செவ்வாய், 16 ஏப்ரல், 2019

இது, டெல்லி கணக்கு!

ந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுங்க... அந்தக் கட்சிக்கு போடாதீங்க... என்று உங்களிடம் கருத்துத் திணிப்பு செய்வது இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல. பின்னே எதுக்காம் இது...? ஏப்ரல் 11 துவங்கி, மே 19 வரைக்கும் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடக்கிற மெகா தேர்தல் போட்டியில், சாம்பியன் டிராபி யாருக்கு? வாக்கு எண்ணிக்கை நடக்கிற மே 23ம் தேதி நண்பகலில், எந்தக் கட்சி அலுவலகங்களின் முன்பாக பட்டாசு சத்தமும், இனிப்பு வினியோகமும் இருக்கும்? இந்தக் கேள்விகளுக்கான விடை தேடி, கூடுமான அளவில், நடுநிலையான அல்லது நடுநிலைக்கு சற்று நெருக்கமான ஒரு அலசலே, இது. போலாம் ரைட்!


பணம் இருக்கு... ஆனா, இல்லை?

சுதந்திரத்துக்குப் பிறகு நாடு சந்திக்கும் மிக முக்கியமான தேர்தலாக இந்த 2019 மக்களவைத் தேர்தல் பார்க்கப்படுகிறது. என்ன காரணம்? ஐந்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த தாமரைஸ், விவசாயிகள் / பிற்படுத்தப்பட்டவர்கள் / சிறுபான்மை சமூகத்தினர் / அடித்தட்டு, ஏழை, எளிய விளிம்பு நிலை மக்களை உண்டு, இல்லை என ஒரு வழி செய்து விட்டதாக நாடு முழுக்க ஒரு கருத்தாக்கம் ஓடுகிறது. காஷ்மீரில் இருந்து, கன்னியாகுமரி வரைக்கும் மக்களிடையே நிலவுகிற பொதுவான கருத்து இது.

நியாயமாகப் பார்த்தால், இந்தக் கருத்தில் உண்மை இல்லாமல் இல்லை. பாக்கெட் பர்ஸில் இருந்த பணத்தை திடீரென பிக்பாக்கெட்டில் பறிகொடுத்தவனின் மனநிலை எப்படியாக இருக்குமோ, அப்படியாக ஒரு தேசம் முழுமைக்குமான மனநிலை இருந்தது - பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது. பேங்க் அக்கவுண்ட்டில் பணம் இருக்கிறது. போதுமான அளவுக்கு இருக்கிறது. ஆனால், மருத்துவச் செலவுக்குக் கூட எடுக்க முடியவில்லை என்றால்... அது இருந்தென்ன, இல்லாமல் போனால் என்ன? ஏடிஎம் வாசல்களில் கால்கடுக்க நின்று, சுருண்டு விழுந்து, சொர்க்கலோக பிராப்தி அடைந்தவர்கள் எண்ணிக்கை ஏராளம்.

யூ... ஆன்டி இந்தியன்!

‘வேலை இல்லையா, விடு கழுதைய... ஒரு பொட்டிக்கடை வெச்சாவது பொழைச்சிக்கலாம்...’ என்று ஊர்சுற்றிப் பிள்ளைகளை சொல்லுவார்கள். தவறான பல பொருளாதார நடவடிக்கைளால், அந்தப் பொட்டிக்கடை வாய்ப்பு கூட காணாமலானது. சரி. திருப்பூர், கோயம்புத்தூருக்கு பஸ் ஏறிப் போய் ஏதாவது ஒரு பனியன் கம்பெனியில் சேரலாம் என்றால்... ஜிஎஸ்டி என்று ஒரு சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தினார்கள் பாருங்கள்... வேலை கேட்டுப் போய் கம்பெனி வாசலில் நின்றால், கம்பெனியை இழுத்துப் பூட்டிக் கொண்டு முதலாளி வெளியே வந்து கொண்டிருக்கிறார். என்னடா கொடுமை என்று விரக்தியில் புலம்பியவர்கள்... ஆன்டி இந்தியன் ஆனார்கள்.

ன்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக்கூடாது என்று டோட்டல் பாடி செக்கப் முடிந்தப் பிறகு டாக்டர்கள் சொன்னால், அதில் நியாயம் இருக்கிறது. ஆனால், ஒரு அரசாங்கம் அல்லது அரசாங்கத்தை வழிநடத்துகிறவர்கள் சொல்லலாமா? மீறிச் சாப்பிட்டவர்களுக்கு கிடைத்த கதிமோட்சத்தைக் கண்டு... ‘மனுஷனா பொறந்ததுக்கு, ஒரு மாடா பொறந்திருக்கலாம்...’ என்று வேதனைப்பட்டவர்கள் எண்ணிக்கை பேரதிகம்.

