கு திகட்டத் திகட்ட மட்டன் இலையை நிறைத்தது. அதிகாலை 2 மணி வரை அசைவ விருந்து களைகட்டியது. அங்கிருந்து கிளம்பிய மட்டன் மசாலா வாசனை... கிராமத்தில் இருந்த ஒரு பெண்ணைக் கூட நிம்மதியாக தூங்கியிருக்க விட்டிருக்காது!

நோ பார்சல்!

நல்லா தம் கொடுத்து வேக வையுங்க.
 கறி சும்ம்மா பதமா, இதமா இருக்கணும்!
இந்த தடபுடல் அசைவ விருந்தில் மதுரை, காரைக்குடி, திருப்புத்தூர், சிவகங்கை, மேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் சமைக்கப்பட்ட உணவு வகைகளை வீடுகளுக்கு எடுத்து செல்லும் வழக்கம் இல்லை. எவ்வளவு வேண்டுமோ... முடியுமோ... அந்தளவு அங்கேயே சாப்பிட்டுக் கொள்ளலாம். ஒரு துண்டு கூட வீட்டுக்கு எடுத்துப் போகக்கூடாது.  என்பதால், அனைவரும் சாப்பிட்ட பின்னர், எஞ்சிய இறைச்சியை அங்கேயே மண்ணில் குழி தோண்டி புதைத்தனர். ஆடுகளின் தோல்களை தீயிட்டு எரித்தனர்.

ஆறாயிரம் ஆண் பக்தர்களுக்கும்
அம்சமாக நடக்கிறது அசைவ விருந்து.
சிவகங்கை மாவட்டத்தில், இந்தக் கோயில், எக்ஸாட்டாக எங்கிருக்கிறது என்று விசாரித்துக் கொண்டிருக்கிறது. அடுத்த சித்திரையில் அமர்க்களப்படுத்தி விடுகிற ஒரு ஐடியா இருக்கிறது!


- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

2 கருத்துகள்:

  1. இந்த விழா சில சில சாதி மட்டுமே பங்கெடுக்க முடியுமா?

    பதிலளிநீக்கு
  2. அதுபற்றியும் எழுதுகிறேன். அதற்கு முன்பாக, அன்பு நண்பரின் விபரங்களை நான் தெரிந்து கொள்ளலாமா?

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...