புதன், 22 மார்ச், 2017

யவன ராணி... எந்த நாட்டுக்கு ராணி?

து மழைகாலம்தானே? தோட்டத்தில் செடி நடுவதற்காக குழி தோண்டுகிறீர்கள். கடப்பாரையை அழுத்தி இறக்குகிற போது, ‘டங்ங்ங்’ என்று ஒரு தினுசான சத்தம். கொஞ்சம் ஜாக்கிரதையாக சுற்றியிருக்கிற மண்ணை கொத்தி எடுத்து பார்த்தால்... ஒரு பானை. சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட பானை. அதன் தோற்றத்தை பார்க்கும் போது... பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்று தெரிகிறது. பொன்னா, மணியா...? பானைக்குள் என்ன இருக்கிறதோ... உடலில் லேசாக உற்சாக மின்சாரம் பரவுகிறதா? பாதுகாப்பாய் எடுத்துப் பார்த்தால்... ஓரிரு உலோகப் பொருட்கள் தவிர ஒன்றும் இல்லை. கோபத்தில், ஏமாற்றத்தில் உடைத்துத் தள்ளி விடாதீர்கள். நாம் கடந்து வந்த பல ஆயிரம், ஆயிரம் ஆண்டுகால வரலாறு, படு பத்திரமாக அந்தப் பானைக்குள் பதுங்கியிருக்கலாம்!

கீழடி!

துரைக்கு கொஞ்சம் பக்கத்தில் இருக்கிறது கீழடி. ரொம்ம்ம்ப குட்டீயூண்டு கிராமம். மாட்டுவண்டிகளும், சைக்கிள்களும் மட்டுமே முழுவேகத்தில் சென்று வரமுடிகிற மண் பாதை. அந்தப் பாதையினூடாகப் பயணித்துச் சென்றால்... 2 - 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு, அதற்கும் முன்பு வாழ்ந்த தமிழர் நாகரிகத்தின் உறைபடிவங்கள் வாழும் சாட்சியங்களாக அணிவகுத்து நிற்கின்றன. தொல் தமிழர்களின் நகர நாகரிகத்துக்கான சான்றுகள் அகழாய்வு மூலம் அங்கே எடுத்து அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அங்கு கிடைத்த பொருட்களைப் பார்க்கும் போது பிரமிக்கிறது. தொல் தமிழகத்தின் நாகரிக வளர்ச்சியில் நெய்தல் நிலப்பரப்பின் முக்கியத்துவம் புரிகிறது.

கீழடி அகழாய்வில் கிடைக்கப் பெற்ற அலங்காரப் பொருட்கள், நாணயங்களை ஆராய்ந்து பார்த்து அவை கிரேக்க, ரோம நாடுகளைச் சேர்ந்தவை என்று உறுதி செய்திருக்கிறார்கள். கிரேக்க, ரோம நாட்டில் இருந்து வணிகம் செய்ய வந்தவர்கள் கொடுத்துச் சென்ற நாணயங்கள், பரிசுப் பொருட்களாம். சரி. கிரீஸ், ரோம் தேசங்களில் இருந்து அந்த வணிகர்கள் எப்படி நம்ம ஊருக்கு வந்தார்கள்? அந்த மேற்கத்திய நாடுகளுக்கும், நம்ம்ம்ம மண்ணுக்குமான இணைப்புப் பாலமாக இருந்தது நெய்தல் நிலப்பரப்பு!

பார்க்கிங் செய்ய இடமில்லை?

