திங்கள், 9 ஏப்ரல், 2018

வழியனுப்புகிறோம் தோழர் அர்ஷியா!

துரையின் நிகழ்கால அடையாளங்களுள் ஒருவராகத் திகழ்ந்த எழுத்தாளர் அர்ஷியாவின் திடீர் மரணம், நான்மாடக்கூடல் வீதிகளை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 58 என்பது, அப்படியொன்றும் விடைபெற்றுச் செல்வதற்கான வயதல்ல. தவிர, அவரது செயல்பாடுகள், ஒரு நாளும் அவரது வயதைச் சார்ந்ததாக இருந்ததில்லை. கல்லூரி மாணவருக்குரிய ஆற்றலுடன் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு இரங்கல் சொல்வதற்கான காலம் இத்தனை துரிதத்தில் வந்து சேரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.


சையத் உசேன் பாஷா என்கிற அவர், மகள் பெயரையே, தனது அடையாளமாகக் கொண்டு இரு சிறுகதை தொகுப்புகள், ஏழு நாவல்கள், ஒரு கட்டுரைத் தொகுப்பு, ஆறு மொழிபெயர்ப்பு நூல்களை எழுதித் தள்ளியிருக்கிறார். எழுத்து தவிரவும், சமூகம் சார்ந்த அவரது செயல்பாடுகளை மதுரையின் தொன்மை மீது பற்றுக் கொண்ட யாவரும் அறிந்திருப்பார்கள்.

‘தோழர் அர்ஷியா காலமாகி விட்டார்...’ என்கிற தகவல், ஞாயிறன்று (ஏப்ரல் 8) காலையில் வாட்ஸ்அப் வழியே வந்து சேர்ந்த போது முதலில் நம்பத் தயக்கமாக இருந்தது. நண்பர் ஷாஜகானை அழைத்துப் பேசியபோது, தகவல் உண்மையே என உறுதி செய்தார். தர்மபுரி சென்றிருந்த போது மாரடைப்பு என தகவல் தெரிவித்தார். மதுரையை மிக நேசித்த மனிதரின் மரணம், மதுரையில் இல்லை!

ழுத்துடன் இயங்கிக் கொண்டிருக்கிற அத்தனை மதுரைக் காரர்களும் கண்டிப்பாக அவரது வட்டத்திற்குள் இருப்பார்கள். தொடர்பற்று, தூரமாக விலகி இருந்தாலும் கூட, நெருங்கி வந்து நட்பை உருவாக்கிக் கொள்கிற / அந்த நட்பை ஆழ பலப்படுத்துகிற குணம் அவருடையது. மலை உச்சியொன்றில் அவரை நான் முதன்முதலில் சந்தித்தேன். தோழர் அ.முத்துகிருஷ்ணனின் ‘பசுமை நடை’ பயணத்திற்காக திருப்பரங்குன்றம் மலையேறி, வறுக்கிற வெயில் தாக்குப்பிடிக்க முடியாமல் நிழல் தேடி ஒதுங்கி நின்றபோது, எனக்கு முன்பாகவே அவர் அங்கிருந்தார். நண்பர்கள் அறிமுகம் செய்தப் பிறகு பொதுவான விஷயங்கள் பேசிக் கொண்டோம்.

பிறகு, ‘பசுமை நடை’ நண்பர்களுக்கு அந்த திருப்பரங்குன்றம் மலையின் சரித்திர முக்கியத்துவங்கள் குறித்து வகுப்பெடுத்தார். கோயிலும், கோயில் சார்ந்த ஒரு பகுதியாகவே பிம்பப்படுத்தப் பட்டிருந்த அந்த மலை, மதுரை மாநகரத்தின் பல்லாயிரம் ஆண்டு பழமையான வரலாற்றில் எவ்வளவு முக்கியமான இடம் பிடித்திருக்கிறது என்று, எளிமையாக, யாரையும் கவர்கிற விதத்தில் சுருக்க உரையாற்றினார். குறிப்பெடுத்துக் கொள்ள அவரது உரையில் நிறைய தகவல்கள் இருந்தன.
முதல் சந்திப்பு முடிந்து ஓரிரு மணிநேரம் கூட கடந்திருக்காது. மலையில் இருந்து கீழிறங்குகிற போது மிக நெருங்கிய நட்புக் கொண்டவர்களாக மாறிப் போயிருந்தோம். நானும், நண்பர் ஷாஜகானும், அவருமாக பல கதைகள் பேசிய படியே இறங்கியதில்... மலை இறங்கிய களைப்பே தெரியவில்லை. உச்சியில் இருந்து குதித்து ஒரே வினாடியில் கீழே வந்து சேர்ந்தது போல ஒரு உணர்வு... அவருடன் பேசிக் கொண்டு கீழிறங்கிய போது ஏற்பட்டது உண்மை.


