வெள்ளி, 14 டிசம்பர், 2018

பசு + பணமதிப்பிழப்பு = வெற்றிகரமான தோல்வி!

தோல்வி என்பதன் அர்த்தம், தோல்வி மட்டுமே. வெற்றிகரமான தோல்வி, மதிப்பிற்குரிய தோல்வி, கவுரவமான தோல்வி, தோல்வி மாதிரியே இல்லாத தோல்வி என்றெல்லாம் டிசைன் டிசைனாகக் கூறி மனதை ஆறுதல் / திடப்படுத்திக் கொள்ளலாமே தவிர்த்து... தோல்வி என்பதன் அர்த்தம், தோல்வி மட்டுமே.


தோற்றவர்களை விமர்சனம் செய்து, மேலும் புண்படுத்துதல் நாகரிகமான செயல் அல்ல. ஆனால், ஏன் இந்தத் தோல்வி என்று பரிசோதனை செய்து பதில் தெரிந்து கொள்வது, பிற்காலத்தில் பிறருக்கும் பாடமாக அமையலாம். நடந்து முடிந்திருக்கும் ஐந்து மாநில (மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம்) தேர்தல் முடிவுகள், ஆளப்பிறந்தவர்களாக கருதிக் கொண்டிருப்பவர்கள், ஆளுகிறவர்கள், ஆளப் போகிறவர்கள் என அத்தனை பேருக்கும், அழுத்தம், திருத்தமாக சில சேதிகளை சொல்லிச் சென்றிருக்கிறது.


‘‘உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு’’ - என்கிற 734வது குறளில் இருக்கிறது பாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்கான காரணம். பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான், பெஸ்ட் என்கிறார் வள்ளுவர். மேற்படி மூன்றிலும் மத்திய அரசாங்கம் டெபாசிட் இழக்கிறது. எப்படி?

உறுபசியும்...


வெற்று வாக்குறுதிகளையும், பொய்களையும், சுய தம்பட்டங்களையும் மட்டுமே கொண்டு கட்டமைக்கப்பட்டது மத்திய பாரதிய ஜனதா ஆட்சி. அதுகுறித்து விளக்க, அடுக்கடுக்கான காரணங்கள் தேவையில்லை. பண மதிப்பிழப்பு என்ற ஒற்றை பேரழிவு போதும். பலரின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட முடிவு அது. கசப்பு மருந்து என்கிற பெயரில் தரப்பட்ட விஷ மருந்து. எந்த ஒரு சிறு நல்விளைவையும், இதுவரையிலும் ஏற்படுத்தாத பேரவல நடவடிக்கை பண மதிப்பிழப்பு.

ருப்புப் பணக்காரர்களிடமோ, கள்ளச்சந்தை பேர்வழிகளிடமோ அந்த நடவடிக்கை சிறு சலனத்தையும் ஏற்படுத்தி விடவில்லை. மாறாக, கூலித் தொழிலாளர்கள், சிறு தொழில் முனைவோர், அன்றாடம் காய்ச்சிகள், விவசாயிகள், உழைத்துப் பிழைப்பவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விட்டது. மதிப்பிழப்பு நடவடிக்கை, நாட்டின் ஸ்திரத்தன்மை, வளர்ச்சி விகிதத்தை பாதாளத்தில் தள்ளிவிட்டது என்று, அந்தக் கட்சியில் உள்ள பொருளாதார புலிகளே தலையிலடித்துக் கொண்டு புலம்பினர். பதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் கருப்புப் பணத்தின் ஒற்றைத்தாளை கூட, இந்த மதிப்பிழப்பு நடவடிக்கையால் கடைசி வரையிலும் மீட்டுத்  தர முடியவில்லை.

