புதன், 3 மே, 2017

பாகுபலி 2 - இது Conclusion அல்ல!

‘‘நீர் என் அருகில் இருக்கும் வரை... என்னைக் கொல்லும் ஆண் மகன் இன்னும் பிறக்க்க்க்கவில்லை மாமா...!’’ - காதுகளில் இன்னும் கம்பீரமாக ஒலிக்கிறதா அமரேந்திரனின் நம்பிக்கைக் குரல்!
1913ல் தாதா சாஹெப் பால்கே உருவாக்கிய ‘ராஜா ஹரிச்சந்த்ரா’ இந்தியாவின் முதல் சினிமாவாக அறியப்படுகிறது. அதன் பிறகான நூறாண்டுகளையும் கடந்த இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க / மாற்றங்களை விதைத்த முன்னோடி சினிமாக்கள் என்று ஒரு பட்டியல் போடலாம். அந்தப் பட்டியலில் தவிர்க்கமுடியாத இடத்தை பிடித்திருக்கிறது எஸ்.எஸ்.ராஜமவுலியின் பாகுபலி (2 மணி 39 நிமிடம் ஓடுகிற Beginning / 3 மணிநேரம் 17 நிமிடம் ஓடக்கூடிய Conclusion சேர்த்து). மீண்டும், மீண்டும் பிரமாண்ட வெற்றிக்காக வாழ்த்துகள்!


முதல் பாகத்தில் கட்டப்பாவின் கத்திக்குத்து சம்பவத்துடன் பிரமித்துப் போய் தியேட்டரை விட்டு வெளியே வந்த ரசிகர்கள், அதே பிரமிப்பு துளி குறையாமல் (சொல்லப் போனால், கொஞ்சம் கூடுதலாகியிருக்கிறது), இரண்டாவது பாகத்தையும் ரசித்துத் திரும்புகிறார்கள். இன்றைக்கு இருக்கிற இந்திய சினிமா இயக்குனர்களில் கதையையும், கணினி வரைகலை தொழில்நுட்பத்தையும் உணர்வுப்பூர்வமாக இழைத்து, பிரமாண்டமாக காட்சிப்படுத்தக்கூடிய ஆற்றல் (காளி சிலை ஏதாவது இருந்தால் சத்தியமடித்து சொல்லலாம்) எஸ்.எஸ்.ராஜமவுலிக்கே இருக்கிறது.


ரு டைட்டானிக், ஜூராஸிக் பார்க் மாதிரியான பிரமாண்ட ஹாலிவுட் படங்களை பார்த்து பிரமித்த நமது சினிமா ரசிகர்களுக்கு, ‘மேக் இன் இந்தியா’ பிரமிப்பு பாகுபலி (1 + 2). முதல் பாகம் பார்த்து விட்டு எழுதிய ‘பாகுபலி - காட்சி பிரமாண்டத்தின் உச்சம்!’ விமர்சனத்தை (முதல் பாகம் விமர்சனம்: பாகுபலி - காட்சி பிரமாண்டத்தின் உச்சம்!) அப்படியே தூசி தட்டி போட்டு விடலாம். அவ்வளவு பிரமிப்பை, அதற்கும் கூடுதலாக இதிலும் நிறைத்து வைத்து கொடுத்திருக்கிறார் ரா.மவுலி.


பாகுபலி 2 படத்தின் இந்த மகத்தான வெற்றி எந்தப் புள்ளியில் துவங்குகிறது? வெறும் கதையையோ, பிரமாண்டத்தையோ, கம்ப்யூட்டர் வரைகலை தொழில்நுட்பத்தையோ மட்டுமே நம்பி களமிறங்க வில்லை மவுலி. மேற்சொன்ன மூன்று விஷயங்களையும் அழகாக இணைத்து, இழைத்திருப்பதில் துவங்குகிறது அமரேந்திர / மகேந்திர பாகுபலிகளின் வெற்றி.