இந்தத் தொடரின் சில வாரங்களுக்கு முன் நாம் படித்தோம். தமிழ் இலக்கியம், பண்பாட்டு வளர்ச்சியில் ‘வயலும், வயல் சார்ந்த’ மருத நிலமும், ‘கடலும், கடல் சார்ந்த’ நெய்தல் நிலமும் அதிக பங்களிப்பு செய்திருக்கின்றன என்று. நெய்தல் நிலத்தின் பங்களிப்பு இன்னும் ஒரு படி மேலே. கடலும், கடல் சார்ந்த இந்தப் பரப்பில் தான் தமிழரின் மிகப்பெரிய துறைமுகப் பட்டினங்கள் அமைந்திருந்தன. சேர, சோழ, பாண்டிய தமிழ் மன்னர்களின் பெரும் புகழ் பெற்ற துறைமுகங்களில் மேல்திசை, கீழ்திசை வணிகர்களின் மரக்கலங்கள், கப்பல்கள் எப்போதும் பார்க்கிங் செய்ய இடவசதி இல்லாத படிக்கு நெருக்கியடித்து நின்று கொண்டிருந்ததை இலக்கியங்கள் பதிவு செய்கின்றன.

பெண் - பொன்!

ம்ம ஏரியாவில் விளைந்த மிளகு மாதிரியான நறுமணப் பொருட்கள், முத்துக்களை என்ன ரேட் சொன்னாலும் பேரம் பேசாமல் வாங்கி அடுக்கி எடுத்துச் சென்றிருக்கிறார்கள் யவனர்கள். அது யார் யவனர்? நம்ம ஏரியாவுக்கு கடல் வழியாக கப்பலேறி வந்து பிசினஸ் டீலிங் செய்த கிரேக்கர் மற்றும் ரோமானியர்களை ‘யவனர்கள்’ என்று சங்க இலக்கியங்கள் சொல்கின்றன. ‘‘பொன்னொடு வந்து மிளகொடு மீளும் வாணிகம் செய்தவர்கள்...’’ என இவர்கள் பற்றி இலக்கியங்களில் குறிப்பு இருக்கிறது. பொன்னுக்கு மயங்குற பொண்ணுங்க உள்ள ஊருப்பா என்று அந்தக்கால யவனராஜாக்களும், ராணிகளும் தெரிந்து வைத்துக் கொண்டு பிசினஸ் செய்திருக்கிறார்கள்.

ஆல் இன் ஆல் அசத்தல்!

பிசினஸ் தூள் பறக்கிறது என்றால், அந்த ஏரியா மக்களிடம் பணப்புழக்கம் ‘இடைத்தேர்தல் தொகுதி’ போல படு தாராளமாக இருக்கும்தானே? வாணிபம் ஜோராக இருந்ததால் துறைமுக பட்டினங்கள் செல்வச் செழிப்போடு களைகட்டின. யவன வணிகர்கள் தங்கள் மரக்கலங்களில் இங்கிருந்து முத்து, பவளம் மட்டும் எடுத்துச் செல்லவில்லை. கூடவே, தமிழ் மொழியின் இலக்கண, இலக்கிய வளங்களையும் செலவின்றி அள்ளிச் சென்றனர். நமது அறிவியல் பதிவுகளை, திறமைகளை (காரி நாயனார் சார் எழுதுன கணக்கதிகாரம் ஞாபகம் வருதா??) மூட்டை கட்டி கொண்டு சென்றனர். தமிழின் ‘ஆல் இன் ஆல்’ பெருமையை உலகின் பல பகுதி காரர்களும் அறிந்து பிரமித்தார்கள். கப்பலோட்டிய வணிகர்கள் வழியாக தமிழின் அருமை அறிந்தே பல வெளிநாட்டு அறிஞர்களும் ‘வா...வ்’ என ஆச்சர்யப்பட்டு, அடுத்த கப்பல் பிடித்து இங்கு வந்து லேண்ட் ஆனார்கள்.

முசிறி எங்க இருக்கு?

