சனி, 18 ஆகஸ்ட், 2018

இடுக்கி: 750 மெகாவாட்...

ருத்துவக் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டுவது, தண்ணீர் தர மறுப்பது, நதிகள் இணைப்புக்கு திட்டவட்டமான மறுப்பு என்று கடவுளின் தேசத்தின் மீது சில - பல மனக்கசப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனாலும்... மழை வௌ்ளத்தில் தத்தளிக்கிற இந்த இக்கட்டான தருணத்தில் வேறெந்த மாநிலங்களை விடவும் தன்னார்வ உதவிகளை மிக, மிகவும் அதிகளவில் கேரளத்துக்கு தாமாக முன்வந்து வழங்கிக் கொண்டிருப்பது தமிழகம் என்பதை மறுக்கமுடியாது. இந்தச் சிறு தகவலுடன் இந்தக்  கட்டுரையை ஆரம்பிக்கலாம்.


மழைக்கு என்ன காரணம்?

செய்திகளில் இப்போது நாம் படிக்கிற / கேட்கிற வரலாறு காணாத மழை, புவியியல் காணாத மழைக்கெல்லாம் மனிதனின்றி காரணம் வேறெதுவும் இல்லை. பல புவி உச்சி மாநாடுகள் நடத்தியும் கூட, சுற்றுச்சூழல் பேணுவதில் நமக்கின்னும் சாமர்த்தியம் வந்ததாக இல்லை. காற்றடிக்க வேண்டிய காலத்தில் வெயில் வறுப்பதற்கும், வெயிலடிக்கிற சீசனில் மழை பின்னி எடுப்பதற்கும் வன அழிப்பு முக்கியக் காரணம்.


ன்றைக்கு மிச்சமிருக்கிற கொஞ்ச, நஞ்ச காடுகளும் வெகு வேகமாக இறைவனடி சேர்ந்து கொண்டிருக்கின்றன. சோலைக்காடுகளின் அடர் உட்பகுதிக்குள் திருப்பதி மொட்டைக்கு இணையானதொரு லாவகத்துடன் மரங்கள் துடைத்தெடுக்கப்படுகின்றன. வரலாறு காணாத மழைகளுக்கு, மரங்கள் அழிப்பும் முக்கியக் காரணம் என்கிறார்கள் அறிவியல் தெரிந்தவர்கள். மழைப்பொழிவு மிகுதியாக உள்ள இடங்களில் இருக்கிற மரங்கள், மிகுதியான நீர்வளத்தின் பெரும்பகுதியை சேகரித்து தன்னகத்தே வைத்துக் கொள்கிறதாம். மரங்கள் மிகுந்திருக்கிற இடம், ஈரப்பதமாக எப்போதும் இருப்பதற்கு இதுவே காரணம். மரங்கள் எடுத்தது போக, மிச்சம் இருக்கிற தண்ணீர் மட்டுமே மனிதனைத் தேடி வருகிறது. அதை அடக்கி, (அணைக்)கட்டுக்குள் வைப்பது ஆகச் சிரமமான காரியமில்லை. ஆனால், நாம் மரங்களை எல்லாம் கட்டிங், கட்டிங் செய்து விடுவதால் பெய்கிற மழை, துளி பாக்கியில்லாமல், நேராக, அப்படியே எஜமானனை நீண்டநாளுக்குப் பிறகு பார்க்கிற நாய்க்குட்டி போல படு ஆர்வமாக துள்ளிக் குதித்து பாய்ந்தோடி வந்து விடுகிறது. இதுதான் அடிப்படை பிரச்னை. இதை இன்னும் எளிதாக புரிந்து கொள்ள ஒரு வீடியோவும் இங்கே இணைக்கப்பட்டிருக்கிறது. வார்த்தைகள் புரிய வைக்காததை, படக்காட்சி புரியவைக்கலாம்.

சொந்தக் காசில் சூனியம்!

ரி. இப்போது கேரளாவுக்கு வரலாம். இயற்கை எழில், வனப்பு, அழகிற்கு ஹோல்சேல் ஏஜென்ட்டாக இருக்கிற கடவுளின் சொந்த கேரள தேசம், மிக மோசமானதொரு சோதனையை சந்தித்திருக்கிறது. என்ன காரணம்? மரங்கள் அழிப்பு ஒரு காரணம் என்றால், சொந்தக் காசில் சூனியம் வைக்கிற மாதிரி கேரளா தனக்குத் தானாகவே ஒரு வில்லங்கத்தை இழுத்து வைத்திருக்கிறது. தனது மாநிலத்து நதிகளும், தண்ணீரும் தனக்கு மட்ட்ட்ட்ட்ட்ட்ட்டுமே சொந்தம் என்கிற அசட்டுத்தனமான சுயநலப் பிடிவாதம், இன்றைய பேரழிவுக்கு மிக முக்கியக் காரணம்.