ண்பர் ஷாஜகான் தான் அவரை எனக்கு மிக நெருக்கமாக அறிமுகப்படுத்தினார். மதுரை நகரின் வரலாறுகள் மிக அறிந்தவர். மதுரைக்கான வட்டார வழக்கியல், நடைமுறைகளை தனது எழுத்தின் வாயிலாக, எதிர்காலத்துக்குக் கடத்திக் கொண்டிருக்கிறார் என அறிந்ததும், அவருடனான நட்பு எனக்கு மிக முக்கியமானதாக மாறிப் போனது. எழுத்தின் போது ஏற்படுகிற சந்தேகங்களுக்காக அவரைத் தொடர்பு கொண்டிருக்கிறேன். அழகாக விளக்கமளித்திருக்கிறார். அடிப்படையில், அவரும் ஒரு பத்திரிகையாளராக இருந்தவர் என்பதால் (ஆரம்ப காலங்களில் தராசு பத்திரிகையில் செய்தியாளராக பணியைத் துவக்கியவர்) என் மீது கொஞ்சம் கூடுதல் பாசம் வந்திருக்கும் என நினைக்கிறேன்.


வரது எழுத்துகளுடன் ஒப்பிடும் போது, நானெல்லாம் சீனி பட்டாசு. ஆனாலும், ஏதாவது எழுதி விட்டு, யாராவது பாராட்டுகிறார்களா என எதிர்பார்த்துக் காத்திருக்கும் போது, முதல் ஆளாக பேசுவார். ஊக்க சக்தி, உந்து சக்தியாக அவரிடம் இருந்து வந்து மனம் நிறைக்கும். ஒரு ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று... திடீரென முன்னறிவிப்புகள் எதுவுமின்றி திருமங்கலத்தில் எனது வீட்டுக்கு வந்திருந்தார். அப்போதுதான் எழுதி வெளியிட்டிருந்த ‘மரணத்தில் மிதக்கும் சொற்கள்’ சிறுகதைத் தொகுப்பை எனக்கு பரிசாகக் கொடுத்து, மிக நீண்டநேரம் உரையாடினார்.


ன்னை வந்து சந்தித்தது குறித்து, தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவொன்றும் இட்டிருந்தார். எனது பணி நெருக்கடிகள் காரணமாக அவரை அதிகமதிகமாக சந்திக்கவோ, உரையாடவோ முடியவில்லை. ஆனால், அவரிடம் ஒரு பெரிய நண்பர்கள் குழுவே இருந்தது. எந்த முன் திட்டமிடலும் இல்லாமல் மதுரையின் ஒரு இடத்தை தேர்வு செய்து முகநூலில் அறிவிப்பது. மாலையில் அனைவரும் அங்கு சந்தித்து உரையாடுவது, மாடவீதிகளின் வரலாறு பேசிய படியே வடையும், டீயுமாக உலாவுதல் என அவரது பொழுதுகள் மிக ஆக்கபூர்வமாகவே நகர்ந்து கொண்டிருந்தன. நான் பணியாற்றும் நாளிதழிலும் அவர் சில கட்டுரைகள் எழுதினார். தொடர்ந்து எழுதுகிற சூழல்கள் ஏற்படாது போனாலும் கூட, அந்தக் கட்டுரைகள் குறி்த்து அவர் பெரு மகிழ்வு கொண்டிருந்தார்.

துரையில் இருந்து எழுதியவர்களில், மதுரையை முழுமையாக, உண்மையாக பிரதிபலிக்கிற அந்த ஆற்றலே, சக எழுத்தாளர்களிடம் இருந்து அவரை வேறுபடுத்திக் காட்டியது. ஏழரைப் பங்காளி வகையறா, பொய்கைக்கரைப்பட்டி போன்ற அவரது நாவல்களின் தலைப்பே அதற்கு உதாரணம். மதுரையின் கசகசப்பு மிகுந்த புழுதித் தெருக்களின் / கிராமங்களின் நிஜ வாசனையை அவரது எழுத்துகளில் நுகரமுடியும். மென் நகைச்சுவை கலந்த எளிய எழுத்து அவருடையது. அவரது முதல் நாவல் எழரைப் பங்காளி வகையறா 2009ம் ஆண்டுக்கான தமிழக அரசின் சிறந்த நாவல் விருது பெற்றது. பொய்கைக்கரைப்பட்டி நாவல், மதுரை  மாநகரம் எதிர்கொள்கிற சமகால பிரச்னைகளை, அதன் ஆழ, அகலங்களுடன்  பேசுகிறது.

