வியாழன், 13 ஏப்ரல், 2017

பாறையின் தடம்!

‘‘மணி இப்பவே பத்தரை . நாம போறதுக்குள்ள மீனாட்சி அம்மன் கோயில் நடை சார்த்திடப் போறாங்க மனோ...’’ - மெல்லிய குரலில் கேட்ட வினோதனுக்கு வயது 70க்கு சற்றேறக்குறைய இருக்கலாம். மனோதத்துவத்துறையில் இந்தியாவின் நம்பர் 1, 2, 3 பட்டியலுக்குள் இருக்கிற பிஸி டாக்டர்.
‘‘இந்த கேஸோட முடிச்சிடலாம் டாக்டர். இது கொஞ்சம் பெக்கூலியர். சின்னப் பையன். 15 வயசு. எதையோ பாத்து பயந்திருக்கான். பேய், அது இதுன்னு உளர்றான். பயத்தில இருந்து அவனை வெளிய கொண்டு வர முடியலை. என்னோட புரபஸர் நீங்க. பார்த்துட்டு ஒரு ஒப்பீனியன் சொல்லுங்களேன்...’’ - மனோ பேசிக் கொண்டிருக்கும் போதே, அந்தச் சிறுவன், அவனது அப்பாவுடன் உள்ளே நுழைந்தான்.