கேரளாவில் பெய்கிற மழைக்கு இணையானதொரு பேய்மழை, கர்நாடக மாநிலத்திலும் பெய்து கொண்டிருக்கிறது. கன்னட சகோதரர்கள் மிதக்க வில்லையே. ஏன்? ‘மச்சி... ஓபன் தி ஷட்டர்...’ என்று கர்நாடக மாநிலம் அணைகள் அத்தனையையும் திறந்து விட்டது. பேய் மழை, பிசாசு மழை பெய்தாலும் அவர்களுக்கு நோ டென்ஷன். திருச்சி பக்கம்தான் பரிதாபம்.நேற்று வரைக்கும் தண்ணீருக்காக குடத்துடன் அலைந்து கொண்டிருந்தவர்கள்... இன்றைக்கு பெருவெள்ளமாய் காவிரியில் வருகிற தண்ணீரைக் கண்டு திக்குமுக்காடிப் போகிறார்கள். டவுன்பஸ் போன தெருக்களில் படகு சவாரி செய்கிற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.கெஞ்சி கேட்டபோதெல்லாம் சொட்டுத் தண்ணீர் தர மறுத்தவர்கள், இப்போது ஊரழிக்கிற அளவுக்கு திறந்து விடுகிறார்கள். ரைட்டு. மேட்டருக்கு வர்லாம்.

இணைக்க தயக்கமேன்?



கேரள அரசியல்வாதிகள் செய்யத் தவறியதன் கோர விளைவை, அம்மாநில சகோதர, சகோதரிகள் இன்றைக்கு அனுபவிக்கிறார்கள். ‘பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டக்கூடாது. கேரள நதிகளில் ஓடுகிற தண்ணீரை தமிழகத்துக்கு எப்படி திருப்பமுடியும்’ என்று இந்த இடத்தில் நீங்கள் கேள்வி எழுப்பலாம். எழுப்பினால், அது நியாயமான கேள்வியே. கேரளமும், அதன் அரசியல்வாதிகளும் என்ன செய்திருக்கவேண்டும்?


கேரள மாநிலத்தில் சிறிதும், பெரிதுமாக ஓடுகிற 44 நதிகள் மூலம் ஆண்டுக்கு 2 ஆயிரத்து 500 டிஎம்சிக்கு அதிகமாகவே தண்ணீர் கிடைக்கிறது (TMC = 1 TMC means THOUSAND MILLION CUBIC FEET-is a measure of water quantity.mostly it is use measuring water quantity in Dams). விவசாயம், குடிநீர் தேவைகள் அதிகம் இல்லாத மாநிலம் கேரளம். ஆகவே, இதில் வெறும் 500 டிஎம்சி தண்ணீரை மட்டுமே பயன்படுத்துகிறது. எஞ்சிய 2 ஆயிரம் டிஎம்சிக்கும் அதிகமான தண்ணீர் யாருக்கும் பயனின்றி அரபிக்கடலில் சென்று சேர்கிறது.

றுபக்கம், தமிழகத்தில் குடிக்கவே தண்ணீர் இல்லை. விவசாயம் செய்வதற்கு எங்கிருந்து வரும்? நெல் விளைந்த வயல்களில் கட்டிடங்கள் முளைப்பதை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? கேரளத்தில் ஓடுகிற நதிகளில் சாத்தியமுள்ள சிலவற்றை தமிழக நதிகளுடன் இணைத்தால், இங்கு நிலவுகிற குடிநீர் பற்றாக்குறைக்கு குட்-பை சொல்லி விடமுடியும். கேரளாவிடம் கெஞ்சிக் கேட்டும் பலனில்லை. மத்திய அரசிடம் தமிழக அரசு முறையிட்டது.


