புதன், 21 பிப்ரவரி, 2018

காவிரி... கைவிரி...!

ர்நாடக நிலப்பரப்பில் சிறிதும், பெரிதுமாக ஓடிக் கொண்டிருக்கிற ஏராளமான நதிகளில், காவிரியும் ஒன்றாக இருக்கலாம். தமிழகத்தில் அப்படி அல்ல. தமிழகத்தைப் பொறுத்த வரை, நிலப்பரப்பின் மீது மட்டுமல்ல... மக்களின் உணர்வுப்பரப்பிற்குள்ளும் எந்த அணைத்தடுப்புகளுமின்றி அது ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழக மக்களின் வாழ்க்கையோடும், ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான அவர்களது வரலாற்றோடும் பின்னிப் பிணைந்து பயணிக்கிற நதி அது. இனி, நீராலன்றி... மணலால் மட்டுமே அறியப்படுமோ பொன்னி வள நதி என போற்றப்படுகிற அந்த காவிரி மகாநதி?


வான் பொய்ப்பினும்...

ட்டினப்பாலை, சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு என்று நமது சங்க இலக்கியங்களின் பக்கங்களை விரிக்கையில், ஆழப்பதிந்த காவிரியின் கால் தடத்தை அழுத்தமாகவே அங்கு நாம் காணமுடியும். நீண்ட, நெடிய வழிமரபுகளைக் கொண்ட நமது இலக்கியங்கள், வெறும் நதியாக மட்டுமே காவிரியை பார்க்கவில்லை; பதிவு செய்யவில்லை. ‘‘வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடற்காவிரி...’’ என்று உயர்த்திப் பிடிக்கிறது பட்டினப்பாலை. இன்றைய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, கர்நாடகத்தின் முரண்டு விபரங்கள், டெல்டா மாவட்டத்து பட்டினிச் சாவுகள் குறித்து தெரிய வருமானால், உருத்திரங்கண்ணனார் நேராக கேஎஸ்ஆர் அணைக்கே சென்று மதகில் ஏறிக் குதித்திருப்பார்.

1956, நவம்பர் முதல் தேதியன்று மைசூர் ஸ்டேட்டாக உருவாகி, 1973ல் கர்நாடகம் என்று பெயர் சூடிக் கொண்ட அந்த மாநிலத்தையும், ஆயிரம் ஆண்டுகள் பழமையான அவர்களது கன்னட மொழியையும் விடவும் மிக மூத்தது காவிரி.

‘‘மருங்குவண்டு சிறந்தார்ப்ப
மணிப்பூஆடை அதுபோர்த்துக்
கருங்கயற்கண் விழித்தொல்கி
நடந்தாய்வாழி காவேரி...’’
- காவிரியை வெறும் நதியாக அல்லாமல், மணிப்பூ ஆடை அணிந்து, அழகு காட்டி நடந்து வருகிற உயிருள்ள பெண்ணாகவே பார்த்து மகிழ்கிறது சிலப்பதிகாரம். குடகு மலையில் கிளம்பி, பூம்புகார் கடலில் வந்து சேர்கிற வரை, காவிரியின் பயணத்தூரம் 800 கிலோ மீட்டர்கள். கர்நாடகத்தில் 320, தமிழகத்தில் 416 கிலோ மீட்டர்கள் பயணிக்கிறாள்.

பங்கீடு எப்படி?

மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று,யானை கட்டி போரடித்ததாக மகுடம் சூடிக் கொள்ளும் தஞ்சைத் தரணியின் நிலைமை இனி கவலைக்கிடம். என்ன ஆச்சு காவிரிக்கு? எதனால் இப்படி ஒரு நிலைமை? எப்படி நடக்கிறது நீர்ப் பங்கீடு?

