திங்கள், 17 ஏப்ரல், 2017

காசு.. பணம்... துட்டு.... மணி.... மணி!

கனாமிக்ஸ் பற்றி இந்தத் தொடரில் அதிகம் பேசவில்லை என பொருளாதாரத்துறை மாணவர்கள் வருத்தப்பட்டிருக்கலாம். அந்த வருத்தத்தைப் போக்குவதற்கான வாரம் இது. முன்னேறிய நாடு (Developed Country) என்று இன்றைய உலகம் யாரைச் சொல்கிறது? அணுகுண்டு வைத்திருப்பவர்களையா? குட்டி நாடுகள் கூட ஷெல்ஃபில் அடுக்கி வைத்திருக்கிறதே? அதெல்லாம் வளர்ந்த நாடு லிஸ்ட்டில் வந்து விடுமா என்ன? வளர்ந்த நாடு என்பதற்கான அர்த்தம் தேடுகிற போது, ‘‘A developed country is a sovereign state that has a highly developed economy...’’ என்பதாக விளக்குகிறது விக்கி. அதாவது பொருளாதாரத்தில் பெரும் பிஸ்தாவாக இருக்கவேண்டுமாம். சரி. பொருளாதாரத்தில் பெரும் பிஸ்தாவாக மாறுவது எப்படி?

கப்பலேறிப் போயாச்சு!


சாலமன் ராஜாவுக்கே சந்தனம் இங்கிருந்துதான் போயிருக்கிறது என்று கடந்தவாரம் படித்து விட்டு நிறைய நண்பர்கள் ஆச்சர்யப்பட்டனர். அவருக்கு மட்டுமல்ல; உலகின் பல நாடுகளுக்கும் பெருங்கொண்ட ஏற்றுமதியாளராக தமிழ் மண் இருந்திருக்கிறது.
* யவன தேசத்துக்கு கி.மு 10ம் நூற்றாண்டிலேயே அரிசி, மயில் தோகை, யானைத் தந்தங்கள், இரும்பு, நெய், சந்தனம்... இன்னும் நிறைய இங்கிருந்து கப்பலில் போயிருக்கிறது.
பாரசீக தேசத்துக்காரர்கள் கப்பலெடுத்துக் கொண்டு வந்து, நல்ல பொலி  காளைகள் இங்கு வாங்கிச் சென்றிருக்கின்றனர்.
* பொனிஷியாவுக்கு (Phonecia - இப்போதைய சிரியாவின் கரையோரப் பகுதி) மிளகு சப்ளை நடந்திருக்கிறது.
* சாவக தேசத்துக்கு (இப்போதைய இந்தோனேஷிய தீவுகள்) அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது.

யார் பிஸ்தா?

பொருளாதாரத்தில் பெரும் பிஸ்தாவாக மாறுவது எப்படி என்று ஒரு கேள்வியுடன் முதல் பாரா முடிந்திருந்ததே... அந்தக் கேள்விக்கு பதில் பார்ப்பதற்கு இதுதான் சரியான இடம். ஒரு நாடு ஏற்றுமதி, இறக்குமதி செய்கிற பொருட்களின் அளவைப் பொறுத்தே, அந்த நாட்டின் பொருளாதார நிலைமை, தன்மை தீர்மானிக்கப்படுகிறது. ஏற்றுமதி அதிகமாக செய்கிற தேசத்துக்கு அன்னியச் செலாவணி கையிருப்பு பிரமாதமாக இருக்கும். அதாவது, நாம் தயாரித்த / உற்பத்தி செய்த பொருள் வெளிநாட்டுக்குப் போகும். வெளிநாட்டு பணம் நம் நாட்டுக்குள் வந்து குவியும். நமது கஜானாவில் டாலரும், பவுண்ட் ஸ்டெர்லிங்கும் கட்டுக்கட்டாக நிரம்பி வழியும் இல்லையா? இறக்குமதி என்றால் நிலைமை தலைகீழ். வெளிநாட்டில் தயாராகிற பொருளை வாங்கி விட்டு, நமது பணத்தை அங்கு கொட்டவேண்டும். கையிருப்பு கரையும்.