குறைந்தபட்சம், கேரளத்தின் அச்சன்கோவில் - பம்பை நதிகளை தமிழகத்தின் வைப்பாற்றுடன் இணைக்கலாம். இப்படி இணைத்தால், தமிழகத்தின் விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வறட்சி நீங்கும். குடிநீர் தட்டுப்பாடு இராது. விவசாயம் செய்யலாம். வைகை ஆறு உற்பத்தி ஆகிய இடத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் அப்பால், கேரள எல்லைக்குள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆகிறது கல்லாறு. மேற்கு நோக்கி கேரளாவுக்குள் பாய்ந்து அரபிக்கடலில் சங்கமம் ஆகிறது. கல்லாறை, வைகையுடன் இணைத்தால் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள், ‘தண்ணியில்லா காடு’ என்கிற அவப்பெயரை டிஷ்யூ பேப்பர் கொண்டு துடைத்துக் கொள்ளமுடியும்.

தண்ணீர் கனவு!

துபோல, கேரள நதிகள் இன்னும் சிலவற்றில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டு வர ஆய்வு நடத்தப்பட்டது. மத்திய அரசும் சம்மதம் தெரிவித்தது. ஆனால், கேரள அரசியல்வாதிகள் திட்டவட்டமாக மறுத்து விட்டனர். எங்கள் நிலப்பரப்புக்குள் ஓடும் நதிகளில் இருந்து ஒரு குடம் தண்ணீர் கூட தமிழகத்துக்கு தரமுடியாது என்று கட் அண்ட் ரைட்டாக மலையாளத்தில் மறுத்து விட்டனர். மிக சமீபத்தில் இந்தப் பிரச்னை பாராளுமன்றத்தில் விஸ்வரூபம் எடுத்தது. அப்போது கேரள சட்டசபையில் இந்தப் பிரச்னை எழுப்பப்பட்ட போது, ‘‘பம்பா, அச்சன்கோவில் நதிகளை, தமிழகத்தின் வைப்பாறு நதியுடன் இணைக்க கேரளம் ஒருபோதும் சம்மதிக்காது,’’ என்று பினராயி விஜயன் திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

கேரள அரசின் தொடர் பிடிவாதம் காரணமாக தேசிய நதிநீர் மேம்பாட்டு ஆணையம், ‘‘கேரள அரசின் அனுமதியின்றி நதிகள் இணைக்கப்படாது,’’ என்று அறிவிப்பாணை வெளியிட்டது. பாராளுமன்றத்தில் இந்தப் பிரச்னையை தமிழக எம்பிக்கள் எழுப்பிய போது, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி எழுந்து,“பிரதமர் மோடியின் முடிவின்படி, சம்மதம் அளிக்காத மாநிலங்களிலுள்ள நதிகள், வேறு மாநிலங்களில் உள்ள நதிகளுடன் இணைக்கப்படாது,’’ என்று அறிவித்து, தமிழகத்தின் தண்ணீர் கனவைக் கலைத்தார்.

சுயநல அரசியல்!



ந்த வீண் பிடிவாதமே இன்றைய விபரீதத்திற்கு வழிவகுத்திருக்கிறது. தங்கள் நதிகளில் இன்றைக்கு பெருக்கெடுக்கிற தண்ணீரை வேறு பக்கம் மடை மாற்றி விட வழி தெரியாமல் திண்டாடுகிறது கேரள அரசு. ஒருவேளை, தமிழகத்துடன் சில நதிகள் இணைக்கப்பட்டிருக்குமேயானால்... இந்தப் பக்கம் திருப்பி விட்டிருக்கலாம். நம்மாட்களும், எவ்வளவு கொடுத்தாலும் ‘வெல்கம்... வெல்கம்...’ என்று புன்னகை தவழ, வரவேற்று வாங்கிக் குடித்திருப்பார்கள். இல்லையா?

நியாயமாகப் பார்த்தால், கேரளத்துக்கான நீர் தேவை மிகவும் குறைவு. ஆனால், சுயநலன் சார்ந்த அவர்களது அரசியலே, தமிழகத்துடன் தண்ணீரை பகிர்ந்து கொள்ள விடாமல் தடுக்கிறது. பெரியாறு அணை பிரச்னைக்கான அடிப்படை காரணம் அதுதானே? பெரியாறு அணை தண்ணீர் தென் தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களுக்கு (தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை) குடிநீர், விவசாயத்துக்கு ஜீவாதாரமாக திகழ்கிறது. பெரியாறு தருகிற தண்ணீரைத்தான் மதுரைக்காரர்கள் குடிக்கிறார்கள்.

இடுக்கியால் என்ன பயன்?


