திங்கள், 27 மார்ச், 2017

எனக்கு இன்னோரு பேர் இருக்கு!

நெத்திலி மீன் பொரியல், அயிரை மீன்  குழம்பு, வஞ்சிரம் வறுவல், சுறாப் புட்டு, கருவாட்டு கூட்டு, இறால் தொக்கு, கெழுத்தி மசாலா... - என்.வி பிரியர்களுக்கு, படிக்கும் போதே ஜிலுஜிலுத்திருக்கும். இன்னும் நிறைய, நிறைய மீன் உணவுகள் சகாயமாக கிடைப்பதால், ஐந்து திணைகளில் அவர்களுக்குப் பிடித்தது நெய்தலாகவும் இருக்கலாம். மீன் உணவு என்பது நம்மூரில் தினமும் சாத்தியப்படாது. ஞாயிற்றுக்கிழமையானால், மார்க்கெட்டில் வந்திறங்கியிருப்பதை நல்லதாய் பார்த்து வாங்கி, பொரியல் போடலாமே தவிர, மற்ற நாட்களில் ஹோட்டலை விட்டால் வழியில்லை. கடல்புரத்துக்காரர்கள் அந்த விஷயத்தில் கொடுத்து வைத்தவர்கள். அவர்களுக்கு தினமும் உணவில் அது இருக்கும். இலக்கியங்களைப் புரட்டிப் பார்க்கையில் அவர்கள் வகை, வகையாக சமைத்துச் சாப்பிட்டிருக்கிற குழம்பு, வறுவல், பொரியல்களின் மெனு கார்டு பார்வைக்குக் கிடைக்கிறது.


அடடா... அயிரை மீன்!

‘‘பெருங் கடற் பரப்பில் சேயிறா நடுங்க,
கொடுந் தொழில் முகந்த செங் கோல் அவ் வலை
நெடுந் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு,
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு
அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து...’’

- மிக நீ...ண்ட அகநானூறு (60) பாடலின் மேற்படி சில வரிகளில், இறால், அயிரை (அயிலை) என ரக ரகமாக மீன் குழம்பு சமையல் நடந்திருப்பது விளக்கப்படுகிறது. இந்தப் பாடலில் முதல் சில வரிகளைப் பாருங்களேன்... கடற்கரையில் வேலையாக இருக்கிற அப்பாவுக்கு மகள் சாப்பாடு கொண்டு வருகிறாள். கடல்புரத்தில் கிடைக்கும் உப்பை கொடுத்து பண்டமாற்றாகப் பெற்ற நெல்லில் தயாரான ஆவி பறக்கிற அரிசிச் சாதம் போட்டு, அதற்கு மேல் புளி நன்றாக அரைத்து ஊற்றிய, கமகமக்கிற அயிரை (அயிலை) மீன் புளிக்குழம்பு ஊற்றி, கடித்துக் கொள்ள கருவாட்டுத் துண்டும் வைத்துத் தருகிறாளாம். மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும்!

மீன் ஃப்ரை கிடைக்குமா மேடம்?

டற்கரைக்கு தனியாக வந்து போகிற பெண்ணை ஏரியா ரோமியோக்கள் சும்மா விடுவார்களா என்ன? தோழியுடன் பேசிக் கொண்டிருக்கிற பொழுதில், பளபளக்கிற சொக்காய் அணிந்து அங்கு வருகிற ஒரு மைனர், லேசாக டீல் விட்டுப் பார்க்கிறான்.

‘‘தட மென் பணைத் தோள் மட நல்லீரே!
எல்லும் எல்லின்று; அசைவு மிக உடையேன்;
மெல் இலைப் பரப்பின் விருந்து உண்டு, யானும் இக்
கல்லென் சிறுகுடித் தங்கின் மற்று எவனோ?
என மொழிந்தனனே, ஒருவன். அவற் கண்டு,
இறைஞ்சிய முகத்தெம் புறம் சேர்பு பொருந்தி,
'இவை நுமக்கு உரிய அல்ல; இழிந்த 
கொழு மீன் வல்சி' என்றனம், இழுமென...’’ (அகநானூறு 110)
- அதாகப்பட்டது, அந்த மைனர் பையன், இந்தப் பெண்ணைப் பார்த்து இப்படிக் கேட்கிறானாம். ‘‘அழகான தோளை உடைய, நல்லிதயம் கொண்ட பெண்ணே... நேரம் இருட்டிப் போச்சு. ரொம்பக் களைப்பா இருக்கு. உங்க வீட்டுல இன்னைக்கு எனக்கு ஒரு மீன் ஃபிரை செய்து தரமுடியுமா?’’ - இப்படியாக வலை வீசுகிறான். கடல் பொண்ணு வலையில் சிக்குமா? மழுப்பிப் பேசி அனுப்பி விட்டு, வீட்டுக்கு வந்ததும் அம்மாவிடம்... மேட்டரை சொல்வதாக இந்தப் பாடல் விளக்குகிறது.

அமெரிக்கா... ஜூஜூபியா?

ந்த மீன் கறி தயார் செய்வதற்காக, கடலில் அள்ளி வந்த மீன்களை அவர்கள் எப்படிப் பக்குவப்படுத்துகிறார்கள்? இலக்கியங்கள் இந்த விஷயத்தை ‘மீன் உணக்கல்’ என்ற பெயரில் விரிவாகவே பதிவு செய்திருக்கின்றன. அதைப் பார்க்கிறதற்கு முன்பாக... பஸ்சை விட்டு இறங்கவேண்டும். மருங்கூர்பட்டினம் வந்தாச்சு!


