வெள்ளி, 14 ஜூலை, 2017

இது என்ன பிஹேவியர், உலக நாயகன்?

சினிமா ரிலீசுக்கு சில வாரங்கள் முன் ‘போருக்கு தயாராகலாம்’ என்று அரசியல் அக்கப்போர் கிளப்பி, படத்துக்கு பப்ளிசிட்டி தேடிக் கொள்வதும், படம் ரிலீஸ் ஆகி படுத்துக் கொண்டதாக தகவல் வந்ததும், கயிலாய மலைப்பக்கம் டிரெக்கிங் செல்வதும் ‘உச்சம்’ காலா காலமாக கடைபிடித்து வருகிற வியாபார யுக்தி. தன்னை ஆன்மீக பிதாமகனாக அவர் புனைந்து கொண்டு ‘பாபா’ பிளாக்‌ஷிப் கதைகள் கூறினாலுமே கூட... இன்றைக்கு வரையிலும் மதவாத சர்ச்சைக்குரிய கருத்துக்களை தனது திரைப்படங்கள் வாயிலாக அவர் வெளிப்படுத்தியதில்லை.


ருபது - இருபது போட்டியில் சிக்ஸருக்கு பறக்கிற பந்தின் உயரத்துக்கு சிகரெட்டை தூக்கி வீசி, அது தாழ வருகையில் உலக கிரிக்கெட் வீரர் யாரும் செய்திராத சாதனையாக, லாவகமாக வாயால் கேட்ச் பண்ணி, தமிழகத்தில் சிகரெட் விற்பனையை உயர வைத்து புண்ணியம் தேடிக் கொண்டவர் அவர். ஆடி ஒடுங்கி, அந்திம காலத்துக்கு வந்தப் பிறகு, ‘‘கண்ணுங்களா... நான் பண்ணுன தப்பை பண்ணாதீங்கப்பா...’’ என்று அவரே இன்று ரசிகர்களுக்கு புத்திமதி சொல்கிற அளவுக்கு வந்து விட்டார்.

ப்பேர்ப்பட்ட உச்சத்தைக் கூட, ஒரு வழியில் ஏற்றுக் கொள்ளலாம். திரைப்படங்களில் விடவும் நிஜத்தில், மிக நேர்த்தியாக நடிப்பாளுமை செய்து கொண்டிருக்கிற ‘உலகத்தை’ மட்டும் ஒருபோதும் மக்கள் மன்னிக்கத் தயாரில்லை. ‘மதவாதமா...? அது மகாதப்பு’ என்பார். படம் எடுக்கும் போது ‘பாய்... இந்த வயசில உனக்கு இவ்வளவு இளசா பொஞ்சாதி கேக்குதோ’ என்று வசனம் கோர்த்திருப்பார்.


னது வியாபாரத்தை பெருக்கிக் கொள்ளவும், திரைப்படங்களை விளம்பரப் படுத்தவும், மக்களின் நம்பிக்கைகளில் கைவைத்து சர்ச்சைகளை கிளப்புவார். சம்பந்தப்பட்ட அமைப்புகள் சீற்றம் கொண்டதும், ‘‘நான் கருப்புச் சட்டைக்காரனாக்கும். வீட்டை காலி செய்து விட்டு போகப் போகிறேன். நாட்டை காலி செய்து விட்டு கிளம்புகிறேன்...’’ என்று அவரது சினிமாக்களில் இருப்பதை விடவும் சிறந்த வசனங்களை பேசி, மீடியாக்களை திணறடிப்பார்.

நிற்க.

நான்கு பாராக்களையும் கடந்து விட்டபடியால், மெயின் மேட்டருக்கு வந்து விடலாம். ஜிஎஸ்டி, கேளிக்கை வரி என்று சினிமா உலகம் ஜிங்கியடிக்கப் போவதை  முன்கூட்டியே உணர்ந்ததும் (கலைஞானி இல்லையா, அவரு?) லாவகமாக சுதாரித்து ரூட்டை மாற்றிக் கொண்டார். ஜவுளி விளம்பரம், தொலைக்காட்சி தொகுப்பு என்று அடுத்த சாப்டரை ஆரம்பித்து விட்டார் உலகம். டிவியில் கவனித்திருப்பீர்கள். அவர் என்னமும் செய்யட்டும். சமூகத்தை, பொதுமக்களை பாதிக்காத, சீரழிக்காத மட்டில் இருந்தால் சரி.