மாநிலங்களுக்கு இடையிலான பங்கீட்டுச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக, 1990ம் ஆண்டு, அப்போதைய பிரதமர் வி.பி.சிங், காவிரி தீர்ப்பாயத்தை அமைத்தார். நதியின் மொத்த நீர்வரத்தை கணக்கிடும் பணியில் களமிறங்கியது தீர்ப்பாயம். 1901 முதல் 1972ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை உத்தேச கணக்கிடு காலமாகக் கொண்டு ஆய்வு நடத்தியது. இந்த காலகட்டத்தில், நதியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் (குடகு முதல் புகார் வரை) குறைந்தபட்சம் ஐம்பது சதவீதம் அளவுக்கு மழை பெய்திருந்தால் கூட, 740 டிஎம்சி (TMC - one thousand million cubic feet) அளவுக்கு ஆற்றில் நீர்வரத்து இருக்கும் என மதிப்பீடு செய்து அறிவித்தது.

கேரளாவுக்கு எதுக்கு?


1924ம் ஆண்டில் தமிழகம் பெற்று வந்த காவிரி தண்ணீரின் அளவு 575.68 டிஎம்சி. என்பதால், 562 டிஎம்சி தண்ணீராவது வேண்டும் என தமிழகம் குரல் எழுப்பியது. பலகட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, காவிரி தீர்ப்பாயம் 2007, பிப்ரவரி 5ம் தேதி நீர்ப்பங்கீட்டு அளவு குறித்த தனது இறுதித்தீர்ப்பை வழங்கியது. அதன்படி. மொத்தமுள்ள 740 டிஎம்சியில் தமிழகத்துக்கு 419, கர்நாடகத்துக்கு 270, கேரளாவுக்கு 30, புதுச்சேரிக்கு 7, சூழலியல் பாதுகாப்புக்காக - கடலில் கலப்பதற்கு - 14 என நீர் பகுக்கப்பட்டது. இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். தமிழகம், கர்நாடகத்துக்கு சரி. அதெதுக்கு கேரளத்துக்கும், புதுச்சேரிக்கும்? புதுச்சேரியின் காரைக்கால் பகுதி காவிரி டெல்டா பாசனப்பகுதியில் நேரடியாக வருவதால், அவர்களுக்கு ஒரு 7. சரி, கேரளாவுக்கு? காவிரியின் துணை நதியான கபினி, கேரளத்து மலைப்பகுதியி்ல் உற்பத்தி ஆகிறது. அந்த நதி நீர் காவிரியில் கலப்பதால், அவர்களுக்கும் ஒரு பங்கு. அதாவது 30 டிஎம்சி.

மிழகத்துக்கு 419 டிஎம்சியா... என்று மலைக்க வேண்டியதில்லை. இந்த 419 டிஎம்சி தண்ணீரையும் முழுதாக கர்நாடகம் தரப்போவதில்லை. நீர்ப்பங்கீடு எப்படி நடக்கிது என்று பார்க்கலாமா?


குடகில் இருந்து புகார் வரைக்கும் 800 கிலோ மீட்டர்கள் பயணிக்கிறது இல்லையா? இந்த 800 கிலோ மீட்டர் பயணத்தின் பல இடங்களிலும் காவிரிக்கு நீர்ப்பிடிப்புப் பகுதிகள் (water catchment area) இருக்கும்தானே? கர்நாடக எல்லைக்குள் இருக்கிற நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து 462, தமிழகத்து நீர்ப்பிடிப்பு பகுதி மூலம் 227, கேரள நீர்ப்பிடிப்புப் பகுதியில் இருந்து (கபினி நதி மூலமாக) 51 என மொத்தம் 740 டிஎம்சி தண்ணீர் உற்பத்தியாகிறது.

இத்தனை இடையூறா...?

க, தமிழக எல்லைக்குள் (416 கிமீ) நதி பயணிக்கிற போது, (அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்கு பருவமழை மூலம்) கிடைக்கிற 227 டிஎம்சி தண்ணீரும், காவிரியில் நமக்கான பங்கீட்டு அளவில் சேர்ந்து  விடுகிறது. அப்படிப் பார்க்கும் போது, 192 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கர்நாடகம் தருகிறது. இதுதான் தமிழகத்துக்கான (பழைய) 419 டிஎம்சி தண்ணீர் கணக்கு.