ரபேல்... கிலோ என்ன விலை?

யர் பாதுகாப்பு வளையத்தின் கீழுள்ள பதான்கோட் விமானப்படை தளத்துக்குள் எளிதாகப் புகுந்து தீவிரவாதிகளால் சுட முடிந்தது. உலகின் உச்சக்கட்ட பாதுகாப்பு நிறைந்த புல்வாமா சாலையில் ராணுவ டிரக் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் அதன் பெயரால், எல்லை தாண்டி விமானப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து கேள்வி எழுப்பினாலே... தேசபக்தி  என்ற ஒற்றை பிளாஸ்திரி கொண்டு வாயடைக்கப்பட்டது.

ரு கிலோ தக்காளியை 20 ரூபாய் என்று கடையில் விலை பேசி விட்டு வீட்டுக்கு வருகிறீர்கள். துணிப்பையைக் கொடுத்து வாங்கி வர மகனை அனுப்புகிறீர்கள். அவன், அதே ஒரு கிலோ தக்காளியை 200 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டு வந்தால்... அது சரியா, தப்பா? ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அதுதான் நடந்தது.

ஜியோ... அய்யோ!

விவசாயிகள் எலிக்கறி வரைக்கும் என்னென்னமோ சாப்பிட்டார்கள். தலைநகரத்தின் வீதிகளில் உள்ளது உள்ளபடியே ஓடியும் பார்த்தார்கள். ஒரு பயனும் இல்லை. கிராமப்புற மாணவ, மாணவிகளின் மருத்துவக் கனவு மீது மற்றுமொரு சர்ஜிகல் ஸ்டிரைக் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. எதிர்த்து எழுதியவர்கள் மிரட்டப்பட்டார்கள். பேசியவர்கள் சுடப்பட்டார்கள். ஜியோ நாலு கால் பாய்ச்சலில் விறுவிறுவென வளர்ந்தது. பிஎஸ்என்எல் எட்டுகால் பாய்ச்சலில் கிடுகிடுவென கீழிறங்கியது.

- இப்படி ஐந்தாண்டு சாதனைகளை இன்னும் எக்கச்சக்கமாய் அடுக்கலாம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் தேசமெங்கும் மக்களிடையே நிலவுகிற பொது கருத்தாக்கத்திற்கு மேற்கண்ட புள்ளிவிபரங்கள் சிறிய உதாரணம் தான். முழுவதும் சொல்லி முடிக்க, மேற்கொண்டு ஐந்தாண்டு தேவைப்படலாம். வரலாற்றில் முதல்முறையாக, இந்தத் தேர்தல் மதத்தின் பெயர் கொண்டு / மத வன்மத்தின் பெயர் கொண்டு நடத்தப்படுகிறது. வாக்குக் கேட்கிறவர்கள் தங்கள் மதத்தை அடையாளப்படுத்தி, பிரசாரம் செய்கிறார்கள். எதிர்கட்சிகளை தங்கள் மதத்தின் விரோதிகளாக பிம்பப்படுத்துகிறார்கள். ஆகவே, சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக பார்க்கப்படுகிறது.

சோதனை மேல் சோதனை...?

ப்படியான ஒரு சூழலில் 17வது மக்களவைக்கான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய 80 சதவீதம் மக்கள், ‘சோதனை மேல் சோதனை... போதுமடா சாமி. வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி...’ என்று சிவாஜி கணேசன் பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார்கள். தேசம் முழுக்க, இப்படி எதிர்ப்பலை அடிப்பதை நம்பி, அடுத்த பிரதமர் ராகுல் தான் என்று துணிந்து நீங்கள் பெட் கட்டப் போகிறீர்கள் என்றால்... ஒன் மினிட். அடுத்த சில பாராக்களையும் படித்து முடித்து விடுங்கள். அப்புறம் கட்டலாம்!

ளும் தாமரைக்கு எதிரான எதிர்ப்பு ஓட்டுக்களை ஒன்று திரட்டி தனது பக்கம் மடைமாற்றம் செய்யும் கலையில், ராகுல் கொஞ்சம் வீக். 80 சதவீதம் பேர் எதிர்க்கிறார்கள் என்றால், அதில் 60 சதவீதம் பேரின் வாக்குகளையாவது வாங்கினால் தானே, தர்பார் ஹாலில்  பதவியேற்பு விழா நடத்த முடியும்? ஒரு உப்புமா மேட்டர் ஓடிக் கொண்டிருக்கிறது. கேள்விப்பட்டிருக்கலாம். இன்றைய அரசியல் நிலைமையை துல்லியமாக விளக்குகிற அந்த உப்புமா உதாரணத்தை பாருங்களேன்...

