திங்கள், 29 மே, 2017

கொம்புகிட்ட... வச்சிக்காத வம்பு!

த்து மணிக்கு இன்டர்வியூ. காலையில் குளித்து, முடித்து... சாமி கும்பிட்டு, நெற்றியில் இடமிருந்து வலமாக விபூதி பூசிக் கொண்டு, பைக்கை கிளப்புகிற நொடியில்... வலமிருந்து இடமாக ஒரு மியாவ்... நாலு கால் பாய்ச்சலில் ஓடினால்... என்ன தோணும்? ‘ச்ச்சே... இன்னிக்கு இன்டர்வியூ உருப்பட்ட மாதிரிதான்...!’ - எண்ணம் வருமா, இல்லையா? யாருக்கெல்லாம் இப்படி எண்ணம் வந்ததோ, அவர்கள் தொல்காப்பியம் படித்து வளராதவர் என்று அர்த்தம். நிஜம்தான் சகோஸ். மூட நம்பிக்கைகளுக்கு நமது தமிழ் மரபில் இடமில்லை. மக்களின் வாழ்வியல் நடைமுறைகள், சடங்குகள் குறித்த பதிவுகளாக சங்க இலக்கியங்களில் சில பல ‘நம்பிக்கை’ குறிப்புகள் இருந்தாலும் கூட, ஆதி இலக்கணமான தொல்காப்பியத்தை தலைகீழாக வைத்து படித்தாலும் மூ.நம்பிக்கை இராது.

கடவுள் எப்போ வர்றார்?

ன்றைய தேதியில், நம்மொழியின் மூ......த்த நூல் தொல்காப்பியம். ஒரு விஷயத்தின் அடிப்படையாக / முதல் பொருளாக தொல்காப்பியர் குறிப்பிடுவது நிலத்தையும், பொழுதையும்தானே (Time & Space) தவிர, கடவுளை அல்ல. உலகின் பிற கோட்பாடுகளில் இருந்து தமிழ் மரபு மாறுபட்டு, உயர்ந்து நிற்பது இங்குதான். பிற கோட்பாடுகள் முழு முதற்பொருளாக கடவுளை மையப்படுத்தி இயங்கிக் கொண்டிருக்கையில், தமிழ் மரபு அதில் இருந்து விலகி, முதல் பொருளாக நிலத்தையும், பொருளையும் சொல்கிறது. அவைதானே அனைத்துக்கும் அடிப்படை? நிலமும், பொழுதும், சூரிய இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. தொல்காப்பியத்தின் அறிவியல் பார்வை இது.

தற்கடுத்து வருகிற கருப்பொருளில் தான் கடவுள் வருகிறார். கடவுள் மட்டுமல்ல... உணவு, தொழில், பறவை, விலங்கு என உயிருள்ள, உயிரற்ற 14 கூறுகள் பட்டியலிடப்படுகின்றன. நிலத்தையும், நேரத்தையும் முதல் பொருளாக சுட்டுகிற தொல்காப்பியம், அதன் வாயிலாக மற்றொரு விஷயத்தையும் புரியவைக்கிறது. கடவுள், உருவ வழிபாடு போன்ற கற்பிதங்கள் இந்தப் பூமியில் தோன்றுகிற காலத்துக்கும் மிக முந்தையது, மிகப் பழமையானது நமது தமிழ் மரபு என்பதை இதன்மூலம் புரிந்து கொள்ளமுடிகிறதுதானே?

மரம் ஏன் ஓடலை?


தொல்காப்பியத்தின் வயது பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரம், ஆயிரம் ஆண்டுகளுக்கும் முந்தையது என்று படித்திருக்கிறோம். ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே எத்தனை அறிவியல் சமாச்சாரங்களை அது  தனக்குள் வைத்துக் கொண்டு, ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி, படு அடக்கமாக அமர்ந்திருக்கிறது...? நிலங்களை பகுத்தது மட்டுமல்ல... உயிர்களையும் அது பகுத்து வைத்திருக்கிறது.

பொதுவாக, உலகில் உள்ள உயிரினங்களை, அவற்றின் அறிவின் செயல்திறன் கொண்டு ஆறு வகைகளாக அறிவியல் பிரிக்கிறது (நம்மொழி தொடரில் ஏற்கனவே படித்த  சப்ஜெக்ட் தான். மீண்டும் ஒரு நினைவூட்டல்). ஒரு காலத்தில் மரம், மட்டையை எல்லாம் அஃறிணையாக, உயிரற்ற ஜடமாக உலகம் பார்த்தது. தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று 1927ல் அறிவியல் மேதை ஜெகதீஷ் சந்திரபோஸ் கண்டுபிடித்து அறிவித்தப் பிறகுதான், ‘ஓஹோ... அப்டியா’ என்று உலகம் நம்பியது. சரி. உயிர் இருக்கிறது என்றால்... நம்மைப் போல அவை ஏன் பேசவில்லை. வெட்டப் போகிறோம் என்று தெரிந்தால், இரவோடு இரவாக ஓட்டம் பிடித்து ஏன் அவை எஸ்கேப் ஆக வில்லை? - கேள்விகள் நிறையக் கிளம்பின.