ற்போது, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ‘பெரிய தலைவர்’ நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார். நிகழ்ச்சியில் இவர்தான் பெரிய தல. அடுத்த தலைமுறையை சீரழித்தே தீருவது என்று, காலாவதியாகிப் போன படச்சுருள்கள் மீது சத்தியமடித்து விட்டு வந்தது போல, அந்த நிகழ்ச்சி குடும்ப உறவுகளை குழப்பியடித்துக் கொண்டிருக்கிறது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற நாட்டிய - நடிகை பெண்மணி ஒருவர், ஆரம்பம் முதலாகவே ‘எச்ச... கொச்ச’ என்று தனது பிஹேவியரை மணிக்கொரு தரம் காட்டிக் கொண்டிருந்தார். அவரது குடும்பம், உலகத்துக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்பவும் வேண்டப்பட்டதாகையால், பெரிய தலயிடம் இருந்து யாதொரு கண்டிப்பும் இல்லை. தனது சக போட்டியாளரின் குணம் படுமோசம் என்று சொல்வதாக நினைத்து, மேற்படி ‘நா - ந’ பெண்மணி ‘ச்சே... இதென்ன சேரி பிஹேவியர்’ என்று வார்த்கைகளை அள்ளி வீச... ஆரம்பித்திருக்கிறது சர்ச்சை.

பிஹேவியரை அடுத்த பாராவில் பார்த்துக் கொள்ளலாம். முதலில், சேரி. சமூகத்தில் ஒதுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்கள் வசிக்கிற பகுதி என்பதான பொது அர்த்தம் இன்றைக்கு இருக்கிறது. ஆனால், அது மெய்யான அர்த்தம் அல்ல. சங்க காலத்தில் இருந்தே சேரி என்கிற பெயர் இருக்கிறது. மக்களின் வாழிடத்துக்கு இந்தப் பெயர் உண்டு. மக்கள் சேர்ந்து வாழுமிடம் ‘சேரி’ என்கிற அளவில் இது ஒரு காரணப்பெயராகவும் இருந்திருக்கிறது. தொல்காப்பியமும், நிறைய சங்க இலக்கியங்களும் மக்கள் வசிப்பிடங்களை சேரி என்கிற பெயரிட்டு அழைத்திருப்பதை ஒருமுறை லைப்ரரிக்குச் சென்று உலகம் உறுதி செய்து கொள்ளலாம். குறிப்பாக, முல்லை நிலத்தில் மக்கள் வசிக்கிற பகுதிகள், சேரி என்று பெயரிட்டே அழைக்கப்பட்டிருக்கின்றன.

ப்போது, பிஹேவியர். ‘சேரி பிஹேவியர்’ என்கிற சொல்லை, ‘படு மோசமான, கேவலமான மட்டரகமான குணம்’ என்கிற அர்த்தத்தில் அந்த ‘நா - ந’ பெண்மணி பயன்படுத்தியிருக்கிறார். நிஜத்தில், உயர்ந்த மனித மாண்புகள் இன்றைக்கும் மூச்சுப்பிடித்து வாழ்வது, சேரிப்புறங்களில் மட்டுமே.