முதலில் கதை: பாகுபலி படத்துக்கான கதையைத் தீர்மானித்ததும், கதையை சுமந்து செல்கிற கதைமாந்தர்களின் குணாதிசயங்களை நேர்த்தியாக வடிவமைத்தது முதல் வெற்றி. மிக நல்லவனாக அமரேந்திர பாகுபலி. தீயகுணம் கொண்டவர்களையும் கூட, சந்தேகிக்காமல் நம்புகிற அப்பாவி. மன்னனாக அறிவிக்கப்படும் போதும், மன்னன் இல்லை என்று நிராகரிக்கப்படுகிற போதும் மகிழ்வோ / துயரோ இன்றி இயல்பாக எடுத்துக் கொள்கிற நல்ல கேரக்டர். துடிப்பான, எதையும் சாதிக்கும் ஆற்றல், டைனோசர் பலம் பொருந்திய இளைஞனாக மகேந்திர பாகுபலி. இந்த இரு கேரக்டர்களுக்கும் மிக இயல்பாக பொருந்திப் போகிறார் பிரபாஸ். ராஜமவுலியே சொல்லியிருப்பது போல, பாகுபலி கேரக்டருக்கு பிரபாஸ் தவிர்த்து வேறு யாரையும் கற்பனையே செய்ய முடியவில்லை.


விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பின் அடிப்படை ரகசியம் - மிக பலமான வில்லன் பாத்திரத்தை தயார் செய்தல். பலம் கொண்ட ஒரு வில்லன் பாத்திரம் இருக்கிறது என்றால், இயல்பாகவே அந்தப் படத்தின் ஹீரோ பாத்திரம் ரசிகர்களால் அதிகம் கவனிக்க / ரசிக்கப்படும். திரைக்கதையை விறுவிறுப்பானதாக மாற்றும் வல்லமை வில்லன் பாத்திரங்களுக்கு உண்டு. பல்வாள்தேவன் என்கிற அந்த வில்லன் பாத்திரம் இந்தப் படத்தில் நிலைத்து நின்று செஞ்சுரி அடிக்கிறது. பிரபாஸ் போலவே, அந்த கேரக்டருக்கு தவிர்க்க முடியாத நபர் ராணா. இயலாமை, ஏமாற்றம், பொறாமை, தோல்வி, சதி, சூழ்ச்சி என சகல உணர்வுகளையும் உடல்மொழியில் அழகாக வெளிப்படுத்துகிறார்.

ஹீரோ, வில்லன் பாத்திரங்கள் பலமானதாக இருந்தால் போதுமா? கதையை உயிர்ப்புடன் நகர்த்திச் செல்ல வலுவான சப்போர்ட்டிங் கேரக்டர்ஸ் தேவையே? சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா, தமன்னா என்று ஒவ்வொருவரும் கதாபாத்திரங்களுக்கான தங்கள் தேர்வை நியாயப்படுத்துகிறார்கள். குறிப்பாக சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன். அனுபவ நடிப்பால் அந்தந்த கேரக்டர்களை எளிதாக தூக்கி நிறுத்த இவர்களால் முடிகிறது. தியேட்டரின் இருக்கையில் அமர்ந்து பார்க்கிற உணர்வைக் கடந்து, மகிழ்மதி தேசத்துக்காரனாகவே சில மணிநேரங்களுக்கு நம்மை மாற்றுகிறது பாகுபலி.

திரைக்கதை அமைப்பில் நாம் நிறைய கைதேர்ந்த இயக்குனர்களை பார்த்திருக்கிறோம். துளி சோர்வோ, கவனச்சிதறலோ ஏற்பட்டு விடாமல் ஒரு காட்சியையும், மறு காட்சியையும் கண்ணி கோர்த்து இணைத்துச் செல்கிற ஆற்றல் பாக்யராஜ் போன்ற தேர்ந்த இயக்குனர்களுக்கு உண்டு. அந்த வரிசையில் இடம்பிடிக்கிறார் ராஜமவுலி. எந்தக் காட்சியும், அதன் சுவாரஸ்ய எல்லையை கடக்க விடுவதில்லை. இன்னும் சில வினாடிகளுக்கு இந்தக் காட்சி நீடித்தால் சலிப்புத் தட்டி விடுமோ என்று நாம் நினைத்து முடிப்பதற்குள் அடுத்ததாக ஒரு பிரமாண்ட காட்சியைக் கொண்டு வந்து நிறுத்துகிறார் இயக்குனர். ஒரு கண்ணி. அதில் இருந்து அடுத்த கண்ணி. இப்படியே கோர்த்து, கோர்த்து, விறுவிறுப்பை குறையவே விடாமல் கிளைமாக்ஸ் வெண்திரை வரைக்கும் கொண்டு வந்து சேர்த்ததில் கம்பீரமாக பறக்கிறது ‘கேப்டன் ஆப் தி ஷிப்’ ராஜமவுலியின் கொடி.

