ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

கடல்நீர் நடுவே... டைட்டானிக்!

ஞானத்தில் தேர்ந்த அரசன் என்று புனித வேதாகமம் சாலமன் மன்னனை குறிப்பிடுகிறது. ஒருங்கிணைந்த இஸ்ரேல் மற்றும் யூதா தேசங்களின் (Kingdom of Israel and Kingdom of Judah) கடைசி மன்னன். தாவீது (David) ராஜாவின் மகனான சாலமனின் காலம் கிமு 970 முதல் கிமு 931 வரை என்று வரலாற்று அறிஞர்கள் கணிக்கிறார்கள். ‘என்ன வேண்டும்’ என்று இறைவன் கேட்டபோது, ‘அறிவைக் கொடு’ என கேட்டுப் பெற்றவர் என்று விவிலியம் புகழ்கிறது. ஞானத்தின் துணையுடன் அவர் வழங்கிய தீர்ப்புகளை கதை, கதையாக படித்திருக்கலாம் (ஒரே குழந்தைக்கு இரு தாய்கள் உரிமை கொண்டாடி வருகிற கதை நினைவுக்கு வருதா?). சாலமன் மன்னனுக்கு எண்ணிக்கைப் படி 700 மனைவிகள் (யப்பாடி!!). லிஸ்ட் முடியவில்லை. + 300 பெண்கள் அதிகாரப்பூர்வமற்ற மனைவிகளாக இருந்திருக்கிறார்கள். தேசத்தை வலுவானதாக மாற்றிய சாலமன் ராஜா, கலை, பண்பாடு போன்ற விஷயங்களிலும் ரொம்ப அக்கறை காட்டியிருக்கிறார். இந்த சாலமன் ராஜாவுக்கும், நம்ம மதுரைக்கும் ஏதாவது தொடர்பிருக்கும் என்று யோசிக்க முடிகிறதா?


எத்தனை மார்க்?

ல, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நமது தாத்தாஸ்களின் கடல் வணிகத் திறன் பற்றி பார்க்காமல், கேட்காமல் போனால், நெய்தல் நிலம் நம்மை மன்னிக்காது. பாண்டியனும், சோழனும், சேரனும் கடல் வணிகம் செய்ததையும், கப்பற்படையை திரட்டிக் கொண்டு போய் கடாரம் கொண்டதையும் வரலாற்றுப் புத்தகத்தில் படித்து நிறையவே மார்க் வாங்கி விட்டோம். நெய்தல் நிலத்தின் கடல் வாணிப வரலாறு, அத்துடன் முடிந்து விடவில்லை. இன்றளவும் தமிழர்களின் அறிவுத்திறனுக்கு மகுடம் சூட்டுகிற விஷயம் என்றால், அது கடல் வணிகம் சாப்டர் தான்.

மரைன் இன்ஜினியரிங் படிக்கலாமா?

ண்டி மாட்டை பூட்டிக் கொண்டு பக்கத்து ஊரில் போய் தக்காளி, கத்தரிக்காய் வாங்கி வருவது மாதிரி அல்ல கடல் வணிகம். வானவியல், கணித சாஸ்திரங்களில் கெட்டிக்காரர்களாக இருந்தால் மட்டுமே கடலில் கால் வைக்கமுடியும். கப்பலை கிளப்பி விட்டால் மறு கரையை அடைய நாளாகுமா, மாதமாகுமா இல்லை... வருஷமாகுமா என்று தெரியாது. போகிற திசையில் புயல் வருமா, மழை வருமா என்று கணிக்க வேண்டும். காற்றின் வேகம், திசை அறிந்து கலத்தை செலுத்த வேண்டும். நம்மாட்கள் மரைன் இன்ஜினியரிங் படித்தவர்களில்லை. ஆனால், கற்றுக் கொள்வதற்கு அவர்களிடம் மரைன் இன்ஜினியரிங் சூட்சுமங்கள் மிக நிறையவே இருக்கின்றன.