உப்புமா... தப்புமா?

ரு ஹாஸ்டலில் நூறு மாணவர்கள். காலை டிபனாக கேண்டீனில் தினமும் உப்புமா மட்டுமே தட்டில் விழுந்தது. நாக்கு செத்துப் போன மாணவர்கள், பொறுத்துப் பொறுத்து, வெறுத்துப் போய், ஒரு நாள் காலையில் கிளர்ந்தெழுந்தார்கள். இன்னமும் இந்த செம டார்ச்சர் உப்புமா வேண்டாம் என்று கொதித்துப் போய் வார்டனிடம் புகார் கொடுத்தார்கள். ஹாஸ்டலில் 20 பேர் தனி அணி. உப்புமா டேஸ்ட் ஏனோ அவர்களுக்குப் பிடித்திருந்தது. அதுதான் தொடரணும் என்று அவர்களும் வார்டனிடம் மனு செய்தார்கள்.

வார்டன் ஒரு தேர்தல் நடத்தினார். ஒரு பட்டியல் போட்டு நீட்டினார். உப்புமா, புரோட்டா, பூரி, சப்பாத்தி, இட்லி, தோசை, பொங்கல், பிரெட் ஆம்லெட் என்று லிஸ்ட் ரெடி செய்து நீட்டினார். யாருக்கு எது வேணும்... போடுங்க ஓட்டு என்று தேர்தல் நடத்தினார். புரோட்டாவுக்கு 15, பூரிக்கு 10, பொங்கலுக்கு 13, தோசைக்கு 17, இட்லிக்கு 14, பிரெட் ஆம்லெட்டுக்கு 11 வாக்குகள் கிடைத்தன. 80 ஓட்டு சரியாப் போச்சா? எஞ்சிய 20 ஓட்டுகளும் அலேக்காக உப்புமாவுக்கு கிடைத்தது. 80 பேருக்கு பிடிக்காத / 20 பேருக்கு மட்டுமே பிடித்த உப்புமாவே, காலை டிபனாக அந்த கேண்டீனில் மீண்டும் முடிசூட்டிக் கொண்டது.

ன்றைக்கு கள நிலவரம் இப்படியாகத்தான் இருக்கிறது. உப்புமா வேண்டாம் என்று முடிவு செய்த யாராவது சிலர் கூட்டணி சேர்ந்திருந்தால், நிலைமை மாறியிருக்கும். ஆளுக்கு ஒரு திசையாக பிரிந்ததால், உப்புமா ஜெயிக்க டஃப்புமா என்ற மாயத்தோற்றம் ஏற்பட்டு விட்டது.

கூட்டணி எப்படி?

தாமரையின் கூட்டணி இந்தத் தேர்தலில் எப்படி இருக்கிறது? தமிழகத்தில் அதிமுக, பீகாரில் நிதிஷ்குமார், ராம்விலாஸ் பஸ்வான், மகாராஷ்டிராவில் சிவசேனா, பஞ்சாபில் அகாலிதள் என்று களத்தில் இறங்கியிருக்கிறது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தளவில், தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. சரியான முடிவு. மகாராஷ்டிராவில் சரத் பவார், பீகாரின் லாலு, ஜார்க்கண்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா என்று சின்ன வட்டத்துக்குள் கூட்டணி முடிந்து விடுகிறது.

ரி. இந்தக் கூட்டணி வளையத்தில் இல்லாமல், தனியாகப் போட்டியிடுகிறவர்கள் யார், யார்? உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி (பகுஜன் சமாஜ்) + அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி), மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்), ஒடிசாவில் நவீன் பட்நாயக் (பிஜூ ஜனதாதளம்), ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம்), ஜெகன்மோகன் ரெட்டி (ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்), தெலங்கானாவில் சந்திரசேகரராவ் (தெலங்கானா ராஷ்டிரிய சமீதி), டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் (ஆம் ஆத்மி) இத்தனை பேர், தனித்து இந்தத் தேர்தலை சந்திக்கிறார்கள்.

இவர்கள்... சூப்பர் கிங்ஸ்!

