ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

தொல்காப்பியரும்... ஒரு டெலஸ்கோப்பும்!

ஜிலுஜிலு பனியடிக்கிற மலை, குளுகுளு காற்றடிக்கிற காடு, பச்சைப்பசேல் வயல், நீல அலையடிக்கிற  கடல்... இதெல்லாம் கடந்து அடுத்த இடத்துக்கு நாம் இப்போது பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பயணம் செல்கிற இடம் கொஞ்சம் கடினமானது. தலைக்கு தொப்பி அவசியம் - கடும் வெயில் இருக்கும். கையில் தண்ணீர் கட்டாயம் - கானல் நீர் கூட கண்ணில் படாது. சன் ஸ்க்ரீன் லோஷன்கள் கையிருப்பு வைத்திருப்பதும் நல்லதே - வீசுகிற காற்றிலும் வெப்பம் மிகுந்திருக்கும். மலைகளை உடைத்து, மரங்களை அழித்து, வயல்வெளிகளை வீட்டுமனைகளாக்கி, கடல் மணலையும் தாது மணல் என பெயர் சூட்டி, வாரி விற்று... இயற்கை அன்புடன் நமக்களித்த பூமியை கடைசியாக நாம் முழுமையான பாலையாகவே மாற்றி விட்டோம்... இல்லையா? இயற்கை பகுப்பின் கட்டக்கடைசி அத்தியாயமான பாலை நிலத்துக்குள் இப்போது நாம் நுழைகிறோம்.


திகில்... பாலை!


எப்படி இருக்கும் இப்போது நாம் நுழையப் போகிற நிலப்பரப்பு? இலக்கியங்களை புரட்டிப் பார்க்கிற போது...
நீரற்ற, வறண்ட, வெப்பம் மிகுந்த நிலப்பகுதி. எந்தப் பயிரும் வேர் பிடித்து வளரத் தகுதியற்ற விரிந்து பரந்த மணல் பரப்பு. பயிர் வளர்க்காத மண், உயிரை மட்டும் எப்படி வளர்க்கும்? உயிரினங்கள் வாழ, வசிக்க உகந்த பகுதியல்ல. சுழல் காற்று அடிக்கடி இருக்கும். வாழத் தகுந்த எந்தச் சூழலும் இல்லை; வருமானத்துக்கு வழியும் இல்லை. என்பதால், வழிப்பறி கொள்ளையர் அதிகம் இருக்கலாம்.
- இது பாலை நிலப்பரப்பு குறித்து இலக்கியங்கள் தருகிற ‘திகில்’ விவரிப்பு.

மணலும்... மணல் சார்ந்த?

ந்து திணைகளுக்கும் முதல் பொருள் (நிலம், பொழுது - Space & Time), கருப்பொருள் (அந்த நிலத்து மக்கள், வசிப்பிட விபரங்கள்), உரிப்பொருள் (மக்களின் மன உணர்வுகள்) என தனித்தனியாக பிரித்து எழுதி வைத்திருக்கிறார் தொல்காப்பியர். மலையும் மலை சார்ந்தது குறிஞ்சி. காடும் காடு சார்ந்த நிலம் கொண்டது முல்லை. வயலும் வயல் சார்ந்த நிலப்பரப்பு மருதம். கடலும் கடல் சார்ந்த நிலப்பகுதி நெய்தல் என்று முதல் நான்கு திணைகளுக்கு நில அமைப்பைக் கூறும் தொல்காப்பியம், பாலையை மட்டும் திராட்டில் விட்டு விட்டது. பாலைக்கு என்று தனியாக நிலப்பரப்பு எதுவும் இல்லை (நிலமில்லாத நிலப்பகுதி என்று பாவம்... பாலை சங்கடப்பட்டு விடுமோ என்று வருத்தப்பட்ட சிலர், ‘மணலும் மணல் சார்ந்த பகுதி’ என்று பின்னால் பட்டா போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்).

‘‘மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையாற்  சொல்லவும் படுமே...’’

