வெள்ளி, 27 பிப்ரவரி, 2015

‘ஓடு’ம் போது... உரசக்கூடாது!

ரே ஒரு ‘இச்’ நிறைய... நிறைய மாற்றங்கள் செய்யும் என்று தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறோம். பைக்கில் நண்பர்களுடன் ‘டிரிபுள்ஸ்’ வரும் போது போலீஸ் மடக்கி விடுகிறது. ‘ஒரு பைக்கில மூணு பேர் போகலாமா?’ என்று சாவியை பிடுங்க தயாராகிறார் காக்கிச்சட்டைக்காரர். ‘‘சார்.. சார்... கூடப் படிக்கிற பையன், மருந்தைக் குடிச்சிட்டான் சார் (இருமல் மருந்து?!). ஹாஸ்பிடல் போய்கிட்டு இருக்கோம் சார்....’’ என்று வடகிழக்கு பருவமழை போல கண்களில் கண்ணீர் சிதற பரிதாபமாகச் சொல்கிறீர்கள். போலீஸ்காரர் சர்வீசுக்கு புதிதாக இருக்கவேண்டும். ‘பாத்துப் போங்கப்பா...’ என்று கண்ணீரைத் துடைத்து, அனுப்பி வைக்கிறார். நமட்டுச் சிரிப்புடன் கியரை மாற்றி பைக்கை கிளப்புகிறீர்கள். ரைட்டா? இனி தமிழுக்கு வருவோம்.


போலீஸ்காரரிடம் நீங்கள் சொன்னது - பொய்ச்சொல் (‘இச்’ இருப்பதால், பொய்யான சொல்). ‘மாப்ள... இந்த ஏரியால போலீஸ் இருக்கும். பிடிச்சா... ஹாஸ்பிடல் போறோம்னு அடிச்சி விடு’ என்று உங்கள் நண்பர் முன்னதாகவே உங்களிடம் எச்சரிக்கை கொடுத்திருந்தால்... ‘பொய் சொல்’ (‘இச்’ இல்லாததால் பொய்யை சொல்) என்று சொல்லியிருக்கிறார். ‘இச்’சில் இருக்கிற சிக்கலைப் பார்த்தீர்களா? சரி. வல்லின எழுத்துக்கள் மிகக்கூடாத இடங்களின் கடந்த வாரத் தொடர்ச்சியைப் பார்க்கலாம்.

* கேள்வி வாக்கியத்திற்கு உதவுகிற ‘ஆ, ஓ, ஏ’ ஆகிய வினா எழுத்துகளின் பின் வருகிற வல்லினம் மிகாது.
‘வெறும் பிரெண்டு மாதிரி நெனச்சுத்தான் உன் கூட பழகினாளாம்...’ என்று உங்கள் நண்பர் ‘அணுகுண்டு’ வீசுகிறார். கால்களுக்குக் கீழே நிலம் ஆட... ‘அவளா சொன்னா? நீயே கேட்டியா?’ என்றெல்லாம் கண்ணீர் சிந்தும் போது ‘இச்’ பற்றி நினைத்தும் பார்க்கக்கூடாது. அவளாச் சொன்னா... நீயேக் கேட்டியா எல்லாம் தப்பு ப்ரோ.

* பெயரெச்சங்களுக்குப் பின்னால் வல்லினம் மிகாது.
காகங்கள் நமது பைக் சீட்டில் செய்கிற எச்சம் தெரியும். அதென்ன பெயரெச்சம்? ஒரு சொல் முடியாமல் - நடந்த, பார்த்த, ஓடிய - இருந்தால் அது எச்சம் (Participles). ஒரு எச்சத்துக்குப் பின்னால் பெயர்ச்சொல் வந்தால் பெயரெச்சம் (நடித்த தமன்னா). வினைச்சொல் வந்தால் வினையெச்சம் (Verbal participle) நடித்து அசத்தினார். யாரு...? தமன்னா தான்! பெரிய பொண்ணு, அழியாத கோலங்கள்... இதெல்லாம் கூட பெயரெச்சமே (Relative participle).