டுத்த அடி ஜிஎஸ்டி. ஏற்கனவே, இருக்கிற பணத்தை இழந்து திசைதெரியாமல் திக்குமுக்காடிக் கொண்டிருந்த சிறு தொழில் முனைவோர், வியாபாரிகளுக்கு வைத்த டிஜிட்டல் ஆப்பு - ஜிஎஸ்டி. தலைமைப் பொறுப்பில் இருப்பவரின் தன்னிச்சையான, தான்தோன்றித்தனமான முடிவுகள் நாட்டின் பொருளாதார நிலைமையை முன்னெப்போதையும் விட இக்கட்டான இடத்தில் தள்ளி வைத்திருப்பது, பாரதிய ஜனதா காரர்கள் தவிர மற்ற அத்தனை பேருக்கும் தெரிந்திருக்கிறது.


ட்டினியால் விவசாயிகள் செத்து உருண்டு கொண்டிருந்த தருணத்தில், நர்மதை நதிக்கரையில் 3 ஆயிரம் கோடி ரூபாயில் உருவாகியிருக்கிற சிலையை அவர்கள் அண்ணாந்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள். மூன்று வேளை உணவுக்கு உறுதியற்ற மனிதர்கள் நிரம்பியிருக்கிற தேசத்தில், 3 ஆயிரம் கோடியில் சிலை.


ந்த நான்கரை ஆண்டுகளில் சிறுதொழில் முனைவோர் தற்கொலையின் விளிம்புக்கு தள்ளப்பட்டிருக்கும் நிலையில், அம்பானி, அதானி போன்ற மாபெரும் தொழில்காரர்களின் சொத்து மதிப்பு 87 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருப்பதாக வரும் தகவல்கள்.... இது யாருக்கான அரசாங்கம் என்று உறுதி செய்கிறது. தேசத்தின் முதுகெலும்பு என கூறப்படுகிற விவசாயிகள் தலைநகரின் கொடும் குளிரில் தொடர்ந்து போராடினார்கள். மிகப்பெரிய பேரணி நடத்தினார்கள். குறைந்த ஆடை நடிகைகளை சந்தித்துப் பேச நேரமிருந்த பிரதமருக்கு, அதற்கும் குறைந்த ஆடை அணிந்து காத்திருந்த விவசாயிகளை சந்திக்க கடைசி வரை வினாடி நேரம் கிடைக்கவில்லை.

ஓவாப் பிணியும்...

க்களால்.. மக்களுக்காக... மக்களே.... (Of the People, by the People, for the People) - இது ஒரு நல்ல அரசாங்கம் கைகொள்ளவேண்டிய கோட்பாடு. ஆனால், நான்கரை ஆண்டுகளைத் திரும்பப் பார்த்தால்... மாடுகளால்... மாடுகளுக்காக.... என்கிற ஒரு சிந்தாந்தம் சீரும், சிறப்புமாக தேசத்தை ஆட்கொண்டிருந்த அவலத்தைக் காண்பீர்கள். மாட்டுக்காக மனிதர்கள் அடித்துக் கொல்லப்பட்ட பேரவல சம்பவம், வேறெந்த நாட்டிலும் நடந்திருக்காது.

அதேசமயம், மாட்டுக்கறி ஏற்றுமதியில் முன்னணி நாடாக இருந்ததும் இந்தியா என்பது நகைமுரண். ஏற்றுமதி செய்தவர்களும் அவர்கள். பசுப் பாதுகாவலர்களாக முகமூடி தரித்து, படுகொலை செய்தவர்களும் அவர்கள்.


சு பாதுகாவலர்களாக தங்களை முடிசூடிக் கொண்டவர்கள் ஆட்சி செய்த உத்தரப்பிரதேச மாநிலத்தின், கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இல்லாமல் 70க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள் இறந்த சம்பவம் தேசத்தை உலுக்கியது. அந்த கொடூர சம்பவம் குறித்த மேல்விசாரணையில், அரசாங்கம் பணம் கொடுக்காததால், ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது. கோசாலைகள் கட்ட கொட்டிய பணத்தில் கொஞ்சத்தை ஒதுக்கியிருந்தால்... 70 பிஞ்சுகளின் உயிர் இறைவனடி சேர்ந்திருக்காது.