மது நிலப்பரப்புக்குள் இருக்கிற அணைத் தண்ணீரைக் கொண்டு பக்கத்து மாநிலம் பாசன பயன் பெறுவதா என்கிற சுயநல சித்தாந்தமே, அடுத்த 50 கிலோ மீட்டர் தொலைவில் ஆசியாவின் பெரிய இடுக்கி அணையை கட்ட வைத்தது. மின்சாரம் தயாரிப்பது தவிர, இடுக்கி அணையில் தேங்குகிற தண்ணீரால் கேரளத்துக்கு என்ன பயன்? பெரியாறு அணையை விடவும் ஏழு மடங்கு பெரிய, 555 அடி உயரமுள்ள  இடுக்கி அணைக்கு எதிர்பார்த்த அளவுக்கு நீர்வரத்து இல்லை. நினைத்தது போல மின்சாரம் தயாரிக்க முடியவில்லை. பெரியாறு அணைக்கு போகிற தண்ணீரை கொண்டு வந்தால் தான் இடுக்கியை நிறைக்க முடியும் என திட்டம் போட்டார்கள். இப்போது போல எப்போதும் தண்ணீர் நிரம்பி நின்றால், 750 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கலாம். அதற்கும் அதிகமாகக் கூட கிடைக்கும். பகலிலும் பல்ப் எரியவிடலாம்.


ப்புறம் என்ன...? நிலநடுக்கப்பகுதியில் பெரியாறு அணை இருக்கிறது. உடையப் போகிறது. கேரளா அழியப் போகிறது என்று கதை பரப்பி, பெரியாறில் தேக்குகிற தண்ணீரின் அளவைக் குறைத்தார்கள். பெரியாறு அணை உடையப்போகிறது என்று 1979ல் இருந்து தொடர்ச்சியாக அவர்கள் பீதியைக் கிளம்பி்க் கொண்டிருக்கிறார்கள். பீதியைக் கிளம்பியவர்களின் அடுத்த தலைமுறை வந்து விட்டது. அவர்கள் கதை கட்டி இன்றோடு 39 ஆண்டுகளாகியும், பென்னிகுக் கட்டிய அந்த அணை இன்றுவரை படு பலமாக, பாதுகாப்பாக, உறுதியாக, கம்பீரமாகவே நிற்கிறது.



ண்மையில், நிலநடுக்கத்தால் பெரியாறு அணை பாதிக்கும் என்றால், அடுத்த 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிற இடுக்கி அணையை அந்த நிலநடுக்கம் பாதிக்காதா? அவர்கள் சொல்வது போல, ஒருவேளை பெரியாறு அணை உடைந்தாலும்... பெரிய பாதிப்பு எதுவும் இராது. மிக உயரத்தில் இருக்கிற பெரியாறு அணை தண்ணீர் பாதுகாப்பாக மலை இடுக்குகளில் ஓடி, இடுக்கி அணையை சென்று சேர்ந்து விடும். நிஜத்தில், இடுக்கி அணையே கேரள மக்களுக்கு மிகப் பெரிய ஆபத்து. இடுக்கி அணையால் தான் கேரள மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருக்கிறது என நமது பூனைக்குட்டி வலைத்தளம் இதற்கு முன்பு பலமுறை இதுகுறித்து தொடர் எச்சரிக்கை செய்திருக்கிறது. இன்று அது உண்மையாகவும் ஆகியிருக்கிறது.


பெரியாறு உடையுமா?

ந்த மழை வெள்ளம் உணர்த்திய சோகத்தில் இருந்து கேரளம் பாடம் படிக்கவேண்டும் என்பதே நமது விருப்பம்.. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை வாபஸ் பெறுவதன் மூலம், பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடிக்கு உயர்த்திக் கொள்ள கேரள அரசு வழிவகை செய்யவேண்டும். இதன் மூலம், எதிர்காலத்தில் இடுக்கி அணைக்கு ஏற்படும் வெள்ள அபாயம் தவிர்க்கப்படும். ஆனால், அப்படி ஒரு எண்ணம் கேரள அரசியல்வாதிகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இந்த மழை சேத தருணத்திலும் கூட, பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 138 அடியாகக் குறைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்ததே அதற்குச் சாட்சி. இந்தத் தருணத்தில் பெரியாறு நீர்மட்டத்தை அவர்கள் 152 அடிக்கு உயர்த்த கோரியிருந்தால், அது நியாயம். ஆனால், இப்போதும் கூட இடிந்து விடும் என்ற பழைய பூச்சாண்டியைக் காட்டி பெரியாறு நீர்மட்டத்தை குறைக்கக் கோருவதை இயற்கையே ஏற்காது.