‘‘வாப்பா தெய்வக்காளை... உடம்பு இப்ப எப்டி இருக்கு?’’
‘‘பகலுல பரவால்லிங்க சார். ராத்திரியானா காச்சல் தூக்கியடிக்குது. மருந்து குடிச்சும் மட்டுப்பட மாட்டீங்கது..’’ தெய்வகாளையின் அப்பாவிடம் இருந்து பதில் வந்தது.
‘‘தம்பி... இங்க வாப்பா...’’ - வினோதன் அவர் பக்கத்துக்கு சிறுவனை அழைத்தார். ‘‘சொல்லு. நீ என்ன பார்த்த? என்ன நடந்திச்சு? சுருக்கமா சொல்லு...’’
‘‘திருப்பரங்குன்றம் மலைக்கு பின்பக்கம் சார். ஒரு முனிவர் கோயில் கூட இருக்குமே.... அங்கதான். போன சனிக்கிழமை சாயங்காலம் பிரெண்ட்ஸோட அந்த எக்கோ பார்க்குக்கு சைக்கிள்ல போனோம். போயிட்டு திரும்பும் போது இருட்டீருச்சி. அந்த கோயில் பக்கம் வரம்போது என்னோட சைக்கிள் பேக் வீலு பஞ்சராயிடுச்சி. மத்தவனுக முன்னால போயிட்டானுக. இறங்கி உருட்டிகிட்டு வந்தேன். அப்பத்தான் சார்...’’ - தெய்வக்காளையின் கண்களில் சின்னதாக ஒரு பதற்றம் உட்கார்ந்தது.
‘‘சொல்லுப்பா. தைரியமா சொல்லு. இதை விட பெரிய பிரச்னையெல்லாம் சார் அடிச்சி விரட்டீருக்காரு. நீ தைரியமா சொல்லு...’’ மனோ தைரியப்படுத்தினான்.
‘‘ரோட்டுக்கு வடக்குப்பக்கம், அந்தக் கோயிலுக்கு செத்த தள்ளி, ஒரு பெரிய பாறை கிடக்கும் சார். அந்தப் பாறை லேசா அசைஞ்சது...’’
‘‘பாறை அசைஞ்சதைப் பாத்து பயப்படலாமா தம்பி? ஏதாவது ஆடு, மாடு அந்தப் பக்கமா நின்னுகிட்டு முட்டித் தள்ளீருக்கும்...?’’
‘‘இல்ல சார். அசஞ்சதுனா... லேசா இப்டி, அப்டி இல்ல. ஒரு மனுஷன் எந்தரிச்சி நடந்து வந்தா எப்டி இருக்கும்? அது மாதிரி. அந்தப் பாறை எந்தரிச்சி என்னையப் பாத்து வந்திச்சி. சொன்னா நம்ப மாட்டீங்க... ரெண்டு கை மாதிரி... அதை எப்டி சொல்றதுனு தெரியலை. என்னயப் பார்த்து நீட்டி கூப்பிட்டுச்சி...’’
‘‘இன்ட்ரஸ்ட்டிங். இப்பப் போய் அந்தப் பாறைய பாக்கலாம். வர்றியா? கூட நான் இருக்கேன். தைரியமா வர்றியா?’’ - வினோதன் கேட்டார்.
‘‘இல்ல சார். பய ராத்திரி பயந்து போய் சைக்கிள அங்கயே போட்டுட்டு தலதெறிக்க ஓடி வந்திட்டான். வீட்டுக்கு வந்தப்ப சட்டயெல்லாம் தொப்பு தொப்புனு நனஞ்சிருந்தது. பக்கத்துல மந்திரிச்சி விட்டோம். மறுநாள் காலையில பயலையும் இழுத்துகிட்டு அந்த இடத்துக்கு போய் பாத்தோம். ஒரு பெரிய கல்லுப் பாறை சார் அது. எனக்கென்னனு கிடந்திச்சு. ஆனா, ஒரு குழப்பம் மட்டும் இன்னும் தீரலை. அந்தப் பாறையச் சுத்தி புல்லெல்லாம் கருகிக் கிடந்திச்சு. அந்தப் பக்கமா மேய ஒரு ஆடு, மாடு வரலை. அப்புறம்... இவனுக்கு காச்சல் கொறயலையா? பக்கத்துல ஒரு டாக்டர் மருந்து கொடுத்து ஊசி போட்டார். கேட்டபாடில்லை. அவர்தான், இது மனசு சம்பந்தப்பட்ட வியாதினு சொல்லி, இந்த சார்கிட்ட அனுப்பிச்சு வெச்சார்...’’ தெய்வக்காளையின் அப்பா மீதி விபரங்கள் தெரிவித்தார்.
‘‘இன்ட்ரஸ்டிங் கேஸ். புல்லெல்லாம் கருகிக் கிடந்திச்சா? ஏதாவது விஷப்பூச்சி நடமாடியிருக்கும். அதை விரட்டுறதுக்காக, அங்கிருக்கவங்க தீ வெச்சிருக்கலாமில்லையா?’’ வினோதன் கேட்டார்.
‘‘அதுக்கு வாய்ப்பில்லை சார். புல்லு கருகியிருந்திச்சுனா, நீங்க நெனக்கிறாப்ல இல்ல. இது ஒரு டிசைனா இருந்திச்சு சார். அதாவது, அளந்து பாத்து கோடு கிழிச்சது போல ஒரு நேர் கோடா புல்லு கருகியிருந்திச்சு. நம்மாளுங்க யாரும் அப்டி கோடு போட்ட மாதிரி தீ வெக்க மாட்டாங்க...’’
‘‘கோடு போட்டது மாதிரி தீ வெச்சிருக்காங்களா? குழப்பமா இருக்கு. ஆனா, இன்ரட்ஸ்டிங்காவும் இருக்கு. நீங்க ஒண்ணு பண்ணுங்க. நான் ஈவ்னிங் சும்மாதான் இருக்கப் போறேன். ஒரு நாலு மணிக்கு பையனைக் கூட்டிகிட்டு இங்க வாங்க. அந்த ஸ்பாட்டுக்கு போலாம். அந்தப் பாறையை நானும் பார்க்கறேன். அப்றம் மருந்து தரலாம். நீங்க என்ன சொல்றிங்க மனோ?’’ - வினோதன் கேட்டதும்...
‘‘ஓ. யெஸ். நீங்க சொன்னா அப்பீல் ஏது டாக்டர்? ஈவ்னிங் போயிடலாம்...’’ என்றான் மனோ.


