ஞாயிறு, 2 ஜூலை, 2017

மெல்லத் தமிழினி... வளரும்!

‘‘யுனெஸ்கோவோட அழிந்து வரும் மொழிகள் லிஸ்ட்ல நம்ம்ம்ம்ம தமிழும் இருக்காமே சார்? மெல்லத் தமிழினி சாகும்னு பாரதி சொன்னது உண்மையாகிடுமோ...’’ - வண்டிப்பெரியாறில் இருந்து, 40 சதவீதம் அளவுக்கு மலையாளத்தைக் கலப்படம் செய்த தமிழில் மஞ்சுளா நிஜமான பதைபதைப்புடன் பேசினார். அவரது பேச்சில் இரு பிழைகள்.
1) அழிந்து வரும் மொழிகள் பட்டியலில் தமிழ் இல்லை.
2) மெல்லத் தமிழினி சாகும் என்று பாரதி சொல்லவும் இல்லை.
பாரதி என்ன சொல்லியிருக்கிறார்...?
‘‘மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
என்றந்தப் பேதை யுரைத்தான் - ஆ!
இந்த வசை எனக்கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!’’
- ‘தமிழ் சாகுமா...? யார்ரா... அப்டிச் சொன்னது’ என்று படு கோபமாக கம்பெடுக்கிறார் பாரதியார். செம்மொழி லிஸ்ட்டில் மற்றதெல்லாம் மூச்சு விடத் திணறிக் கொண்டிருக்கையில், நம்மது ‘பனை மரத்தில வவ்வாலா...?’ என்று இந்தக்காலத்து இளைஞர்களுடன் இணைந்து ரிதமிக்காக கலகலகலக்குகிறது இல்லையா?

முடி கொட்டுதா?



ற்ற செம்மொழிகளில் இருந்து தமிழ் தனித்து நிற்க இதுதான் காரணம். இன்றைக்கும் அது மக்களின் பயன்பாட்டு மொழியாக உணர்வோடு ஊறிக் கிடக்கிறது. ‘அறம் செய விரும்பு’ என ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஆத்திச்சூடியைப் படிக்க ஏதாவது சிரமம் இருக்கிறதா? ‘நன்றி மறப்பது நன்றன்று...’ என்கிற இரண்டாயிரம் ஆண்டுகள் மூத்த திருக்குறளை புரிய கடினமாக இருக்கிறதா? ஆங்கிலமோ அல்லது வேறு மொழியில் ஒரு நூறு ஆண்டுகள் மூத்த இலக்கியங்களை படித்து முடிப்பதற்குள் முடி கொட்டி விடும்.

மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியம் மிக எளிமையாக சொல்கிற உயிரி தத்துவங்கள் பலவும், இன்றைக்கு அறிவியல் கண்டுபிடிப்புகள் என்ற பெயரில் விருது வாங்குகின்றன... படித்தீர்கள்தானே? 20ம் நூற்றாண்டு சயின்டிஸ்ட்டுகள் கண்டுபிடித்து அறிவித்த ஓருயிர், ஈருயிர் மேட்டரை தொல்காப்பியர் சார் போகிற போக்கில், தூவி விட்டுச் செல்கிறார்.

‘‘ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனமே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே...’’

- தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் (571) சொல்கிற இந்தப் பாடலுக்குள் இருக்கிறது சகல உயிர் அறிவியலும். போனவாரம், ஸ்டார், ஸ்டாராக வைத்து ஓரறிவு, ஈரறிவு படித்தோமில்லையா? அந்த விஷயத்தைத் தான் கவிதையாகவே பாடி வைத்திருக்கிறார். அத்தோடு விட்டாரில்லை. எந்தெந்த உயிரினம், எத்தனை அறிவு கொண்டது என்பதையும் குறிப்பிடத் தவறவில்லை. பாருங்களேன்...

எதுக்குங்க நோபல் பரிசு?

‘‘புல்லும் மரனும் ஓரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே...’’ – (பொருள்: 572)

‘‘நந்தும் முரளும் ஈரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே...’’ – (பொருள்: 573)

‘‘சிதலும் எறும்பும் மூவறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே...’’ – (பொருள்: 574)

‘‘நண்டும் தும்பியும் நான்கறி வினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே...’’  - (பொருள்: 575)

‘‘மாவும் புள்ளும் ஐயறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே...’’ -  (பொருள்: 576)

‘‘மக்கள் தாமே ஆறறி வுயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே...’’ -  (பொருள்: 577)

- அப்பாடி... பிச்சிட்டாரில்லை தொல்காப்பியர்? ‘வாங்க சார், இந்த வருடத்துக்கான நோபல் பரிசு உங்களுக்குத்தான்...’ என்று கூப்பிட்டால், பாடலிலேயே பதிலும் சொல்கிறார். ஓரறிவு, ஈரறிவு பாடலில் ஏழாவது வரியைக் கவனியுங்கள்... ‘நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே...’. - ‘‘அட! இது எங்க தாத்தா எழுதி வெச்சிட்டுப் போனது சார். நான் சும்மா எடுத்து தூசி தட்டி வெச்சிருக்கேன். அவ்ளோதான். இதுக்குப் போய் எதுக்கு நோபல் பரிசெல்லாம்?’ என்று சிரித்தபடியே மறுக்கிறார். தொல்காப்பியர்... தமிழ் மரபின் கிரீடம்!