ந்த 192 டிஎம்சி தண்ணீரையும் தரவே முடியாது என கர்நாடகம் எத்தனை இடையூறு செய்யமுடியுமோ, அத்தனை செய்தது. யானை கட்டிப் போரடித்ததாக இலக்கிய வர்ணனைகளுடன், முப்போகம் சாகுபடி செய்த தமிழகத்துக்கும் இந்த 192 போதுமானதாக இல்லை. ஆனால், இந்த 192 கூட வந்ததா என்றால்... இல்லை. மழை பெய்து கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டு திக்குமுக்காடும் போது மட்டும் (வேறுவழியின்றி) தண்ணீர் திறந்து விடுவார்கள். மற்றபடி, வெயிலில் ஆவியானாலும் ஆகுமே தவிர... காவிரியில் வராது.

192 பத்தாது. 264 வேண்டும் என்று தமிழகமும், இதுவே அதிகம், இவ்வளவு கொடுக்கமுடியாது. 132 டிஎம்சி கொடுக்கிறோம் என்று கன்னடமும் உச்சநீதிமன்றத்தை தட்டின. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் அமித்வராய், கான்வில்கர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர விசாரித்து, பிப்ரவரி 16ம் தேதி தீர்ப்பு வழங்கியது. ‘தட்டில் வைத்த உணவு பத்தாது. பசி தீர, இன்னும் ஒரு கரண்டி வேண்டும்’ என்று கேட்டுச் சென்றால், தட்டில் இருந்தே ஒரு கவளத்தை அள்ளிக் கொண்ட கதையாக தீர்ப்பு வெளியானது.

மிழகத்துக்கான நீர் ஒதுக்கீட்டு அளவில் 14.75 டிஎம்சியை குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தமிழகத்தின் பங்கு 192ல் இருந்து  177.25ஆக குறைந்திருக்கிறது. இந்த 14.75 டிஎம்சி இனி கர்நாடகத்துக்கு கூடுதலாகக் கிடைக்கும்.

ஒரு தீர்ப்பும்... சில கேள்விகளும்!

ந்தத் தீர்ப்பு பல கேள்விகளை தமிழக மக்களின் மனதில் விதைத்து விட்டுப் போயி்ருக்கிறது.

* தமிழகத்தில் நிலத்தடி நீர் அளவு 20 டிஎம்சி இருப்பதால், 14.75 டிஎம்சி தண்ணீர் குறைக்கப்படுவதாக தீர்ப்பு சொல்கிறது. எனில், கர்நாடகத்தில் நிலத்தடி நீர்மட்டம் அடியோடு வறண்டு போய் விட்டதா, என்ன? கேரளத்திற்கான தண்ணீர் ஒதுக்கீடு அளவு குறைக்கப்படவில்லையே... அங்கு நிலத்தடி நீர்மட்டம் வற்றிப் போய், மலையாள மக்கள் தெருக்களில் குடத்துடன் திரிந்து கொண்டிருக்கிறார்களா அல்லது நெற்பயிருக்கு பாசன வசதியின்றி தேசத்தின் தலைநகரில் அம்மாநில விவசாயிகள் எலிக்கறி தின்று போராடினார்களா? எல்லாம் சரி. மழை தமிழகத்தை கைவிட்டு விட்டது. இனி, ஆற்றில் வருகிற தண்ணீர் அளவும் குறைந்து விட்டால்... நிலத்தடி நீர்மட்டம் உள்ளதும் போய் பாலைவனமாகி விடாதா டெல்டா பிரதேசம்?


1970ம் ஆண்டுகளில் தமிழகத்தில் காவிரி தண்ணீரை ஆதாரமாகக் கொண்டு சாகுபடி செய்யப்பட்ட பரப்பளவு 25.80 லட்சம் ஏக்கர் (அப்போது கர்நாடகத்தின் சாகுபடி பரப்பு வெறும், 6.80 லட்சம் ஏக்கர் மட்டுமே). - இது காவிரி உண்மை கண்டறியும் குழு அறிக்கை தகவல். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, இன்றைய தேதியில் காவிரி பாசனப்பகுதியில் சாகுபடி பரப்பளவு 15 லட்சம் ஏக்கராக சுருங்கி விட்ட அவலம் ஏன் கவனத்தில் கொள்ளப்படவில்லை?