டித்தட்டு அப்பாவி மக்களின் வாழ்வியல் வேதனைகள், அவர்களது மண்ணில் இருந்து வருபவர்களுக்குத்தான் தெரியும். ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கூடவே கூடாது என்கிற ஒற்றைக் குறிக்கோளுடன் வந்தது நீட். அந்தத் தேர்வு, எத்தனை ஏழைக் குடும்பங்களின் நிம்மதியில் நெருப்பள்ளிப் போட்டது?

செறுபகையும்...


வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தத் தேசத்தின் அடிநாதம். பாரதிய ஜனதாவின் முக்கியத் தலைவர்களும், மத்திய அமைச்சர் பொறுப்பில் இருந்தவர்களும் வெளிப்படையாகவே விஷம் கக்கினர். இஸ்லாமிய, கிறிஸ்துவ சிறுபான்மை மதத்தினர் மட்டுமின்றி... தலித், பழங்குடி மக்களும் அவர்களது சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதலுக்கான இலக்காகினர்.

எந்த ஆடை அணியவேண்டும், எந்த உணவு சாப்பிட வேண்டும் என்பதைக் கூட அவர்கள் தீர்மானித்தார்கள். மனிதர்களுக்குள் வெறுப்பை விதைத்தார்கள்.

ஸ்லாமியர்களையும், கிறிஸ்துவர்களையும், தலித், பழங்குடிகளையும் அந்தக் கட்சியின் அமைச்சர்கள் நேரடியாகவே டார்கெட் செய்தார்கள். வர்ணாசிரம கோமாளித்தனங்களை இவர்கள் மனிதர்களுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. கடவுள்களுக்கும் ஜாதிச் சான்றிதழ் விநியோகம் செய்தார்கள். அனுமன் ஒரு தலித் என்று பரபரப்பு கிளப்பியவர், சாதாரண தொண்டராக இருந்தால், சரி... விவரம் தெரியாமல் உளறிவிட்டார் என்று ஒதுக்கித் தள்ளி விடலாம். அனுமனுக்கு தலித் சர்டிபிகேட் கொடுத்தவர் உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். முதல்வரின் லட்சணமே இப்படி என்றால்... அடுத்தடுத்த நிலைகளில் இருக்கும் அமைச்சர்கள், தலைவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறதுதானே?


நான்கரை ஆண்டுகள் கோமா பேஷண்ட் போல, பேச்சுமூச்சின்றி கிடந்து விட்டு, அடுத்த தேர்தலுக்கான தருணம் நெருங்கியதும், ராமர் கோவில் கட்டுவோம் என்று அயோத்தியில் தீப்பற்ற வைத்தார்கள். இவர்களது அக்கப்போரை அந்த ராமபிரானே சகித்திருக்க மாட்டார். பேசும் திறன் வாய்க்கப் பெற்றால்... கமலஹாசனைப் போல, ‘இந்த நாட்டை விட்டே போகிறேன்...’ என்று கிளம்பியிருப்பார்.

ள்ளுவர் சுட்டிக்காட்டிய... உறுபசியும், ஓவாப் பிணியும், செறுபகையும் சேர்ந்தே பாரதிய ஜனதாவை இந்தத் தேர்தலில் குப்புறக் கவிழ்த்திருக்கிறது. வெறும் ஐந்து மாநிலத் தேர்தல்தானே...? ஐந்து மாநிலங்களில் தோற்றதற்காகவா இப்படி ஒரு அமர்க்களம்? ஐந்து மாநில தோல்வியை வைத்து ஒரு தேசியக் கட்சியின் சாப்டரை க்ளோஸ் செய்யப் பார்ப்பதா என சில பாரதிய ஜனதாவினர் கேள்வி எழுப்பலாம். கேள்வியில் நியாயம் இருப்பது போலவும் தோன்றலாம். ஆனால்...

