ஞாயிறு, 21 மே, 2017

அந்தப்புரம்... எங்கிருக்கு மன்னர் மன்னா?

‘பூமியை தாய் என்று உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்...’ - சுக்வாமிஷ் பழங்குடியின தலைவர், அமெரிக்க ஜனாதிபதிக்கு செய்த மேற்படி அட்வைஸை படித்ததும், நிறையப் பேர் கண்கலங்கிப் போனதாக தகவல் வந்தது. 1850ம் ஆண்டுகளில் நடந்த இந்தச் சம்பவத்துக்கான வேர், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாக சங்க இலக்கியங்கள் சான்றுடன் கூறுவதை நீங்கள் அறிந்ததுண்டா சகோஸ்? சந்தன மரங்களை கப்பலில் அள்ளி, அடைத்துச் செல்வதற்காக யவன வணிகர்கள், ‘பறம்பு’ பாரி மன்னனை சகல வழிகளிலும் சபலப்படுத்தியும், அவன் திட்டவட்டமாக மறுத்து, சூழலியல் முக்கியத்துவம் குறித்து ஆற்றிய உரையை படித்ததுண்டா? அதை அறிந்து கொள்ள... வரலாற்று காலத்துக்குள் குட்டியாக நாம் ஒரு பயணம் கிளம்ப வேண்டியிருக்கும். பறம்புமலைக்கு பஸ் ஏறலாமா?


பளீர் மலை... பறம்புமலை!

தியில் அது பறம்புமலையாக இருந்தது. அப்புறம் திருநெல்குன்றம் ஆனது. பின்னர், திருக்கொடுங்குன்றமானது. கடைசியாக இப்போது பிரான்மலையாகி, சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே இருக்கிறது. பறம்புமலையைப் பற்றியும், அதன் இயற்கை வளங்கள் பற்றியும் கபிலர் (குறிஞ்சி திணை பாடல்களில் சார்... எக்ஸ்பர்ட். சங்க காலத்துக்காரர்) எக்கச்சக்கமாக எழுதி வைத்திருக்கிறார்.

‘‘ஈண்டுநின் றோர்க்கும் தோன்றும்; சிறுவரை
சென்றுநின் றோர்க்கும் தோன்றும் மன்ற;
களிறுமென்று இட்ட கவளம் போல
நறவுப்பிழிந்து இட்ட கோதுஉடைச் சிதறல்
வார்அசும்பு ஒழுகு முன்றில்
தேர்வீசு இருக்கை நெடியோன் குன்றே...’’

- என்று பறம்புமலையை படம்பிடித்துக் காட்டுகிறார் கபிலர் (புறநானூறு - 114, உயர்ந்தோன் மலை). சீரோடும், சிறப்போடும் பாரி மன்னன் ஆண்ட அந்த பறம்புமலை, வெகு தொலைவில் இருந்து பார்த்தாலும் பளீரெனத் தெரியுமாம்.

சந்தன பிராக்கெட்!


ளம் என்றால்... வளம், அப்படி  ஒரு வளமாம். இங்கு மட்டும் 106 வகை பூக்கள் இருந்ததை கபிலர் பதிவு செய்திருக்கிறார் என்றால்... பார்த்துக் கொள்ளுங்கள்.
இப்போது போல தண்ணீர் திறக்க எந்தக் கோரிக்கையும் வைக்காமல், உழாமல், உரம் போடாமலேயே வளர்ந்து குவிந்த மூங்கிலரிசி, வள்ளிக் கிழங்கு, மலைத்தேன், தேன் பலா என்று பாரி அரண்மனைக்குப் போகிற புலவர்களுக்கு... விருந்து சாப்பிடுவதற்கே நேரம் பத்தாது.
மேட்டருக்கு வரலாம். இவ்வளவு வளம் ஒரு ஏரியாவில் இருந்தால்... பன்னாட்டு நிறுவனங்கள் சும்மாவா இருப்பார்கள்? கிளம்பி வந்து விடமாட்டார்களா? வந்தே விட்டார்கள். யவன தேசத்தில் இருந்து வெள்ளைக்கார வணிகர்கள், பாரியைத் தேடி அவன் அரண்மனைக்கு வந்தனர். ஒரு விருந்துக்கும், மறு விருந்துக்கும் இடைப்பட்ட அந்த சிறு இடைவெளியில் நடந்தது வர்த்தகப் பேச்சுவார்த்தை.

றம்புமலையில் அடர்காடாக வளர்ந்து நிற்கிற சந்தன மரங்களை பிராக்கெட் போடப் பார்க்கிறார்கள் யவன வணிகர்கள். ‘‘சந்தன மரங்களை வெட்டி கப்பலில் ஏற்றி யவனத்துக்கு ஏற்றுமதி செய்யலாமா? செம்ம பிசினஸ்!’’ என்று வலை விரிக்கிறார்கள். ‘‘காடுகளில் இயற்கையாக வளர்ந்து கிடக்கிற மரங்களை... வணிக நோக்கத்துக்காக வெட்டுவதா? ச்சேச்சே...’’ என்று தலையசைத்து மறுக்கிறான் (பிழைக்கத் தெரியாத) பாரி. ‘பொன்னும், மணியும் கொட்டித் தருகிறோம்’ - அடுத்த மூவ் யவனர்கள் தரப்பில் இருந்து வருகிறது. இம்முறையும் பாரியின் பதில் ‘நோ’.

அங்கவை - சங்கவை!