கர்நாடகத்துக்கு தண்ணீர் அளவை அதிகரித்ததற்கு, International Cityயாக தரம் உயர்ந்திருக்கும் பெங்களூரு நகரத்தின்  தண்ணீர் தேவையை உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியிருக்கிறது. பெங்களூரு நகரத்தின் குடிநீர் தேவை என்கிற வார்த்தைகளின் அர்த்தம், அங்கு வசிக்கிற மக்களின் குடிநீர் தேவை என்பது அல்ல. அங்கு கடை விரித்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், அதிநவீன நட்சத்திர விடுதிகள், கேளிக்கை மையங்கள், உல்லாசக் கூடங்கள், செயற்கை ஏரிகள், பூங்காக்கள், மைதானங்களுக்குத் தேவையான தண்ணீரை... நடந்தாய் வாழி காவேரியில் இருந்து இனி எடுக்கப் போகிறார்கள்.

மறதி... தேசிய வியாதி!

டுக்கட்டும். ஆனால், யாரிடம் இருந்து எடுக்கிறார்கள் என்பது முக்கியம். மறதி, நமது தேசிய வியாதி. ஆகவே, இப்போது சொல்லப் போகிற தகவல் கட்டாயமாக நமக்கு மறந்திருக்கும். சில மாதங்களுக்கு முன்னால், நாளிதழ்களை புரட்டினால், செய்திச் சானல்களை திறந்தால்... தவறாது ஒரு செய்தி இடம் பெறுவதை கவனித்திருக்கலாம். வறட்சி காரணமாக தினமொரு விவசாயி மாரடைப்பால் உயிரிழந்ததையும், விஷம் குடித்துச் செத்ததையும் பத்திரிகைகள் படத்துடன் வெளியிட்டிருந்தன.

விளைநிலங்கள் தரிசாகப் போனது கண்டு மனம் நொந்தும், பயிருக்கு வாங்கிய கடனுக்கு வட்டி கட்டமுடியாமலும், நூற்றுக்கும் அதிகமான விவசாயிகள் உயிரிழந்தார்கள். விவசாயிகள் தற்கொலை பட்டியலில் 22.8 சதவீதத்துடன் தமிழகம் முதலிடம் (14.2 சதவீதத்துடன் மகாராஷ்டிரம் இரண்டாம் இடம்) பிடித்திருந்தது. நூற்றுக்கும் அதிகமாக விவசாயிகள் சாவு கண்டு, தேசிய மனித உரிமை ஆணையம், தமிழக அரசிடம் விளக்கம் கேட்டது. அரசு மிகவும் குறைத்துக் காட்டிய எண்ணிக்கையே நூற்றுக்கும் அதிகம் என்றால்.... உண்மையில் இறந்தவர்கள் எத்தனை பேர் என்று ‘ஆண்டவர்களுக்கு’ மட்டுமே தெரியும்.

கடைமடை உரிமை தெரியுமா?


கேளிக்கை விடுதிகளுக்கும், உல்லாசக் கூடங்களுக்கும் தண்ணீர் பற்றாக்குறை வந்து விடக்கூடாது என்று துடிக்கிற இளகிய நெஞ்சங்கள்... ஒரே ஒருமுறை, தண்ணீரின்றி கருகிய பயிர்களுக்கு நடுவே, வடிக்கக் கண்ணீரின்றி  செத்துக் கிடந்த விவசாயிகளின் குடும்பங்களையும் நினைத்துப் பார்த்திருக்கலாம்.


தெல்லாம் கூட ஒதுக்கி வைத்து விடலாம். இவையெல்லாம் உணர்வுப்பூர்வமான விஷயங்கள். சட்டத்தின் முன் இவை செல்லுபடியாகாது. ஆகவே, சட்டப்படியாகவே இன்னும் ஒரே ஒரு சங்கதி பார்க்கலாம். கடைமடை உரிமை என்று கிராமத்து தமிழிலும், Riparian rights என நுனிநாக்கு ஆங்கிலத்திலும் ஒரு சேதி சொல்வார்கள்... அறிந்திருப்பீர்கள் (அறிய விரும்புகிறவர்களுக்கு: வாட்டாள் நாகராஜ்... யாருடைய எதிரி?).