டைப்புத் தளத்தைப் பொறுத்தளவில், அவர் இன்னும் மிகப் பெரிய உயரத்துக்குச் சென்றிருக்கவேண்டும். மிகப் பெரிய அங்கீகாரங்கள் தேடி வந்திருக்க வேண்டும். அவர் கொண்டிருந்த திறமைக்கு, அவர் அடைந்த உயரம் என்பது குறைவே என்கிற நிஜம், நெஞ்சை சுடுகிறது. அங்கீகாரம் பெறுவதற்கான அரசியல் அவருக்கு தெரிந்திருக்க வில்லை. அங்கீகாரங்களை அவர் விரும்பியவராகவும் இல்லை. ஆனாலும், அவரது முக்கியத்துவத்தை தமிழகத்தின் அனைத்து எழுத்தாளுமைகளும் உணர்ந்தே இருந்தார்கள்.
தோழர் அர்ஷியா இன்றில்லை. ஏப்ரல் 7 சனிக்கிழமை அவர் பிரிந்து விட்டார். இன்னும் ஒரு வாரம் இருந்திருப்பாராகில், 59வது பிறந்த நாளுக்காக அனைவரையும் ஒரு இலக்கிய விருந்துக்கு அழைத்திருப்பார். ஏப்ரல் 14, அவரது பிறந்தநாள். எழுத்தாளர் என்பது இருக்கட்டும். இனிமையான ஒரு மனிதர் விடைபெற்று விட்டார். பழகிய அந்த மிகக் குறைந்த நாட்களை நினைவு சேகரத்தில் இருந்து எடுத்துப் பார்த்து, அவரது அருமையை, இன்மையை உணர்கிறேன். மதுரை மண்ணும், இந்த மண் உருவாக்கிய படைப்பாளர்களும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள். அந்தப் படைப்பாளர்களுள் ஒருவராக... ஓரமாக... நானும் அவருக்கு விடைகொடுத்து வழியனுப்புகிறேன்.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

12 கருத்துகள்:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. நாங்களும் கனத்த இதயத்துடன் நண்பர் அர்ஷியா வை வழியனுப்புகிறோம்.

    பதிலளிநீக்கு
  3. உண்மை தோழர்.மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகளை எப்படி கண்டு கொள்ளாமல் விட்டார் எனத்தெரியவில்லை.மிகவும் வருத்தப்பட்ட இழப்பு.

    பதிலளிநீக்கு
  4. அன்பு அண்ணன் அர்ஷியா அவர்களின் மறைவு இன்னும் என்னால் ஏற்கமுடியாமல், அதிலிருந்து மீளவும் முடியாமல் இருக்கின்றேன். தங்களின் பதிவு மூலம் இன்னும் பல ஞாபகங்களை ஏற்படுத்தி கண்ணீரில் நனைகின்றேன். கட்டுரை அருமை. எழுத்துலக ஜாம்பவான்களான உங்கள் இருவருக்கிடையே நான் ஒரு பாலமாக இருந்தேன் என்ற வரலாறு இக்கட்டுரை மூலம் நமது சந்ததியினை சேரும் என்பதில் இக்கட்டுரை எனக்கு பெருமை ஏற்படுத்தியுள்ளது நன்றி குமார். தொடரட்டும் தங்கள் எழுத்துப்பணி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. அன்பும் பண்பும் நிறைந்த சிறந்த எழுத்தாளர் & நாவலாசிரியர் அண்ணன் அர்சியா.

    அவருடைய சந்திப்பின் போதெல்லாம் " வா ராசா " என்று அவர் அழைக்கும் அன்பு வார்த்தையை என்றும் மறவேன். அவரால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை ஈடு செய்ய எவரும் இல்லை. என்றும் அர்சியா சார் நம்மோடு அவர் எழுத்துக்களின் வாயிலாக வாழ்ந்து கொண்டு இருப்பார்.

    பதிலளிநீக்கு
  6. சிவக்குமார், மதுரை9 ஏப்ரல், 2018 அன்று PM 3:33

    எழுத்தாளராக மட்டும் தன்னை கூட்டுக்குள் அடைத்துக் கொள்ளாமல், சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்த நண்பர் அர்ஷியாவுக்கு அஞ்சலி. அவரது பழகும் குணத்தை அருமையாக படம்பிடித்து காட்டியிருக்கிறது இந்தக் கட்டுரை.

    பதிலளிநீக்கு
  7. செ. அபுதாகிர்9 ஏப்ரல், 2018 அன்று PM 4:05

    அருமையான உணர்வுப்பூர்வமான பதிவு - ஓர் எழுத்தாளருக்கான நிஜ அஞ்சலி -

    பதிலளிநீக்கு
  8. அவருடன் பழகிய நாட்கள் அற்புதமான தருணங்கள்..

    பதிலளிநீக்கு
  9. அறிஞர் அண்ணா மறைந்த போது, கலைஞர் கருணாநிதி எழுதிய கவிதையை நினைவுபடுத்துகிறது உங்களது இந்த கட்டுரை. படிக்கும் போதே மனம் கனக்கிறது. தோழர் அர்ஷியாவுடன் எனக்கு பழக்கமில்லை. ஆனால் அவர் பழகுவதற்கு எவ்வளவு எளிமையானவர் என்பதை, எளிமையான வார்த்தைகளால் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...