ற்பனைக் கதை என்றாலும் கூட, அதன் மீதான நம்பகத்தன்மையை பார்வையாளனுக்குள் விதைப்பதில் காட்சியமைப்புகளுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. குந்தல தேசத்துக்குள் கட்டப்பாவுடன் செல்கிற அமரேந்திரன்... அந்த மக்களின் பல்வேறு வித கலவையான கொண்டாட்டங்கள், பழக்கவழக்கங்களை பார்வையிடுகிறான். ஆந்திர / கர்நாடக கடலோர மாவட்டங்களின் இன்றும் கொண்டாடப்படுகிற ‘கம்பளா (Kambala)’ காளை விரட்டுப் போட்டிகள் சில வினாடிகள் வந்து செல்வதன் மூலம், மகிழ்மதி ஏதோ அன்னிய தேசம் என்கிற உணர்வு கடந்து, நமது மண் என்கிற பிடிப்பு பார்வையாளருக்கு உருவாக்கப்படுகிறது.

தையும், திரைக்கதையும் பலமாக அமைந்து விட்டது. அடுத்து? திரைக்கு பின்னணியில் இருந்து படத்தை தூக்கி நிறுத்தக்கூடிய தொழில்நுட்பக் கலைஞர்கள். எம்.எம். கீரவாணியின் இசை... மிரட்டுகிறது. அடித்தொண்டையில் இருந்து கிளம்புகிற உருமல் சத்தத்துடன் கூடிய பிரமாண்ட டிரம்ஸ் அதிரடி இசை... தியேட்டரில் இருக்கிற நம்மைப் பிடித்து மகிழ்மதி தேசத்துக்குள் தள்ளுகிறது. சரித்திர படத்துக்கான இசையை, நவீனம் கலந்து கொடுத்திருக்கிறார். கே.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு... கண்களை உறுத்தாத நேர்த்தி. ஐந்து மணிநேரத்துக்கான படப்பதிவை மூன்று மணிநேரத்துக்குள் விறுவிறுப்பு குறையாது சுருக்குவது பெரிய சவால். கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ் எடிட்டிங் பெரிய பிளஸ். மதன் கார்க்கியின் வசனங்கள் சிறப்பு. மகிழ்மதி தேசத்தை உருவாக்கிய VFX தொழில்நுட்பக்காரர்களும், CGI நிபுணர்களும் மீண்டும் தங்களை நிரூபித்திருக்கிறார்கள்.(பாகுபலியில் பயன்படுத்தப்பட்ட VFX + CGI  தொழில்நுட்பம் குறித்த விரிவான பதிவுக்கு படிக்கவும்: பாகுபலி: கண்ணால் கண்டதும் பொய்!).