மூன்றரை மணிக்கே அப்பாவும், பையனும் வந்து விட்டார்கள். ‘‘இந்த மாதிரி பேய் கேஸ் பார்த்து ரொம்ப நாளாச்சு மனோ. மும்பைல இப்டி கேஸ் வராது. அதான் ஒரு ஆர்வம். ஸ்பாட் விசிட் அடிச்சிடலாம்னு ஐடியா. உன்னை தொந்தரவு பண்ணிட்டனோ...’’ - வினோதன் கேட்க, ‘‘சார். உங்க கூட டைம் ஸ்பெண்ட் பண்றது பெரிய விஷயம் சார். ஸ்டடிஸ்க்கு அப்றமும் உங்க கூட இருந்து கத்துக்கிற வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும். இது எனக்கு கிடைச்ச ஆபர்சுனட்டி சார்...’’ என்ற படி மனோ காரை ஓட்டினான். பக்கத்தில் வேட்டி, சட்டையில் ரிலாக்ஸ் மூடில் வினோதன். பின்பக்க இருக்கைகளில் தெய்வக்காளை, அவனது அப்பா.
கார் பழங்காநத்தம் வழியாக, பசுமலை கடந்ததும் நெரிசல் சற்றே குறைந்தது. மேம்பாலம் ஏறி திருப்பரங்குன்றம் உள்ளே கார் இறங்கியதும், கோபுரம் பார்த்து வணங்கிக் கொண்டார் வினோதன். கோயிலைக் கடந்து, மலையின் பின்புறம் ‘எக்கோ பார்க் செல்லும் வழி’ என்று போர்டு வைத்திருந்த சாலையில் கார் பாய்ந்தது. சில நிமிடங்களில் பார்க் கடந்து, பையன் சொன்ன இடம் வந்தது.


காரை விட்டு இறங்கியதும் மாலை வெயில் முகத்தில் அறைந்தது.
‘‘தம்பி தைரியமா வாப்பா. அந்தப் பாறையை ஒரு கை பாத்துடலாம்...’’  வேட்டியை உயர்த்திப் பிடித்த படி வினோதன் முதல் ஆளாக இறங்கி நடந்தார். அவருக்கு இணையாக தெய்வக்காளையை ஒரு கையில் பிடித்த படி அவன் அப்பா உடன் சென்றார்.
‘‘இந்தப் பக்கம் சார். கோயிலுக்கு பின்பக்கமா அந்தப் பாறை இருக்குது. இப்டி வாங்க...’’
படர்ந்து கிடந்த செடிகொடிகளில் செருப்புக் கால்களால் சரக் சரக் சத்தத்துடன் மிதித்துச் சென்று கொண்டிருந்த போது, திடீரென தெய்வக்காளை கத்தினான்... ‘‘சார். அந்தா பாருங்க. அந்தப் பாறைதான்...’’
அவன் கை காட்டிய திசையில் கூர்ந்து கவனித்தார் வினோதன். நன்றாக இறுகிக் கிடந்தது அந்தக் கரும்பாறை. கணக்கிட முடியாத அளவுக்கு பல டன் வெயிட் இருக்கும். யானையை வைத்து நெம்பித் தள்ளினால் கூட, நிச்சயம் நகராது. ஆகவே, அது அசைந்ததாக இந்தப் பையன் சொல்வது நம்பத்தகுந்ததாக இல்லை. அதேசமயம், கவனிக்கத்தக்க ஒரு விஷயமும் இருந்தது.  பாறையின் உருவம் வழக்கமாக இல்லாமல் சற்றே மாறுபட்டிருந்தது. மாறுபட்டிருந்தது என்றால்... களிமண்ணால் உருவம் செய்ய முயன்று தோற்றது போல, ஒரு குழம்பிய உருவம்.
அந்தப் பாறையைக் கவனித்துக் கொண்டே நெருங்கியவர்... திடீர் ஞாபகமாக கேட்டார். ‘‘தம்பி... ஏதோ புல்லு கருகியிருக்குனு சொன்னீங்களே... அது எங்க?’’ வினோதன் கேட்டதும்தான் தெய்வகாளையும், அவனது அப்பாவும் கவனித்தார்கள். சற்றே தடுமாறினார்கள்.