வீடு பற்றி எரியும் போது கூட, பக்கத்து வீட்டுக்காரனை வேதனைப்படுத்த வேண்டும் என்று மனம் ஆசைப்பட்டால், மிகக் கொடூரமானதொரு மனச்சிதைவு நோய் பிடித்திருக்கிறது என்றுதான் அர்த்தம். இந்த படு மோசமான மழை வெள்ள தருணத்திலும் கூட ஒரு சில மலையாள செய்திச் சேனல்கள் ‘‘பெரியாறு அணை உடையப் போகிறது. அணை சுவரில் பெரிய கீறல் விழுந்து, தண்ணீர் லீக் ஆகிக் கொண்டிருக்கிறது. அடுத்த மூன்று மணிநேரத்தில் அணை உடைந்து எர்ணாகுளம், ஆலுவா பகுதிகள் கடலோடு கடலாக மூழ்கப் போகின்றன. மக்களே வீட்டை காலி பண்ணி விட்டு ஓடுங்க...’’ என்று பீதியைக் கிளப்புகின்றன. பெரியாறு அணை உடையப்போகிறது; கீறல் விழுந்து தண்ணீர் லீக் ஆகிறது என்று அப்பாவி பொதுஜனங்கள் பேசுவது போல ஆடியோ உரையாடல்கள் வாட்ஸ்அப் மூலம் படுவேகமாக பரப்பப்படுகின்றன.


பெரியாறு அணையில் இருந்து தமிழகம் திறக்கிற தண்ணீரால் தான் கேரள நகரங்கள் வெள்ளத்தில் மூழ்குகின்றன என்று திட்டமிட்டு பிரசாரம் செய்யப்படுகிறது. உண்மையில், இடுக்கி அணை நிரம்பி, திறக்கப்பட்டதன் காரணமாகத்தானே கேரள நகரங்கள் வரலாறு காணாத சேதத்தை சந்தித்திருக்கின்றன? எதற்காக, இந்தப் பொய்? பெரியாறு அணையை தகர்த்து விட்டால், அந்த நதி நீர் முழுக்க, முழுக்க கேரளத்துக்கும், இடுக்கி அணைக்கும் சொந்தமாகி விடும். எல்லாம் அந்த 750 மெகாவாட் படுத்துகிற பாடு. இந்தத் தருணத்தில் போடும் கூக்குரலுக்கு மதிப்பதிகம் என்பதால், மழை வெள்ளத்தைச் சுட்டிக் காட்டி பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்குமாறு மத்திய அரசிடமும், உச்சநீதிமன்றத்திடமும் கேரள அரசு அனுதாபம் தேடுகிறது.

உயிர்காக்கும் அரண்!


து என்னவிதமான மனநிலை என்று சத்தியமாக புரிந்து கொள்ளமுடியவில்லை. உண்மையில், இவ்வளவு பெரிய வெள்ள சேதத்துக்கு காரணம் இடுக்கி அணையே தவிர, பெரியாறு அணை அல்ல. பெரியாறு அணை அதன் 142 அடி கொள்ளளவை எட்டும் முன்பாகவே, இடுக்கி அணை நிறைந்து, கேரள மாவட்டங்களை மூழ்கடித்து விட்டதுதானே உண்மை? கேரள மக்களின் கோபம், நியாயமாகப் பார்த்தால் இடுக்கி அணை மீதல்லவா இருக்கவேண்டும்? பெரியாறு அணை என்று ஒன்று, ஒருவேளை இல்லாது போயிருந்தால், இடுக்கியுடன், அந்தத் தண்ணீரும் சேர்ந்து, ஒட்டுமொத்த கேரளத்தையும் துவம்சம் செய்திருக்காதா? இடுக்கி அணை பெரும் சேதத்தை விளைவித்துக் கொண்டிருந்த நேரத்தில், பெரியாறு அணையல்லவா கேரளத்துக்கு பாதுகாப்பு அரணாக நின்று உயிர் காத்துக் கொண்டிருந்தது? அந்த அணை மீது வீண் பழி போடலாமா? இந்த சோகமான தருணத்துக்குப் பிறகாவது மனம் மாறி, நதி நீர் பகிர்வு என்கிற ஆக்கப்பூர்வமான அடுத்தகட்டத்துக்கு கேரளா செல்லும் என்று எதிர்பார்த்தால்... நிலைமை இன்னும் மோசமாகிறது.