நெய்தல் மண்ணுக்கு பெரும்புகழ் சேர்த்த துறைமுகப் பட்டினங்கள் பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
சேர மன்னர்களின் துறைமுகங்களாக முசிறி, தொண்டி, மாந்தை, நறவு ஆகியவை இருந்திருக்கின்றன. இதில் முசிறி பற்றி இலக்கியங்களில் (உலக இலக்கியங்களிலும் கூட) பக்கம், பக்கமாக குறிப்பு இருக்கிறது. பெரியாறு கடலில் கலக்கிற அரபிக்கடலோரம் இருந்த துறைமுக நகரம் இது. தாலமி என்கிற கிரேக்க மாலுமி (2ம் நூற்றாண்டு) தனது பயணக்குறிப்பில் முசிறி பற்றி (Muziris என்று) குறிப்பிட்டிருக்கிறார். ரோமானியர்கள் அடிக்கடி வந்து போன இடம் இது. ரோமாபுரி பேரரசன் அகஸ்டஸ் சீசர் காலத்து நாணயங்கள் இங்கு கிடைத்திருக்கின்றன.

கிங்குடா...!

காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம், பொதுகை (அரிக்கமேடு - புதுச்சேரியில் இருக்கிறது) ஆகியவை சோழர்களின் துறைமுகங்கள். கொற்கை, சாலியூர், காயல், மருங்கூர்பட்டினம் ஆகியவை பாண்டிய கிங்குடா...க்களின் துறைமுகப் பட்டினங்கள். மேற்படி துறைமுகப் பட்டினங்கள் இப்போது எங்கு இருக்கின்றன, அவை என்ன பெயரில் இருக்கின்றன...? அதெல்லாம் தெரிந்தால்தானே, நமது ‘தலைமுறை’களின் பெருமையை நாமறிய, நாமுணர முடியும்? ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு ஊரு உதாரணம் பார்க்கலாமா?

‘‘விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர் 
இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து...’’
- என்று மருங்கூர்பட்டினத்தின் செல்வச் செழிப்பு பற்றி அகநானூறு (227: 19 -20) சிலி சிலிர்த்துப் போய் சொல்கிறதே... எங்கே இருக்கிறது அந்த ‘ஆஹா... ஓஹோ’ மருங்கூர்பட்டினம்? அகநானூறு மட்டுமல்ல, சங்க இலக்கியங்கள் அத்தனையையும் ஆச்சர்யப்பட வைக்கிற அளவுக்கு கடல் வணிபத்தில் கலக்கி எடுத்த நெய்தல் நிலப்பரப்பு மருங்கூர்பட்டினம் நமக்கு மிக அருகே இருக்கிறது. மருங்கூர்பட்டினம் பஸ் ஏறலாமா?

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

5 கருத்துகள்:

 1. திரு கிருஷ்ணகுமார் அவர்களே, உங்கள் பதிவு நல்ல தகவல்களைத் தந்தது.
  ஒரு ஐயம். நான் ஒரு மலேசியத் தமிழன்.மருங்கூர்பட்டினம் பஸ் ஏறலாமா என்று முடித்துவிட்டீர்கள். எனக்குப் புரியவில்லை. இப்போதும் அதே பெயர் நிலவுகிறதா? எங்கிருக்கிறது என்று தெரிவித்தால் பயனாய் இருக்கும்.
  மிக்க நன்றி.
  தணிகாசலம் குப்புசாமி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ‘பூனைக்குட்டி’யை தொடர்வதற்கு நன்றி.

   மருங்கூர்பட்டினம் குறித்த விரிவான தகவல்கள், அடுத்தவாரம்.

   பயனுள்ளதாக இருக்கிறதா என படித்து விட்டு பதில் எழுதுங்களேன்.

   நன்றி.

   நீக்கு
 2. பஸ் ஏற நாங்கள் தயார்
  அழைத்து செல்ல
  தங்களது வருகையை எதிர்பார்த்து.......

  பதிலளிநீக்கு
 3. பஸ் ஏற நாங்கள் தயார்
  அழைத்து செல்ல
  தங்களது வருகையை எதிர்பார்த்து.......

  பதிலளிநீக்கு

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...