திநீர் பாசனத்தில் கடைமடை காரனுக்குத்தான் முன்னுரிமை என்பது காலம்காலமாக கடைபிடிக்கப்படுகிற மரபு. ஏதோ தமிழக விவசாயிகள் மட்டும் கடைபிடிக்கிற விஷயம் அல்ல இது. சர்வதேச நதிநீர் பங்கீட்டுச் சட்டமாக உலகெங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு நதியின் கடைமடை - நதியின் கடைசிப்பகுதி - விவசாயிகள், விளைநிலங்களுக்குத்தான் அந்த நதி நீரில் முன்னுரிமை. கடைமடை பாசன விவசாயிகள் அனுமதியின்றி அல்லது அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிற வகையில் நதியின் மேல்பகுதியில் தண்ணீரை தேக்குவதோ, கைவைப்பதோ சட்டப்படி... சர்வதேச சட்டப்படி குற்றம்.

Riparian water rights எனப்படுகிற இந்த சர்வதேச நதிநீர் மேலாண்மைச் சட்டத்தின் படியே உலகின் பல்வேறு நாடுகளும், தங்களுக்கு இடையே ஓடுகிற நதிகளில் இருந்து இதுவரை எந்தச் சிக்கலுமின்றி தண்ணீரை பகிர்ந்து கொண்டு வருகின்றன.

இனி என்ன நடக்கும்?


காவிரியில் தமிழகத்துக்கான உரிமை பறிக்கப்பட்டிருப்பது அப்பட்டமாக தெரிகிறது. மத்தியில் ஆளுகிற அரசு.. - அது காங்கிரசோ, பாரதிய ஜனதாவோ - கர்நாடகத்தை கைப்பற்றவேண்டும் என்கிற குறுகிய நோக்கத்தில், அங்கு கிடைக்கிற ஓட்டுக்களுக்காக, தமிழகத்தையும், அதன் நலன்களையும் திராட்டில் விடுகிற செயல் தொடர்ந்து கொண்டே போகிறது.

சரி. காவிரியில் தண்ணீர் வரத்து குறைந்து போகிற சூழலில் இனி என்னென்ன நடக்கலாம்?

காவிரி தண்ணீர் பொய்த்துப் போனதால், ஏற்கனவே 10 லட்சம் ஏக்கர் சாகுபடி பரப்பு இல்லாமல் ஆகிவிட்டது. விளைநிலங்கள், பிளாட்டுகளாகும் விபரீதம் இனி, இன்னும் அதிகமாகும்.

விவசாயம் செஞ்சு என்னத்தக் கண்டோம் என்று, நிலத்தின் உரிமையாளர்கள் ரியல் எஸ்டேட் காரர்களுக்கு சகாய விலையில் விளைநிலங்களை தள்ளிவிடும் போக்கு அதிகரிக்கலாம்.


அடுத்த 15 வருஷத்துக்கு அப்பீல் கூட பண்ணமுடியாது. தண்ணீ வராது. விவசாயமா பண்ணப் போறீங்க? சும்மா இருக்கிற நிலத்துக்கு, கைநிறைய காசு தர்றோம்... என்று ஆசை காட்டி ஹைட்ரோ கார்பன், ஓஎன்ஜிசி ஆட்கள் நெல் விளைந்த நிலத்தில் ஆழக் குழிதோண்டி புதிய இந்தியா உருவாக்கலாம்.

தஞ்சாவூரில் நெல் விளையாட்டி.. சாப்பிட சோறா கிடைக்காது என்று சில அறிவு‘சீவி’கள் கேட்கலாம். கர்நாடகப் பொன்னி, ஆந்திரா பொன்னி என்று மூடைகளை கொண்டு வந்து கடைவிரிக்கலாம். சாப்பிட சோறு கிடைக்கும் தான்.