ங்கு நன்றாகக் கவனிக்க வேண்டிய விஷயம்... இதில் பெரும்பாலான ஆட்கள், அவரவர் மாநிலத்தில் சூப்பர் கிங்ஸ். மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் ஓட்டுக்களை அள்ளுவார். உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி + அகிலேஷூக்கு அப்புறம் தான் மற்றவர்களுக்கு ஓட்டு. ஒடிசாவில் நவீன் பட்நாயக்கிற்கு, கண்ணுக்கு எட்டிய வரை எதிரிகளே இல்லை. 19 வருடமாக அவர் ஜெயித்துக் கொண்டே இருக்கிறார். தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் செம மாஸ் ஹீரோ. ஆந்திராவைப் பொறுத்தவரை சந்திரபாபு, ஜெகன்மோகன் ரெட்டி. இரண்டு பேரில் ஒருவர். இதில் ஜெகன்மோகனுக்கு வாய்ப்புகள் பிரகாசம்.

க, மேற்படி மாநிலங்களில் காங்கிரஸ், தாமரையை விடவும், இந்த மாநிலக் கட்சிகளே அதிகத் தொகுதிகளை அள்ளப் போகின்றன. கூடவோ, குறைச்சலோ... இந்த மாநிலக் கட்சிகளுடன் ஒரு உடன்பாடு ஏற்படுத்தி, கூட்டணியை முடித்திருந்தால்... காங்கிரஸின் வெற்றி இன்னேரம் சொர்க்கத்தில் நிச்சயமாகி இருக்கும். குறிப்பாக, மேற்கு வங்கத்தில் மம்தா, ஆந்திராவில் ஜெகன்மோகன் இருவருமே காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்றவர்கள். இருவரும் எக்கச்சக்கமான செல்வாக்கை வைத்திருக்கிறார்கள். இவர்களை மட்டும் ஏதாவது பேசி கூட்டணிக்குள் கொண்டு வந்திருந்தால்... தாமரையை விட, காங்கிரஸ் செம லீடிங் எடுத்திருக்கும்.

மலர்ந்தே தீருமா...?

ரி. தேர்தல் முடிவுக்குப் பிறகு காங்கிரஸ், தாமரை இருவருக்குமே மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் (இதற்கான வாய்ப்புகளே மிக, மிக, மிக அதிகம்)... இந்த மாநிலக் கட்சிகள் எடுக்கும் முடிவே, அடுத்த ஆட்சியாளரைத் தீர்மானிக்கும். இந்தக் கட்சிகள் என்ன மாதிரியான முடிவை எடுக்கும்? ஏதாவது மந்திரி பதவி ஆசை காட்டி, இழுத்து விட்டால்... தாமரை மலர்ந்தே தீரும் சூழல் உருவாகி விடும் இல்லையா?

லுவான, பலமான ஒரு கூட்டணியை தேசம் முழுக்க கட்டமைக்கத் தவறியதன் விளைவு... காங்கிரஸிற்கு பாதகமாக இடிக்கிறது. காங்கிரஸ் செய்த இந்தப் பிசகுதான், இந்தத் தேர்தலில் தாமரையின் பலம். இதுதான் இன்றைய தேதிக்கு நிஜமான அரசியல் கள நிலவரம்.

னால், ஒரு விஷயத்தை மறந்து விடவே கூடாது பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ். சகல விதமான கணிப்புகளையும் மாற்றக்கூடிய வல்லமை வாக்காளர்களின் கையில் இருக்கிறது. கடந்த தேர்தல் காலங்களில் வெளியான பல கருத்துக்கணிப்புகள், டெபாசிட் இழந்து பரிதாபமாக தோற்றுப் போயிருக்கின்றன. அதுபோல, இந்த உத்தேசக் கணிப்பும் கூட டெபாசிட் இழக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது. உப்புமா வேண்டாம் என்று தீர்மானித்தவர்கள் எல்லாம், தீர்மானமாக ஒரே முடிவெடுத்து... இட்லி தான் என்று ஒற்றை முடிவெடுத்து விட்டால்... ஜூன் மாதத்திற்குப் பிறகு நீட் தேர்வுக்கு ஸ்பெஷல் கோச்சிங் போக வேண்டிய அவசியம் இராது!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

4 கருத்துகள்:

  1. உண்மைதான் காங்கிரஸ் கூட்டணி அமைத்துக் கொள்வதில் கோட்டை விட்டு விட்டது என்றே தோன்றுகிறது இந்தத் தவறால் மீண்டும் உப்புமாவை சாப்பிட கொடுத்துவிடுவார்களோ என்று நெஞ்சம் பதைபதைக்கிறது

    பதிலளிநீக்கு
  2. என்னதான் சொல்லுங்கள் ...... ஜீரணிப்பதற்கு கடினம் என்றாலும் உப்புமாவில்தான் அதிக சத்துக்கள் நிரம்பியுள்ளது...எனவே இந்தியர்களுக்கு ஏற்ற உணவு உப்புமாதான்....

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...