மறக்கலாமா தொல்காப்பியரை?


1859ல் சார்லஸ் டார்வின் எழுதிய  உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) பரிணாம வளர்ச்சித் தியரியின் வேர்கள்... தொல்காப்பியத்தின் பக்கங்களில் பாதுகாப்பாக இருக்கிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? டார்வினை கொண்டாடுகிற நாம், நமது மொழிக்குடும்பத்து மூதாதையான தொல்காப்பியரை மறக்கலாமா?

யற்கை சூழல் அடிப்படையில் குறிஞ்சியென்றும், முல்லையென்றும் நிலங்களை இதே தொல்காப்பியர் லே-அவுட் போட்டு வைத்திருக்கிறார் என்று படித்தோம். இன்றைக்கு பிளாட் போடுகிறவர்கள் சேட்டிலைட் சிட்டி, மாடர்ன் நியூ டவுன் என்றெல்லாம் பேர் சூட்டுகிறார்கள். நம்ம ஊர்களின் பெயர்களைப் பாருங்களேன்... அதற்குள்ளாக ஒரு வரலாறு + புவியியல் இருக்கக் காண்பீர்கள்.

வால்பாறை... கொல்லிமலை!


* குறிஞ்சி நிலத்து ஊர்களின் பெயர்களுக்குப் பின்னால் மலை, பாறை, குறிச்சி, கல், கோடு (மலை முகடு), குன்றம் (சிறிய மலை) என்கிற வால்கள் இருக்கும். கொல்லிமலை, ஆனைமலை, வால்பாறை, பூப்பாறை, ஆழ்வார்குறிச்சி, பாஞ்சாலங்குறிச்சி, திண்டுக்கல், நாமக்கல், திருச்செங்கோடு, கோழிக்கோடு, திருப்பரங்குன்றம், செங்குன்றம்.


* முல்லை நிலத்து ஊர்களின் பெயர்களைப் பாருங்கள். காடு (வனம்), பட்டி (ஆடு, மாடு அடைக்கிற இடம்), பாடி (கால்நடைகளை கண்காணிக்க உயரத்தில் அமைக்கப்படுகிற தங்குமிடம் - பாடி), தோப்பு (செடி, கொடிகள் மிகுந்த இடம்) என்கிற வால்கள் ஊரின் பெயரில் சேர்ந்திருக்கும். ஏற்காடு, களக்காடு, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, வாழப்பாடி, காட்பாடி, சேத்தியாத்தோப்பு, புளியந்தோப்பு.

*  அழகுப் பெண்கள் மிகுந்த மருத நிலத்து ஊர்களென்றால் ஆறு, கரை (ஆற்றங்கரை), துறை (ஆற்றில் மக்கள் இறங்குவதற்கு வசதிப்படுகிற மாதிரியான இடம்) கூடல் (நீரோடைகள் சந்திக்கிற இடம்), ஓடை, மடை, ஏரி, ஏந்தல், தாங்கல் (சிறு நீர்நிலைகள்), குளம், ஊருணி, கேணி, வயல், விளை என்கிற பின்னிணைப்புடன் பெயர்கள் முடியும். ஆழியாறு, மணிமுத்தாறு, கும்பக்கரை, மயிலாடுதுறை, செந்துறை, கூடலூர், முக்கூடல், காரனோடை, பத்தமடை, நாங்குனேரி, பொன்னேரி, கொம்புக்காரனேந்தல், வேடந்தாங்கல், பெரியகுளம், செக்கானூரணி, பேராவூரணி, திருவல்லிக்கேணி, புதுவயல், களியக்காவிளை.

டவுன் - வில்லேஜ்!


* கடலோர நெய்தல் நிலத்துக்குப் போனால் கரை, பட்டினம் (கடலோரத்து டவுன்), பாக்கம் (கடலோரத்து வில்லேஜ்), குப்பம் (கடலோர மீனவர் குடியிருப்பு) என்கிற பெயர்களைப் பார்க்கலாம். கீழக்கரை, சேதுக்கரை, குலசேகரப்பட்டினம், நாகபட்டினம், சேப்பாக்கம், பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பம், வவ்வால்குப்பம்.


(பட்டினம் - பட்டணம் என்ன வித்தியாசம்? பட்டினம் என்றால் கடலோரத்து நகரம். பட்டணம் என்றால் பெரிய நகரம். ‘பட்டணத்துக்குப் போலாமா’ என்றால்... ‘டவுனுக்குப் போலாமா’ என்று அர்த்தம்.)