என்ன செய்யப் போகிறோம்?

னால், மக்களே... அந்த விளைநிலத்தில் வியர்க்க விறுவிறுக்க களைபிடுங்கி, நாற்று நட்டு விவசாயம் செய்தார்களே, பல்லாயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்கள்? விவசாயம் பொய்த்துப் போன நாளில் அவர்கள் ஹைட்ரோ கார்பனிலும், ஓஎன்ஜிசியிலுமா வேலைக்குப் போவார்கள்? அவர்களது வயிற்றுப்  பிழைப்புக்கு எந்த நீதிமன்றம் வழி சொல்லப் போகிறது? நிலத்தில் இறங்கி கூலி வேலை செய்தாவது பிழைப்பு நடத்தி வந்த உழைப்பாளிகள், இனி என்ன செய்வார்கள்? வேலையில்லா திண்டாட்டமும், வறுமையும் அதிகரிக்கிற தேசத்தில் திருட்டும், கொள்ளையும், வழிப்பறியும் இயல்பாகவே அதிகரித்து விடும் என்பதுதானே இயற்கையின் தியரி?


மிழகத்தின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறி நிற்கிறது. புலியை முறத்தால் விரட்டினோம்... யானை கட்டி போரடித்தோம் என்று வரலாறு பேசிக் கொண்டே  எஞ்சிய வாழ்வையும் கடக்கப் போகிறோமா...? ஒற்றைக்குரல் முழங்க, நமது உரிமைகளை மீட்டு புதிய வரலாறு உருவாக்கப் போகிறோமா...?

என்ன செய்யப் போகிறோம் நாம்?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

6 கருத்துகள்:

  1. சங்கரசுப்பிரமணியன், கோவைபுதூர்21 பிப்ரவரி, 2018 அன்று PM 2:37

    விரிவான அலசல். உணர்வுப்பூர்வமான கட்டுரை. நீங்கள் எழுப்பிய கேள்விகள் அரசியல்வாதிகளுக்கு கேட்கவேண்டும். நீதிமன்றங்களுக்கும் கேட்கவேண்டும். நதிக்கரை நாகரிகம் வளர்ந்த இடங்களின் பட்டியலில் காவிரிக்கும் இடம் இருக்கிறது. அதை வெறும் ஆறாக மட்டும் பார்க்காமல், நமது பண்பாட்டு அடையாளமாகவும் பார்க்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. உயிர்ப்பான கருத்து. மிக அருமையான பதிவு. பத்திரப்படுத்தி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் விவசாயி மற்றும் விவசாயம்

    பதிலளிநீக்கு
  3. உயிர்ப்பான கருத்து. மிக அருமையான பதிவு. பத்திரப்படுத்தி பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் விவசாயி மற்றும் விவசாயம்

    பதிலளிநீக்கு
  4. என் மனம் பதறுகிறது. உங்களின் கேள்வி ஒவ்வொரு தமிழின் கேள்வி. ஆனால் தீர்வு யாரிடம் உள்ளது என்பதுதான் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  5. வெயிலில் ஆவியானாலும் ஆகுமே தவிர... காவிரியில் வராது...

    விவசாயிகள் தற்கொலை பட்டியலில் 22.8 சதவீதத்துடன் தமிழகம் முதலிடம் பிடித்தாலும்... காவிரியில் வராது...

    பெங்களூரு கேளிக்கை விடுதிகளுக்கும், உல்லாசக் கூடங்களுக்கும் தண்ணீர் பற்றாக்குறை வரவே வராது... தமிழகத்தில் தண்ணீரின்றி கருகிய பயிர்களுக்கு மட்டும்... காவிரியில் வராது...

    சர்வதேச சட்டப்படி குற்றம் என்றாலும் வாட்டாள் நாகபாம்புகள் தமிழர்கள் மீது விஷத்தை கக்கத்தான் செய்வார்கள்... ஆனால் காவிரியில் வராது...

    *தமிழகத்திற்கு தண்ணீர்💦*

    என்ன தான் செய்யப் போகிறோம் சார் நாம்???

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...