பாரதிய ஜனதா இழந்திருக்கும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்கள், அந்தக் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு நேரடியாக, நெருங்கிய தொடர்புடையவை. மூன்றுமே அடிப்படையில் இந்தி பேசும் மாநிலங்கள். மூன்றிலும் ஆட்சிமொழி இந்தி. ஒற்றை தேசம், ஒற்றை மொழி என்று எந்த மொழியை பிரதானப்படுத்திக் கொண்டிருந்தார்களோ... அந்த மொழிக்காரர்கள் துடைத்தெறிந்து தூக்கி வீசி விட்டார்கள்.

திலும் குறிப்பாக மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் தொடர்ந்து 15 ஆண்டுகள் ஃபெவிகால் தடவியது போல ஆட்சி அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருந்தார்கள். இந்த இரு மாநிலங்களிலும் பாரதிய ஜனதாவுக்கு மிகப்பெரிய செல்வாக்கும், வாக்கு வங்கியும் உண்டு. இந்த மிகப்பெரிய செல்வாக்கும், வாக்கு வங்கியும் மேற்படி மூன்று மாநிலங்களிலும் பாரதிய ஜனதாவுக்கு கிடைத்தது எப்படி?

தற்கான பதிலை ஒற்றை வார்த்தையில் சொல்லி விடலாம் - இந்துத்வா. மதவெறியை மட்டுமே முன்னிலைப்படுத்தி இங்கு தங்களுக்கான வாக்கு வங்கியை அந்தக் கட்சி பலப்படுத்தி வைத்திருந்தது. பொய்கள் எத்தனை நாளைக்கு முட்டுக் கொடுக்கும். ராமரும், கிருஷ்ணரும், முப்பத்து முக்கோடி தேவர்களுமா வந்து ஓட்டுப் போடுவார்கள்? மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் என மூன்று மாநில நிராகரிப்பு சாதாரண விஷயம் அல்ல. இந்த மூன்று மாநிலங்களிலும் வெற்றியை தீர்மானிக்கிறவர்கள் இந்துக்கள்.


ராஜஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை 88.49 சதவீதம் (முஸ்லீம்கள் 9.07 சதவீதம், கிறிஸ்துவர்கள் 0.14 சதவீதம்). மத்தியப் பிரதேசத்தில் இந்துக்களின் எண்ணிக்கை 90.89 சதவீதம் (முஸ்லீம்கள் 6.57 சதவீதம், கிறிஸ்துவர்கள் 0.29 சதவீதம்). சத்தீஸ்கரில் இந்துக்களின் எண்ணிக்கை 93.25 சதவீதம் (முஸ்லீம்கள் 2.02 சதவீதம், கிறிஸ்துவர்கள் 1.92 சதவீதம்). ஆக, தோல்வி யாரால் வந்திருக்கிறது என்று தெரிகிறதா? இன்னமும் ராமர் கோயிலையும், பசு மாதாவையும் பேசி காலம் தள்ளமுடியாது என்பதை இங்குள்ள இந்துக்கள் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்கள்.

ன்னொரு காமெடியும் இந்தத் தேர்தலில் பதிவாகியிருக்கிறது. இந்திய வரலாற்றில்... உலக வரலாற்றில் என்று கூடச் சொல்லலாம்; பசுக்களை பாதுகாப்பதற்கு என்றே ஒரு தனி அமைச்சகம் ராஜஸ்தானில் உருவாக்கப்பட்டது. ஓடராம் தேவசி இந்த பசு பாதுகாப்புத்துறையின் அமைச்சர். பசுக்களி்ன் பாதுகாப்புக்காக இங்குதான் ஒரு அமைச்சகமும், அமைச்சரும் இருந்தார்கள். இந்தத் தேர்தலில் சிரோகி தொகுதியில் இவர் போட்டியிட்டார். சும்மா சுயேச்சையாக போட்டியிட்ட சன்யம் லோதா என்கிற அட்ரஸ் இல்லாத ஆசாமி போகிற போக்கில் 10 ஆயிரத்து 253 வாக்குகள் வித்தியாசத்தில் இவரை விரட்டியடித்து விட்டார். பசு பால் தரும். ஓட்டுமா தரும்?