என்கிறது தொல்காப்பியம். எனில், பாலை எப்படித்தான் இருக்கும்? அந்த நிலப்பரப்பு பற்றி நாம் என்ன தெரிந்து கொள்வது? உதவிக்கு வருகிறது சிலப்பதிகாரம் (காடுகாண் காதை 11:64 - 66). சிலம்பு தரும் விளக்கம்:
‘‘முல்லையும், குறிஞ்சியும், முறைமையின் திரிந்து
நல் இயல்பு இழந்து, நடுங்கு துயர் உறுத்துப்
பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும்...’’
அதாகப்பட்டது, முல்லை வனமும், குறிஞ்சி மலையும் தங்கள் இயற்கை வளம் இழந்து, மழையின்றி, மரமின்றி, வறண்டு... வளம் குன்றிய ஒரு நிலையை அடைந்தால்... அப்படி ஒரு பார்க்கப் பரிதாப நிலப்பகுதிக்கு பாலை என்று பெயர். பாலைக்கான நிலம் இதுதான். நிலம் ஓகே. பொழுது (Time)?

பெரிசு - சிறுசு:

தொல்காப்பியரை இப்போது மெட்டுக்கு எழுதித் தள்ளுகிறவர்கள் போல ‘பெரும் பொலவர்’ என்று நினைத்திருந்தால் முதலில் மாற்றிக் கொள்ளுங்கள். வில்லேஜ் விஞ்ஞானியாக அந்தக் காலத்திலேயே அசரடித்தவர் அவர். பொழுதுகளை அவர் பிரித்து எழுதி வைத்திருக்கிற ஒரு உதாரணம் போதும். நேரத்தை அவர் பெரும்பொழுது, சிறுபொழுது என்று இரு வகைகளாகப் பிரிக்கிறார். நேரத்தில் என்ன பெருசு, சிறுசு?

விஷயம் சிம்பிள். டெலஸ்கோப் அவர் வைத்திருந்தாரா, இல்லையா என்று குறிப்புகள் கிடைக்கவில்லை. ஆனால், வானவியல் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு பொழுதுகளை பிரித்திருக்கிறார் தொல்காப்பியர் சார். நம்ம பசங்க, பொண்ணுங்க எல்லாம், கொஞ்ச காலம் சுற்று சுற்றென சுற்றுவார்கள். அப்புறம், தலையைச் சுற்றி விட்டு, வேற யாருடனாவது சுற்ற ஆரம்பித்து விடுவார்கள். பூமி அப்படி அல்ல. அந்த காலத்தில் ஆரம்பித்து இன்றைக்கு வரைக்கும் சூரியனை மட்டுமே அட்சரம் பிசகாமல் சுற்றிக் கொண்டிருக்கிறது. சரிதானே? சூரியனை பூமி சுற்றுவதை மையமாகக் கொண்டு பெரும்பொழுதையும், தன்னைத்தானே அது சுற்றிக் கொள்வதை மையமாகக் கொண்டு சிறுபொழுதையும் தலா ஆறு பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார் ‘கிரேட்’ காப்பியர்.

வெறுமை - வறுமை!

தாவது, பெரும்பொழுது என்பது பருவம் (Season). சிறுபொழுது என்பது நேரம் (Time). இப்படியும் சொல்லலாம். பெரும்பொழுது என்பது ஒரு ஆண்டின் பிரிவு. சிறுபொழுது என்பது ஒரு நாளின் பிரிவு. பாலை நிலத்துக்கான பெரும்பொழுது: இளவேனில் காலம் (சித்திரை, வைகாசி), முதுவேனிற்காலம் (ஆனி, ஆடி), பின்பனிக் காலம் (மாசி, பங்குனி). சிறுபொழுது: நண்பகல் (காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை).


நாம் இன்றைக்கு சிப்ஸ் தின்று விட்டு, பிளாஸ்டிக் காகிதங்களை வனப்பகுதிக்குள் வீசி எறிந்து விட்டு துளிக் கவலையற்று வருகிறோம் இல்லையா? பாலை நிலப்பகுதியின் வெறுமையும், அதன் மக்கள் அனுபவிக்கிற வறுமையும் தெரிந்தால்... அடுத்த முறை டிரெக்கிங் போகும் போது, அப்படிச் செய்ய(வே) மாட்டோம்!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

3 கருத்துகள்:

  1. தலைப்பே மிக சூப்பர்.எளிதாக அனைவரையும் ஈர்த்து படிக்கதுண்டுவதுடன் பல்வேறு தகவல்களை தெளிவாக எடுத்து சொல்லி உள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...