‘‘சார்... இந்தப் பக்கம்தான் சார். இப்ப நாம நடக்குறமே, இந்த இடத்திலதான் புல்லு கருகி ஒரு நேர் கோடு போல கெடந்திச்சு. இப்ப காணமே?’’ - அப்பா குழப்பமாக பேச, பையன் பிடித்துக் கொண்டான்.
‘‘நான் பாறை அசையுது. என்னய பாத்து கைய நீட்டி கூப்பிடுதுனு சொன்னப்ப நீங்க யாரும் நம்பலை. இப்பப் பாத்தீங்களா? கருகின புல்லைக் காணோம்...’’ அவன் சொல்லிக் கொண்டிருந்த போது, மனோ குறுக்கிட்டான்.
‘‘டாக்டர், பாறைக்கு அந்தப் பக்கம், பேக் ஸைட் பாருங்களேன்... இவங்க சொல்றது மாதிரி, அச்சு அசலா ஒரு நேர் கோடு கிழிச்ச மாதிரி புல்லு கருகிக் கிடக்குது பாருங்க...’’
‘‘அய்யய்யோ... சார். சாமி சத்தியம். ரெண்டு நாளைக்கு முன்னால, இந்தப் பக்கமாக புல்லு கருகிக் கிடந்திச்சு. இப்ப, அப்படியே தலைகீழா மாறியிருக்கே. முனி நடமாட்டமுனு எம்பையன் சொன்னது நிசமாத்தான் இருக்கும் போலருக்கே...’’ பையனின் அப்பா பதற்றத்தில் கத்தினார்.


இரவு உணவு மேஜையில் தீவிரமாக யோசித்த படி அமர்ந்திருந்த மனோவை தட்டினார் வினோதன்.
‘‘என்ன குழப்பம் யங்மேன்? அந்தப் பையனும், அவனோட அப்பாவும் குழப்பறாங்க. பேயாவது; முனியாவது...? அவனுக்கு இப்ப என்ன டோஸ் கொடுக்கிற நீ?’’
‘‘இல்ல டாக்டர். இந்த மேட்டர் கன்ஃப்யூஸிங். இது பேய், முனியெல்லாம் இல்லை. அப்படி நான் நம்பலை. அதுக்கும் மேல ஒரு மேட்டர் இருக்கு. நீங்க கவனிச்சிங்களா? ஸ்கேல் வெச்சி அளந்து போட்ட மாதிரி புல்லு கருகியிருக்கு?’’
‘‘ஸோ... வாட்?’’
‘‘நான் நெனக்கிறேன்... இது அப்நார்மல். என்னோட கணிப்பு சரியா இருக்குமானா... சம்திங் ராங். எக்ஸ்ட்ரா டெரஸ்டிரயல்... மாதிரி...’’
‘‘ஏலியன்...? ஹம்பக்! நான் அந்தப் பாறைய தொட்டுப் பாத்தேன் மனோ. சுத்தமான கருங்கல்லு. செதுக்குனா, அழகான சிலை சூப்பரா செய்யலாம். புல்லு கருகின மேட்டரை இன்னும் கொஞ்சம் டீடெய்லா யோசிப்போம். நாம நெனக்காத ரொம்ப சாதாரண காரணம் ஏதாவது இருக்கலாம். நீயும் ஒரு லேமேன் மாதிரி யோசிக்கக் கூடாது மனோ. உறுதிப்படுத்தப்படாத ஒரு விஷயத்தை சயின்ஸ் ஏத்துக்காதுனு நீ படிச்சதில்லையா?’’