* அடிபட்டு கீழே விழுகிறவனை தூக்கி அமர்த்தி, தண்ணீர் கொடுத்து, முகத்தில் சோடா அடித்து முதலுதவிகள் செய்கிற பாங்கு இன்றைக்கும் சேரிகளில் மட்டுமே குடியிருக்கிறது.
* முன்பின் தெரியாதவர் வந்தாலும், உள்ளே அழைத்து உபசரித்து ஒரு வாய் தண்ணீர் கொடுத்து அனுப்புகிற பிஹேவியர் - சேரி பிஹேவியர்.
* பசியில் கண்ணடைத்து கீழே விழுந்து கிடக்கிறவனுக்கு, வீட்டில் இருக்கிற கூழோ, பழைய சாதமோ... கடிக்க சில துண்டு வெங்காயத்துடன் சேர்த்துக் கொடுத்து அனுப்புகிற பிஹேவியர் - சேரி பிஹேவியர்.
* குடியிருப்பில் ஒரு துக்கம் நடந்து விட்டால், அதற்கான செலவுகளையும், அந்தக் குடும்பத்தின் உணவு + பிற தேவைகளையும் பகிர்ந்து கொள்கிற பண்பான பிஹேவியர் இன்றைக்கும் இருக்கிற இடம் சேரி.

- ஸ்டார், ஸ்டாராக வைத்து இன்னும் நிறையச் சொல்லலாம். ஆதாரம் கேட்பவர்களுக்கு சமீபத்தில் நடந்த மெரினா புரட்சியில் இருக்கிறது சாட்சி. அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது போலீசார் தடியடி நடத்தித் தாக்கிய போது, அரசு அதிகாரிகளையும், போலீசாரையும் கண்டு துளி அஞ்சாமல், பாதிக்கப்பட்ட மாணவிகளை, இளம்பெண்களை தங்கள் குடிசைகளில் பாதுகாத்து, உணவு கொடுத்தார்களே... மீனவப் பெண்கள். அந்த பிஹேவியர், சேரி பிஹேவியர்.

க, ‘சேரி பிஹேவியர்...’ என்று முகத்தை சுளித்த படி பேசியதன் மூலமாக, மேற்படி நா - ந பெண்மணி, சேரிப்பகுதிகளில் இன்றளவும் மதிப்புடன், மனித மாண்புடன் வாழ்ந்து வருகிற பல கோடி மக்களை இழிவுபடுத்தியிருக்கிறார். எந்தவொரு மனிதனையும் அவன் வசிக்கிற இடத்தின் பெயராலோ, பிறந்த மதத்தின், இனத்தின் பெயராலோ சிறுமைப்படுத்துவது அப்பட்டமான சட்டவிரோதம். அவர் மீது நடவடிக்கை கோரி பல்வேறு மனித உரிமை இயக்கங்கள், அமைப்புகள், ஆர்வலர்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள்.


நாட்டிய - நடிகை பெண்மணிக்கு இந்த ‘சேரி தகவல்கள்’ தெரியாமல் இருக்கலாம். தப்பில்லை. ஆனால், நிகழ்ச்சியை நடத்துகிற உலகம், உலகமறிந்தவர். அவருக்கு தெரியாத ஒரு மேட்டர் இருக்கிறது என்றால், அது, இன்னமும் கண்டுபிடிக்கப்படாத மேட்டராகத்தான் இருக்கும். அந்தளவுக்கு ஞானி அவர். நடிகையின் சேரி பிஹேவியர் வார்த்தை பிரயோகத்தை கேட்டதும் அவர் குமுறி எழுவார் என்றுதான் அவரது ரசிக மகாஜனங்கள் எதிர்பார்த்தார்கள். காரணம் இருக்கிறது. பகுத்தறிவு, பெரியார் பாசறை, கருப்புச் சட்டை, கடவுள் மறுப்பு என்று படங்களுக்கு நிகராக நிஜ வாழ்க்கையிலும் அவர் வசனங்கள் பேசி, மக்களை கிறங்கடித்தவர்.

‘‘தலைவன் அந்த நடிகையை தொவைச்சு தொங்கப் போடப்போறான் பாரேன். நம்மாளு பெரிய பகுத்தறிவு பகலவன். முற்போக்கு முன்சிப்பு...’’ என்றெல்லாம், ரசிகக்கூட்டம் எதிர்பார்த்துக் காத்திருந்த போது, உலகம் சீனுக்கு வந்தார். ‘அந்த நடிகை பேசியது அவரது கருத்து. அதற்காக நான் ஒன்றும் பண்ணமுடியாது’ என்கிறது போல அவர் அறிக்கை விட... ‘பகுத்தறிவு தலைவா... இது பணத்தாசையின் விளைவா...?’ என்று ரசிகர்கள் மூர்ச்சையாகிக் கிடக்கிறார்கள்.

லகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் வார்த்தைக்கு வார்த்தை, அவரது சுயரூபத்தை அடையாளப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது. ஒரு கிளான்ஸ் பார்த்திடலாமா?

* புதிய சர்ச்சைகளைப் பற்றிய கேள்வி எழுந்ததும், ‘‘சட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சட்டம் என்னைப் பாதுகாக்கும்...’’ என்கிறார் உலகம். எனில், ‘விஸ்வரூபமாக’ பிரச்னை எழுந்த நேரத்தில் ‘சட்டம் என்னை பாதுகாக்கும்’ என்று அறிக்கை தராமல், ‘ஊரை விட்டு ஓடிப் போகிறேன்...’ என்று உணர்ச்சிகர வசனம் பேசியது எதற்காக?

* ‘பெரிய தலை’ தொலைக்காட்சித் தொடர் சமூகத்தை கெடுப்பதாக இருக்கிறதே என்ற கேள்விக்கு, ‘‘சட்டம் என் கையில் படத்தில் நான் முத்தக் காட்சியில் நடித்தபோது கெட்டுப்போகாத கலாச்சாரம், இப்போது கெட்டுப் போய்விடாது...’’ என்கிறார். நான்கு அறைகளுக்குள் இருக்க வேண்டியதை பகிரங்கப்படுத்தி பெரியதிரை வாயிலாகக் கெடுத்தீர்கள். இப்போது சின்னத்திரை வழியாக வந்திருக்கிறீர்கள். டார்க்கெட்டில் மட்டும் மாற்றமில்லை.

* ‘இந்தப் பிரச்னையை இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பதற்கு என்னுடைய கருப்புச் சட்டை காரணமாக இருக்கலாம்...’ என்கிறார் உலகம். கருப்புச் சட்டை என்பது அவருக்கு மற்றுமொரு காஸ்ட்யூம். அவ்வளவே. கருப்புச் சட்டைக் கொள்கை பேசுகிற மேற்படியார் எடுத்த படங்களின் தலைப்புகள் - தேவர் மகன், விருமாண்டி. இப்போது எடுத்துக் கொண்டிருக்கிற படத்தின் பெயர் - சபாஷ் நாயுடு. தலைவா... பின்னீட்டிங்க போங்க!


* இந்தத் தொலைக்காட்சித் தொடர் இப்போது தேவையா என்ற கேள்விக்கு, ‘‘கிரிக்கெட் எந்த அளவுக்கு தேவையோ, அதே அளவுக்கு இந்த நிகழ்ச்சியும் தேவை...’’ என்கிறார். மனச்சாட்சியுடன், நேர்மையாக சார் அளித்த பதில் என்றால்.. அது இது மட்டுமே. இந்திய இளைஞர்களின் மனித உழைப்பு நேரத்தை வீணடித்து, அவர்களை பன்னாட்டு நிறுவனங்களின் அடிமைகளாக்கும் பணியை கிரிக்கெட் செய்து கொண்டிருக்கிறது. அதே வேலையைத்தான் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியும் செய்கிறது என்று மறைபொருள் பொதிந்து பேசுகிறார் உலகம்.

* ‘‘சேரி பிஹேவியர் என்ற வார்த்தையை, நான் சொல்லிக் கொடுத்து, அந்த நடிகை சொல்லியிருந்தால் மட்டுமே, அதற்கு நான் பதில் கூறமுடியும்...’’ என்கிறார். அந்த நிகழ்ச்சியின் நெறியாளர் நீங்கள்தானே ஒலக நாயகன் சார்? ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழக அரசு செய்கிற ஊழல்களை கண்டித்து தினமொரு அறிக்கை கொடுக்கிறீர்கள். சமூக அக்கறையுடன் நிறைய கருத்து சொல்கிறீர்கள். ஊருக்கெல்லாம் உபதேசம் செய்கிற உங்களை, அந்த நடிகைக்கு மட்டும்  உபதேசம் செய்ய விடாமல் தடுப்பது எது?