துமாதிரி எத்தனை டீலிங் பார்த்திருப்பார்கள் / முடித்திருப்பார்கள் யவனத்துக் காரர்கள்? தங்களுக்குள் ஒருவரையொருவர் குறும்பாகப் பார்த்தக் கொண்டு மெதுவாக, பாரி பக்கம் திரும்புகிறார்கள். ‘‘தப்பா நெனச்சுக்காதீங்க மன்னர் மன்னா... நம்ம அரண்மனை அந்தப்புரத்தை எங்க யவன நாட்டு இளம்பெண்களால் அலங்கரிக்க ஆசைப்படறோம்...’’ - துல்லியமான அட்டாக். இந்தக் காலமாக இருந்தால் என்ன நடக்கும்? காட்டை மட்டுமல்ல... நாட்டையும் எழுதிக் கொடுத்து விட்டு போயிருப்பார்கள் இல்லையா? ஆனால், பறம்பு தேசத்தில் அது நடக்கவில்லை. யவனர்களின் இந்த ராங் டீலிங் கேட்டதும், பாரியின் பக்கத்தில் இருந்த செல்ல மகள்களான அங்கவை, சங்கவை கொதித்துப் போகிறார்கள். ‘‘பெண்கள் என்ன வணிகப் பொருட்களா...?’’ என்று இந்தக் காலத்து சினிமா டைரக்டர்கள் சிலருக்கும் உரைக்கிற மாதிரி லெப்ட் - ரைட் வாங்கி விடுகிறார்கள்.


கள்களை சமாதானப்படுத்தி விட்டு, யவனர்கள் பக்கம் திரும்புகிறான் பாரி. நிதானித்த குரலில் அவன் பேசுகிறான்... ‘‘பறம்புமலையில் இருக்கிற மக்கள், இந்த மலையின் எஜமான்கள் அல்ல நண்பர்களே. இங்கிருக்கிற மரம், செடி, பறவை, விலங்கு போல, மனிதனும் மற்றுமொரு உயிர். அவ்வளவுதான். மனிதனின் சுய நலனுக்காக, இயற்கை வளங்களை அழிக்க முடியாது.... கேட்டீங்களா? மரங்கள் தருகிற கனிகளை பறித்து ருசிக்கலாம். மலர்களை பறித்து சூடலாம். ஆனால், அதற்கு மேல் உரிமை கொண்டு, அந்த மரங்களை வெட்டமுடியாது, தெரிந்து கொள்ளுங்கள். தாயின் மார்பில் இருந்து பால் அருந்தலாம். நீங்களோ... தாயின் மார்பறுக்கச் சொல்லுகிறீர்கள். இது நியாயம்தானா?’’ - யவன வணிகர்கள் ஆன் தி ஸ்பாட், சூசைட் அட்டம்ப்ட் பண்ணியிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை; ஆனால், அப்படி ஒரு தகவல் சங்க இலக்கியங்களில் இல்லை.

பாரியின் பார்வை!

ற்றுக்கம்பு இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருந்த முல்லைக் கொடிக்கு தேர் கொடுத்த வள்ளல் பாரியிடம் இருந்து, நாம் கற்றுக் கொள்ள / பின்பற்ற நிறைய்ய்ய்ய குணங்கள் இருக்கின்றன. அழிவை நோக்கி படு வேகமாக சென்று கொண்டிருக்கிற இன்றைய நவ நாகரிக உலகம் கற்றுக் கொள்ளவும் ஒரு விஷயம் இருக்கிறது. அது, அவன் கொண்டிருந்த சூழலியல் பார்வை. இயற்கையை அனுபவிக்கலாம்; அழிக்கக்கூடாது என்கிற பார்வை. ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாக, மலைக்காடுகளில் வசித்த ஒரு தொல்குடி மன்னனிடம் இருந்த இந்த இயற்கை காக்கிற சூழலியல் அக்கறை, இன்றைக்கு Environmental science படித்தவர்களிடமும் இல்லையே?

‘தாயின் மார்பில் இருந்து பால் அருந்தலாம்....’ என்கிற பாரியின் இயற்கை மீதான பரிவின் எச்சம், ‘பூமியை தாய் என்று உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்...’ என்ற சுக்வாமிஷ் பழங்குடி மனிதனின் உணர்வுகளில் கலந்தொழுகுவதைக் கவனித்தீர்களா? மனித வாழ்வியல் நெறிகளை மட்டுமல்ல... இயற்கை, சூழல் ஒழுங்குமுறைகளையும் கூட தமிழ் இலக்கியங்கள் காலம், காலமாக வலியுறுத்திக் கொண்டே வருகின்றன. காதிருப்பவன் கேட்கக்கடவன்!

(126 வாரங்களை எட்டியுள்ள இந்த ‘நம்மொழி செம்மொழி’ தொடர், இன்னும் இரு வாரங்களில் நிறைவு பெறுகிறது)

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

3 கருத்துகள்:

  1. பறம்புமலை தகவல்கள் அசர வைக்கிறது... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. 126 வாரங்களா !
    நான் முழவதும் படிக்க வில்லையே
    இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவு என்பது என் மனதிற்க்கு நிறைவை தரவில்லை.
    ஆனாலும் தாங்கள்
    அடுத்து எழுதப் போகும் தலைப்பு பற்றி சொல்லு வீர்கள்
    என்ற நம்பிக்கை கொண்டு மனதை தேற்றி கொள்கின்றேன்.
    ‘நம்மொழி செம்மொழி
    தொடர்ந்தால்
    சந்தோசம்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான தகவல்களை தரும் தங்களுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...