க, எந்த நாடு ஏற்றுமதியில் ‘கிங்’காக இருக்கிறதோ, அந்த நாடு, பொருளாதார பிஸ்தா. ரைட்டா? இப்போது நம்ம தமிழ் தாத்தாஸ் காலத்துக்கு போவோம். இங்கிருந்து மிளகு, அரிசி, மயில் தோகை, முரட்டுக்காளை, யானைத் தந்தம்... என்று ஒன்று பாக்கி விடாமல் அத்தனையையும் கப்பலில் ஏற்றி அடைத்துக் கொண்டு போய் விற்றிருக்கிறார்கள். அன்னியச் செலாவணி பின்னியிருக்கும்தானே? இறக்குமதியை விட, ஏற்றுமதி அதிகமாக இருந்ததால், காசு.. பணம்... துட்டு.... மணி.... மணியை எண்ணுவதற்கே பாதி நேரம் சரியாக இருந்திருக்கும். இப்போது மாதிரி இல்லை சகோஸ்... நமது தமிழ் மூதாதையர்கள், நெய்தல் நிலத்துக் காரர்களின் புண்ணியத்தில் உலகின் வளர்ந்த பொருளாதார பிஸ்தாவாக அந்தக் காலத்தில் பின்னி பெடலெடுத்திருக்கிறார்கள்.

கொடி பறக்குது!

ந்தக் கடல் வணிகம் சாதாரணமாக வாய்த்து விடவில்லை. உழைப்பையும், அறிவுக்கூர்மையையும் அவர்கள் முதலீடாகக் கொட்டியிருக்கிறார்கள். கடும் சூறாவளி, மழையிலும் வெகு நேர்த்தியாக கப்பல் ஓட்டும் திறன் அவர்களிடம் இருந்தது. கடல் வணிகத்துக்கு அவர்கள் கலம், வங்கம், நாவாய் போன்றவற்றை பயன்படுத்தியிருக்கின்றனர். கலம் என்றால் சிறு கப்பல். வங்கம் என்றால் சற்றே பெரிய பாய்மரக்கப்பல். இதில் கட்டப்பட்டிருக்கும் பாய் (‘இதை’ என்பது இதன் பெயர்) மற்றும் நங்கூரத்தை (பயின்) கையாளுவதில் கில்லாடிகளாம்.

பிரமாண்ட, பெரிய கப்பலுக்குப் பெயர் நாவாய். எந்த ஊர் காரர்களோ அவர்களது கொடி நாவாயின் உச்சியில் பறக்கும் (நெடுங்கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ, காணாமோ - அகநானூறு 110). அழகிய வேலைப்பாடுகளுடன் இருக்கும் (எந்தை, வேறுபல் நாட்டுக் கால் தர வந்த பன் வினை நாவாய் தோன்றும் பெருந்துறை – நற்றிணை 295).
‘‘சுள்ளிஅம் பேரியாற்று வெண் நுரை கலங்க,
யவனர் தந்த வினை மாண் நன் கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம் கெழு முசிறி....’’
என்கிற அகநானூறு (149) பாடல், யவன வணிகர்கள் முசறி (சேரர்களின்) துறைமுகப்பட்டினத்துக்கு பொன்னோடு வந்து மிளகு (கறி) வாங்கிச் சென்றிருப்பதை பதிவு செய்கிறது.

நெஞ்சில் நுழையும் கத்தி!

தேசத்தின் பொருளாதாரத்தை தீர்மானிக்கிற நிலப்பரப்பாக நெய்தல் விளங்கியிருக்கிறது. விளைவாக, இந்தப்பகுதியில் கலையும், பண்பாடும், உயர்ந்த நாகரிகமும் சீரும் சிறப்புமாக உயர்ந்தோங்கி இருந்திருக்கிறது. அந்த கருப்பு வெள்ளை காலத்து நெய்தல் நிலப்பரப்பையும், இன்றைய நிகழ்காலத்து நெய்தல் நிலப்பரப்பையும் உங்களால் ஒப்பிட்டுப் பார்க்கமுடிகிறதா...? பொன்னும், மணியும் புழங்கிய அந்த மண்ணில், இன்று காற்றிலாடுகிற பட்டம் போல கடமைக்குப் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிற அப்பாவி மீனவ மனிதர்களின் வாழ்க்கைத்தரம் எப்படி இருக்கிறது என்று கொஞ்சம் யோசித்துப் பார்க்க முடிகிறதா...? கடல்வழி மணற்பரப்பில் கேட்பாரற்றுக் கிடக்கிற உடைந்த சிப்பி ஒன்றைப் போல, ஓங்கி உயர்ந்து செழித்து நின்ற ஒரு சமூகம் வலிகளுடன் முடங்கிக் கிடக்கிறதே?

நான்காம் திணை நிலமான நெய்தலில் இருந்து நாம் விடைபெற்றுக் கிளம்புகிற இந்தத் தருணத்தில், நெஞ்சில் நுழைகிற கத்தி போல... விடை இல்லாத சமகாலத்து நெய்தல் நிலத்துக் கேள்விகள் சதையை ஊடறுத்து, மனதுக்குள் பெருத்த வலியை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியாது!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

2 கருத்துகள்:

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...