ல்லாமே பிரமாதம் என்றாலும்.... ராஜமவுலியின் கற்பனை கலந்த கடின உழைப்பை இன்னும் அதிகம் பேசாமல் கட்டுரையை முடிக்க முடியாது. சில நிமிடமே வந்து போகிற சின்னஞ்சிறிய காட்சியிலும் கூட அவரது கற்பனை + உழைப்பு மிளிர்கிறது. ஒவ்வொரு பிரேமிலும் பிரமாண்டம் தெரிகிறது. அரண்மனைகளின் உள் அமைப்புகள், போர்க்கள உத்திகள் (கிளைமாக்ஸ் பனைமரக் காட்சி - முதல் பாகத்தில் துணியில் தீயை பற்ற வைத்து அம்பில் எய்வது), வாள் சுழற்றல், அம்பு வீசும் சாகசம் என... எல்லாமே, எல்லாமே மாஸ்டர் பீஸ் கற்பனைகள். பிரமாண்டமாக ஒரு காட்சியைக் காட்டவேண்டுமானால், Wide Angle என்பது தவிர்க்கமுடியாத உத்தி. காலா காலமாக உலகத் திரைப்படங்களில் கடைபிடிக்கப்படுகிற உத்தி இது. இந்தப் படத்திலும் அழகாக இந்த உத்தி காட்டப்படுகிறது. காட்சியின் பிரமாண்டத்தை கடத்துவதில் கேமரா கோணங்களுக்கு முக்கியப் பங்குண்டு. குந்தல தேசத்தை பாகுபலி பார்க்கிற காட்சியின் போது, அங்குள்ள வயல்வெளிகள், நிலப்பரப்பைக் காட்ட ஒரு பறவைப் பார்வை (Bird's View) கோணம் பயன்படுத்தப்பட்டிருக்கும். அதிகப்பட்சம் இரண்டு வினாடிகள் கூட இருக்காது. ஆனால், அந்தக் கோணம் ஏற்படுத்துகிற தாக்கம் பிரமிப்பானது.

நிச்சயம் இந்திய சினிமாவின் ஆகச் சிறந்த இயக்குனராக தன்னை நிரூபித்திருக்கிறார் எஸ்.எஸ்.ராஜமவுலி. அவரது அடுத்த படைப்புகள் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது. ‘இதுபோன்றதொரு பிரமாண்ட படைப்பை அவரால் கூட இனி தரமுடியுமா?’ - படம் முடிந்து வெளியே வருகிற சினிமா ரசிகர்கள் எழுப்புகிற கேள்வி இது. தேர்ந்த திறமைசாலி அவரென்பதால்... கடின உழைப்பு, மிகக் கடின உழைப்பைக் கொட்டினால், இதை விடவும் பிரமாண்ட படைப்புகளை அவரது டீமிடம் இருந்து எதிர்பார்க்க முடியும். இந்திய சினிமாவின் நூற்றாண்டு கால வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது பாகுபலி திரைப்படம்.

குறைகளே இல்லையா...? குறை இல்லாத படைப்பு என்று எதுவுமே இல்லை. நிச்சயம் பாகுபலியிலும் இருக்கிறது. எல்லாமே கடந்து செல்கிற மாதிரியான குறைகளே. ‘ஷத்திரிய தர்மம், ஷத்திரிய வீரம்...’ என்றெல்லாம் காட்சிகள் + வசனங்கள் வைப்பதன் மூலம் அதற்கு மேலும், கீழும் இருக்கிற வர்க்க படிநிலைகளை படம் நியாயப்படுத்துகிறதா என்கிற கேள்வி இயல்பாக எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. எத்தனை பெரிய வீரனாக இருந்தாலும் கூட, அடிமை இனத்தில் பிறந்தவன் சுய சிந்தனைகளற்று, மூளையின் சிந்திக்கும் திறனை மூடி வைத்து விட்டு, இடப்படுகிற உத்தரவுகளை மட்டுமே கேட்டு நடக்கிற குணமே... ராஜ தர்மம் என்றும் விசுவாசம் என்றும் அடையாளப்படுத்துவது என்ன வகையான தர்மம் என்று தெரியவில்லை. ‘தவறு என்றால்... அது, கடவுளாக இருந்தாலும் தட்டிக் கேள்...’ என்று அமரேந்திர பாகுபலிக்கு அவனது சிறு வயதில் ராஜமாதா சிவகாமி படிப்பித்துத் தருகிறார். தவறை தட்டிக் கேட்கிற குணம் அடிமை வம்சத்துக்கு ஆகாதா?