க, இந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள், பாரதிய ஜனதாவுக்கு ஒரு முக்கியமான விஷயத்தை புரிய வைத்திருக்கின்றன. வெற்று வாக்குறுதிகள், பொய்மொழிகள், மத துவேஷக் கருத்துகள், மக்களுக்கு இடையே கலகம் மூட்டிக் குளிர் காய்தல் போன்ற காரியங்கள், இருபுறமும் கூர் கொண்ட வாள். பற்றியவரையே அவை பதம் பார்த்து விடும். இனியாகிலும் மதம் என்கிற மாயையில் இருந்து விடுபட்டு வெளியே வருதலும், பெரும் கோடீஸ்வரர்களுக்காக உழைத்ததை ஒதுக்கி விட்டு சாமானிய, அடித்தட்டு, ஏழை மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நேரம் ஒதுக்குவதும்... எதிர்கால நலனுக்கு உகந்ததாக இருக்கும்.

ற்றபடி, கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை பேட்டியளித்திருப்பது போல ‘இது வெற்றிகரமான தோல்வி’ என்பதெல்லாம், சூழ்ந்திருக்கும் மீடியாக்களை சமாளிக்கிற உத்தியேயன்றி, மக்களை அல்ல. ஒருவேளை, தமிழிசை சொல்வது போல இது வெற்றிகரமான தோல்வியாக இருப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறதா...? இதற்கான பதிலாக, ஆரம்ப வரிகளையே மீண்டுமொரு முறை நினைவுபடுத்தி, இந்தக் கட்டுரை நிறைவு செய்யலாமா...?


தோல்வி என்பதன் அர்த்தம், தோல்வி மட்டுமே. வெற்றிகரமான தோல்வி, மதிப்பிற்குரிய தோல்வி, கவுரவமான தோல்வி, தோல்வி மாதிரியே இல்லாத தோல்வி என்றெல்லாம் டிசைன் டிசைனாகக் கூறி மனதை ஆறுதல் / திடப்படுத்திக் கொள்ளலாமே தவிர்த்து... தோல்வி என்பதன் அர்த்தம், தோல்வி மட்டுமே.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

10 கருத்துகள்:

  1. மிகவும் அழகாக, நடுநிலையான கண்ணோட்டத்துடன் கூடிய கட்டுரை.
    -கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  2. எனக்கென்னவோ இவர் மட்டும் தான் பிரதமரை சந்திக்காத பத்திரிக்கையாளர் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. சிறப்பு...

    பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
    மக்கட் பதடி எனல்

    எனது பக்கத்திலும் பகிர்கிறேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
  4. நல்ல பதிவு. பாரதிய ஜனதா கட்சியின் தோல்விக்கான காரணங்கள் ஏராளம் இருந்தாலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், பசு பாதுகாப்பு நடவடிக்கையுமே மக்களிடம் பெரும் தாக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தின. அந்த இரு பிரதான பிரச்னைகளை அழகாக சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். திருமதி தமிழிசை சௌந்திரராஜன் அவர்கள் கூறிய வெற்றிகரமான தோல்வி என்கிற வார்த்தையில் இருந்து கட்டுரையை துவக்கி, அதே வார்த்தையைக் கொண்டு கட்டுரையை முடித்த உத்தி அபாரம்.

    ராசேந்திரன், சங்கரன்கோவில்.

    பதிலளிநீக்கு
  5. சரியான அலசல் பாராட்டுகள் இதைச் சொன்னாதான் ஆன்டி இந்தியன் பட்டம் கிடைக்குமே

    பதிலளிநீக்கு
  6. அருமையாக,சரியான அளவில் சிறப்பாக உள்ளது...

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...