- இதெல்லாம் கூட மறப்போம், மன்னிப்போம் என்று விட்டு விடலாம். ஆனால், கடைசியாக வருகிற இந்தப் பாயிண்ட், இந்த கருப்புச் சட்டையின் ‘கலரை’ பளீரென நமக்கு அடையாளப்படுத்தும்.
* போதைப்பொருளுடன் நிறத்தை சேர்த்து தனது பெயராக வைத்திருக்கும் நடிகர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். சக பங்கேற்பாளர்களுடன் ரகளை செய்ததாக எழுந்த புகாரின் பேரில், நிகழ்ச்சியில் இருந்து அவரை பார்சல் கட்டி அனுப்பி விட்டார்கள். அந்த போதைப்பொருள் நடிகர் கிளம்பி வெளியேறுகையில், அவரிடம் உலகம் இப்படிக் கேட்டார்: ‘‘சைவ உணவுகள் தானே சாப்பிட்டதாகச் சொன்னீர்கள். அப்புறம் ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம்?’’.
சைவம் சாப்பிட்டால் சாந்த குணம். அசைவம் சாப்பிட்டால் அசுர குணம் என்று ஒலகம் என்னவிதமான ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தாராம்? இன்றைய மாட்டுக்கறி பிரச்னையும், அதன் விளைவாக அப்பாவிகள் அடித்துக் கொல்லப்படுகிற அபாயகரமான காலகட்டத்தில், ‘‘சைவ உணவுகள் தானே சாப்பிட்டதாகச் சொன்னீர்கள். அப்புறம் ஏன் உங்களுக்கு இவ்வளவு கோபம்?’’ என்கிற உலகத்தின் கருத்து, மிகவும் பொருள் பொதிந்தது. அசைவம் சாப்பிடுகிறவர்கள், அதிகம் வெறிபிடித்து, வன்முறை ரகளைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள் என்பது மாதிரியான ஒரு கருத்தாக்கத்தை அந்த நிகழ்ச்சியை பார்க்கிற பல கோடி மக்களின் மனதில் பதிய வைப்பதுதான், அவர் கடைபிடிக்கிற கருப்புச் சட்டை கொள்கையா?


திரைக்கு வெளியே நடிப்பதற்கு ஏதாவது விருது கொடுத்தார்களானால்... அவர் மட்டுமே நிரந்தர ஆஸ்கார் நாயகன். வேறென்னத்தைச் சொல்லி இந்தக் கட்டுரையை முடிக்க?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

7 கருத்துகள்:

 1. பணம் என்னவேண்டுமானாலும் செய்யும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் தான் இந்நிகழ்ச்சி...

  பதிலளிநீக்கு
 2. அருமையாக அலசி இருக்கிறீர்கள் நண்பரே எமது பாராட்டுகள்.

  இவர்கள் உடை மாற்றுவதும் கேமராவில் பதிவாகிறதோ... என்ற சந்தேகம் உண்டு காரணம் சில ஆண்கள் உடை மாற்றுவது காண்பிக்கப்படுகிறது.

  விட்டுத்தள்ளுங்கள் உள்ளே இருக்கும் அனைத்துமே வி.... கூட்டம்தானே... பன்றியோடு சேர்ந்தால் கன்றும் பீ திங்கும் என்பதுபோல இக்கூட்டத்தில் ஜூலியும் ஆகி விட்டது வேதனை.

  ஆரம்பத்தில் இவள்மீது இரக்கப்பட்டேன் எல்லாச்சிறுக்கிகளும் சேர்ந்து இவளை ஓட்டுகிறார்களே என்று முதலில் இவளை மட்டுமல்ல ஓவியா போன்ற எல்லாச் சிறுக்கிகளையும் கைது செய்ய வேண்டும்.