பெயர்களின் வாயிலாக, நமது ஒவ்வொரு ஊர்களும், தங்கள் திணை மரபுகளை அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்திக் கொண்டிருக்கின்றன. நான்குவழிச்சாலையில் மறுமுறை பயணிக்கிற போது, சாலையோர பெயர் பலகையில் ஊரின் பெயரை வாய் விட்டு ஒருமுறை படித்துப் பாருங்களேன்.... தொல்காப்பியர் வகுத்த சூழலியல் திணை மண்டல அறிவியலின் எச்சத்தை / உச்சத்தை அந்தப் பெயரில் நீங்கள் உணர்வீர்கள்!

128 வாரங்களாக நீ...ண்ட நமது தொடரின் கடைசி வரிக்கு இப்போது வந்திருக்கிறோம். மெல்லத் தமிழினி வளரும்... என்று உறுதி சொல்லி விடைபெறலாமா!


- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

11 கருத்துகள்:

  1. அட்டகாசம் பூனைக்குட்டி. நல்லாவே எழுதி இருக்கீங்க. பழசையும் புதுசையும் கலந்து குலுக்கி புது விதமான சாறு. ம்ம்ம்ம்ம் ரொம்ப ஜோறு! அருமையான வாதங்கள். மிக நல்ல கருத்துக்கள். நிறைய தேடல்கள் அடங்கியுள்ளன. நீங்க சொல்றபடி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறள் மற்றும் பல ஆக்கங்களை இன்றும் நம்மால் இயல்பாக புரிந்து கொள்ள முடிகிறது என்பது உண்மைதான்.

    தமிழ் என்றும் வாழும். நம்மதான் பொழுதோடு செத்து போவோம். அதற்குள் இன்றைய மற்றும் வளரும் சந்ததியினருக்கு நம்மால் முடிந்தவரை தமிழ் தாய் மீது அன்பையும் பாசத்தையும் வளர்த்து பேணி காக்க ஆவன செய்தல் வேண்டும்.


    பகிர்வுக்கு மிக்க நன்றி பூனைக்குட்டி.

    பதிலளிநீக்கு
  2. மிக அருமையான தொடர். நான் கடந்த 30 - 40 அத்தியாயங்களில் இருந்துதான் உங்கள் தொடரை பின்தொடர்கிறேன். கடினமான சங்கத்தமிழ் சங்கதிகளையும் மிக எளிமையாக புரியும் வகையில் நகைச்சுவை கலந்து அழகாக தொகுத்து அளித்திருக்கிறீர்கள். கட்டுரைக்கு நீங்கள் சேர்த்திருக்கும் படங்களும் மிக அருமை. தேர்ந்த ரசனை உள்ளவர் நீங்கள் என்பதை புரிந்து கொண்டேன். புதிய தலைப்புகளில் இன்னும் பல கடினமான விஷயங்களை எழுதுமாறு வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. அருமை! அருமை! பதிவின் ஒவ்வொரு வரியும் போற்றப் படமட்டுமல்ல!பாதுகாக்கப்பட வேண்டும் இது வரை ஒருவரும் கருத்து உரைக்காது வேதனை த் தருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அய்யா. உங்களைப் போன்ற சான்றோரின் வழிநடத்துதலும், ஊக்குவித்தலுமே, இந்தத் தொடருக்கான ஆதார சக்தி. உங்கள் அறிவுரைகளும், ஆலோசனைகளும், தமிழோடு இணைந்து வாழ்கிற எங்களை, எங்களது அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும் உந்துசக்தியாக இருக்கும்.

      நன்றி.

      நீக்கு
  4. சிவ.கார்த்திகைநாதன்2 ஜூலை, 2017 அன்று PM 10:11

    அருமையான தொடர். வாழ்த்துகள். விரைவில் இதை தொகுத்து ஒரு புத்தமாக ஆக்கினால், இளைய தலைமுறைக்கு மிகவும் பயனாக இருக்கும். புத்தகமாக ஆக்குவதில் ஏதேனும் சிரமங்கள் இருக்குமானால், என்னை தொடர்பு கொள்ளுங்கள். உதவ காத்திருக்கிறேன்.

    சிவ.கார்த்திகைநாதன்
    செங்கல்பட்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரரே. உரிய நேரத்தில் தொடர்பு கொள்கிறேன்.

      நீக்கு
  5. வாசிக்க வாசிக்க இனிக்கிறது... பெருமிதமாகவும் இருக்கிறது...

    பாராட்டுக்கள்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி DD சார். முதல் வாரத்தில் இருந்து நீங்கள் கொடுத்த ஒத்துழைப்பும், ஊக்கமும் இந்தத் தொடர் அதன் அடுத்தக்ட்டத்துக்கு நகர பெரிதும் பக்கபலமாக இருந்ததை மறுக்கமுடியாது.

      நீக்கு
  6. 128 வாரங்கள் தமிழ் பற்றி எழுதுவது கடினமான பணி. சிறப்பாக செய்தமைக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...