‘‘எது சார் உறுதிப்படுத்தப்படாத விஷயம்? ஸ்டீபன் ஹாக்கிங்ஸ், எல்லன் ஸ்டோபன் எல்லாம் உறுதிப்படுத்திச் சொல்லியிருக்காங்க.’’
‘‘என்னப்பா, ஹியூமன் சைக்காலஜி படிச்ச நீயே இப்பிடி? படிக்காதவன் பேய், முனி, காத்து, கருப்புனு உளர்றான். படிச்ச உன்ன மாதிரி ஆளுங்க எக்ஸ்ட்ரா டெரஸ்டிரயல், ஏலியன், வேற்றுக்கிரக வாசினு மிரட்டுறிங்க. சரி. உன் வாதத்துக்கே வருவோம். ஏலியனுக்கு திருப்பரங்குன்றத்தில என்ன வேலை? இங்க எதுக்கு வரணும்?’’
‘‘இல்லை சார். கொஞ்சம் குழப்பமா இருந்தது. அந்தப் பாறையை பார்த்தப் பிறகு பிரமிப்பாவும் இருக்குது...’’
‘‘வெரிகுட். பிரமிப்போட உச்சம்; அச்சத்தின் துவக்கம். அதான், இப்படிப் பேசற மனோ...’’
‘‘புரியலை சார்.’’
‘‘சிம்பிள். நான் ஒரு உதாரணம் சொல்றேன் கேளு. நாளைக்குக் காலையில கண்ணு முழிச்சிப் பாக்குற. ஜன்னலுக்கு வெளிய, சூரியன் ரொம்பப் பக்கமா, கையை நீட்டி தொடுற அளவுக்கு பக்கமா இருக்குது. எப்படி இருக்கும்...?’’
மனோ தலையை அசைத்தான். ‘‘நீங்களே சொல்லுங்க சார்...’’
‘‘முதலில் ஆச்சர்யமா இருக்கும். அட! சூரியன் இவ்ளோ பக்கத்தில இருக்கேன்னு பிரமிப்பு வரும். அந்த பிரமிப்பு முடியிற அந்தப் புள்ளியில, அச்சம் அதாவது பயம் துவங்கும். இன்னும் புரியலை? அய்யய்யோ! சூரியன் இப்டி பக்கத்தில வந்திருச்சே, அடுத்து என்ன நடக்கப் போகுதோன்னு பயத்தோட துவக்கப்புள்ளி அங்க ஆரம்பிக்கும். ஆம் ஐ ரைட்?’’

‘‘சார். நீங்க சொல்ற தியரி வேற. இந்த கேஸ் வேற. அந்தப் பையனை சாதாரண ஒரு பேஷண்ட்டாத்தான் நான் ட்ரீட் பண்ணுனேன். ஆனா, இன்னிக்கு அந்தப் பாறையைப் பார்த்ததும், அந்த சூழலைப் பார்த்ததும் நான் வேற மாதிரி யோசிக்கிறேன். அந்தப் பாறையோட ஷேப் பார்த்திங்களா? உங்க செல்போன்ல படம் எடுத்தீங்களே, எடுத்து பாருங்க. நிச்சயமா, இது சம்திங் ராங்...’’
‘‘எனக்கு அதை திரும்பவும் பாக்கவேண்டிய அவசியம் இல்லை மனோ. உன் திருப்திக்காக, பாக்கறேன்...’’
சட்டைப் பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்தார். அதன் லாக் விடுவித்து, புகைப்பட கேலரியில் புகுந்து அந்தப் படங்களை தேடினார். வினாடிகள் இயந்திரமாக நகர்ந்தன. ‘எக்ஸ்டர்னல் மெமரியில ஸேவ் ஆகியிருக்குமோ...?’ என்றபடி, மீண்டும் விரல்களால் மாற்றி, மாற்றி நகர்த்தினார்.
முழுதாக ஒன்றரை நிமிடங்களுக்குப் பிறகு, ‘‘ப்ச்... இது புது மாடல் போன். வாங்கி ஒரு வாரம் கூட ஆகலை. இன்னும் ஆப்ஷன்ஸ் புரிய மாட்டீங்குது. நான் எடுத்த படம் எதுவுமே விழலை...’’
‘‘சார். ஐ சேலஞ்ச் யூ. அந்தப் பாறை எப்டி கேமராவுல பதிவாகாம இருக்கும்? இப்ப என்னைய போட்டோ எடுங்க பாப்போம். இதுல நிச்சயமா மர்மம் இருக்கு...’’
‘‘மனோ. டோண்ட் பீ ரிடிகுலஸ். போன் புதுசுங்கறேன். நான் படம் புடிக்கத் தெரியாம தப்பு பண்ணுனா, உடனே ஏலியன் வேலை காட்டுச்சுனு சொல்லுவியா? சரி. இப்பச் சொல்றேன்பா. எனக்கு காலையில லெவன் தர்ட்டிதான பிளைட்? காலையில எட்டு மணிக்கு திரும்பவும் அங்க போறோம். திருப்பரங்குன்றம். தி ஸேம் ப்ளேஸ். நீயும், நானும் மட்டும். அந்தப் பாறைய பார்க்கலாம். நான் அங்க இருக்கிற புல்லு, அப்புறம் நீ ஏலியன்னு சொல்றியே... அந்த பாறையில கொஞ்சம் சுத்தியலால பேர்த்து எடுத்து சாம்பிள் கலெக்ட் பண்ணிக்கிறேன். மும்பை லெபாரட்டரில புல்லு, கல்லு ரெண்டையும் டெஸ்ட் கொடுப்போம். என்ன ரிசல்ட் வருதுனு பார்க்கலாம். சரியா...?’’
‘‘சரி டாக்டர்...’’ என்றான் மனோ விலகாத குழப்பத்துடன்.