* எட்டு, பத்து (எட்டுக்கட்டை, பத்துப்பாட்டு) ஆகிய இரு எண் தவிர மற்ற எந்த எண் பெயர்களுக்குப் பின்னாலும் ஒற்று வராது.
ஒன்று தா (ஒன்றுத் தா அல்ல), ஒரு பொருள், இரு பறவை, மூன்று பாட்டில், நான்கு கடை, ஐந்து சட்டை, ஆறு பெண்கள், ஏழு பிறவி, ஒன்பது சுவை.

* அஃறிணைப் பன்மையில் ஒற்று கூடாதுங்கோவ்.
பல குரங்கு (பலக்குரங்கு அல்ல), சில கழுதை (சிலக்கழுதை என்றால் உதைக்கும்).

* ஏவல் வினை (Imperative mood) வாக்கியத்தில் வல்லெழுத்து கூடாது.
கடந்த வாரம், மண்டையோடு மாந்த்ரீகம்... ஏவல் வினை என்றெல்லாம் படித்து விட்டு, நம்மொழி செம்மொழி தொடர் திடீரென ஏன் டெரருக்கு மாறுகிறது என்று நிறையப் பேர் நெற்றியில் விபூதி பூசிக் கொண்டு ராத்தூக்கம் போட்டிருக்கிறார்கள். ஏவல் வினை என்பது பில்லி சூனிய சமாச்சாரம் அல்ல. சுத்தமான தமிழ் இலக்கணம். செயல்களை அடிப்படையாகக் கொண்ட சொற்களை வினைச்சொற்கள் என்கிறோம். வினைச்சொற்களில் நிறைய உட்பிரிவுகள் உண்டு. ஏவலில் முடியும் வினைச்சொற்களை ஏவல்வினை என்கிறார்கள். அங்கே போ, இங்கே வா, சொல்றதைச் செய்... என்று அதிகாரமாக ஆர்டர் போடுகிறீர்கள் இல்லையா? அதுதான் ஏ.வி.

‘‘நட, வா, மடி, சீ, விடு, கூ, வே, வை,
நொ, போ, வௌ, உரிஞ், உண், பொருந், திரும், தின்,
தேய், பார், செல், வவ், வாழ், கேள், அஃகு என்று
எய்திய இருபான் மூன்றாம் ஈற்றவும்
செய் என் ஏவல் வினைப் பகாப்பதமே...’’ என்கிறது நன்னூல் (147) சூத்திரம்.
வா பீம், போ மைட்டி ராஜூ, நட காலியா... இதெல்லாம் தான் ஏவல் வினை (அப்பாடா, குழந்தைகளையும் கவர்ந்தாச்சு!).

நம்மொழி செம்மொழி தொடரை ரெகுலராக படிக்கிற கல்லூரி மாணவர் திடீரென தொடர்பில் வந்தார். ‘ஓடும் போது உரசிக் கொள்ளலாமா, கூடாதா சார்?’ - ஆர்வமாகக் கேட்டார். ‘கூடவே கூடாது... கூடாது பிரதர்...’ என்று அழுத்த்த்தம் திருத்த்த்தமாக பதில் அளித்தேன். ‘இணைய தலைமுறைக்காக எழுதறது சரிதான். அதுக்காக... உரசுறது, இடிக்கிறது எல்லாம் கூடவா எழுதணும்’ என்று வருத்தமாக நீங்கள் கேள்வி எழுப்பினால்... இதுவும் இலக்கணம்தாங்க... என்பது எனது பதில். அதென்ன உரசல் இலக்கணம்?
காத்திருங்க!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

2 கருத்துகள்:

  1. ஆஹா ,இலக்கணத்தைக் கூட இவ்வளவு இனிமையாச் சொல்லித் தர முடிகிறதே ..வாழ்த்துக்கள் ஜி :)
    த ம 2

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...