  இருந்தாலும் கமல் பணத்துக்காக இவ்வளவு கேவலப்பட்டு வாழ்ந்து இருக்க கூடாது.

  ஏற்கனவே மகளை கோவில் மாடுபோல் விட்டு விட்டது போதாதா ???

  பதிலளிநீக்கு
 3. Good writeup sir. You raise some valuable questions. Lets wait for the answers.

  பதிலளிநீக்கு
 4. கமலஹாசன் காசுக்கா என்ன வேஷ்த்தனம் பண்ணினாலும் கண்டும் காணாத மாதிரித்தான் இருப்பார்கள், இந்த தமிழ் அறிஞர்கள், மரத் தமிழர்கள், திராவிட கைக்கூலிகள் எல்லாரும். முக்கியமாக பதிவுலகில்! பிக் பாஸ்னு இந்தாளு எழவைக்கூட்டிக்கிட்டு இருக்கும்போதும் பேச்சு மூச்சே விடமாட்டார்கள். "திட்டியே ஆகணும்னு வேற வழியே இல்லை" னு ஆகும்போது திட்டுற மாதிரி ஒப்புக்கு திட்டுவானுக சிலர். அதுவும் மேம்போக்காத்தான். திராவிட இனம் ஏன் அடிமை இனமாகவே இருக்குனு பார்ப்பனரை மேல்தூக்கி நிறுத்தும் இவர்களைப் பார்த்துத்தான் நானே கத்துண்டேன். பார்ப்பனர்களுக்கு பார்ப்பனர்கள்தான் எதிரி. திராவிட கைக்கூலிகள் என்றுமே பார்ப்பன பக்தர்கள்தான். இந்த திராவிட கைக்கூலிகள் இருக்கவரை "பிக் பாஸ்"க்கு எந்தப் பிரச்சினையும் இல்லை!

  பதிலளிநீக்கு
 5. அருமை!
  இவர் ஒரு பச்சோந்தி, காரியக் கூத்தாடி.
  பணத்துக்காக ஏதுவும் செய்யும் பாசாங்குகாரன். இவருக்கு ஞானிப்பட்டம் வேறு
  இவரிடம் இல்லாததை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 6. இந்த கட்டுரையை நான் முழுவதுமாக படிக்கவில்லை... காரணம் உங்களது Introவில் உண்மையில்லை... இதற்கு முன்பு உங்கள் கட்டுரைகளை படித்து வியந்திருக்கிறேன், நீங்கள் எதையும் ஆதாரப்பூர்வமாக பதிவிடுவீர்கள் என்ற காரணத்தால்...
  கட்டுரையின் ஆரம்பத்தில் நீங்கள் உண்மைக்கு புறம்பாக ரஜினி தன் படங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்ள ஒவ்வொரு படமும் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பு தன் படம் நல்ல வசூல் தரவேண்டும் என்ற காரணத்திற்காக அரசியல் பேசுவார் என்று கூறியுள்ளீர்கள். அவர் அப்படி எந்த படம் ரிலீஸ் அல்லது ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்னாள் அப்படி பேசியுள்ளார் என்று உங்களால் கூற முடியுமா... மூன்றாம் தர அரசியல்வாதிகள் தான் பொத்தாம்பொதுவாக அவரின் பெயரை களங்கப்படுத்த அப்படி கூறுவார்கள். நீங்களும் அந்த மாதிரி..... அதுவும் சிகரெட் விற்பனை எல்லாம் அவரால் உயர்ந்தது என்று....
  ஆக அரசியல்வாதிகள்தான் அவரின் பெயரை பயன்படுத்தினால் டிவி, பத்திரிகையில் 3 அல்லது 4 நாட்கள் தங்கள் பெயர்,படம் வெளியிடுவார்கள் என்று ஆதாரமில்லாமல் பேசுவார்கள்.. நீங்களும் அந்த தந்திரத்தை பயன்படுத்துகிறீர்களோ? என்ற சந்தேகம் எனக்கு எழுந்துள்ளது.

  பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...