ன்றைய தேதிக்கு ‘உலக நாட்டாமை’ யார் என்று கேட்டால், டொனால்ட் ட்ரம்ப் தேசத்தை சந்தேகமில்லாமல் சுட்டிக் காட்டுவார்கள். ரோம பேரரசுடன் ஒப்பிட்டால், அமெரிக்காவெல்லாம் ஜூஜூபி. கிமு 510 முதல் கிமு 1ம் நூற்றாண்டு வரைக்கும் உலகின் திசைகளை கிடுகிடுக்க வைத்த பேரரசு அது. இன்றைய பிரிட்டன், இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், பிரான்ஸ், கிரீஸ், ஜெர்மனி, துருக்கி, எகிப்து... அந்த ஏரியாவில் ஒன்று விட்டு வைக்கவில்லை. தேசங்களைக் கைப்பற்றி, தங்களது மாகாணங்களில் ஒன்றாக மாற்றிக் கொள்வது ரோம சக்ரவர்த்திகளின் பொழுதுபோக்கு.


கஸ்டஸ் சீசர், ஜூலியஸ் சீசர், நீரோ, கிளாடியஸ்... என்று இன்றைய உலக வரலாற்றை உருவாக்கியவர்களின் அன்றைய வர்த்தக கனவாக இருந்தது... நமது தமிழ் மண். இன்றைக்குப் போல, அந்தப்பக்கம் சென்னை, இந்தப்பக்கம் மார்த்தாண்டம், லெப்ட்ல கோயம்புத்தூர், ரைட்டுல ராமேஸ்வரம் என்று தமிழ் மண்ணின் எல்லையை கற்பனை செய்யக்கூடாது. வரலாற்று காலங்களில் நமது எல்லை பிரம்ம்ம்ம்மாண்டமானது. சிந்து சமவெளி நாகரிகமும் தமிழ் நாகரிகமே என்று ஆய்வுகள் உறுதிபடுத்துவதை இந்த இடத்தில் நினைவுப்படுத்திக் கொள்ளவேண்டும்.

பாட்ஷா... மாணிக்பாட்ஷா!

ராமநாதபுரத்துக்குக் கிழக்கே 17 கிலோ மீட்டர் தூரத்தில், நம்ம வைகை ஆறு வங்கக்கடலில் கலக்கிற இடத்தில் இருக்கிறது அழகன்குளம். சாதாரண கடலோர கிராமமான அழகன்குளத்தை நெருங்கிச் சென்று ஆராய்ந்தால், அது சொல்லும்... ‘எனக்கு இன்னோரு பேர் இருக்கு!’. அந்தப்  பெயர், வரலாற்றின் திசைகளை தனது பிடியில் வைத்திருந்த அந்தப் பெயர்... மருங்கூர்பட்டினம்!

கநானூறு, மதுரை காஞ்சி, நற்றிணை... என்று நிறைய சங்க இலக்கியங்களில் மருங்கூர்பட்டினம் பற்றி எக்கச்சக்கம் இருக்கிறது. சோழர்களுக்கு காவிரிப்பூம்பட்டினம் மாதிரி, பாண்டியர்களுக்கு இந்த மருங்கூர்பட்டினம். பலே பாண்டியா காலத்தில் ‘பாட்ஷா ரஜினி’ மாதிரி இருந்த நகரம், கால மாற்றத்தில் சிக்கி, சிதிலமடைந்து இன்றைக்கு அழகன்குளமாக, அமைதியாக ‘மாணிக்கம் ரஜினி’ மாதிரி இருக்கிறது.

ரோம ‘சரக்கு!’

தொல்லியல் டிபார்ட்மென்ட் காரர்கள் நடத்திய ஆய்வில், சங்க காலத்தில் இந்தப் பட்டினம், கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளுடன்  எக்கச்சக்கமாக பிசினஸ் செய்திருப்பது உறுதியாகியிருக்கிறது. ரோமப் பேரரசுதான், மெயின் பிசினஸ் பார்ட்னர். அகழாய்வில் கிடைத்த ரோம தேசத்து நாணயங்கள், மது குடுவைகள் (!?) பண்ட, பாத்திரங்கள் அதை திட்டவட்டமாக உறுதிப்படுத்துகின்றன. கப்பல்கள் இங்கு நிற்க இடமில்லாமல் திண்டாடி, திக்குமுக்காடியதை மதுரை காஞ்சி வர்ணிக்கிறது. இன்றைக்கு, சிவகாசிக்கு ‘வெடி’ வைக்கப் பார்க்கிற சீன தேசத்தவர் கூட, கப்பலெடுத்துக் கொண்டு வந்து போயிருக்கிறார்கள்.

தான் கடந்து வந்த வரலாற்றை நினைவில் கொண்டிருக்கிற ஒரு சமூகமே, அடுத்தடுத்த தலைமுறைகளையும் ஆதிக்கம் செலுத்த முடியும். நாம் கடந்து வந்த பெருமையான மருங்கூர்பட்டினம் என்கிற அந்த அழகன்குளம் கடற்கரைப் பட்டினத்தை, அந்த மண்ணில் வசிக்கிற எத்தனை பேர் அறிந்து வைத்திருக்கிறோம்?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

1 கருத்து:

 1. Yes
  மருங்கூர்பட்டினம்
  நிறைய கேள்வி பட்ட பெயர் தான்.
  மருங்கூர்பட்டினம் பற்றிய விளக்கும்
  கட்டுரை ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை தங்களுக்கு உண்டு
  எதிர்பார்புடன்...

  பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...