 மறுநாள் காலை 6 மணிக்கெல்லாம் எழுந்து தயாராகி இருவரும் காரெடுத்துக் கொண்டு திருப்பரங்குன்றம் கிளம்பினார்கள்.
முதல் நாள் மாலை போல இப்போது டிராபிக் இல்லை. தார்ச்சாலையின் குழிகளில் ஏறிக் கடந்து கார் பறந்தது. பத்தாவது நிமிடம், மேம்பாலம் கடந்து, திருப்பரங்குன்றத்துக்குள் இறங்கியது. காரை மனோ ஓட்டினான். அருகில் வினோதன். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. கார் ஸ்டீரியோவில் சின்னதாய் ‘நத்திங் பட் வின்ட்’ ஒலித்துக் கொண்டிருந்தது.
கார் இப்போது கோயில் கடந்து, மலையின் பின்புறச் சாலையில் நுழைந்தது. மூன்றே நிமிடங்களில் அந்த கோயிலை அடைந்து காரை மரத்தடி ஓர நிழலில் நிறுத்தினான் மனோ.
‘‘இந்த தடவை நான் இந்த செல்போன் கேமராவை நம்பப் போறதில்லை மனோ...’’ என்று, அதிநவீன நிக்கானை கையில் எடுத்துக் கொண்டு கீழே இறங்கினார் வினோதன். மனோ முன்னே நடக்க... கேமராவில் கோணம் பார்த்த படி வினோதன் பின்னே நடந்தார்.
காலை நேரம் என்பதால், அந்தப் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லை. சுத்தமாக இல்லை. ஆடு, மாடுகள் கூட எட்டிப் பார்க்கவில்லை. அதிசயமாக, ஒரு பறவையைக் கூட காணோம். செடிகளை சரக்... சரக்கென மிதித்த படி இருவரும் நடந்தனர். வினாடிகள், நிமிடங்களாகி... நேரம் கடந்து கொண்டிருக்க... மனோ மெல்லிய குழப்பத்துடன் பின்பக்கம் திரும்பிப் பார்த்தான்.
கண்களை வெயில் தாக்காமல் இருக்க ரேபான் அணிந்திருந்த வினோதன் முகத்திலும் குழப்ப சதவீதம் லேசாக படர்ந்திருந்தது. அதன்பின்னரும் அவர்கள் நடந்தார்கள்.

நடந்தார்கள்.


நடந்தார்கள்.ந்
தா
ர்

ள்.

பத்து நிமிட நேரமும், அதற்கு மேலாகவும் அவர்கள் நடந்தார்கள்.
அவர்கள் பார்வையில்...
யாதொரு பாறையும் தென்படவில்லை!

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

7 கருத்துகள்:

 1. யப்பா...! ஒரு திகில் படம் பார்த்த உணர்வு...

  பாராட்டுகள்...

  பதிலளிநீக்கு
 2. யப்பா... ஒரு திகில் படம் பார்த்த உணர்வு...

  பாராட்டுகள்...

  பதிலளிநீக்கு
 3. ஸ்ப்பபா
  சஸ்பென்ஸ் தாங்க முடியல
  சிறுவயதில் படித்த கதை போலவே
  திகில்.
  எழதியது
  பூனைக்குட்டியார
  நம்பவே நம்ம மாட்டேன்
  சஸ்பென்ஸ்கு விடை கிடைக்கும் போது தெரியும்.
  யார் கட்டுரை (கதை) என்று
  ...

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 5. எழுத்து நடை அபாரம்.சஸ்பென்ஸ் வச்சு டக்குன்னு முடிச்சு எங்களை ஏமாற்றிவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 6. எழுத்து நடை அபாரம்.சஸ்பென்ஸ் வச்சு டக்குன்னு முடிச்சு எங்களை ஏமாற்றிவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...