சில இடங்களில் கணினி வரைகலை தொழில்நுட்பம் கண்களை உறுத்துகிறது. இயல்புத்தன்மை குறைகிறது. பாகுபலிகள் பறந்தும், தாவிக் குதித்தும் செய்யும் பல சாகசக் காட்சிகள் டிவியில் வருகிற சோட்டா பீம் சாகசங்களை நினைவு படுத்துகின்றன. குந்தல தேசப் போர்க்காட்சியில் ஓடும் காளைகளுக்கு மேல் தாவித்தாவி ஓடுகிற பாகுபலி, அப்படியே சோட்டா பீமை நினைவுக்குக் கொண்டு வருகிறார். தவிர்த்து, இரண்டாம் பாகத்தில் போர்க்காட்சிகள் மிக அதிகம். போர்க்காட்சிகளின் நீளமும் அதிகம். இசையும் பல இடங்களில் ஆக்ரோஷ இரைச்சலால் காதைப் பிளக்கிறது.


தெல்லாமே கடந்து போகிற தவறுகளன்றி, படத்தின் போக்கிற்கு இவை எந்த இடையூறும் செய்வதில்லை. என்பதால், முழுமையாக ரசிக்கலாம். இருக்கிற டென்ஷன் மிகுந்த வாழ்க்கைச்சூழலில், இதுபோன்ற சமத்துவ சகதர்ம தவறுகளை பெரிய மனது பண்ணி ஒதுக்கி விட்டு, படத்தை முழுமையாக ரசித்து ரிலாக்ஸ் பண்ணிக் கொள்ளலாம். தப்பில்லை.


Baahubali 2: The Conclusion என்பது இரண்டாம் பாக படத்துக்கான தலைப்பு. இந்திய சினிமாவைப் பொறுத்தளவில் நிச்சயமாக இது Conclusion அல்ல. இதுவே Beginning. கம்ப்யூட்டர் வரைகலை தொழில்நுட்பங்களையும், ஆழமான கதையையும் இணைத்து படமெடுத்து ஜெயிக்க முடியும் என்கிற விதையை விதைத்திருப்பதன் மூலம் ஒரு புதிய துவக்கத்தை  / Beginningஐ உருவாக்கியிருக்கிறார் ராஜமவுலி. சாண்டில்யன், கல்கி போன்றவர்களின் நிறைய சரித்திரக் கதைகள் நம்மிடம் இருக்கின்றன. பட்ஜெட் எல்லாம் இப்போது ஒரு பிரச்னை அல்ல. சாதாரண படம் கூட பல, பல கோடிகளில் தான் தயாராகிறது. எலும்புக்கூடு நடனமாடுகிற மாதிரியும், பாம்பு வருகிற மாதிரியும் படம் காட்டத்தான் CGI தொழில்நுட்பத்தை நாம் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

தெல்லாம் தூக்கிக் கடாசி விட்டு, கணினி வரைகலை தொழில்நுட்பம் மூலம் மிகச்சிறந்த படைப்பை உருவாக்கமுடியும் என்கிற நம்பிக்கையை தந்திருக்கிறது Baahubali 2: The Conclusion. சினிமா தியேட்டர்கள் எல்லாம் ஷாப்பிங் மால்களாக மாறிக் கொண்டிருக்கிற இந்தக் காலத்திலும் ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் விற்கிற இடங்களாக பாகுபலி தியேட்டர்கள் இருக்கின்றன. எனில், தரமான படைப்பை... தியேட்டருக்கு வந்து பார்க்க மக்கள் தயாராகவே இருக்கிறார்கள் என்பதற்கு வேறென்ன உதாரணம் வேண்டும்? திருட்டு விசிடி காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க புரட்சி செய்யும் சினிமா காரர்கள், நேர்த்தியான கதையுடன் கூடிய பிரமாண்ட படமெடுத்தால்... மக்கள் ஆதரவு கொடுக்கத் தயாராகவே இருக்கிறார்கள் என்பதற்கான சாட்சி... பாகுபலியின்  பிரமிக்க வைக்கிற வசூல் சாதனைகள். அந்த வகையில்... Baahubali 2: The Conclusion இந்திய சினிமாவுக்கான புதிய  Beginning!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

பாகுபலி முதல் பாகம் விமர்சனம் + பாகுபலி மார்க்கெட்டிங் உத்திகள் பற்றி படிக்க:

பாகுபலியில் பயன்படுத்தப்பட்ட VFX + CGI தொழில்நுட்பங்கள் குறித்து படங்களுடன் கூடிய விரிவான விளக்கங்களுக்கு படிக்கவும்:

11 கருத்துகள்:

  1. பாகுபலி மூன்றாம் பகுதியை நீங்களே இயக்கலாம் அந்த அளவிற்கு படத்தை உள் வாங்கி ஒவ்வொரு காட்சியாக ரசித்து எழுதியிருக்கிறீர்கள் மிக அருமையான விமர்சனம்.
    பாகுபலியை அழகாக விவரித்து விமர்சனத்தில் பாயும்புலியாகிய கிருஸ்ணகுமாருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  2. கண்ணதாசன், திருப்பூர்3 மே, 2017 அன்று AM 11:32

    அருமையான விமர்சன கட்டுரை. வழக்கமான படத்தின் கதையை சொல்லி விமர்சனம் செய்யும் வழக்கத்தில் இருந்து விலகி, படத்தின் ஆக்கம் குறித்து விமர்சனம் செய்திருப்பது மாறுபட்ட அணுகுமுறை. நான் இன்னும் படம் பார்க்கவில்லை. உங்கள் விமர்சனம் என்னை படம் பார்க்கத் தூண்டுகிறது. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. மிக தெளிவாக படத்தின் நிறைகளை அதிகமாகவும்,குறைகளை மெலிதாகவும் நன்றாக சொல்லி உள்ளீர்கள்.மிக அருமயான பதிவு.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா5 மே, 2017 அன்று AM 8:42

    விமர்சனம் குறித்து விமர்சிக்க முடியாத அளவுக்கு, சிறப்பாக எழுதி உள்ளீர்கள்.. கூடவே சின்ன குட்டும் வைத்தது பாராட்டிற்குரியது. ஹாலிவுட் தரம் என்கிறோம். 50 ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு கோடி பட்ஜெட்டில், "சந்திரலேகா" படம் எடுத்த பெருமை தமிழ் மண்ணுக்கு உண்டு... சி.ஜி.. இல்லாத காலமது... இன்று அந்த உழைப்பை, யாராவது வெளிப்படுத்த முடியுமா?

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா5 மே, 2017 அன்று AM 8:43

    விமர்சனம் குறித்து விமர்சிக்க முடியாத அளவுக்கு, சிறப்பாக எழுதி உள்ளீர்கள்.. கூடவே சின்ன குட்டும் வைத்தது பாராட்டிற்குரியது. ஹாலிவுட் தரம் என்கிறோம். 50 ஆண்டுகளுக்கு முன்பே, ஒரு கோடி பட்ஜெட்டில், "சந்திரலேகா" படம் எடுத்த பெருமை தமிழ் மண்ணுக்கு உண்டு... சி.ஜி.. இல்லாத காலமது... இன்று அந்த உழைப்பை, யாராவது வெளிப்படுத்த முடியுமா?

    பதிலளிநீக்கு
  6. பாகுபலியை போல் அதன் விமர்சனமும் பிரமாண்டமாக .

    பதிலளிநீக்கு
  7. பாகுபலியை போல் அதன் விமர்சனமும் பிரமாண்டமாக .

    பதிலளிநீக்கு
  8. பாகுபலியை போல் அதன் விமர்சனமும் பிரமாண்டமாக .

    பதிலளிநீக்கு
  9. மிக அருமையான விமர்சனம். பாகுபலியை போலவே உங்களின் இந்த விமர்சனமும் ரசனையின் உச்சம். நேர்த்தியான நடை. நல்ல படைப்புகளை மனதார பாராட்ட வேண்டும். அந்த வகையில் நீங்கள் பாகுபலியை பாராட்டியிருக்கிறீர்கள். நான் உங்களது விமர்சனத்தை பாராட்டுகிறேன். மிக்க நன்றி.
    முத்து, மதுரை

    பதிலளிநீக்கு
  10. விமர்சனம் இன் அண்ட் அவுட்.....அருமை

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...