‘‘நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி

வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
களியியல் யானைக் கரிகால் வளவ...’’
என்று புறநானூறு (66) கரிகால் வளவனின் கப்பலோட்டும் திறமை பற்றி ஆச்சர்யப்படுகிறது. ‘காற்றைப் பயன்படுத்தி கப்பலோட்டும் தொழில்நுட்பம் அறிந்து, அதன் வாயிலாக ஆழ்கடலைக் கிழித்துச் சென்று வந்த வம்சத்தில் வந்தவனே...’ என்று புகழ்கிறது இந்தப் பாடல், பாடலில் இருந்த நாம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம்... கரிகால்வளவனுக்கு (சாரின் காலம் கிமு 3ம் நூற்றாண்டு!) பல காலம் முன்பாகவே இந்த டெக்னாலஜி நமக்கு வாய்க்கப் பெற்றிருக்கிறது.

டைட்டானிக் கவிழ்ந்தது ஏன்?


டல் காற்று, அலை, நீரோட்டம், நட்சத்திர மண்டலங்கள் (மழை, புயல் வருமா என்று பிரித்தறிய), பருவ காலங்கள் போன்ற விஷயங்களை கடலோடிகள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது கட்டாயம். அதில் நம்மாட்கள் எக்ஸ்பர்ட். காலம் தவறி கிளம்பிப் போய், டைட்டானிக் போல கவிழ்ந்ததாக வரலாற்றில் பெரிதாக குறிப்புகள் இல்லை. கரையோர பயணம், ஆழ்கடல் பயணம் என இருவகையான கடல் பயணங்களை நம்மவர்கள் செய்திருக்கிறார்கள். கரையோரப் பயணம் என்பது லோக்கல். இங்கிருந்து கிளம்பி, கரையோரமாகவே கப்பலை ஓட்டிச் சென்று பக்கத்து தேசங்களில் வணிகம் செய்வது. இந்த வகையில் நம்மவர்கள் இந்தோனேஷியா வரைக்கும் கூட போய் பிசினஸ் பார்த்திருக்கிறார்கள்.

தற்குப் பிறகு, ஆழ்கடல் பயணம். நம்மவர்களின் ஆழ்கடல் பயணம் அசாத்தியமானது. மேற்கே எகிப்து, ரோம், கிழக்கே சீனா என்று உலக வரைபடத்தை உருட்டி விளையாடியிருக்கிறார்கள்.
வெளிநாட்டுக்காரர்களுக்கும் நம்மூர் சரக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து கப்பல் வருகிறது என்றால் யவன தேசத்து ராஜாக்கள் அரசாங்க விடுமுறை அறிவிக்கிற அளவுக்கு சந்தோஷப்பட்டிருக்கிறார்கள்.

துகிம்-னா என்ன?

முதல் பாராவில் பார்த்தோமே,,, சாலமன் ராஜா, அவருக்கு நம்ம தமிழகத்தில் இருந்து கப்பலில் வந்து இறங்கிய பொன், அகில், சந்தனம், வாசனைப் பொருட்கள், அரிசி, யானைத் தந்தம், மயில் தோகை (இப்போது என்றால், பாரெஸ்ட் சட்டம் பாய்ந்து விடும்!) என்றால்... உசுராம். துகிம் (மயில் தோகை), அஹ்லத் (அகில்), இஞ்சி (Ginger - zingiberis) என  எபிரேய மொழியில் (Hebrew) உள்ள பல சொற்களின் வேர், தமிழாக இருப்பதை மொழியியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து இதை உறுதிப்படுத்துகிறார்கள். பாண்டிய, சேர, சோழ தேசத்து வணிகர்கள் சாலமன் மன்னனுக்காக ஸ்பெஷல் சரக்குகளை லோடேற்றிக் கொண்டு யவனம் நோக்கி கப்பலோட்டியிருப்பதை தமிழ் இலக்கியங்கள் பக்கம், பக்கமாக எழுதியிருக்கின்றன. தாலமி (கிமு 150), பிளைநி (கிபி 24 - 79),  பெரிப்ளஸ் (கிபி 60) போன்ற மேற்கத்திய அறிஞர்களும் தங்கள் பயணக்குறிப்புகளில் பதிவு செய்கின்றனர். அரிக்கமேடு, மருங்கூர்பட்டினம் துவங்கி... கடைசியாக கீழடி வரைக்கும் அகழாய்வுகளில் கிடைத்த ‘யவனப் பொருட்களும்’ அதை உறுதி செய்கின்றன.

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

3 கருத்துகள்:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...