ரு தேசத்தின் இரு மாநிலங்கள், தங்களுக்குள் மிகை நீரை பகிர்ந்து கொள்ள முரண்டு பிடிக்கும் அபாயம், எதிர்காலத்தில் உருவாகலாம் என்ற சிந்தனை... சுதந்திரத்துக்கு முன்பாகவே ஒருவருக்கு தோன்றியிருக்கிறது. அதன் காரணமாகவே, நதிகளை தேசியச் சொத்தாக அறிவித்து, அவற்றை மத்திய அரசின் பட்டியலில் இணைக்கவேண்டும் என்று மாகாணப் பிரிவினை தருணத்தின் போது அவர் வலியுறுத்தினார். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கரின் அந்த அற்புத சிந்தனையை நமது மத்திய அரசுகள் புறந்தள்ளியதன் விளைவு... சுதந்திர இந்தியாவின் சாபக்கேடாக, இன்றைக்கும் தொடர்கிறது.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

11 கருத்துகள்:

  1. முதல் காணொளி நன்றாகவே புரிய வைக்கிறது - படிப்படியான விளக்கமும்...

    இயற்கை - தண்டனை கொடுத்தும் அவர்கள் மாறவில்லை... வேதனை தரும் விசயம்...

    பதிலளிநீக்கு
  2. அருமையான தகவல்கள், கட்டுரையின் போக்கு அபிரிதமாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  3. Dear KrishnaKuKris please post this message in English. So that all people in India as well as people of Kerala can understand. We should defeat the false propoganda. Thanks for the detailed information about the dam

    பதிலளிநீக்கு
  4. சங்கரசுப்பிரமணியன், கோவைபுதூர்20 ஆகஸ்ட், 2018 அன்று PM 5:23

    மிக சிறப்பான கட்டுரை. பெரிராயறு அணை விவகாரத்தில் கேரள அரசியல்வாதிகள் ஆரம்பம் முதலாகவே தவறான நிலைப்பாட்டையே மேற்கொண்டு வருகின்றன. இந்த கஷ்டமான சூழ்நிலையிலும் கூட, தமிழகத்தின் மீது அவர்கள் காழ்ப்புணர்ச்சி கொள்வது வருத்தமளிக்கிறது. கேரள அரசின் மறைமுக சதிவேலைகளை பட்டவர்த்தனமான இந்தக் கட்டுரை தோலுரிக்கிறது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. மலையாளத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு கேரள சகோதரர்கள் படித்தால் நிச்சயமாக நீர் பங்கீடு சாத்தியப்படும்.அவ்வளவு அழகான கட்டுரை நியாயமான கேள்விக்கணைகள் பெரியாறு அணையின் மனட்சாட்சியே இக்கட்டுரை .மிக அற்புதம் சார்.வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  6. பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்கிற தகவலை மிக அருமையாக எடுத்து சொல்லி உள்ளீர்கள்.எனக்கு தெரியாத பல்வேறு தகவல்களை இதன் வழியாக தெரிந்து கொண்டேன்.இடுக்கி,பெரியாறு ஒப்பீடு மிக அருமை.வாழ்த்துக்கள் தோழர்.லெ.சொக்கலிங்கம்,தேவகோட்டை.

    பதிலளிநீக்கு
  7. கட்டுரை அருமை என ஒரு வார்த்தையால் முடித்து விட முடியாது. கேரள வெள்ளத்தில் துவங்கும் கட்டுரை அவர்களின் அரசியல் சானக்கியத்தனம் முதல் கடவுள் தேசத்திற்கு சொந்தகாரர்கள் என மார் தட்டும் அவர்கள் கடவுளை காக்க மறந்து போன உண்மையை போட்டு உடைத்துள்ளீர்கள். தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க மனம் இல்லாத கேரள மக்களுக்கு ஆபத்தில் உதவும் தமிழர்களின் உள்ளத்தையும் உறுதிபட கூறியதோடு. கேரளம் தமிழகம் என துவங்கும் கட்டுரை உலக சுற்றுச்சூழல் வரை பேசி சூழல் குறித்த தங்களின் பார்வை மூலம் வாசகர்களாகிய எங்களையும் விசாலப்படுத்தியுள்ளீர்கள்.

    நன்றி

    பதிலளிநீக்கு
  8. மிக அற்புதமான,அறிவாற்றல் மிக்க கட்டுரை சார்.

    பதிலளிநீக்கு
  9. நல்ல தெளிவான உயிரோட்டம் உள்ள கட்டுரை சார்

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...