லிஸ்ட்டை பாருங்க!

ராய்ச்சிகள் மேலும் விரிவடைந்தன. ஆய்வின் முடிவில், உலக உயிரினங்களை அவற்றின் செயல்திறன் அடிப்படையில் ஆறு பிரிவாக பிரித்தது அறிவியல். அதாவது - கண், காது, மூக்கு, நாக்கு, உடல், மூளை ஆகிய ஆறு அறிவுகள். ஏதாவது ஒரு அறிவை மட்டும் பயன்படுத்தினால் அது ஓரறிவு உயிரினம். அத்தனையையும் பயன்படுத்தத் தெரிந்தால்... ஆறறிவு உயிரினம். ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினங்களின் பட்டியல் இருக்குதா? கீழே இருக்கிற லிஸ்ட்டை பாருங்க...


* உடலால் மட்டும் உணர்வது ஓரறிவு: மரம், செடி, கொடி, புல், பூண்டு போன்றவை இந்த லிஸ்ட். உடலால் உணர முடியுமே தவிர, அன்பாகவோ அல்லது ஆங்காரமாகவே நம்மிடம் இவற்றால் ரியாக்‌ஷன் காட்டமுடியாது.
* உடல், நாக்கால் உணர்ந்தால் ஈரறிவு: மீன் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் இந்த வகையறா.
* உடல், நாக்கு, மூக்கு ஆகியவற்றால் உணரமுடிந்தால் மூன்றறிவு: ஊர்வன பட்டியலில் இருக்கிற எறும்பு, கரையான், அட்டை போன்றவை இந்த லிஸ்ட்.
* உடல், நாக்கு, மூக்கு, கண்ணால் உணரத் திறன் கொண்டவை நான்கறிவு: பூச்சி இனங்கள் மேற்படி குடும்ப மெம்பர்கள்.
* உடல், நாக்கு, மூக்கு, கண், காது ஆகியற்றால் உணரமுடிந்தால் ஐந்தறிவு: ‘கொம்புகிட்ட வச்சிக்காத வம்பு’ என சீறுகிற அலங்காநல்லூர் காளைகள் உள்ளிட்ட விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு இந்த ஐந்து டேலண்ட்ஸ் இருக்கின்றன.
* உடல், நாக்கு, மூக்கு, கண், காது... அப்புறம் மூளை, இந்த ஆறு உறுப்புகளையும் பயன்படுத்தி வேலை பார்த்தால், ஆறறிவு: மனிதர்கள் இந்தப் பட்டியலில் இருப்பதாக நம்பப்படுகிறது. தலைக்குள் பத்திரமாக இருக்கிற மூளையை பயன்படுத்தினால் ரைட்டு. பத்திரமாக மட்டுமே வைத்திருந்தால்... கஷ்டம்! தென்னை மரம், கொய்யா மரம் லிஸ்ட்டில் சேர்த்து விடுவார்கள். மர மண்டை என்று திட்டுகிறார்களே... அது!

கொடி பறக்குது!

தெல்லாம் மாடர்ன் சயின்ஸ் கண்டுபிடித்த மேட்டர் என்று உலகம் நம்பிக் கொண்டிருக்கிறது. ஆனால், மக்களே... அடுத்த பாராவை கொஞ்சம் அழுத்தமாக படியுங்கள்.
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் முந்தைய, பழமையான தொல்காப்பியத்தில் இதெல்லாம் பார்ட், பார்ட்டாக பிரித்து லிஸ்ட் போட்டு கொடுத்திருக்கிறார் காப்பியர். படித்துப் பார்த்தால்... பிரமித்துப் போய் விடுவீர்கள். ஆயிரம், ஆயிரமாண்டுகளுக்கு முன்பே தமிழும், தமிழர்களும் அறிவுத்திறனில் / அறிவியல் திறனில் எப்படி கொடிகட்டிப் பறந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து ஆச்சர்யப்பட்டுப் போவீர்கள். ஆதாரங்களுடன்... அடுத்தவாரம். சரியா?

(127 வாரங்களாக தொடர்ந்த ‘நம்மொழி செம்மொழி’ தொடர், அடுத்த  128வது - வாரத்துடன் நிறைவு பெறுகிறது. 127 வாரங்கள் இணைந்து பயணித்த நட்புகளுக்கு நன்றீய்ய்ய்!)


- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

6 கருத்துகள்:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...